Electricity Crisis Pexels
உலகம்

மின்சார தட்டுப்பாடு : தேசத்தை விட்டு வெளியேறும் மக்கள் - என்ன நடக்கிறது அந்த நாட்டில்?

அரசு மின்சார நிறுவனமான எஸ்காமில் மோசமான நிர்வாகம் மற்றும் ஊழல் நிலவுகிறது. இதன் காரணமாக தென்னாப்பிரிக்கா பல ஆண்டுகளாக மின்வெட்டை அனுபவித்து வருகிறது. தற்போது நிலைமை இன்னும் மோசம்.

Govind

இந்தியா, பிரேசில் நாடுகளோடு தென்னாப்பிரிக்காவும் வளர்ந்து வரும் நாடாக கருதப்படுகிறது. ஆனால் இந்தியாவைப் போன்று தென்னாப்பிரிக்காவிலும் மின்சார நெருக்கடி நிலவுகிறது. நாடு முழுவதும் மக்கள் ஒரு நாளைக்கு 6 மணிநேரம் வரை மின்தடையை எதிர்கொண்டு வருகின்றனர். மின்சாரம் வருவதும் ஒழுங்கற்ற முறையில் இருப்பதால் தற்போதைய குளிர்காலத்தை எதிர்கொள்ள மக்கள் சிரமப்படுகின்றனர்.

அரசு நடத்தும் மின்சார நிறுவனமான எஸ்காம் இந்த நெருக்கடியை எதிர்கொள்ள சிரமப்படுகிறது. மக்கள் விழிக்கும் போது மின்சாரம் இருக்காது. போக்குவரத்து விளக்குகள் வேலை செய்யாததால் சாலைகளில் நெரிசல் ஏற்படுவது, அலுவலகங்களில் ஜெனரேட்டர்களின் சப்தம் காதைக் கிழிப்பது, பின்னர் வீட்டிற்கு வந்தால் மின்சாரம் துண்டிக்கப்படுவது என ஒரு நாள் முழுக்க மக்கள் மின்தடையின் துன்பத்தை அனுபவிக்கின்றனர்.

தென்னாப்பிரிக்காவின் முக்கிய நகரமான ஜோகன்னஸ்பர்க்கில் வசிக்கிறார் ஜார்ஜ். இந்த ஒழுங்கற்ற மின்சார விநியோகம் காரணமாக அவர் நாட்டை விட்டு வெளியேற விரும்புகிறார். அவர் லண்டனில் ஒரு வேலைக்கான நேர்காணலுக்காக விமானத்தில் முன்பதிவு செய்திருக்கிறார். தனது நாட்டை நேசித்தாலும், நாடும் தன்னை நேசிக்க வேண்டும் என்று வருத்தப்படுகிறார்.

அரசு மின்சார நிறுவனமான எஸ்காமில் மோசமான நிர்வாகம் மற்றும் ஊழல் நிலவுகிறது. இதன் காரணமாக தென்னாப்பிரிக்கா பல ஆண்டுகளாக மின்வெட்டை அனுபவித்து வருகிறது. தற்போது நிலைமை இன்னும் மோசம்.

கடந்த ஆண்டு 2,521 ஜிகாவாட் மணிநேர மின்வெட்டு நாட்டில் நிலவியது. ஆனால் தற்போது ஜூலை மாதத்தில் மட்டும் 2,276 ஜிகாவாட் மணிநேரம் மின்வெட்டு இருந்தது. 1000 மெகாவாட் ஒரு ஜிகாவாட் ஆகும். அப்படி எனில் அங்கே எத்தகைய மின்வெட்டு நிலவுகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

மின்சாரத்தை பெற்றுப் பிரித்து கொடுக்கும் கிரிட்டின் சரிவைத் தடுக்க எஸ்காம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஒரே நேரத்தில் மின்சாரத்தை துண்டிக்கிறது. கடந்த வாரம் டிசம்பர் 2019க்குப் பிறகு நாடு தழுவிய மின்தடையைத் தடுக்க 6,000 மெகாவாட் மணிநேரத்தை எஸ்காம் குறைத்தது.

பல குடியிருப்பாளர்கள் ஒரு நாளைக்கு ஆறுமணிநேரம் மின்சாரமில்லாமல் பொழுதைக் கழிக்க வேண்டியுள்ளது. மக்களிடம் எந்தெந்த நேரம் மின்தடை இருக்கும் என்ற அட்டவணையை எஸ்காம் அறிவிக்கிறது. ஆனால் அந்த அட்டவணைப்படி மின்தடை நிகழ்வதில்லை. மின்சாரம் எப்போது போகும், எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாது.

கூடுதல் சோகமாக கடந்த வாரம் எஸ்காம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் மின்வெட்டு இன்னும் அதிகரித்து விட்டது. எஸ்காம் நிறுவனத்தில் மூன்று தொழிற்சங்கங்கள் உள்ளன. அவர்களுடனான ஊதியம் தொடர்பான நிர்வாகத்தின் பேச்சு வார்த்தை முறிந்து போனது. இதனால் மின்சார அலுவலக செய்லபாடுகள், பராமரிப்பு பணிகள் கடுமையாக பாதித்தன.

தொழிலாளிகளின் வேலை நிறுத்தம் சட்டவிரோதமானது, அவர்கள் நாட்டை பிணைக்கைதி போல நடத்துகிறார்கள் என்ற எஸ்காமின் தலைமை நிர்வாகி ஆண்ட்ரூ டி ரைய்ட்டர் கோபத்துடன் கூறினார். எஸ்காம் தொழிலாளிகள் அத்திவாசிய பணி செய்பவர்கள் என்று சட்டப்படி வரையறுக்கப் பட்டிருப்பதால் அவர்கள் வேலை நிறுத்தம் செய்ய அனுமதி இல்லை.

தென்னாப்பிரிக்காவின் தேசிய உலோக தொழிலாளர் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் பகாமைல் ஹ்லுபி", அரசு பொதுமக்களுக்கு எதிராக தொழிலாளிகளை நிறுத்துகிறது. தற்போதைய நெருக்கடி மற்றும் தோல்விக்கு அரசே காரணம் என்பதை அரசு ஒப்புக் கொள்ளவில்லை" என்று கூறுகிறார்.

தற்போது தொழிலாளிகளுக்கும் எஸ்காம் நிறுவனத்திற்கும் ஊதிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால் மின்வெட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது என்று எஸ்காம் கூறுகிறது. ஏனெனில் முடங்கிப் போயிருக்கும் பராமரிப்பு பணிகளை செய்வதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்று எஸ்காம் கூறுகிறது.

மேலும் எஸ்காம் 26 பில்லியன் டாலர் அளவுக்கு கடனை வைத்திருக்கிறது. இது போக பழையை திறனற்ற மின் நிலையங்களைக் கொண்டிருப்பதால் அவற்றை பராமரிப்பதற்கு அதிக உழைப்பும் செலவும் தேவைப்படுகிறது.

பிரச்சினையைத் தீர்க்க எஸ்காம் இரண்டு புதிய மின் உற்பத்தி நிலையங்களை கட்டியது. ஆனால் அதன் வடிவமைப்பில் குறைபாடுகள் இருப்பதோடு கட்டுமான செலவும் அதிகம் ஆகும். இதனால் போதிய மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதில்லை.

இந்த ஆண்டு மே மாதம், கனிம வளங்கள் மற்றும் எரிசக்தி அமைச்சர் க்வேட் மந்தாஷே, தனியார் உற்பத்தியாளர்களிடமிருந்து மின்சாரத்தை வாங்க மூன்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இது எஸ்காமின் அதிகாரத்தில் ஏகபோகத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு படியாகக் கருதப்படுகிறது. அந்த ஒப்பந்தங்கள் உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க சூரிய மற்றும் பேட்டரி இணைந்த திட்டங்களாகக் கருதப்படுகின்றன.

உற்பத்தித் திறன் பற்றாக்குறையைச் சரிசெய்வதில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், தென்னாப்பிரிக்கர்கள் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு தீவிர மின்தடையை எதிர்பார்க்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளார்கள்.

மின்வெட்டு பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வேலையின்மை நெருக்கடியை ஆழமாக்கும். தென்னாப்பிரிக்காவின் வேலையின்மை விகிதம் தற்போதே அதிர்ச்சியூட்டும் விதத்தல் 34.5% ஆக இருக்கிறது.

ஜோகன்னஸ்பர்க் நகரமான அலெக்ஸாண்ட்ராவில் ஒரு சிறிய கருவிகள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வரும் போயிடுமெலோ மொகோனாவுக்கு, மின்சாரம் இல்லாதது அவரது வணிகத்திற்கு மரண அடியாக உள்ளது. குறிப்பாக இது கோவிட் பொது முடக்கத்திற்கு பிறகு அதிகரித்து விட்டது.

"மின்சாரம் இல்லாதபோது பெரிய இயந்திரங்கள் நிறுத்தப்பட வேண்டும். அது எங்கள் உற்பத்தி இலக்கின் காலக்கெடுவை பாதித்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு எங்களால் சரியான நேரத்தில் டெலிவரி செய்ய முடியவில்லை” என்கிறார்

"சிறு தொழில்கள் ஏற்கனவே சந்தையில் போராடி வருகின்றன, நீங்கள் மின்சாரத்தை வழங்கவில்லை என்றால் அது இன்னும் மோசமாகும்," என்று மொகோனா கூறுகிறார்.

தென்னாப்பிரிக்காவின் நலிந்த பொருளாதாரத்தால் நெருக்கடியில் இருக்கும் சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள்

2020 மெக்கின்சே & கம்பெனி அறிக்கையின்படி, அவர்கள் நாட்டில் குறைந்தபட்சம் 98% சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் மற்றும் வணிகங்களைக் கொண்டுள்ளனர். மேலும் தென்னாப்பிரிக்காவின் மொத்த பணியாளர்களில் 50% முதல் 60% வரை இந்த சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர்.

"ஒவ்வொரு கட்ட மின்தடையின் போது அந்த குறிப்பிட்ட நாளில் சுமார் 250 மில்லியன் ரேண்ட் (15.3 மில்லியன் டாலர்) இழப்பு ஏற்படுகிறது" என்கிறார் ஆற்றல் நிபுணர் லுங்கில் மாஷேல்.

"எனவே, ஆறாவது கட்ட மின்தடையால், நீங்கள் பொருளாதாரத்தில் 1.5 பில்லியன் ரேண்ட் ( 92 மில்லியன் டாலர்) இழப்பை சந்திக்கிறீர்கள்," என்றும் அவர் கூறுகிறார். தென்னாப்பிரிக்காவில் 1000 மெகாவாட் மின்தடையை முதல் கட்டமென்றும் 2000, 3000, 4000, 5000, 6000 மெகாவட் தடைகளுக்கு முறையே 2,3,4,5,6 கட்டம் என்று குறிப்பிடுகிறார்கள்.

ஜோகன்னஸ்பர்க்கில் வசிக்கும் டெபோகோ கோலியாவால் தனது விரக்தியை மறைக்க முடியவில்லை.

"நான் மிகவும் கோபமாக இருக்கிறேன், ஏனென்றால் எங்கள் வீட்டு வரவு செலவுத் திட்டம் இப்போது ஒரு பிரச்சனையாக உள்ளது. எங்களால் மின்சாரத்திற்கு பணம் செலுத்த முடியாது. ஒவ்வொரு இரண்டு மணிநேரத்திற்குப் பிறகும் மின்சார வரத்து குறைகிறது " என்று அவர் கூறுகிறார்.

இப்படி உற்பத்தி, விநியோகம், தடை என்று எல்லா துறைகளிலும் தென்னாப்பிரிக்காவில் மின்சார நெருக்கடி நாட்டையே அலைக்கழிக்கிறது. பொருளாதாரமும் வேலையின்மையும் மேலும் நெருக்கடியில் நாட்டைத் தள்ளியிருக்கிறது. இந்த நிலை இந்தியாவிற்கு ஒரு பாடமாக இருக்குமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?