என்ன தான் உலகத் தலைவர்கள் மாற்று பருவநிலை மாற்றம், நிலக்கரி பயன்பாட்டைக் குறைக்க வேண்டும், சோலார் மின்சாரத்தை ஊக்குவிக்க வேண்டும் என பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தாலும், உலகம் இப்போதும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவைத் தான் மிகப்பெரிய அளவில் நம்பி இருக்கின்றன.
சூழல் இப்படி இருக்க, உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தியாளர்களில் ஒன்றான ரஷ்யா தற்போது பல நாடுகளோடு நேரடியாக வர்த்தகம் மேற்கொள்ள முடியாத சூழல் இருக்கிறது.
ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்ததை அடுத்து, பல உலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், ரஷ்யா, தன் சகலின் 2 கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தும் விதத்தில் ஓர் அரசு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இது ஒட்டுமொத்த உலகத்தையும் குறிப்பாக பிரிட்டன் மற்றும் ஜப்பான் கொஞ்சம் கலக்கமடையச் செய்துள்ளது.
ரஷ்யாவின் கிழக்கு மூலையில் இருக்கும் சகலின் தீவுகளில், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் பெயர் தான் சகலின் 2.
இந்த திட்டத்தில் ரஷ்யாவின் கேஸ்ப்ரோம் நிறுவனம் (50% பங்கு), பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ராயல் டச் ஷெல் (27.5% பங்கு), ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மிட்சுய் (12.5% பங்கு), முட்ஷிபிஷி (10% பங்கு) ஆகிய நிறுவனங்கள் பங்குதாரர்களாக இருக்கின்றனர்.
1999ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் சகலின் 2 திட்டம் மட்டுமே, தற்போது உலகின் ஒட்டுமொத்த எல் என் ஜி எனப்படும் திரவ நிலையில் இருக்கும் எரிவாயுவில் நான்கு சதவீதத்தை விநியோகிக்கிறது என்றால் இதன் பிரமாண்டத்தையும், உலக அரங்கில் இந்த எரிவாயு திட்டத்தின் முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ள முடியும்.
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் புதிய உத்தரவுப் படி, சகலின் 2 திட்டத்தில் கேஸ்ப்ரோம் நிறுவனத்திடம் இருக்கும் 50 சதவீதப் பங்குகளை அந்நிறுவனமே வைத்துக் கொள்ளும்.
மற்ற நிறுவனங்கள் பங்குகளை வைத்துக் கொள்வது தொடர்பாக ரஷ்ய அரசாங்கத்திடம் அடுத்த ஒரு மாத காலத்துக்குள் அனுமதி பெற வேண்டும். அந்நிறுவனங்கள் சகலின் 2 திட்டத்தில் பங்குதாரர்களாக இருக்கலாமா வேண்டாமா என்பதை ரஷ்ய அரசு தீர்மானிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக பிபிசி வலைதளத்தில் செய்தி பிரசுரமாகியுள்ளது.
இந்த உத்தரவினால், ஜப்பான் மற்றும் பிரிட்டன் நிறுவனங்கள் தங்கள் பங்குகளை விற்று வெளியேற வேண்டிய சூழல் ஏற்படலாம் என்றும் பிபிசி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கேஸ்ப்ரோம் நிறுவனத்தைத் தொடர்ந்து அதிக பங்குகளை வைத்திருக்கும் பிரிட்டனின் ராயல் டச் ஷெல் நிறுவனத்துக்கு ரஷ்யாவின் இந்த உத்தரவு குறித்து தெரியும் என்றும், அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என மதிப்பீடு செய்து கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளது.
கடந்த பிப்ரவரி 2022 காலத்திலேயே ஷெல் நிறுவனம், சகலின் 2 திட்டத்தில் தனக்குள்ள முதலீடுகளை விற்க விரும்புவதாகக் கூறியது இங்கு நினைவுகூரத்தக்கது. ரஷ்யாவில் ஷெல் நிறுவனம் மேற்கொண்ட முதலீட்டை விட்டு வெளியேறுவதால் தங்களுக்கு சுமார் 3.8 பவுண்ட் ஸ்டெர்லிங் நஷ்டம் ஏற்படலாம் என்று அந்நிறுவன தரப்பில் கடந்த ஏப்ரல் 2022-ல் கூறப்பட்டது.
சகலின் 2 திட்டம் போக, சைபீரியாவில் உள்ள இரு எண்ணெய்க் கிணறுகள் திட்டத்திலிருந்தும் விலக இருப்பதாக கடந்த 2022 பிப்ரவரி காலகட்டத்திலேயே செய்தி வெளியானது. ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்தது தவறு என்பதால், மனிதாபிமான அடிப்படையில் ராயல் டச் ஷெல் நிறுவனம் இந்த முடிவுகளை எடுத்தது.
தன் பங்குகளை விற்பது தொடர்பான பணிகள் முன்னேற்றம் கண்டு வருவதாக ஷெல் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி பென் வான் பெர்டன் (Ben Van Beurden) சமீபத்தில் கூறியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
ரஷ்யாவின் இந்த உத்தரவு தொடர்பாக ஜப்பானின் முட்ஷிபிஷி நிறுவனம் தன் கூட்டாளிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறியுள்ளது. மிட்சுய் நிறுவன தரப்பிலிருந்து இதுவரை பெரிய விளக்கங்கள் ஏதும் வெளிவந்ததாகத் தெரியவில்லை.
வெள்ளிக்கிழமை (ஜூலை 1ஆம் தேதி) மிட்சுய் மற்றும் முட்ஷிபிஷி ஆகிய நிறுவன பங்குகளின் விலை, ஜப்பான் பங்குச் சந்தையில் சுமார் 6 சதவீதம் சரிந்தன.
ஜப்பான் அரசோ, ரஷ்யாவில் உள்ள சகலின் 2 கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டத்தை தங்களின் எரிவாயு பாதுகாப்பின் முக்கிய அங்கம் வகிப்பதாகக் கருதுகிறது.
ரஷ்யாவின் இந்த உத்தரவுக்குப் பின்னால் இருக்கும் உள்நோக்கத்தை, ஜப்பான் அரசு பகுத்தாய்ந்து வருவதாக ஜப்பான் அரசின் துணை முதன்மை கேபினட் செயலர் செய்ஜி கிஹாரா (Seiji Kihara) பிபிசியிடம் கூறியுள்ளார்.
ரஷ்யாவின் இந்த புதிய உத்தரவால் ஜப்பானுக்குத் தேவையான எல் என் ஜி இறக்குமதி உடனடியாக நின்றுவிடாது, ஆனால், எதிர்பாராத சூழலில் எப்படிப்பட்ட சூழலையும் சமாளிக்க தயாராக இருக்க வேண்டும் என ஜப்பானின் தொழிற்சாலைத் துறை அமைச்சர் கொய்ச்சி ஹகியுடா (Koichi Hagiuda) ஊடகங்களிடம் பேசியுள்ளார்.
சகலின் 2 கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டத்தில் ஏற்பட்டிருக்கும் ரஷ்யாவின் திருப்பத்தினால் எல் என் ஜி எரிவாயு உலகச் சந்தையில் ஒரு நெருக்கடி ஏற்படலாம் என கிரெடிட் சூசி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த எரிசக்தித் துறையின் ஆராய்ச்சித் தலைவர் சால் கவொனிக் (Saul Kavonic) கூறியுள்ளார்.
ஜப்பான் உடனடியாக தனக்கு எல் என் ஜி போன்ற எரிசக்திக்கான ஆதாரங்களை விநியோகிக்கும் மாற்று நபர்களை, வினியோகஸ்தர்களை அவசரமாக தேடிக் கொண்டிருப்பதாகவும் சால் கவொனிக் குறிப்பிட்டுள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust