New quest for $1 trillion economy by 2027 NewsSense
உலகம்

உத்தர பிரதேசம் யோகி அரசு : 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவது சாத்தியமா?

இதன்படி பார்த்தால் மாநிலத்தின் ஒராண்டு வருமானம் ஐந்தாண்டுகளில் நான்கு மடங்கு எப்படி அதிகரிக்கும் என்ற கேள்வி எழுகிறது. ஓவர் நைட்டில் ஏழை பணக்காரனாவது சினிமாவில் வேண்டுமானால் சாத்தியமாகலாம். நடப்பு பொருளாதாரத்தில் அதற்கு சாத்தியமே இல்லை.

Govind

உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக இரண்டாவது முறையாக பதவியேற்ற ஒரு நாளுக்குப் பிறகு, யோகி ஆதித்யநாத், மார்ச் 26 அன்று, 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கான இலக்கை மாநிலம் எவ்வாறு அடைய முடியும், என்பதை விவரிக்கும் திட்டத்தைத் தயாரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதற்கென ஒரு குழு - டீம் உபி நியமிக்கப்பட்டு பல்வேறு துறைகளோடு ஒருங்கிணைந்து திட்டம் தயாரிக்க வேண்டும். 2027 ஆம் ஆண்டிற்குள் இலக்கை அடைவதற்கான பரிந்துரைகளை தயாரிக்க வேண்டும். அதற்கு ஒரு ஆலோசனை நிறுவனத்தை நியமிக்க இருப்பதாக ஆதித்யநாத் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச்சில் இதே போன்றொதொரு ஆலோசனை நிறுவனத்தை நியமிக்க டெண்டர் விடுக்கப்பட்டது. அத்திட்டம் 2025க்குள் நிறைவேற்றப்பட வேண்டுமென்று இருந்தது, ரத்து செய்யப்பட்டது. தற்போது 2022 -2027 வரை ஐந்தாண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்திற்கு திட்டம் புதிதாக துவக்கப்பட்டிருக்கிறது.

மோடியால் முன்வைக்கப்பட்ட ஆலோசனை

பிப்ரவரி 21, 2018 அன்று லக்னோவில் உ.பி முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தபோது, ​​உத்தரப் பிரதேசத்திற்கான டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அவர் பரிந்துரைத்தார்.

“டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற மகாராஷ்டிராவும் உத்தரப்பிரதேசமும் ஒன்றுடன் ஒன்று போட்டியிட முடியுமா? உ.பி அரசு மற்ற மாநிலங்களுடன் போட்டியிடுமா? போட்டி அதிகமாகும் போது முதலீடு அதிகமாக இருக்கும்” என்று பிரதமர் கூறினார்.

பிரதமரின் பரிந்துரையை அடுத்து உபி அரசு அதுகுறித்து திட்டம் தயாரிக்க முடிவு செய்தது. இதையடுத்து அரசு ஜூன் 19, 2020 இல் ஒரு டெண்டரை அறிவித்தது. அதன்படி ஒரு நிறுவனம் 2020 -2025க்குள் இலக்கை அடைவதற்கு ஆலோசனை வழங்க வேண்டும். இந்த டெண்டரில் எட்டு நிறுவனங்கள் போட்டியிட்டன. ஆனால் மார்ச் 22, 2021 இல் உபி அரசு ஏலத்தை ரத்து செய்தது.

தற்போது அதே திட்டத்தை 2027-க்குள் நிறைவேற்ற ஆலோசனை நிறுவனத்திற்கு புதிய டெண்டர் அறிவித்துள்ளார்கள்.

அந்த நிறுவனம் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாகவோ, பல்கலைக்கழகமாகவோ, ஆலோசனை நிறுவனங்களாகவோ, அரசு துறைகளாகவோ, பொருளாதார வல்லுநர்களாகவோ இருக்கலாம் என்று அரசு டெண்டர் அறிக்கை கூறுகிறது.

வேலையின் நோக்கம்

ஆலோசனை நிறுவனங்களின் வேலைகளை அரசு வரையறுத்துள்ளது. பொருளாதாரத்தை புரிந்து கொள்ளுதல், அடிப்படை கட்டுமானங்களை வளர்த்தல், திட்டத்தை அமல்படுத்த்துவது பற்றிய வரைபடம் தயாரித்தல், நிறுவன சீர்திருத்தங்களை வடிவமைத்தல், கண்காணித்தல் - கற்றல் - மேம்படுத்துதல் பற்றிய சட்டகத்தை உருவாக்குதல் ஆகியவைதான் அந்த வேலைகள்.

மேலும் ஆலோசனை நிறுவனம் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, வர்த்தகம், முதலீடு, செலவு, சேமிப்பு, தொழிலாளர் படை, பணவீக்கம், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி ஆகியவை குறித்த மேக்ரோ மற்றும் மைக்ரோ பொருளாதாரத்துறை தரவுகளின் பகுப்பாய்வை மேற்கொள்ள வேண்டும். இந்த தரவுகள் 2016 முதல் 2021 வரையிலான அரசு மற்றும் நம்பகமான நிறுவன தரவுகளின் அடிப்படையில் சேகரிக்கப்பட வேண்டும்.

பகுப்பாய்வில் விவசாயம், உள்கட்டமைப்பு, கிராமப்புற மேம்பாடு, கல்வி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட அனைத்து முக்கிய துறைகளும் அடங்கும். கூடுதலாக, கடந்த நான்கு ஆண்டுகளில் ஒவ்வொரு துறையின் வளர்ச்சிக்கும் பங்களித்த முக்கிய காரணிகள் அடையாளம் காணப்பட வேண்டும். மேலும் இந்த காரணிகள் மத்திய மற்றும் மாநில கொள்கைகளால் எவ்வாறு உதவியிருக்கிறது என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

ஆலோசனை நிறுவனம் இந்தியாவின் முதல் மூன்று மாநிலங்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள முதல் மூன்று நாடுகளில் எட்டப்பட்ட கட்டமைப்பு, நிதி மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் விளைவுகளை உத்தரபிரதேசத்துடன் ஒப்பிட வேண்டும்.

இதன்பிறகு ஒவ்வொரு துறைக்கும் இலக்குகளை ஒதுக்கி உ.பியை ஒரு டிரில்லியன் பொருளாதாரமாக மாற்றுவதற்கான இலக்கை எவ்வாறு அடைய முடியும் என்பதை ஆலோசனை நிறுவனம் விவரிக்க வேண்டும்.

இது ஒரு கடினமான பணி

உபி அரசாங்கத்தின் இலக்கு, இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கான முயற்சிகளுக்கு ஏற்ப உள்ளது. அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசம் இலக்கை அடைவதில் இந்தியாவில் முக்கியமானதாக இருக்கும்.

உத்தர பிரதேசம் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. மாநிலத்தின் ஜிஎஸ்டிபி 2020-21ல் ரூ.17.06 லட்சம் கோடியாக இருந்தது. 2019-20ல் ரூ.16.88 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் 2027 ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைய, ஜிஎஸ்டிபியின் அளவை மாநிலம் நான்கு-ஐந்து மடங்கு அதிகரிக்க வேண்டும்.

சில வல்லுநர்கள் இலக்கை அடைய முடியும் என்பது மிகவும் சாத்தியமற்றது என்று கூறினார்கள். உ.பி. அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் இயக்குநரகத்தின் (UPDES) தரவுகளின்படி, 2021-22க்கான மாநில மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான முன்கூட்டிய மதிப்பீடுகள் 19.10 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று லக்னோ பல்கலைக்கழகத்தின் முன்னாள் பொருளாதாரத் துறைத் தலைவர் டாக்டர் யாஷ்வீர் தியாகி கூறுகிறார்.

"நீங்கள் அதை டாலராக மொழிபெயர்த்தால், ஒரு டாலருக்கு ரூ. 75 என்ற பழமைவாத மதிப்பை எடுத்துக் கொண்டாலும், அளவு 254 பில்லியன் டாலராக இருக்கும். இதை நீங்கள்1,000 பில்லியன் டாலராக (1 டிரில்லியன் டாலர்) ஆகக் கொண்டு செல்ல வேண்டும் என்றால் அடுத்த ஐந்தாண்டுகளில் நான்கு மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

இதன்படி பார்த்தால் மாநிலத்தின் ஒராண்டு வருமானம் ஐந்தாண்டுகளில் நான்கு மடங்கு எப்படி அதிகரிக்கும் என்ற கேள்வி எழுகிறது. ஓவர் நைட்டில் ஏழை பணக்காரனாவது சினிமாவில் வேண்டுமானால் சாத்தியமாகலாம். நடப்பு பொருளாதாரத்தில் அதற்கு சாத்தியமே இல்லை. இறுதியில் இந்த ஒரு டிரில்லியன் பொருளாதாரம் என்ற நிகழ்விற்கு சில பலகோடிகள் ரூபாய் செலவாவதுதான் மிச்சம் என்று தோன்றுகிறது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?