‘எனக்கு 38 வயசு முடிஞ்சி 37 ஆரம்பிக்குது’ என நக்கலாகவும், தன்னம்பிக்கையோடும் கூறுகிறவர்கள் உண்டு. ஆனால், ஒரு நாட்டில் எல்லா மக்களுக்கும் திடீரென ஒரு வயதோ, இரண்டு வயதோ குறைந்துவிட்டது என்று கூறினால், ஏற இறங்கப் பார்ப்பீர்கள்தானே. ஆனால், அப்படி ஒரு சம்பவம் தென் கொரியாவில் நடந்திருக்கிறது.
தென் கொரியாவில் வயதைக் கணக்கிடுவதற்கு இரண்டு பாரம்பரிய முறைகள் உண்டு. அதில் ஒன்று ‘கொரிய வயது முறை’. இதன்படி பிறந்த அடுத்த நொடியே குழந்தைக்கு ஒரு வயது ஆகிவிட்டது என்று கருதுவார்கள். தாயின் கருவறையில் இருந்த காலத்தையும் வயது கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த முறையை பின்பற்றினார்கள்.
இது மட்டுமல்ல, ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி முதல் தேதி ஒரு வயது கூடிவிட்டதாக கணக்கிடுவார்கள். யாருக்கும் பிறந்த நாள் அன்று வயது கூடாது. ஜனவரி 1ம் தேதிதான் வயது கூடும்.
டிசம்பர் 31ம் தேதி ஒரு குழந்தை பிறப்பதாக வைத்துக்கொள்வோம். பிறந்த உடனே அந்தக் குழந்தைக்கு ஒரு வயது ஆகிவிட்டதாக கணக்கிடுவார்கள். அடுத்த நாள் ஜனவரி 1ம் தேதி, அந்தக் குழந்தைக்கு இரண்டு வயது ஆனதாக கணக்கிடுவார்கள். ஆக, பிறந்து 24 மணி நேரத்திலேயே அந்தக் குழந்தைக்கு 2 வயது ஆகிவிட்டதாக கணக்கு.
இன்னொரு பாரம்பரிய வயது முறையும் தென்கொரியாவில் உண்டு. ‘கவுண்டிங் ஏஜ்’ முறை என்று கூறப்படும் இந்த முறையில், பிறந்தவுடன் உங்கள் வயது பூஜ்ஜியம்தான். ஆனால், உங்கள் பிறந்த நாள் எதுவாக இருந்தாலும், ஜனவரி 1ம் தேதி ஒரு வயது கூடிவிடும்.
இப்போது இந்த இரண்டு பாரம்பரிய வயது கணக்கிடும் முறையையும் ஒழித்துவிட்டு, உலக அளவில் கடைபிடிக்கப்படும் பிறந்த நாளை அடிப்படையாக கொண்ட வயது கணக்கிடும் முறைக்கு மாறியிருக்கிறது தென் கொரியா. இந்த மாற்றத்துக்காக ஒரு சட்டத்தையும் நிறைவேற்றியிருக்கிறார்கள். இந்த சட்டம் ஜூன் 28 புதன்கிழமை அமலுக்கு வந்திருக்கிறது.
தற்போதைய தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல், கடந்த ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, தாம் வெற்றி பெற்றால் பாரம்பரிய வயது கணக்கிடும் முறையை ஒழித்துவிட்டு, பிறந்த தேதியை அடிப்படையாக கொண்ட வயது முறையை அமல்படுத்தப்போவதாக வாக்குறுதி அளித்தார். பாரம்பரிய வயது முறைகள் தேவையற்ற சமூக, பொருளாதார சுமைகளை ஏற்படுத்திவிட்டதாக அவர் கூறியிருந்தார்.
காப்பீட்டுப் பணம் செலுத்துவதில், அரசு உதவித் திட்டங்களில் பயன்பெறுவதில் குழப்பங்களும் தகராறுகளும் ஏற்பட்டன.
எடுத்துக்காட்டாக, 2003ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி பிறந்த ஒருவருக்கு 2023 ஜூன் 28-ம் தேதி என்ன வயது? பிறந்த தேதி அடிப்படையில் கணக்கிடும் அனைத்துலக முறைப்படி அவருக்கு 19 வயது. கொரியாவில் செயல்படும் ‘கவுண்டிங் ஏஜ்’ முறைப்படி அவருக்கு 20 வயது. ‘கொரிய வயது முறை’ப்படி அவருக்கு 21 வயது.
கொரியாவின் இரண்டு பாரம்பரிய வயது கணக்கிடும் முறையையும் ரத்து செய்வதற்கு ஆதரவாக வாக்களித்தார்கள் தென் கொரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள். இதற்குப் பிறகும், கவுன்டிங் ஏஜ் முறைப்படி வயதைக் கணக்கிடும் பல தென் கொரிய சட்டங்கள் நடைமுறையில் இருக்கும். எடுத்துக்காட்டாக, 19 வயது நிறைவடைந்த கொரியர்களுக்கே அந்நாட்டில் சிகரெட், மது ஆகியவை விற்பார்கள். இந்த புதிய வயது சட்டத்துக்குப் பிறகும், சிகரெட், மது வாங்க தகுதி பெறும் வயது அவர்கள் பிறந்த நாள் அடிப்படையில் கணக்கிடப்படாமல், ஜனவரி முதல் தேதி அடிப்படையிலேயே கணக்கிடப்படும்.
நான்கில் மூன்று தென் கொரியர்கள், பிறந்த நாள் அடிப்படையில் வயது கணக்கிடுவதையே ஆதரிக்கிறார்கள் என்று தென்கொரிய நாட்டு ஆய்வு நிறுவனமான ஹங்கூக் ரிசர்ச், 2022 ஜனவரியில் நடத்திய ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது.
“வயதை அடிப்படையாக கொண்டு மனிதர்களை மதிப்பிடும் பழக்கம் கண்களுக்குத் தெரியாமல் மக்களின் நடவடிக்கைகளில் நாசூக்காக வெளிப்படுகிறது. வயதை அடிப்படையாக கொண்ட சிக்கலான மொழி அமைப்பிலும் இது பிரதிபலிக்கிறது. கொரிய வயது முறையை ஒழித்து, அனைத்துலக வயது முறையைப் பின்பற்றத் தொடங்குவது கொரியாவின் பெரியோர் – சிறியோர் பாகுபாட்டுப் பண்பாட்டையும், பழமையின் மிச்ச சொச்சங்களையும் ஒழிக்கும்,” என்று கூறுகிறார் 28 வயது உள்ளடக்கத் தயாரிப்பாளரான ஜியோங்சக் வூ.
மற்றொரு தென் கொரியரும், 31 வயது மருத்துவருமான ஹ்யூன் ஜியோங் பியூன், இந்த மாற்றத்தை வேறு மாதிரி கொண்டாடுகிறார். “எனக்கு இந்த மாற்றம் பிடித்திருக்கிறது. காரணம், இப்போது எனக்கு இதனால், இரண்டு வயது குறைந்திருக்கிறது. என்னுடைய பிறந்த நாள் டிசம்பரில் வருகிறது. இந்த கொரிய வயது முறை என் உண்மையான வயதைக் காட்டிலும், இரண்டு ஆண்டுகள் மூத்தவனாக என்னை சமூகத்தில் காட்டிவந்தது. இப்போது கொரியா அனைத்துலக முறையைப் பின்பற்றுகிறது. இனி நான் வெளிநாடு செல்லும்போது இந்த கொரிய வயது முறையை மற்றவர்களுக்கு விளக்கவேண்டிய தேவை வராது,” என்கிறார் ஹ்யூன்.
கொரியாவின் மருத்துவத் துறை ஏற்கெனவே சர்வதேச முறைக்கு மாறிவிட்டதாக அவர் கூறுகிறார்.
வேறு சில கிழக்காசிய நாடுகளிலும் பாரம்பரிய வயது கணக்கிடும் முறை பின்பற்றப்பட்டு வந்தது. பெரும்பாலான நாடுகள் ஏற்கெனவே அனைத்துலக முறைக்கு மாறிவிட்டன. ஜப்பான் 1950ம் ஆண்டும், வட கொரியா 1980ம் ஆண்டும் இந்த மாற்றத்தை செய்துவிட்டன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust