Russia sanctions Twitter
உலகம்

ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இல்லாமல் உலக நாடுகளால் சமாளிக்க முடியுமா? ரஷ்யா மீதான தடைகள் என்ன?

2021 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள மிகப்பெரிய பொருளாதாரமான ஜெர்மனி, ரஷ்யாவிடமிருந்து மிக அதிகப்படியான இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்து வந்தது.

Gautham

ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்ததிலிருந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை அதீத ஏற்ற இறக்கங்களைக் கண்டு வருகிறது.

ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பல்வேறு மேற்கத்திய நாடுகள், ரஷ்யா மீது பலவித பொருளாதார தடைகளை விதித்துள்ளன. பதிலுக்கு ரஷ்யாவும் தன்னுடைய கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விநியோகத்தை மிகக் கடுமையாக கட்டுப்படுத்தி வருகின்றது.

ரஷ்யாவிலிருந்து ஐரோப்பிய கண்டத்திற்கு இயற்கை எரிவாயு விநியோகிக்கப்படும் ஒரு முக்கிய எரிவாயு வழித்தடம் பல்வேறு காரணங்கள் சுட்டிக்காட்டப்பட்டு மூடப்பட்டுள்ளது. ஐரோப்பாவிலோ குளிர் காலம் தொடங்க இருக்கிறது.

எரிவாயு வழித்தடம் ஒரு பார்வை:

நாட் ஸ்ட்ரீம் 1 (Nord Stream 1) என்று அழைக்கப்படும் கடலுக்கு அடியில் செல்லும் இந்த ராட்சத எரிவாயுக் குழாய், பால்ட்டிக் கடல் வழியாக ஜெர்மனி வரை செல்கிறது.

இந்த ஒரு எரிவாயு வழித்தடத்தின் மூலம் மட்டுமே ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பல நாடுகளுக்கும் எரிவாயு விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்தமாக ஐரோப்பாவுக்கு விநியோகிக்கப்படும் எரிவாயுவில் 35 சதவீத எரிவாயு இந்த நாட் ஸ்ட்ரீம் 1 குழாயிலிருந்து மட்டுமே விநியோகிக்கப்படுகிறது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

பான்ஹோம் (Bornholm) என்கிற தீவுப் பகுதியில் பதிக்கப்பட்டு இருக்கும் நாட் ஸ்ட்ரீம் 1 எரிவாயு குழாயில் கசிவு இருப்பதாக ரஷ்ய தரப்பு கூறியது. இதுவரை செயல்பாட்டுக்கு வராத நாட் ஸ்ட்ரீம் 2 என்கிற எரிவாயு குழாயிலும் கேஸ் கசிவதாக ரஷ்ய தரப்பு கூறியது.

அப்பகுதியில் கடலுக்கு அடியில் சில பல வெடிப்புகள் ஏற்பட்டதாக டென்மார்க்கில் உள்ள பூகம்பவியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொன்டர்லேனும் யாரோ இந்த எரிவாயு குழாய்களை வேண்டுமென்றே சேதப்படுத்தி இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் அது யார் என்ன என்கிற விவரங்களைக் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

ரஷ்ய தரப்போ நாட் ஸ்ட்ரீம் 1 எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவுகளுக்கும் தங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை, எரிவாயு கசிவுக்கு தாங்கள் பொறுப்பல்ல என அனைத்தையும் மறுத்து வருகின்றனர்.

நாட் ஸ்ட்ரீம் 1 ஐரோப்பாவில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒட்டுமொத்த இயற்கை எரிவாயு விநியோகத்தில் சுமார் 40 சதவீதத்தை ஒற்றை ஆளாக விநியோகித்து வந்தது ரஷ்யா.

2021 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள மிகப்பெரிய பொருளாதாரமான ஜெர்மனி, ரஷ்யாவிடமிருந்து மிக அதிகப்படியான இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்து வந்தது. கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் ஜெர்மனி 56.2 பில்லியன் கியூபிக் மீட்டர் இயற்கை எரிவாயுவை ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்தது.

அதனைத் தொடர்ந்து இத்தாலி 29.2 பில்லியன் கியூபிக் மீட்டர், நெதர்லாந்து 13.2 பில்லியன் கியூபிக் மீட்டர்,

பிரான்ஸ் 11.1 பில்லியன் கியூபிக் மீட்டர், போலந்து 10.5 பில்லியன் கியூபிக் மீட்டர்... என இயற்கை எரிவாயுவை ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்துள்ளனர்.

உக்ரைன் மீது போர் தொடுத்ததற்குப் பிறகு, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விநியோகிக்கும் இயற்கை எரிவாயுவின் அளவை மெல்ல குறைக்கத் தொடங்கியது ரஷ்யா.

நாட் ஸ்ட்ரீம் 1 எரிவாயு குழாய் மூலம் நாள் ஒன்றுக்கு 170 மில்லியன் கியூபிக் மீட்டர் இயற்கை எரிவாயுவை விநியோகித்து வந்த ரஷ்யா, ஒருகட்டத்தில் வெறும் 20 மில்லியன் கியூபிக் மீட்டர் எரிவாயுவை விநியோகித்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

கடந்த ஆண்டு ரஷ்யாவிலிருந்து ஐரோப்பாவுக்கு விநியோகிக்கப்பட்டு வந்த இயற்கை எரிவாயு அளவில் கிட்டத்தட்ட 88 சதவீத விநியோகம் சரிந்து இருப்பதாக ஆர்கஸ் மீடியா என்கிற ஆய்வு நிறுவனத்தின் முதன்மைப் பொருளாதார வல்லுநர் டேவிட் ஃபைப்ப் (David fyfe)  பிபிசி ஊடகத்திடம் கூறியுள்ளார்.

ரஷ்யாவின் இந்த ஒற்றை செயலினால் இயற்கை எரிவாயுவின் மொத்த விலை (Wholsesale Price) சுமார் 210 சதவீதம் அதிகரித்தது. சர்வதேச சந்தைகளில் இயற்கை எரிவாயு விநியோகம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

2021 ஆம் ஆண்டில் பிரிட்டன் தன்னுடைய ஒட்டு மொத்த எரிவாயுவில் சுமார் 4 சதவீதத்தை ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்து வந்தது. ஆனால் தற்போது ரஷ்யாவிலிருந்து இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யவில்லை.

ஐரோப்பிய சந்தை மற்றும் ஒட்டுமொத்த சர்வதேச சந்தைகளில் இயற்கை எரிவாயுவின் விநியோகம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் பிரிட்டனில் எரிவாயுவின் விலை சகட்டுமேனிக்கு அதிகரித்திருக்கிறது.

எரிவாயு பிரச்னையைச் சமாளிக்க ஐரோப்பிய ஒன்றியத்திடம் திட்டம் ஏதேனும் இருக்கிறதா?

ரஷ்யாவின் அரசு உதவி பெறும் அல்லது அரசு சார் நிறுவனமான கேஸ்ப்ரோம் (Gazprom) தான் இயற்கை எரிவாயுவை விநியோகித்து வருகிறது.

இந்த நிறுவனத்தின் கீழ் தான் நாட் ஸ்ட்ரீம் 1 எரிவாயு குழாயும் செயல்பட்டு வருகிறது. நாட் ஸ்ட்ரீம் 1 எரிவாயு குழாயில் ஏற்பட்டுள்ள கசிவுகளை எல்லாம் சரி செய்து எப்போது மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் என உறுதியாக சொல்வது முடியாத காரியம் என கை விரித்து விட்டது கேஸ்ப்ரோம்.

ரஷ்யா இயற்கை எரிவாயு தட்டுப்பாட்டை செயற்கையாக உருவாக்கியதாகவும், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பல நாடுகள் ரஷ்யா மீது விதித்துள்ள பொருளாதாரத் தடைகளைத் தொடரும் மனநிலையை பலவீனப்படுத்தவே இப்படி செய்வதாகவும் ஆர்கஸ் மீடியா (Argus Media) என்கிற ஆய்வு நிறுவனம் கூறுகிறது.

தற்போது ரஷ்யாவிடம் இருந்து ஐரோப்பிய ஒன்றியம் வாங்கிக் கொண்டிருக்கும் ஒட்டுமொத்த இயற்கை எரிவாயுவில், சுமார் மூன்றில் இரண்டு பங்கு எரிவாயுவை, ரஷ்யாவிடம் இருந்து வாங்காமல் வேறு யாரிடமிருந்தாவது வாங்கப் போவதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.

இதுபோக ஒட்டுமொத்தமாகவே ஐரோப்பாவில் எரிவாயு பயன்பாட்டை அடுத்த ஏழு மாத காலங்களுக்குள் 15 சதவீதம் குறைக்கவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

உடனடியாக பிரச்னையை சமாளிக்க ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் கத்தார் போன்ற நாடுகளிடமிருந்து திரவ நிலைக்கு மாற்றப்பட்ட இயற்கை எரிவாயுவை (LNG) இறக்குமதி செய்யவிருப்பதாக பிபிசி ஊடகத்தின் வலைதளத்தில் பிரசுரமாகியுள்ள கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒருவேளை மேற்கூறியது போல இயற்கை எரிவாயுவை அமெரிக்கா மற்றும் கத்தாரிடமிருந்து வாங்கினாலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் போதுமான அளவுக்கு திரவ நிலைக்கு மாற்றப்பட்ட இயற்கை எரிவாயுவை சேமித்து வைக்கும் டெர்மினல்கள் இல்லை என கேட் டூரியன் என்கிற எரிவாயு மற்றும் எரிசக்தி ஆலோசகர் கூறியுள்ளார்.

ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள்:

ரஷ்யா நாள் ஒன்றுக்கு 5 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் மற்றும் 3 மில்லியன் பேரல் சுத்திகரிக்கப்பட்ட கச்சா எண்ணெய் பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. ரஷ்யப் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வருவாயில், இந்த இரு பொருட்கள் மட்டுமே சுமார் 40% பங்களிக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வரும் டிசம்பர் 5ஆம் தேதி முதல் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக் கொள்ளும். அடுத்த ஆண்டு அதாவது 2023 பிப்ரவரி 5ஆம் தேதி முதல் சுத்திகரிக்கப்பட்ட கச்சா எண்ணெய் பொருட்களையும் ரஷ்யாவிடம் இருந்து வாங்குவதை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் நிறுத்திக் கொள்ளும்.

ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா போன்ற சில நாடுகளுக்கு மட்டும் இந்த ரஷ்யப் பொருளாதாரத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தி விட்டன.

இது போக ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்கு ஒரு உச்சவரம்பு விலையை நிர்ணயித்து, ரஷ்யா லாபம் பார்க்காதவாறு தடுக்கவும் ஐரோப்பிய ஒன்றியம் விரும்புகிறது. இதை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகள் ஆதரிக்கின்றன.

இந்தத் திட்டத்தை மதித்து நடக்காதவர்கள் அதாவது ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்கு விதிக்கப்பட்டிருக்கும் உள்ள உச்சவரம்பு விலையை இருப்பவர்கள் மற்ற பல சேவைகளைப் பெற முடியாது.

உதாரணத்திற்கு லண்டனில் உள்ள நிதி மையங்களைப் பயன்படுத்தி கப்பல் வழியாகக் கச்சா எண்ணெய் அனுப்பி வைக்கப்படும் போது கப்பல் சரக்கு போக்குவரத்திற்குக் காப்பீடுகளை எல்லாம் செய்து கொள்ள முடியாது என்கிறது.

இதனால் இந்தியா போன்ற மிகப் பெரிய ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியாளர்கள் பாதிக்கப்படுவர்.

மறுபக்கம் ரஷ்ய அதிபர் விளாடிமிர்புதினோ இப்படிப்பட்ட பொருளாதாரத் தடைகளை ரஷ்யா மீது விதித்தால் ரஷ்யா தன்னுடைய அனைத்து எரிசக்தி மற்றும் எரிவாயு விநியோகத்தையும் நிறுத்திவிடும் என எச்சரித்துள்ளார்.

ஜி 7 நாடுகளின் தலைவர்கள் விளாடிமிர் புதின் வெறுமனே வாய் வார்த்தையில் அச்சுறுத்துவதாகவே அதைக் கருதுகின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் கச்சா எண்ணெய் பற்றாக்குறை ஏற்படுமா?

சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கச்சா எண்ணெய் விநியோகம் கணிசமாகப் பாதிக்கப்படலாம். உதாரணத்திற்கு லித்துவேனியா, பின்லாந்து ஆகிய நாடுகளின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 80 சதவீதம் ரஷ்யாவிலிருந்து மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டது இங்கு நினைவுகூரத்தக்கது.

ஸ்லோவாக்கியா 74 சதவீதம், போலந்து 58 சதவீதம், ஹங்கேரி 43%, எஸ்டோனியா 34%, ஜெர்மனி 30 சதவீதம், கிரீஸ் 29 சதவீதம், நார்வே 25 சதவீதம்... என பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கணிசமான அளவுக்கு ரஷ்யாவிலிருந்து மட்டுமே கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளன.

இப்போது ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்கவில்லை எனில் இந்த நாடுகள் மற்ற உற்பத்தியாளர்களிடமிருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து கொள்ளலாம்.

உண்மையிலேயே பொருளாதாரத் தடைகள் வேலை செய்கின்றனவா? என்றால் அத்தனை சிறப்பாக செயல்படவில்லை என்று தான் கூற வேண்டி இருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எப்படி ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய்யை வாங்கவில்லை எனில் வேறு ஏதோ ஒரு நாட்டிடம் வாங்க முடிகிறதோ... அப்படி ரஷ்யாவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடம் தன் கச்சா எண்ணையை விற்க முடியவில்லை எனில் இந்தியா, சீனா போன்ற மற்ற நாடுகளிடம் விற்க முடிகிறது.

இந்தியா மற்றும் சீனா இரு நாடுகளும் உலகின் டாப் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் முதல் இரு இடங்களில் இருக்கின்றன.

இந்த இரு நாடுகளிடமும் ரஷ்யாவுக்கு ராஜரீக ரீதியில் ஒரு நல்லுறவு இருப்பதும் இரு நாடுகளும் மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தடைகளை மீறி தைரியமாக இப்போது வரை ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கிக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?