இலங்கை : அதிகரிக்கப் போகும் இறப்புகள், திவால் ஆகிறதா தேசம்? NewsSense
உலகம்

இலங்கை : அதிகரிக்கப் போகும் இறப்புகள், திவால் ஆகிறதா தேசம்?

NewsSense Editorial Team

இலங்கையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் இதர மருத்துவம் சார்ந்த பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை குறித்து இலங்கை மருத்துவ சபை அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

மருத்து பற்றாக்குறை

இலங்கையில் இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு பெரிய அளவில் மருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்த பற்றாக்குறை நிலைமை காரணமாக, வழக்கமான சிகிச்சை நடவடிக்கைகள் போன்ற சேவைகளை குறைப்பதற்கும், உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு கிடைக்கக்கூடிய அத்தியாவசிய மருந்துகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கும் ஏற்கனவே தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை இலங்கை மருத்துவ துறை, அதிபருக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

இது ஒரு நிலையான கொள்கையாக இருக்கமுடியாது. இந்தநிலைமை இன்னும் சில வாரங்களுக்கு தொடர்ந்தால், அவசர சிகிச்சைகளையும் மேற்கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுவிடும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

இப்படியான நிலை ஏற்பட்டால் கொரோனா, சுனாமி மற்றும் உள்நாட்டுப் போரின் ஆகியவற்றின்போது ஏற்பட்ட இறப்புக்களை காட்டிலும் பல மடங்கு இறப்பு நேரிடலாம் என இலங்கை மருத்துவ சபை எச்சரித்துள்ளது.

மக்களுக்கு இன்னும் புரியவில்லை

நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை குறித்து நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் இன்னும் புரியவில்லை என இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் துணை தலைவர் துமிந்த ஹுலங்கமுவ தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதத்தின் பின்னர் நாடு இருளில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நமது நாட்டு மக்களுக்கு நிலைமையின் தீவிரம் தெரியுமா என்று எனக்கு தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்த வாரம் IMF உடன் பேச்சுக்களை தொடங்கவில்லை என்றால், நிதி ஆலோசகரை நியமித்து நமது கடனை மறுசீரமைக்க முடியாது. ஜூலை மாதம் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலுத்த வேண்டும். அதை நம் கையிருப்பில் இருந்து செலுத்த வேண்டும். அதைச் செலுத்தினால், நமது வருமானம் அனைத்தையும் கூட்டி, இந்த பில்லியன் டாலர்களை அடுத்த இரண்டு மாதங்களில் இறக்குமதி இல்லாமல் சேமிக்க வேண்டும். அப்போது இந்த நாட்டில் மருந்து, மின்சாரம், எண்ணெய், எரிவாயு எதுவும் இருக்காது என்றும் அவர் கூறி உள்ளார்.

புதிய பிரதமர்

புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் வழி ஒன்றை முன்னாள் இலங்கை நீதியரசர் சரத் என் டி சில்வா தெரிவித்துள்ளார்

அதாவது தீர்மானத்தின் மூலம் புதிய பிரதமரையும் அமைச்சரவையையும் நியமிக்கும் அரசியலமைப்பு அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இருக்கிறது என்றும் உடனடியாக அதனைஉ பயன்படுத்தி இப்படியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் டி சில்வா தெரிவித்துள்ளார்.

சந்திப்பு


இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நேற்று நாடாளுமன்ற கட்டடத்தில் ரகசிய சந்திப்பு நடைப்பெற்றது.

இந்த சந்திப்பின் போது, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவது தொடர்பாக ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனை குறித்து கோட்டபய விரிவாக கேட்டறிந்தார்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?