Saudi Aramco

 

NewsSense

உலகம்

செளதி அரேபியா அரசு : அராம்கோ எண்ணெய் நிறுவன லாபம் 2 மடங்கு அதிகரித்திருக்கிறது!

திஜெ

சவுதி அரேபிய அரசின் எண்ணெய் நிறுவனமான அராம்கோ, 2021-ம் ஆண்டில் தனது நிகர லாபம் 120% உயர்ந்திருப்பதாக அறிவித்திருக்கிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையிலிருந்து உலகம் மீண்டதால் லாபம் அதிகரித்திருக்கிறது.

" 2021-ல் நிகர வருமானம் 124% அதிகரித்து $110 பில்லியனாக இருக்கிறது. இதுவே 2020-ல் $49 பில்லியனாக இருந்தது" என்று அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. 2019-ல் அராம்கோவின் நிகர வருமானம் $88.29 பில்லியனாக இருந்தது. 2020-ல் கொரோனாவால் சர்வதேச சந்தைகள் பெரும் பாதிப்பைச் சந்தித்தன. எண்ணெய் மற்றும் வான்வழிப் போக்குவரத்துத்துறை பெரும் சரிவைச் சந்தித்தன. 2021-ல் சந்தை சரிவிலிருந்து மீளத் தொடங்கியது. 2014-ம் ஆண்டு முதல் இல்லாத அளவுக்கு, கச்சா எண்ணெய் அதிக விலைக்கு விற்பனையானது. சர்வதேச அளவில் ஏற்பட்ட எண்ணெய் விநியோகக் குறைபாடு மற்றும் உக்ரைன் - ரஷ்யா போரால் விலையேற்றம் கண்டிருக்கிறது.

Saudi Arabia 

2019-ம் ஆண்டு அராம்கோ நிறுவனம், சவுதி வர்த்தக சந்தையில் தனது 1.7% பங்குகளைப் பொதுமக்களுக்கு வெளியிட்டு (ஐபிஓ) $29.4 பில்லியன் நிதி திரட்டியது. உலகின் மிகப்பெரும் ஐபிஓ நிதித் திரட்டல் என்று இது கருதப்படுகிறது.

" எங்கள் நிறுவனத்துக்குக் கிடைத்திருக்கும் இந்த முன்னேற்றம், எங்கள் தீவிர நிதி ஒழுங்கு, சந்தைகளுக்கு ஏற்ப தகவமைத்தல், நீண்ட கால வளர்ச்சித் திட்ட செயல்பாடு ஆகியவற்றின் விளைவாக கிடைத்த பரிசு" என்கிறார் அராம்கோ நிறுவனத்தின் தலைவர் அமின் நாசர். மேலும் அவர் பேசுகையில் " பொருளாதார நிலைமை மேம்பட்டிருந்தாலும், உலக அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணிகள், நிலையற்ற தன்மை இருப்பதையே நமக்கு உணர்த்துகின்றன. எங்கள் முதலீடு நீண்ட கால எரிபொருள் தேவையை மையப்படுத்தி இருக்கிறது. எரிபொருள் பாதுகாப்பு என்பது உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் முதன்மையான தேவை என்பதை நாங்கள் உணர்கிறோம். அதனால்தான் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை விரிவுப்படுத்தும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்" என்கிறார் நாசர்.

2017-ம் ஆண்டு சவுதி அரேபியாவின் இளவரசராக முகமது பின் சல்மான் பொறுப்பேற்ற பிறகு, எண்ணெய் வளம் மிக்க சவுதி தனது பொருளாதார செயல்பாடுகளைப் பலவகைகளில் விஸ்தரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. பிப்ரவரி மாதம் அராம்கோ நிறுவனத்தின் $80 பில்லியன் மதிப்பிலான 4% பங்குகள், சவுதியின் செல்வ நிதியில் சேர்க்கப்பட்டது. இதன் மூலம் அரபு நாடுகளில் செல்வ வளம் மிக்க நாடாக தன்னை நிலைநிறுத்த நினைக்கிறது சவுதி. மேலும் தன்னுடைய எண்ணெய் சந்தையைப் பல வகைகளில் திறந்து விடத் தயாராக இருப்பதையும் இந்த செயல்பாடு உணர்த்துகிறது. அராம்கோவின் 1% பங்கை வெளிநாட்டு எரிபொருள் நிறுவனம் ஒன்றுக்கு விற்கவும் சவுதி திட்டமிட்டு வருகிறது.

Ukarine

உக்ரைன் படையெடுப்பால் ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. எரிவாயு உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கிறது ரஷ்யா. மிகப்பெரும் எண்ணெய் உற்பத்தி நாடும் கூட. ஆனால் பொருளாதாரத்தடையால் திணறிக் கொண்டிருக்கிறது. இதனால் அமெரிக்காவின் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு $100 வரை விற்பனையாகிறது.

மேற்கு உலக நாடுகள், விலை ஏற்றத்தைத் தடுக்க எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கச் சவுதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்குத் தொடர் அழுத்தம் கொடுத்து வருகின்றன. ஆனாலும் எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பு (opec) உற்பத்தியை உயர்த்த மறுத்து வருகின்றன.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?