உலகின் மிகப் பெரிய சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டர், கடந்த பல ஆண்டுகளாகத் தடுமாறி வருகிறது. ஆனால், இப்போதும் ட்விட்டர் தளம் ஒட்டுமொத்த அரசியல் களத்தையும் (குறிப்பாக அமெரிக்கா) மாற்றியமைக்கும் வல்லமை கொண்ட கருவியாகவே பார்க்கப்படுகிறது.
கடந்த 2022 ஏப்ரல் மாதத்தில் உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்தார். ட்விட்டர் நிறுவனத்தின் இயக்குநர் குழுவும், எலான் மஸ்கின் டீலை ஏற்றுக் கொண்டது. அதனைத் தொடர்ந்து ட்விட்டர் குறித்துப் பல தகவல்களை எலான் மஸ்க் கேட்டார். அதற்கு ட்விட்டர் தரப்பும் விடையளித்து வந்தது.
திடீரென, ஜூலை 8ஆம் தேதி வெள்ளிக்கிழமை, எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர் மதிப்பிலான ட்விட்டர் டீலை ரத்து செய்ததாகச் செய்திகள் வெளியாயின. கையகப்படுத்தும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்த பல சரத்துகளை ட்விட்டர் மீறிவிட்டதாகவும் அவர் கூறினார்.
ட்விட்டரின் தலைவர் பிரெட் டெய்லர், எலான் மஸ்குக்கு எதிராகச் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகக் கூறியுள்ளார்.
"எலான் மஸ்குடனான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் சட்ட திட்டங்களின் படி, அதே விலைக்கு ட்விட்டரை விற்க, இயக்குநர் குழு உறுதியாக இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றச் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளையும் எடுக்கத் திட்டமிட்டு வருகிறோம். டெலாவர் நீதிமன்றத்தில் எங்கள் தரப்பு வெல்லும் என நம்பிக்கையோடு இருக்கிறோம்" என தன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார் பிரெட்.
ட்விட்டரில் உள்ள போலிக் கணக்குகள் மற்றும் ஸ்பேம் கணக்குகளைக் குறித்து, பல முறை கேட்டும் ட்விட்டர் தரப்பு பதிலளிக்கவில்லை. ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளத்தில் பயனர்களின் எண்ணிக்கைதானே வியாபாரத்துக்கு அடித்தளமானது... என எலான் மஸ்க் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும், ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவதற்கு முன் தவறான தகவல் மற்றும் திசை திருப்பக்கூடிய தரவுகளை எலான் மஸ்கிடம் கொடுத்ததாகவும் எலான் தரப்பில் கூறப்படுகிறது. அதை நம்பித் தான் ட்விட்டர் உடன் கையகப்படுத்தும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக்க ட்விட்டர் மீது குற்றம்சாட்டுகிறது.
இது போக ட்விட்டர் தன்னுடைய நிறுவனத்தில் பணியாற்றிய உயர் அதிகாரிகள் பலரை வேலையை விட்டு நீக்கியுள்ளது. அது போக ட்விட்டர் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறையில் சுமார் 30 சதவீதம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்தும் கையகப்படுத்தும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விதிகளை மீறிய செயல் என எலான் மஸ்க் தரப்பில் கூறப்படுகிறது.
ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என ட்விட்டர் தரப்பும், ஒப்பந்தத்தை மேற்கொண்டு முன்னெடுத்துச் செல்ல முடியாது என எலான் மஸ்க் தரப்பும் விரைவில் நீதிமன்றத்தில் மோத உள்ளனர்.
ட்விட்டர் தரப்போ, அடுத்த சில நாட்களில் வழக்குத் தொடுக்கப்பட்டு, சில மாதங்களில் வழக்கு நிறைவடைந்துவிடும். தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாகவே அமைய அதிக வாய்ப்பு இருப்பதாகக் கருதுகிறது. எலான் மஸ்க் தரப்போ அடிப்படை விவரங்களைக் கூட ஒழுங்காகக் கொடுக்காததால், தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக வரும் என்கிற நம்பிக்கையில் இருக்கிறது.
கார்ப்பரேட் உலகில் இது போன்ற மெர்ஜர் & அக்வசிஷன் பணிகளை மேற்கொண்ட சில நிபுணர்கள், ட்விட்டர் டீல் மீண்டும் விவாதிக்கப்பட்டு விலை குறைக்கப்பட்டு நிறைவேற வாய்ப்பு இருப்பதாகக் கூறுகிறார்கள்.
எது எப்படியோ பல மாதங்கள் ட்விட்டரையே அதகளப்படுத்தி வந்த ட்விட்டர் டீல் தற்போது ஒரு முட்டுச் சந்தில் சிக்கியுள்ளது.
நீதிமன்றத்தில் யார் வெல்வார்? ட்விட்டரின் எதிர்காலம் என்ன? என்பது தான் ட்விட்டர் பயனர்கள் முன்னிருக்கும் அடுத்த பில்லியன் டாலர் கேள்வி.
ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தத்தில் "ஒருவேளை இந்த டீலை எலான் மஸ்கால் மேற்கொள்ள முடியவில்லை என்றால் 1 பில்லியன் டாலர் பிரேக்-அப் கட்டணமாக ட்விட்டருக்குச் செலுத்த வேண்டும்" என ஒரு சரத்து இருக்கிறது.
டீலுக்குத் தேவையான பணத்தைப் புரட்ட முடியவில்லை அல்லது நெறி முறைப்படுத்தும் அரசு அமைப்புகள் இந்த டீலை ஏற்றுக் கொண்டு அனுமதி கொடுக்கவில்லை என்றால் மட்டுமே இந்த சரத்து பொருந்தும் என்றும், எலான் மஸ்கே தானாக முன்வந்து இந்த டீல் வேண்டாம் என்று கூறினால் எலான் மஸ்க், ட்விட்டருக்கு அந்த ஒரு பில்லியன் டாலரைக் கொடுக்கத் தேவை இல்லை என டைம்ஸ் ஆஃப் இந்தியா தளத்தில் பார்க்க முடிகிறது. ட்விட்டர் தரப்போ, எப்படியாவது இந்த டீலை நிறைவேற்ற வேண்டும் என்கிற நோக்கில்தான் நீதிமன்றத்தை நாடுகிறது.
ஒருவேளை, இந்த டீல் நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டால், குறைந்தபட்சம் எலான் மஸ்க் தரப்பிலிருந்து ஒரு பில்லியன் டாலர் பிரேக்-அப் கட்டணத்தையாவது பெற ட்விட்டர் தரப்பு முயற்சிக்கும் என டேனியல் ஐவ்ஸ் என்கிற பகுப்பாய்வாளர் கூறியுள்ளார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust