மாயன் நாகரிக காலத்தைச் சேர்ந்த மாநகரம் ஒன்றின் சிதைவுகளை அடர்ந்த காட்டுக்கு நடுவே கண்டுபிடித்துள்ளார்கள் மெக்சிகோ நாட்டு தொல்லியலாளர்கள்.
மெக்சிகோ நாட்டில், யூகடேன் தீபகற்பத்தில் அமைந்துள்ள இந்தக் காட்டுப்பகுதியில் பல பிரமிடு போன்ற கட்டுமானங்களை இந்த தொல்லியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவை ஒவ்வொன்றும் 50 அடிக்கு மேல் உயரமுள்ளவை. இவை தவிர, இங்கே கண்டுபிடிக்கப்பட்ட பானை ஓடுகளை ஆராய்ந்தபோது இந்த இடத்தில் கி.பி. 600ம் ஆண்டு முதல் 800ம் ஆண்டு வரையிலான காலத்தில் மனிதர்கள் வசித்திருக்கலாம் என்று தெரியவருகிறது. இந்தக் காலப்பகுதி ‘பிந்தைய செவ்வியல் காலம்’ என்று அழைக்கப்படுகிறது.
இந்த தொல்லியல் தலத்துக்கு ‘ஓகோம்டுன்’ என்று தொல்லியலாளர்கள் பெயர் வைத்திருக்கிறார்கள். மாயன் மொழியில் இதற்கு கல் தூண் என்று பொருள். இந்த இடத்துக்கு ஏன் கல்தூண் என்று பொருள் தரும் பெயர் வைக்கவேண்டும்? சுவாரசியமான பதில் பின்னால் இருக்கிறது வாருங்கள்.
மாயன் நாகரிகம் என்பது, புவிக் கோளத்தின் மேற்கு பகுதியில், பழங்காலத்தில் தழைத்து ஓங்கிய நாகரிகங்களில் ஒன்று என்று கருதப்படுகிறது. தற்போதைய மெக்சிகோ, குவாதமாலா, பெலிஸ் ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்ட பிரமிடு கோயில்கள், பிரும்மாண்ட கல் கட்டுமானங்கள் போன்றவை மாயன் நாகரிகத்தின் பெருமையைப் பறைசாற்றுகிறவை.
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த புதிய தொல்லியல் தலம் மெக்சிகோவின் கேம்பச்சி மாநிலத்தில் உள்ள சூழலியல் காப்புக் காட்டில் உள்ளது. போதிய அளவில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள முடியாத அளவுக்கு மிகவும் அடர்ந்து விளங்குகிறது இந்தக் காடு.
மெக்சிகோ நாட்டின் தேசிய மானுடவியல் மற்றும் வரலாற்றுக் கழகம் (INAH) இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது. 3000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விரிந்து கிடக்கும், தற்போது மனிதர்கள் வசிக்காத, மத்திய மாயன் தாழ்நிலப் பகுதியின் தொல்லியல் சான்றுகளை ஆவணப்படுத்தும் நோக்கத்தோடு மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டதாக கூறுகிறது அந்த நிறுவனம்.
ஹூஸ்டன் பல்கலைக்கழகம் விண்ணில் இருந்து இந்தப் பகுதியை லேசர் ஸ்கேனிங் செய்தது. இந்த ஸ்கேனிங் ஆய்வின் உதவியோடு, ஸ்பானியர்கள் வருகைக்கு முந்தைய காலப்பகுதியைச் சேர்ந்த பல கட்டுமானப் பகுதிகளை இந்த ஆய்வுக் குழு கண்டுபிடித்தது என்கிறது ஐ.என்.ஏ.எச். நிறுவனம்.
ஈரநிலப் பகுதிகளுக்கு நடுவே மேட்டுப்பாங்கான நிலப்பகுதியைக் கண்டுபிடித்தது தங்களுக்கு மிகவும் வியப்பூட்டுவதாக இருந்ததாக கூறுகிறார் ஆய்வுக் குழுவுக்குத் தலைமை வகித்த இவான் ஸ்பிராஜெக்.
அந்த மேட்டுப்பாங்கான நிலப்பகுதியில் பல பெரிய கட்டுமானங்களை அவர்கள் கண்டுபிடித்தனர். அவற்றில் 50 அடிக்கும் அதிகமான உயரம் கொண்ட பிரமிடு வடிவிலான கட்டடங்கள் பலவும் அடக்கம்.
இந்த இடம் முக்கியமான வட்டார மையமாக செயல்பட்டிருக்கலாம் என ஓர் அறிக்கையில் கூறியுள்ளார் ஸ்பிராஜெக்.
இந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருளை வடிவ கல் தூண்களை வைத்தே இந்த தலத்துக்கு ஓகோம்டுன் என்று பெயர் வைத்துள்ளார்கள். இங்குள்ள கட்டடங்களின் மேல் மாடிகளில் இடம் பெற்றிருந்த அறைகளுக்கான நுழைவாயில்களாக இந்தக் கல் தூண்கள் பயன்பட்டிருக்கலாம் என்கிறார் ஸ்பிராஜெக். கி.பி. 10ம் நூற்றாண்டில் மாயன் தாழ்நில நாகரிகம் வீழ்ச்சியடைந்த காரணத்தால் அழிவை சந்திப்பதற்கு முன்பாக, கி.பி. 800ம் ஆண்டுக்கும் 1000-வது ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த இடத்தில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம் என்கிறார் அவர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust