Shinzo Abe - Modi Twitter
உலகம்

Shinzo Abe : மறைந்த ஷின்ஷோ அபேவை இந்தியா கொண்டாடுவதற்கான காரணம் என்ன? - Detail Report

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை ஜப்பானில் உள்ள எமனாசி (Yamanashi) வீட்டுக்கு அழைத்து விருந்தோம்பல் வழங்கப்பட்டது நினைவு இருக்கலாம். எந்த ஒரு வெளிநாட்டு தலைவருக்கும் ஜப்பான் அப்படி ஒரு பெரிய மரியாதையைச் செய்தது இல்லை என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

Gautham

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேவின் இறுதி அஞ்சலி நிகழ்வில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி கலந்து கொள்வது ஏன்?

இந்திய ஒன்றிய அரசின் பிரதமர் நரேந்திர மோடி தற்போது ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபே அவர்களின் இறுதி அஞ்சலியில் கலந்து கொள்கிறார்.

ஷின்ஷோ அபே அவர்கள் கொல்லப்பட்டதற்கும், அவருடைய இறுதி அஞ்சலியின் போதும் நரேந்திர மோதி தன் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் உருக்கமாக தன் வருத்தத்தையும் அஞ்சலிகளையும் பதிவு செய்திருந்தார். ஷின்ஷோ அபே அவர்கள் காலமானதற்கு இந்தியாவில் ஜூலை 9ஆம் தேதி ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டதும் இங்கு நினைவுகூரத்தக்கது.

Shinzo Abe

ஷின்ஷோ அபேவை இந்தியா கொண்டாடுவதற்கான காரணம் என்ன?

கடந்த ஜூலை எட்டாம் தேதி ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபே, ஓர் அரசியல் பிரச்சார கூட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

என்னுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ஷின்ஷோ அபே கொல்லப்பட்டது, வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டு என்னை அதிர்ச்சியிலும் வருத்தத்திலும் ஆழ்த்தி உள்ளது. அவர் ஒரு ராஜதந்திர, பிரமாதமான தலைவர், சிறந்த நிர்வாகி. ஜப்பானையும் இந்த உலகத்தையும் ஒரு நல்லிடமாக மாற்ற தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.

இந்தியா மற்றும் ஜப்பானுக்கு இடையிலான உறவுகளை இன்றைய குறிப்பிடத்தக்க நிலைக்கு உயர்த்தியதில் அபே அவர்களின் பங்கு அளப்பரியது. இன்று ஒட்டுமொத்த இந்தியாவும் ஜப்பானின் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்கிறது. ஜப்பானிய சகோதரர்கள் மற்றும் சகோதரிகளின் இந்த சிரமமான நேரத்தில் நாங்கள் உறுதுணையாக நிற்கிறோம் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஷின்ஷோ அபே காலமான பிறகு தன்னுடைய அதிகாரப்பூர்வமான டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

Shinzo Abe

நீண்ட கால பிரதமர்

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஜப்பானின் மிக முக்கியமான அரசியல் ஆளுமைகளில் ஒருவராகத் திகழ்ந்தார் ஷின்ஷோ அபே. 2006 முதல் 2007 வரையில் தன் முதல் பதவிக் காலமாகவும், இரண்டாவது முறையாக பிரதமராகப் பதவியேற்றவர் 2012 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையில் செயல்பட்டு வந்தார்.

கடந்த ஆகஸ்ட் 2020 காலகட்டத்தில் தன் உடல் நிலையைக் காரணமாகக் கூறி ஜப்பானின் பிரதமர் பதவியில் இருந்து விலகினார் ஷின்ஷோ அபே. அப்போது அவருக்கு வயது 65. ஜப்பானின் நீண்ட நெடிய வரலாற்றில், அதிக ஆண்டுகள் ஜப்பானின் பிரதமராகப் பொறுப்பில் இருந்த பெருமை ஷின்ஷோ அபேவையே சேரும்.

பதவிக்கு வந்ததிலிருந்து இந்தியாவோடு நல்ல நட்பையும் ராஜரிக ரீதியிலான உறவையும் பேணி பாதுகாத்து, அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றார். குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த நரேந்திர மோடியுடன் அவர் பிரதமர் ஆவதற்கு முன்பிருந்தே தொடர்பில் இருந்தார் அபே.

Shinzo Abe

முதல் ஜப்பானிய பிரதமர்

ஷின்ஷோ அபே, இதுவரை நான்கு முறை இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். 2006 - 07 காலகட்டத்தில் இந்திய நாடாளுமன்றத்தில் Confluence of the two seas என்கிற தலைப்பில் அவர் பேசிய பேச்சு இந்தோ - பசிபிக் உறவுக்கு அடிக்கல் நாட்டியது. இன்று வரை இந்தியா மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ராஜரிக உறவுகளுக்கு அந்தப் பேச்சு ஒரு முக்கிய தூணாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

அதனைத் தொடர்ந்து ஜனவரி 2014, டிசம்பர் 2015, செப்டம்பர் 2017 என மூன்று முறை இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இதுநாள் வரை எந்த ஒரு ஜப்பானிய பிரதமரும் இந்தியாவிற்கு இத்தனை முறை சுற்றுப் பயணங்களை மேற்கொண்டதில்லை.

அதேபோல 2014 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவிற்கான சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட முதல் ஜப்பானிய பிரதமரும் ஷின்ஷோ அபே தான்.

இந்திய ஒன்றிய அரசில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலமாக இருக்கட்டும், பாரதிய ஜனதா கட்சியின் நரேந்திர மோடி பிரதமராக இருக்கும் காலமாகட்டும், இரண்டு கட்சிகளும் பெரிய கருத்து வேறுபாடுகளின்றி ஜப்பானோடு தொடர்ந்து ராஜ்ஜிய உறவுகளை வளர்த்து வந்தனர், அதை அடுத்து கட்டத்துக்கு எடுத்துச் சென்று வருகின்றனர்.

இந்தியா - ஜப்பான் ராஜ்ய உறவுகள்

கடந்த 2001 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் ஜப்பானுக்கு இடையிலான சர்வதேச உறவுகள் மற்றும் கூட்டாண்மைக்கு விதை போடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசிக்கொள்ள 2005 ஆம் ஆண்டு ஒப்புக்கொள்ளப்பட்டது. ஷின்ஷோ அபே இரண்டாவது முறையாக ஜப்பானின் பிரதமராக பொறுப்பேற்ற பிறகுதான், இந்த சந்திப்புகள் மற்றும் ராஜ்ஜிய உறவுகள் வேகப்படுத்தப்பட்டன.

நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே பலமுறை ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோதி இந்தியாவின் பிரதமர் ஆனபின், செப்டம்பர் 2014 காலத்தில் தன்னுடைய முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கு ஜப்பானை தேர்வு செய்தார்.

ஜப்பானில் ஷின்ஷோ அபே அவர்களும் இந்தியாவில் நரேந்திர மோடியும் பிரதமர்களாக இருந்த காலகட்டத்தில் பல்வேறு சர்வதேச கூட்டாண்மைகள் மேம்படுத்த இருதரப்பினரும் ஒப்புக்கொண்டனர். இதில் அணுசக்தி மின்சாரம், கடல் பாதுகாப்பு, புல்லட் ரயில் வரை பலவற்றை குறிப்பிடலாம்.

ராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறை

இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் 2008 ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு ஒப்பந்தம் அமலில் இருந்த போதும், இரு நாட்டைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் சந்தித்து பேசிக்கொள்ள சம்மதித்தனர்.

இதுபோக acquisition and cross servicing agreement என்று அழைக்கப்படும் ஒப்பந்தம் குறித்தும் இரு நாடுகளும் பேசத் தொடங்கின. 2019 நவம்பர் காலகட்டத்தில் இரு நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் டெல்லியில் சந்தித்து முதல்முறையாகப் பேச்சு வார்த்தைகளை நடத்தினர்.

பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் அதன் தொழில்நுட்பப் பரிமாற்ற ஒப்பந்தம் கடந்த 2015 ஆம் ஆண்டு கையெழுத்தானது. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஜப்பான் இப்படி எந்த ஒரு நாட்டோடும் இப்படி ஒரு ஒப்பந்தத்தை செய்து கொள்ளவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

2007 ஆம் ஆண்டு குவாட் அமைப்பு உருவானது. ஆனால் அது உருவான வேகத்திலேயே சிதைந்து போனது. மீண்டும் அக்டோபர் 2017 காலகட்டத்தில் பசிபிக் பெருங்கடல் மற்றும் இந்திய பெருங்கடல், இந்தியாவின் டோக்லாம் போன்ற பகுதிகளில் சீனாவின் ஆக்கிரமிப்பு அதிகரிக்கத் தொடங்கியது போது, மீண்டும் ஜப்பான் தான் குவாட் யோசனையைத் தீர்க்கமாக வலியுறுத்தியது.

அதன் விளைவாக 2017 நவம்பர் காலகட்டத்தில் இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளடக்கிய புதிய குவாட் அமைப்பு மணிலாவில் சந்தித்துப் பேசியது.

இதையெல்லாம் விட மிக முக்கியமான விஷயம் என்னவெனில் 2013ஆம் ஆண்டு முதல் இதுநாள் வரை இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையில் நான்கு முறை தலைப்புச் செய்திகளில் இடம்பெறும் அளவுக்கு இரு நாடுகளுக்கு இடையில் மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த மோதல்களின் போதெல்லாம் ஜப்பான் சீனாவுக்கு எதிராகவும் இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டையுமே எடுத்துள்ளது என்பதும் இங்கு நினைவு கூரத்தக்கது.

இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா மற்றும் ஜப்பான் இணைந்து மாலத்தீவுகள் மற்றும் இலங்கையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றன.

உள்நாட்டு அரசியலில் மூக்கு நுழைக்காத ஜப்பான்

இந்தியாவோடு என்னதான் நெருக்கமான உறவை ஜப்பான் பேணிப் பாதுகாத்து வந்தாலும், இந்தியாவுக்குள் நடக்கும் எந்த ஒரு அரசியல் ரீதியான பிரச்னைகளுக்கும் இந்தியாவை ஜப்பான் கண்டித்தது இல்லை.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை ஜப்பானில் உள்ள எமனாசி (Yamanashi) வீட்டுக்கு அழைத்து விருந்தோம்பல் வழங்கப்பட்டது நினைவு இருக்கலாம். எந்த ஒரு வெளிநாட்டு தலைவருக்கும் ஜப்பான் அப்படி ஒரு பெரிய மரியாதையைச் செய்தது இல்லை என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

அப்படியே இந்தியா பக்கம் திரும்பினால், கடந்த 2021 ஜனவரி காலகட்டத்தில் இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய பொதுமக்கள் விருதான பத்மபீபூஷன் ஷின்ஷோ அபே அவர்களுக்கு வழங்கப்பட்டது.

நரேந்திர மோடி மற்றும் ஷின்ஷோ அபே தனிப்பட்ட முறையில் ஒரு நல்ல நட்பையும் நம்பிக்கையையும் பகிர்ந்து வந்ததாகச் சில வெளியுறவுத் துறை அதிகாரிகள் கூறியதாக சில பத்திரிகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா ஒரு நல்ல நண்பரை இழந்துவிட்டது என அரசியல் வட்டாரத்தில் உள்ளோர் வருத்தப்படுகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?