ஈமு போர் : ஆஸ்திரேலிய இராணுவத்தை எதிகொண்ட பறவைகள்; வென்றது யார்? - வியக்க வைக்கும் வரலாறு! Twitter
உலகம்

ஈமு போர் : ஆஸ்திரேலிய இராணுவத்தை எதிர்கொண்ட பறவைகள்; வென்றது யார்? வியக்க வைக்கும் வரலாறு!

Antony Ajay R

ஆஸ்திரேலியாவின் 'தி கிரேட் ஈமு போர்' கேட்பதற்கு வேடிக்கையானதாக இருக்கிறதா?

ஒரு நாட்டின் இராணுவம் பறவைகளுடன் சண்டையிட்டது என்பதைக் கேட்ட எவருக்கும் முதலில் சிரிப்பு தான் வரும். ஆனால் நினைப்பதற்கே வினோதமாக இருக்கும் இந்த நிகழ்ச்சி உண்மையில் நடந்த ஒன்று.

1932ம் ஆண்டு ஈமு கோழிகளால் ஆஸ்திரேலியாவில் பல குழப்பங்கள் ஏற்பட்டன.

ஈமுக்கள் ஆஸ்திரேலிய மண்ணின் பறவைகள். அவற்றால் பறக்க முடியாது என்றாலும் அளவில் பெரிதாக இருப்பதனால் கொஞ்சம் அச்சமூட்டுபவையாகவும் இருக்கும்.

ஈமு போர் ஏற்பட்டது ஏன், அதில் யார் வெற்றி பெற்றார்கள்? பார்க்கலாம்...

ஈமு போருக்கான காரணங்கள்

மேற்கு ஆஸ்திரேலியாவின் காம்பியன் என்ற பகுதியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றது.

ஆண்டு தோறும் கடற்கரைகளில் இருந்து இனப்பெருக்க காலத்தில் ஈமு கோழிகள் உள் நிலப்பரப்புக்கு இடம் பெயரும். 1932ல் கிட்டத்தட்ட 20,000 ஈமுக்கள் வந்திருக்கலாம் என தெரிவிக்கின்றனர். உண்மையில் மேற்கு ஆஸ்திரேலியாவின் பெரும் பகுதிகளில் ஈமுகளின் அரசாங்கம் தான் நடந்து வந்தது.

கிட்டத்தட்ட முதலாம் உலகப்போருக்கு 15 ஆண்டுகள் கழித்து ஈமுக்களால் பிரச்னை ஏற்படத் தொடங்கியது. போரின் போது வேலைக்கு சேர்த்த வீரர்களுக்கு சரியாக ஊதியம் அல்லது பென்ஷன் அளிக்க ஆஸ்திரேலியாவால் முடியவில்லை.

அவர்களின் வாழ்வாதாரத்துக்காக பெரும் விவசாய நிலத்தை அளிக்க முன்வந்தது. அந்த நிலப்பரப்பு ஈமுக்களின் அரசாங்கத்தில் அமைந்திருந்தது.

விவசாய நிலத்துக்கு ஈமுக்கள் வந்து சேர்ந்ததை மனிதர்கள் விரும்பவில்லை. பறவைகள் பயிர்களை நாசம் செய்ததுடன் வேலிகளையும் சேதப்படுத்தின.

வேலிகளின் வழியாக முயல்களும் வந்து பயிர் சேதத்தில் கலந்து கொண்டன. பொதுவாக பயிர்களை சிறிய புழு, பூச்சிகளோ அதிகபட்சமாக குருவிகள் தான் சேதத்தை விளைவிக்கும். இதனை சமாளிக்க முடியும்.

ஆனால் ஆள் உயர ஈமுக்கள் பயிர்களை நாசம் செய்வதை எப்படி நிறுத்த முடியும்? மனிதர்களின் மொத்த உழைப்பும் வீணானது.

அப்போது இருந்த பொருளாதார மந்த நிலைக் காரணமாக முன்னாள் இராணுவ வீரர்களான விவசாயிகளுக்கு எந்த மானியமும் அரசாங்கத்தால் வழங்கப்படவில்லை.

பல நாட்களாக ஈமுக்களுடன் போராடித் தோற்ற விவசாயிகள், "எங்களிடம் ஈமுக்களை கொல்ல போதுமான வெடிமருந்துகள் கூட இல்லை. எங்களுக்கு வேறு பாதுகாப்பான நிலங்களை வழங்குங்கள்" என அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்தனர்.

விவசாய சங்கங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்ததால் 1932, நவம்பர் 2ம் தேதி அரசாங்கம் இந்த பிரச்னையில் தலையிட்டது. அதுவரை பாதுகாக்கப்படும் உயிரினமாக இருந்த ஈமுக்கள் பூச்சிகள் பட்டியலுக்கு மாற்றப்பட்டன.

ஈமு போர்

காம்பியன் பகுதிக்கு வந்த இராணுவத்தினர், ஈமுக்களை சுடத் தொடங்கினர்.

ஆனால் அவர்களால் சில ஈமுக்களைக் கூட கொல்ல முடியவில்லை. ஆபத்தை உணர்ந்துகொண்ட ஈமுக்கள் வெகுதூரத்துக்கு ஓடிவிட்டன.

ஈமு மந்தையாக இருப்பது தான் வழக்கம் என்றாலும் இராணுவத்தினர் வருகைக்கு பின்னர் அவைக் குழுக்களாக பிரிந்து விட்டன.

இமேலும் ஈமுக்கள் தூரமாக இருப்பதும் அவை விரைவாக செயல்பட்டதும் இராணுவத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. மொத்தமாக 50 ஈமுக்களை மட்டுமே இராணுவத்தினர் கொன்றனர்.

ஆஸ்திரேலிய பத்திரிகைகள் இராணுவத்தின் தோல்வியை தலைப்புச் செய்திகளாக்கின.

ஈமுக்களை வெல்ல புதிய வழிமுறைகளைக் கையாள வேண்டும் என இராணுவத்தினர் முடிவு செய்தனர். ஈமுக்களும் புதிய தப்பித்தலுக்கு தயாராகின.

மேஜர் மெரிடித் என்ற இரானுவ அதிகாரி பதுங்கியிருந்து தாக்கும் முறையைக் கையாண்டார். 1000 ஈமுக்கள் இருந்த பெரும் மந்தையை குறிவைத்து குழிகளை வெட்டி அதில் வீரர்கள் பதுங்கினர்.

ஈமுக்கள் அருகில் வரும் வரைக் காத்திருந்து தாக்குதலைத் தொடங்கி இராணுவ வீரர்களால் 12 ஈமுக்களை மட்டுமே கொல்ல முடிந்தது.

மற்ற ஈமுக்கள் விரைவாக அங்கிருந்து தப்பித்து விட்டன. நவம்பர் 8ம் தேதி வரை 2500 சுற்றுகள் சுடப்பட்ட பின்னர், 200 - 500 ஈமுக்களே கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேஜர் மெரிடித் அவரது அதிகாரப்பூர்வ அறிக்கையில், "நல்ல வேளையாக ஈமுக்களின் கைகளால் நம் இராணுவத்தினர் யாரும் உயிரிழக்கவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்". மேலும் அவர் ஈமுக்களை ஜூலு (Zulu) என்ற ஆப்ரிக்க பழங்குடி மக்களுடன் ஒப்பிட்டிருந்தார்.

மேலும் மெரிடித், "ஈமுக்கள் உலகின் எந்த இராணுவத்தையும் எதிர்கொள்ளக் கூடியவை. ஒவ்வொரு ஈமு குழுவுக்கு ஒரு தலைமை இருக்கிறது. ஆறடி உயரத்தில் நிமிர்ந்து நிற்கும் அது வெகுதூரத்துக்கு சுற்றிப் பார்த்து எங்கள் வருகையை அதன் துணைத் தலைவர்களுக்கு கூறிவிடுகிறது." எனக் கூறியிருந்தார்.

38 நாட்கள் தொடர்ந்து கொரில்லா போர் முறை உள்ளிட்டப் பல வழிகளில் இராணுவம் தாக்குதல்களைத் தொடுத்த பின்னர், டிசம்பர் 10,1932ல் கிரேட் ஈமு போரை நிறுத்துமாறு இராணுவத்துக்கு உத்தரவிடப்பட்டது.

அப்போது பல நூறு ஈமுக்கள் கொல்லப்பட்டுவிட்டன. அதன் பிறகு ஈமுக்களை அழிக்க விவசாயிகளுக்கு இலவசமாக வெடிமருந்துகள் கொடுக்கப்பட்டது. ஈமு தடுப்பு சுவர் அமைப்பதாக அரசு உறுதியளித்தது ( அது இறுதி வரை நிறைவேற்றப்படவில்லை ). ஈமுக்களை கொல்லும் விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும் எனவும் அறிவித்தது.

விவசாயிகள் முன்னாள் வீரர்கள் என்பதனால் அவர்கள் வெடி மருந்துகளை பயன்படுத்துவது குறித்து தெரிந்து வைத்திருந்தனர். அடுத்ததாக பல ஆண்டுகளுக்கு விவசாயிகள் கண்ணில்படும் ஈமுக்கள் கொல்லப்பட்டன.

ஆஸ்திரேலியாவின் சின்னத்தில் இருக்கும் கம்பீரமான ஈமுக்கள் தங்கள் அரசாங்கத்தை வெடிமருந்துகளிடம் இழந்தன. இறுதியாக காம்பியன் நிலப்பரப்புக்கு சமீபத்தில் வந்து சேர்ந்த மனிதர்களே அதனை ஆளுகின்றனர். ஆயினும், ஆஸ்திரேலிய இராணுவம் ஈமுக்களிடம் தோற்றதை நிச்சயமாக புன்னகைத்தப்படி ஒப்புக்கொள்கின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?