உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துவரும் தாக்குதலுக்கு விளைவாக அமெரிக்கா மற்றும் உலகின் பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. இதில் ரஷ்யா அதிபர் புதினும், மிகப் பெரும் ரஷ்ய பணக்காரர்களும் தப்பவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள அவர்களின் சொத்துக்கள், வங்கிகளில் உள்ள பணம் ஆகியவற்றை பயன்படுத்த முடியாதபடி முடக்கப்பட்டது. இப்போது புதினின் இரண்டு மகள்கள் மீதும் அந்தப் பொருளாதாரத் தடை நீண்டிருக்கிறது.
சமீபத்தில் உக்ரைன் நாட்டின் புச்சா நகரில், 300க்கு அதிகமான மக்கள் கைகள் கட்டப்பட்டு, உறுப்புகள் சிதைக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருந்தனர். பொதுமக்களின் பிணச் சிதறல்களை படம் பிடித்த புகைப்படங்கள் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன.
”ரஷ்யா செய்து வருவது உக்ரைன் மீதான இன அழிப்பு” என ஐநா கவுன்சில் கூட்டத்தில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி குற்றம்சாட்டினார். உலக நாடுகள் பலவும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. ஆனால் ரஷ்யா, தாங்கள் பொது மக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என தொடர்ந்து கூறி வருகிறது.
புச்சா நகரின் கொடூரக் காட்சிகளே புதினின் மகள்கள் மீதான பொருளாதாரத் தடைகளுக்கு காரணமாகியிருக்கிறது. ”ரஷ்ய அதிபர் புதினின் சொத்துக்கள் பெருமளவு, அவரின் மகள்களின் பெயரில் இருப்பதால், அவர்கள் மீதும் தடை விதிக்கிறோம்” என அமெரிக்கா விளக்கம் கொடுத்திருக்கிறது.
இதனால் புதின் ரகசியமாக வைத்திருந்த தன் மகள்கள் குறித்த தகவல்கள் வெளியுலகுக்கு தெரிய வந்திருக்கிறது.
பொதுவாக புதின் தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளியில் பேச விரும்பாதவர். அதை அவர், வெளிப்படையாகவும் தெரிவித்திருக்கிறார். 2015-ம் ஆண்டு ஒரே முறை மட்டும், தனது மகள்கள் அறிவியல் சார்ந்த படிப்புகளில் இருப்பதாகவும், ரஷ்யாவில்தான் இருப்பதாகவும், அவர்கள் ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
ஆனால், அவர்களின் பெயரையோ இதர தகவல்களையோ பற்றி அவர் பேசியதில்லை. அவர் கூறாவிட்டாலும், அவ்வப்போது அவரின் மகள்கள் பற்றி தகவல்கள் கசிந்து கொண்டுதான் இருந்தன.
இப்போது அமெரிக்காவின் தடை மூலமாக புதினின் மகள்கள் பற்றி பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதில் நமக்குத் தெரிந்த தகவல்களை பார்ப்போம்.
புதின் தனது முன்னாள் மனைவி லியுட்மிலாவை 2013-ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தார். லியுட்மிலாவுக்கும் புதினுக்கும் பிறந்தவர்கள்தான் புதினின் இரு மகள்களும்.
மூத்த மகள் மரியா வோரோன்ஸோவா. இவருக்கு வயது 37. இவர் ஜோரிட் ஜூஸ்ட் ஃபேஸ்ஸன் என்ற டச்சு தொழில் அதிபரை மணம் முடித்தவர். அதனால் இவர் மரியா ஃபேஸன் என்றும். அழைக்கப்படுகிறார்.
தொழிலதிபர் ஃபேஸ்ஸன், ரஷ்யாவின் மிகப்பெரும் எண்ணெய் நிறுவனமான கேஸ்பிராமில் உயர் பதவியில் பணிந்தவர் என்று கூறப்படுகிறது. திருமணத்துக்கு பிறகு நெதர்லாந்து நாட்டில் வாழ்ந்து வந்திருக்கின்றனர்.
2019-ம் ஆண்டில் ரஷ்ய அரசு ஊடகம் ஒன்றுக்கு மரியா அளித்த பேட்டியில்தான், அவர் நோமிகோ என்ற மருத்துவ நலன் சார்ந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் எனத் தெரியவந்தது. நோமிகோ என்பது ரஷ்யாவின், மருத்துவத் துறையில் மிகப்பெரும் தனியார் முதலீடு கொண்ட ஒரு கார்ப்பரேட் நிறுவனம். அதுமட்டுமல்ல மரியா மருத்துவரும் கூட. செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் பல்கலைக்கழகத்தில் உயிரியல் பட்டமும், மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பு முடித்தவர்.
சிறார்களுக்கான வளர்ச்சி குறைபாடு தொடர்பான Endocrinology சிகிச்சைகளில் மரியா ஸ்பெஷலிஸ்ட் என்று கூறப்படுகிறது. ஃபேஸ்ஸனும் மரியாவும் பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது மரியா எங்கு இருக்கிறார் என்பது பற்றிய தகவலும் தெரியவில்லை.
இரண்டாவது மகள் கேத்தரினா டிகோனோவா, அக்காவுக்கு நேர்மாறானவர். அக்கா மரியாவின் வாழ்க்கை பெரும்பகுதி வெளியுலகத்துக்கு தெரியாத ரகசியமாகவே இருந்தது. ஆனால் டிகோனோவாவின் வாழ்க்கை அப்படியில்லை. காரணம் டிக்கோனோவா ஒரு ராக் அண்ட் ரோல் டான்ஸர்.
நடனத்தில் மிகவும் ஆர்வம் கொண்டவர். சர்வதேச ராக் அண்ட் ரோல் நடன அமைப்பின் துணைத் தலைவராக இருந்திருக்கிறார். 2013-ம் ஆண்டு சர்வதேச அளவிலான போட்டியில் 5-ம் இடம் பிடித்து பிரபலமானவர். 2013-ம் ஆண்டு, தந்தை புதினின் நெருங்கிய நண்பரின் மகனான கிரிலி ஷாமோலோவ் என்ற கோடீஸ்வரரை திருமணம் செய்துகொண்டார்.
2018-ம் ஆண்டு ஷாமோலோவ் மீதும் அமெரிக்கா தடை விதித்தது. புதினின் மகளை திருமணம் செய்துகொண்ட பிறகு ஷாமோலோவின் சொத்து மதிப்பு உயர்ந்ததும், ரஷ்ய எரிசக்தி துறையில் ஷாமோலோவ் வகித்த முக்கியப் பங்கும் இதற்கு காரணம் என அமெரிக்கா தெரிவித்தது.
தற்போது டிகோனோவாவும் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது செயற்கை நுண்ணறிவு குறித்த ஆராய்ச்சி நடத்தும் ரஷ்ய அரசு சார்ந்த கல்வி நிறுவனத்தின் தலைமை பொறுப்பு வகித்து வருகிறார். அதுபோக, தொழில் முனைவோராகவும் செயல்பட்டுவருகிறார். இவருடைய சொத்து மதிப்பு $2பில்லியன் அமெரிக்க டாலர்கள் இருக்கும் என்கின்றனர்.
புதினுக்கு பேரக் குழந்தைகளும் இருக்கின்றனர். அதுபற்றி கேட்டபோது, “ அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போல அவர்கள் வளர்வதை நான் விரும்பவில்லை. சாதாரண மனிதர்களாகத்தான் அவர்கள் வளர வேண்டும் அதனால், அவர்கள் பற்றி இதற்குமேல் என்னிடம் கேட்காதீர்கள்” என 2017-ம் ஆண்டு புதின் தெரிவித்திருக்கிறார்.
புதின் தனது மகள்களோடும், மனைவியோடும் நேரம் செலவிடுவதும் மிகவும் குறைவு என்றே கூறப்படுகிறது. 2013-ம் ஆண்டு விவாகரத்துக்குப் பிறகு மனைவி லியுட்மிலா கூறியதாவது, “ நாங்கள் அவரைப் பார்த்து பல நாள்களாகிறது. அவர் வேலையிலேயே மூழ்கிக் கிடக்கிறார். எங்கள் இருவருக்கும் வெவ்வேறு வாழ்க்கையிருக்கிறது. அதனால் நாங்கள் பிரிகிறோம்” என்றார்.
இத்தனை நாள்களாக தெரிந்தும் தெரியாததுமாக இருந்த புதினின் மகள்களின் வாழ்க்கை, அமெரிக்காவின் பொருளாதாரத் தடைக்கு பிறகு அதிகம் பேச பொருளாகியிருக்கிறது. முன்பே கூறியிருந்தோம், தன்னுடைய பெர்சனல் வாழ்க்கையில் மூக்கை நுழைத்தால் அது புதினுக்கு கோபத்தை ஏற்படுத்தும். இன்று அமெரிக்கா விதித்திருக்கும் தடை புதினை கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது!