Josephine Baker Twitter
உலகம்

Josephine Baker: இசை உலகின் மகாராணி உளவாளி ஆன கதை - மினி சீரிஸ் 1

Gautham

இனப் பாகுபாட்டால் எப்போதுமே பின் இருக்கையில் இருந்த ஒரு கறுப்பின பெண்மணி, தன்னையும் தன் திறமையையும் நிரூபிக்க அமெரிக்காவை விட்டு பிரான்ஸ் செல்கிறார். 

தோலின் நிறத்தை விட, திறனைப் பார்த்து வியந்தது ஐரோப்பா.

ஒருவேளை உணவுக்கு மணிக் கணக்கில் வேலை பார்த்துச் சம்பாதித்துக் கொண்டிருந்த பெண்மணிக்கு, அந்நிய நாட்டில் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாத வாழ்க்கை கிடைத்தது.

இசை அரசி டூ உளவாளி

பெயர், புகழ், பணம், அப்பெண்ணின் கடைக் கண் நம் மீது பட்டுவிடாதா என்கிற மக்கள் கூட்டத்தின் ஏக்கம்... என ஒரு சராசரி கலைஞன் விரும்பும் எல்லாமே கொட்டிக் கிடக்கும் போதும், தன் உயிரைப் பணையம் வைத்து, தனக்கு அப்பார்ப்பட்ட வாழ்கையை அமைத்துக் கொடுத்து பிரான்ஸ் நாட்டுக்கு உளவாளியாக பணியாற்றிய ஒரு வீரக் கலைப் பெண்மணியைக் குறித்து தான் இங்குப் பார்க்கப் போகிறோம். அவர் பெயர் ஜோசஃபைன் பேக்கர்.

19ஆம் நூற்றாண்டு. 

என்ன திறமை இருந்தாலும், பணம் சொத்து பத்துகள் இருந்தாலும், கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் படித்து பட்டம் வாங்கி அரசு பொறுப்பில் அதிகாரிகளாக வந்தமர்ந்தாலும்... வெள்ளைத் தோல் உடையவர்களே உயர்ந்தவர்கள் என்கிற இனப் பாகுபாடு தலைவிரித்தாடி கொண்டிருந்த காலகட்டமது. 

இந்தியாவில் சாதி, மதங்களால் பிளவுபட்டுக் கிடந்த மக்கள், ஒரு சமூகத்தினரை மட்டும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய சூழல் நிலவிய போது அம்பேத்கர், பெரியார் போன்ற சமூக சீர்திருத்தவாதிகளின் அறிவு மக்களுக்கு ஒளிகாட்டியது போல, அமெரிக்காவில் மக்கள் போராட்டங்கள் ஆங்காங்கே ஒருங்கிணைந்து வெடிக்கத் தொடங்கிய காலம். 

1906ஆம் ஆண்டு அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் செயின்ட் லூயிஸ் என்கிற நகரத்தில் பிறந்த ஜோசஃபைன் பேக்கருக்கு இளம் வயதில் கிடைக்க வேண்டிய எதுவும் எளிதில் கிடைக்கவில்லை. பசித்த வயிறு கொண்ட உடலை மறைக்க அழுக்கு உடை, நாளுக்கு நாள் வாழ்கையை நகர்த்துவதற்கே மகாபாரதப் போர் நடத்த வேண்டிய கட்டாயம்... போன்ற பிரச்சனைகள் சிறுமி ஜோசஃபனுக்கு எதார்த்த உலகம் எப்படி இருக்கும் என்பது வெகு விரைவிலேயே புரிந்து போனது.

11 அல்லது 12 வயதில் இனவெறி கொண்ட வெள்ளையின அமெரிக்கர்கள் செயின்ட் லூயிஸின் கிழக்குப் பகுதியில் வாழ்ந்து வந்த கறுப்பின மக்களின் வீடுகளைத் தீக்கு இரையாக்குவதைக் கண் முன் பார்த்தது, ஜோசஃபைனை சாகும் வரை விரட்டியது.

13 வயதில் ஓல்ட் சாஃபர்ஸ் கிளப்பில் சர்வர் வேலை பார்த்தும் வயிற்றைக் கழுவ முடியவில்லை. வீட்டை நடத்தச் சாலை ஓரங்களில் நடனமாடிச் சம்பாதித்த பணம் உதவியது. 

13 வயதில் வில்லி வெல்ஸ் என்பவரோடு முதல் திருமணம், 15 வயதில் வில்லியம் ஹாவர்ட் பேக்கர் உடன் இரண்டாவது திருமணம், இரண்டுமே அதிக காலம் நிலைக்காமல் விவாகரத்தில் முடிந்தது. இரண்டாவது கணவரின் பெயரிலிருந்த 'பேக்கர்' ஜோசஃபைன் என்கிற பெயரோடு நிலைத்துவிட்டது.

இதே காலகட்டத்தில் மெல்ல ஜோசஃபைனின் ஆர்வம் இசை & நடனத்தின் மீது தீவிரமடைந்தது. இதற்கு ஜோசஃபைனின் தாயார் எதிர்ப்பு தெரிவித்ததை மீறியும், இசை & நடனத்தில் பெரிய ஆளாக வர விரும்பினார்.

வாடெவில்லே (vaudeville) என்கிற இசைக்குழுவில் ஜோசஃபைன் பேக்கர் வேலை பார்த்து வந்த போது, நியூயார்க்கில் ஒரு கச்சேரி நடத்த அழைப்பு வந்தது. கூட்டத்தோடு கூட்டமாக நிற்க வேண்டிய பாத்திரம் தான் கிடைத்தது. வாடவில்லைத் தொடர்ந்து பிராட்வே, ஷஃபல் அலாங், சாக்லேட் டாண்டீஸ் எனப் பல குழுவில் வேலை பார்த்தார் ஜோசஃபைன் பேக்கர்.

இப்படி புற உலகில் கடைசி வரிசை நடனக் கலைஞர், நடிகராகக் கொஞ்சக் காலம் உருண்டோடியது. ஆனால் ஜோசஃபைன் பேக்கரின் அக உலகில் ஒரு சூப்பர் ஸ்டாராகவே வலம் வந்து கொண்டிருந்தார்.

1925ஆம் ஆண்டு ஒரு நகைச்சுவைக் குழுவோடு பிரான்ஸ் நாட்டில் பாட்டுப் பாடி நடனமாட வாய்ப்பு கிடைத்த போது, பசியோடு காத்திருந்த சிங்கம் சீறிப் பாய்ந்து தன் இரையைப் பற்றிப்பிடிப்பது போலப் பிடித்துக் கொண்டார் ஜோசஃபைன் பேக்கர். காலம் ஜோசஃபைன் பேக்கருக்கு, பிரான்ஸ் நாட்டில் கேட்பரி டைரி மில்க் ட்விஸ்ட் வைத்திருந்தது.

(தொடரும்)

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?