இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார இழப்பு, அதன் காரணமாக ஏற்பட்ட தொடர் போராட்டங்கள் காரணமாக மகிந்த ராஜபக்சே இலங்கையின் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். புதிய பிரதமராக ஐக்கிய தேசியக்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். அவர் பதவியேற்ற பிறகு, அங்கு அதிபருக்கு வழங்கப்படுகிற கட்டுப்பாடற்ற அதிகாரங்கள் ரத்து செய்யப்படும் எனத் தகவல்கள் வெளியாகின. இப்போது அதற்கான அரசியல் சாசனத் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. இதையொட்டி நீதித்துறை அமைச்சர் டாக்டர் விஜயதாச ராஜபக்சே, "அரசியல் சாசனத்தின்20-ஏ பிரிவு, அதிபருக்கு அதிகளவிலான அதிகாரங்களை வழங்கியது. அதைச் செல்லாததாக ஆக்கும் வகையில், அரசியல் சாசனத்தின் 21-வது திருத்தத்துக்கான மசோதா அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று ஒப்புதலுக்கு வைக்கப்படும்." என்றார். இலங்கையில் அதிபரின் கட்டுப்பாடற்ற அதிகாரத்தை ரத்து செய்யும் வகையிலான அரசியல் சாசன திருத்த மசோதாவுக்கு, அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தைக் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். அதன் பின், நெட்டை தென்னங்கன்றுகள், பயிறு வகை விதைகள் விநியோகம், தோட்டக்கலை மூலம் வீட்டுத்தோட்டம் அமைப்பதற்கான தளைகள், ஊக்கத்தொகை, கைத்தெளிப்பான் மற்றும் விசைத்தெளிப்பான் போன்றவை வேளாண்துறை சார்பில் வழங்கப்பட உள்ளன. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் அனைத்து கிராமங்களிலும் ஒட்டு மொத்த வேளாண் வளர்ச்சியை உருவாக்கிடவும், அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் செயல்படுத்தப்பட்டு தன்னிறைவு பெற்ற கிராமமாக மாற்ற வேண்டும் என்பதுதான் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் 9 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் மொத்தம் 250 உறுப்பினர்கள் உள்ளனர். தமிழகத்திலிருந்து மொத்தம் 18 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவி வகிக்கிறார்கள். இதில் தி.மு.க.வைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், டி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க.வைச் சேர்ந்த எஸ்.ஆர்.பலசுப்பிரமணியம், ஏ.நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை காரணமாக அ.தி.மு.க.விடம் உள்ள 3 இடங்களில் ஒன்று தி.மு.க. வின் வசம் செல்கிறது. இதனால், தி.மு.க.வுக்கு 4 இடம் கிடைக்கிறது. 4-ல் ஒரு இடத்தை காங்கிரஸுக்கு தி.மு.க வழங்கியுள்ளது.3 இடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில், தி.மு.க. வேட்பாளர்களாகத் தஞ்சை சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான வேட்பு மணு தாக்கல் நாளை தொடங்குகிறது.
ஆஸ்திரேலியாவின் 31-வது பிரதமராக அந்தோணி நார்மன் அல்பேனீஸ் இன்று காலை கேன்பர்ரா நகரில் உள்ள அரசு இல்லத்தில் முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். கடந்த 21-ம் தேதி, ஆஸ்திரேலிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் நடந்தது. இதில் லிபரல் கட்சி தலைவர் ஸ்காட் மோரிசன் மற்றும் தொழிலாளர் கட்சி தலைவர் அந்தோணி நார்மன் அல்பேனீஸ் இடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில், அதிக இடங்களைக் கைப்பற்றிய அந்தோணி நார்மன் அல்பேனீஸ் புதிய பிரதமராகத் தேர்வானார்.
நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி, சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதற்கிடையே நாளை, ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இடையே குவாலிபையர் 1 நடைபெறுகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust