Joe Biden

 

Twitter

உலகம்

உக்ரைன் பிரச்னை : சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா - என்ன நடக்கிறது அங்கே ?

Newsensetn


பிப்ரவரி 24ஆம் தேதியன்று யுக்ரேன் மீது படையெடுப்பு நடவடிக்கையை ரஷ்யா தொடங்கியது. இரண்டு வாரங்களுக்கும் மேல் யுக்ரேனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படையினர் தீவிர தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

ரஷ்யாவை எதிர்க்கும் மேற்கத்திய நாடுகள் அதன் மீது பல தடைகளை விதித்து வருகின்றன. அதேபோல பல நிறுவனங்கள் ரஷ்யாவில் தனது வர்த்தகத்தை நிறுத்தியுள்ளன.

இந்த படையெடுப்பு ஒரு சில நாடுகளுக்கு வேறு சில சிக்கல்களையும் கொடுத்துள்ளது. குறிப்பாக இந்தியா மற்றும் சீனாவுக்கு இந்த சிக்கல் சற்று அதிகமாகவே உள்ளது.

ஏனென்றால் இந்தியாவும் சரி சீனாவும் சரி ரஷ்யாவுடன் இணக்கமான ஒரு உறவையே கொண்டுள்ளது. எனவே இந்த படையெடுப்பில் ரஷ்யாவை எதிர்க்கவும் முடியாமல், அதற்கு ஆதரவு அளிக்கவும் முடியாமல் தவித்து வருகின்றன.

இதில் இந்தியாவை காட்டிலும் சீனாவுக்கு அழுத்தங்கள் அதிகமாகவே உள்ளன. சீனா இந்த போரை தடுத்து நிறுத்த வலுவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சர்வதேச நாடுகள் தெரிவித்து வருகின்றன,

இந்த நிலையில்தான் சீனா ரஷ்யாவுக்கு உதவினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமரிக்கா எச்சரித்துள்ளது.

Xi Jinping

என்ன பிரச்னை?

ரஷ்யா சீனாவிடம் ராணுவ உதவிகளை கோரியுள்ளதாகவும், தங்கள் நாட்டின் பக்கம் நிற்க வேண்டும் எனவும் சீனாவிடம் ரஷ்யா கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அமெரிக்க பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின.

மூத்த அமெரிக்க அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்துள்ளார் என்று செய்தி வெளியிட்டுள்ள ஊடகங்கள் அந்த அதிகாரியின் பெயரை வெளியிடவில்லை.

அதேநேரம் இது அமெரிக்காவால் பரப்பப்படும் போலிச் செய்தி என்று சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் போரை நிறுத்துவதற்கான அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டும் என்றுதான் சீனா விரும்புகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் சீனா இதுவரை ரஷ்யா யுக்ரேன் மீது படையெடுத்துள்ளது என்று தெரிவிக்கவில்லை. அதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

இதற்கு மத்தியில் இன்று ரோமில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் சீனாவின் மூத்த அதிகாரியும் சந்திக்கவுள்ளனர். இந்த சந்திப்பின்போது சீனா மீது அமெரிக்கா அழுத்தம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே சீனா மற்றும் அமெரிக்காவின் உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது என்பது வேறு கதை.

ஞாயிறன்று சிஎன்என் ஊடகத்திடம் பேசிய அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், சீனா ரஷ்யாவுக்கு உதவினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தெரிவித்தார்.

மேலும்,”இந்த படையெடுப்பு நடைபெறுவதற்கு முன்னரே ரஷ்யா யுக்ரேனில் ஏதோ ஒரு நடவடிக்கையை மேற்கொள்ளப்போகிறது என்று சீனாவுக்கு தெரிந்துள்ளது என்று ஏற்கனவே அமெரிக்கா நம்புகிறது. இந்த படையெடுப்பு குறித்து விரிவாக வேண்டுமானால் தெரியாமல் இருந்திருக்கலாம் ஆனால் ரஷ்யா ஏதோ ஒன்றை திட்டமிட்டுள்ளது என்பதை சீனா அறிந்திருந்தது” என தெரிவித்துள்ளார்.

ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளால் அதன் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. எனவே சீனாவின் உதவியை தாங்கள் எதிர்நோக்குவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது இதற்கிடையில்தான் அமெரிக்காவிடமிருந்து எச்சரிக்கை வந்துள்ளது.

Vladimir Putin & Xi Jinping

சீனா – ரஷ்யா உறவு?


முன்னரே சொன்னதுபோல ரஷ்யா யுக்ரேன் மீது படையெடுத்து தாக்குதல் நடத்தி வருவதற்கு சீனா எந்த கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் ரஷ்யா – யுக்ரேன் போர் தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன்புதான் சீனாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்கவிழாவில் ரஷ்ய அதிபர் புதின் கலந்து கொண்டார்.

சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் ஆகியோர் சந்தித்தபோது இருநாட்டு நட்புக்கும் எல்லை ஏதும் இல்லை என்று சொல்லும் 5000 வார்த்தைகள் கொண்ட அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தனர்.

அதுமட்டுமல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அடுத்தபடியாக சீனா ரஷ்யாவின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக உள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு ரஷ்யா 79.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஏற்றுமதியை சீனாவில் மேற்கொண்டது என்கிறது சீனாவின் சுங்க முகமை.

ஒரு புறம் அமெரிக்கா, நேட்டோ நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மறுபக்கம் ரஷ்யா மற்றும் சீனா என்றால் இந்த படையெடுப்பின் விளைவு என்பது மிக தீவிரமானது. அதுமட்டுமல்லாமல் இது ஒட்டுமொத்த உலகயே பாதிக்கும். எனவே அனைத்து தரப்பும் இதை மனதில் கொண்டுதான் செயல்படும் என்ற நம்பிக்கையையும் நிபுணர்கள் முன்வைக்கின்றனர்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?