அமெரிக்காவுடன் இந்தியா கடந்த சில ஆண்டுகளாக காட்டி வந்த நெருக்கம், இந்தியா - ரஷ்யா இடையேயான நீண்ட கால நட்புறவில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தைப் பரவலாக ஏற்படுத்தி இருந்தது. ஆனால், அப்படியெல்லாம் ஏதுமில்லை என்பதை, தற்போதைய ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரைத் தொடர்ந்து நடந்த சில நிகழ்வுகள் பளிச்சென்று உணர்த்தி உள்ளன. அதுமட்டுமல்லாமல், இந்த விவகாரத்தில் தீர்வு ஏற்பட இந்தியா மத்தியஸ்தராக செயல்படுவதற்கான சூழலும் உருவாகி உள்ளது எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தி உள்ளது.
இந்த போர் வெடித்ததிலிருந்தே, பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட 'நேட்டோ' ( NATO) அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவான தங்களது நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவித்தன. போர் தொடுத்த ரஷ்யாவுக்கு எதிராக கண்டனம் தெரிவுத்த அந்த நாடுகள், இந்தியாவையும் அதே நிலைப்பாட்டை மேற்கொள்ள வலியுறுத்தின. ஆனால், அந்த நிர்பந்தங்களுக்கு அடிபணியாத இந்தியா, இந்த விவகாரத்தில் நடு நிலை வகிப்பதாக அறிவித்ததோடு, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில், உக்ரைனுக்கு எதிரான தாக்குதலைக் கண்டித்து ரஷ்யாவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் வாக்களிக்காமல் புறக்கணித்தது.
இதனையடுத்து, " இந்தியாவின் இந்த நடுநிலை போக்கு என்பது ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாடே" என விமர்சனங்கள் எழுந்தன. அமெரிக்கா உள்ளிட்ட உக்ரனை ஆதரிக்கும் இதர நாடுகளும் இதே கருத்தையே கொண்டிருந்தன.
ஆனால், அதை பொருட்படுத்தாத இந்தியா, இந்த விவகாரத்தில் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தியதோடு, ரஷ்யாவுக்கு எதிராக எந்த கருத்தையும் வெளிப்படுத்தாமல் மிக கவனமுடன் தனது நிலைப்பாட்டை பார்த்துக் கொண்டது.
"நம்மைப் பொறுத்தவரை, ரஷ்யாவுடனான உறவு என்பது நீண்ட காலமாக தொடர்ந்து கொண்டிருக்கக் கூடியது. குறிப்பாக சர்வதேச அரசியலில், அணிசேரா யுக்தியை கடைப்பிடிக்கும் நீண்ட கால வரலாற்றைக் கொண்டுள்ளோம். அதையேதான் தற்போதும் பின்பற்றுகிறோம்" என்கிறார்கள் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள்.
இந்த நிலையில், இந்தியாவின் இந்த நிலைப்பாடு ரஷ்யாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்ததன் விளைவாகத்தான், இந்தியாவுக்கு பேரல் ஒன்றுக்கு 35 டாலர் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை வழங்க முன் வந்துள்ளது.
ரஷ்யா - உக்ரன் போருக்கு முன்னர், இந்தியா இறக்குமதி செய்யக்கூடிய கச்சா எண்ணெயின் விலை, பேரல் ஒன்றுக்கு 94 டாலராக இருந்த நிலையில், போருக்குப் பின்னர் தாறுமாறாக விலையேறி, தற்போது பேரல் ஒன்றின் விலை 107 டாலருக்கும் மேல் உள்ளது. இதனால், இந்தியாவில் தினமும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுதான் காலை நேர தலைப்புச் செய்திகளாக உள்ளன.
இந்நிலையில் ஆசியாவின் 2-வது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் அழுத்தத்தையும் மீறி ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இருமடங்காக்கியுள்ளது.
இந்தியாவின் இந்த நிலைப்பாடு ரஷ்யாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், உக்ரைனுக்கு எதிரான போரை இந்தியா ஒருதலைபட்சமாக மதிப்பிடாதது பாராட்டத்தக்கது எனப் புகழ்ந்துள்ளது.
அரசு முறை பயணமாக இந்தியா வந்த ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், பிரதமர் மோடியைச் சந்தித்து இரு நாடுகளுக்கு இடையேயான 'நட்புறவு' குறித்துப் பேசினார். மேலும் இரு நாடுகளுக்கு இடையேயான வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. இதையடுத்து, முழுமையான உண்மை சூழல்களின் அடிப்படையில், உக்ரைனுக்கு எதிரான போரை இந்தியா ஒருதலைபட்சமாக மதிப்பிடாதது பாராட்டத்தக்கது எனக் கூறினார் செர்ஜி லாவ்ரோவ்.
உக்ரைன் மீதான படையெடுப்பை நியாயப்படுத்தி வரும் ரஷ்யா, மேற்கத்திய நாடுகளால் உக்ரைன் ராணுவமயமாக்கப்படுவதையும், அங்கே "நாஜியிசம்" தலைதூக்க விடாமல் தடுக்கவுமே படையெடுப்பு மேற்கொள்ளப்பட்டதாக கூறுகிறது. ஆனால், ரஷ்யாவின் இந்தக் கூற்றை நிராகரித்துள்ள மேற்கு நாடுகள், இதை ஆதாரமற்ற சாக்குப்போக்கு என்று குற்றம் சாட்டுகின்றன.
இந்த நிலையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரை நிறுத்துதல் மற்றும் பகைமையை முடிவுக்குக் கொண்டுவருதல் மிக முக்கியமானவை எனக் கூறியுள்ளார்.
"இரு நாடுகளுக்குமிடையேயான கருத்து வேறுபாடுகள் மற்றும் பிரச்சனைகள் பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியிலான நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச சட்டம், ஐ.நா, நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை மதிப்பதன் மூலம் தீர்க்கப்பட வேண்டும்" என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு லடாக் எல்லைப் பகுதியில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட சீனா, தொடர்ந்து அவ்வப்போது அதுபோன்ற நடவடிக்கைகளால் இந்தியாவைச் சீண்டி வருகிறது. இந்த நிலையில், சீனாவின் இந்தப் போக்கைக் கட்டுப்படுத்த ரஷ்யாவின் உதவி இந்தியாவுக்குத் தேவைப்படுகிறது. ரஷ்யா - உக்ரைன் இடையேயான தற்போதைய மோதல் விவகாரத்தில், ரஷ்யாவுக்கு ஆதரவான இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு, நீண்ட கால நட்புணர்வு என்பதைத் தாண்டி, மேற்கூறிய விவகாரமும் ஒரு முக்கியமான காரணமாக உள்ளது. அதே சமயம், உக்ரைன் மீதான ரஷ்யாவின் நடவடிக்கைகளைக் கண்டிப்பதை சீனா நிறுத்திவிட்டதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
இந்த நிலையில் அமெரிக்காவோ, ரஷ்யா-சீனா இடையேயான உறவைச் சுட்டிக்காட்டி, " இந்தியாவுக்கு ரஷ்யா நம்பகமான கூட்டாளியாக இருக்காது. சீனாவுடனான உறவில் ரஷ்யா இளைய பங்காளியாக இருக்கப் போகிறது. மேலும் சீனா, ரஷ்யாவை விட அதிக அந்நியச் செலாவணியைப் பெறுகிறது. இது இந்தியாவுக்கு சாதகமானதாக இல்லை" என்றும் எச்சரித்தது.
ஆனால், இந்தியா அதைப் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளை அடுத்து ரஷ்யாவின் கச்சா எண்ணெய் விலை சரிந்ததை அடுத்து, இந்தியா அதை வாங்குவதை அதிகரித்துள்ளது.
இங்கிலாந்து வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸ், ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்குவதற்கான இந்தியாவின் முடிவை மதிப்பதாகவும், அதே சமயம் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் எரிசக்தி மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றில் மிகவும் நெருக்கமாக ஒத்துழைக்க "ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளை" வலியுறுத்துவதாகவும் கூறியுள்ளார்.
சமீப வாரங்களில் இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி, ஆஸ்திரியா, மெக்சிகோ, நேபாளம் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருகை தரும் உயரதிகாரிகள் மற்றும் தூதர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
ஒவ்வொரு நாடும் இந்தியாவை பக்கபலமாக வைக்க விரும்புவது போல் தெரிகிறது. ஆனால், இந்தியாவோ தனது நடு நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. மேலும், தான் கடைப்பிடிக்கும் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை மீது இந்தியாவுக்கு எப்போதுமே ஒருவித பெருமிதம் உண்டு. அதைத் தற்போதும் இழக்க விரும்பவில்லை.
ரஷ்யாவுடனான இந்தியாவின் நட்புறவு ஆழமானதாகவும் நடைமுறைக்குத் தேவையானதாகவும் இருக்கிறது. ரஷ்யாவிடமிருந்துதான் தனது ஆயுதங்களில் பெரும்பகுதியை இந்தியா வாங்குவதிலிருந்தே இதனைப் புரிந்துகொள்ளலாம்.
பல உலகத் தலைவர்கள் ரஷ்யாவை ஆக்கிரமிப்பு நாடாகப் பார்த்தாலும், இந்தியாவோ ரஷ்யாவை இன்னும் தனது கூட்டாளியாகவே பார்க்கிறது என்பதற்கு, ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவின் டெல்லி வருகை, ஒரு தெளிவான சமிக்ஞையாகப் பார்க்கப்படுகிறது.
அண்மையில் பிரிட்டிஷ் வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸ் மற்றும் சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யீ ஆகியோர் இந்தியா வந்தனர். அவர்கள் வருகைப் பெரிதாக கவனம் பெறாத நிலையில், செர்ஜி லாவ்ரோ உடனான சந்திப்புக்கு பிரதமர் மோடி அதிக நேரம் எடுத்துக்கொண்டார்.
இந்த நிலையில், உக்ரைன் தொடர்பான நெருக்கடியில் இந்தியா மத்தியஸ்தம் செய்ய முன்வந்தால், அதற்காக மாஸ்கோவின் கதவுகள் திறந்திருப்பதாக செர்ஜி லாவ்ரோவ் கூறி இருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கூடவே பிரதமர் மோடியின் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், அமைதி முயற்சிகளுக்கு எந்த வகையிலும் பங்களிக்க இந்தியா தயார் நிலையில் இருப்பதாக செர்ஜியிடம் தெரிவிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கையில், ரஷ்யாவுடனான இந்தியாவின் நட்புறவும், அதன் இராஜதந்திர சமநிலைச் செயல்பாடுகளும், உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவை எதிர்பாராத மத்தியஸ்தராக செயல்பட வைக்கலாம் எனத் தெரிகிறது.