இலங்கையின் வேடர் மக்கள்பாரம்பரியமாக காட்டு வாசிகள். அடர்ந்த காடுகளில் உள்ள குகைகளில் வாழ்ந்து கொண்டு உணவு தேடி, வேட்டையாடி குழுக்களாக வாழ்ந்தனர். ஆனால் பெரும்பாலான இலங்கை மக்கள் அவர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்.
குணபாண்டில அத்தோ அத்தகைய வேடர் சமூகத்தைச் சேர்ந்தவர். குழுவில் ஒருவர் இறந்த உடன் மற்றொரு குகைக்கு இடம்பெயர்வார்கள். ஒருவரின் மரணத்திற்கு பிறகு அவர்கள் உடலைக் கிடத்தி இறந்தவருக்காக பிராத்தனை செய்வார்கள். உடலை இலைகளால் மூடுவார்கள்.
காட்டு விலங்கிறைச்சி, தேன் மற்றும் காட்டு கிழங்குகளை தங்கள் முன்னோர்கள் மற்றும் மரங்கள், ஆறுகள், காடுகளின் தெய்வங்களுக்கு வழங்கினர். இறந்தவரின் ஆன்மா தெய்வங்களுக்கு சொந்தமானதாக இருக்க வேண்டும் என தாங்கள் அவர்களது மறுவாழ்வுக்காக பிராத்தனை செய்தோம் என்கிறார் குணபாண்டில அத்தோ.
இன்று வேடர்கள் மத்திய இலங்கையின் ஹைன்னஸ்கிரிய மலைகள் முதல் தீவின் கிழக்கு கடலோர தாழ்நிலங்கள் வரை சிறிய குடியிருப்புகளில் சிதறிக் கிடக்கின்றனர். இன்றைக்கு இலங்கையில் ஆதிக்கம் செலுத்தும் சிங்கள – பௌத்த மக்கள் இந்தோ ஆரியர்களாக கிமு 543 இல் இலங்கைக்கு வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பேயே வேடர்கள் தீவு முழுவதும் வாழ்ந்தனர்.
பல நூற்றாண்டுகளாக வேடர்கள் சிங்கள ஆட்சியால் ஒடுக்கப்பட்டனர். இன்றும் அவர்கள் சுற்றுலா பயணிகளுக்காக ஒரு காட்சிப் பொருளாக பயன்படுத்தப்படுகின்றனர். இன்று வேடர்கள் இலங்கை மக்கள் தொகையில் 1% க்கும் குறைவானவர்கள் என்று கருதப்படுகிறது.
மற்ற பழங்குடி போலவே வேடர்களின் தோற்றம் பற்றி சில சான்றுகள் உள்ளன. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வேடர்களின் மரபணு தொகுப்போடு 48,000 – 3,800 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த பாலன்கோடா மனிதனின் எலும்புக் கூடோடு தொடர்பு படுத்துகிறார்கள். கொழும்பிலிருந்து 160 கி.மீ தூரத்தில் பாலன்கோடா நகரத்தின் இம்மனிதனின் புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டதால் அந்நகரத்தின் பெயரையே வைத்தார்கள்.
குணபாண்டில அத்தோ, கண்டிய இராச்சியத்தின் (1476-1818) அரசர்களால் வழங்கப்பட்ட சிங்களப் பட்டமான வேடர்களின் டானிகல மகா பண்டாரலகே பரம்பரையைச் சேர்ந்தவர். முதலில் அவர்கள் கிழக்கு இலங்கையின் டானிகல மலையைச் சுற்றியுள்ள காடுகளில் வாழ்ந்தனர். ஆனால் 1949 இல் இலங்கையில் செயற்கையாக கட்டப்பட்ட மிகப்பெரிய ஏரியான சேனநாயக்க சமுத்திரத்தின் கட்டுமானம் இந்த வேட சமூகத்தை இடம்பெயர வைத்தது.
டானிகல மஹா பண்டாரலாகே பரம்பரையைச் சேர்ந்தவர் கிரிபண்டிலத்தோ. இவர் தனது அம்மா, அப்பாவை அம்மிலத்தோ, அப்பிலத்தோ என்று அழைக்கிறார். நெல் விவசாயத்திற்காக சிங்கள கிராமங்களுக்கு இடம்பெயர அரசாங்கம் ஊக்குவித்ததாக அவர் கூறுகிறார். பெரும்பாலான வேடர்கள் ஒப்புக் கொண்டனர். ஒப்புக் கொள்ளாதவர்களுக்கு இழப்பீடு ஏதும் கிடைக்கவில்லை.
இடம்பெயர்ந்தவர்கள் சிங்களக் கலாச்சாரத்தில் இணைவதோடு, சிங்களவர்களுடன் திருமணம் செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை. பல சிங்கள மக்கள் தங்களை பின்தங்கியவர்களாகவும் கலாச்சாரமற்றவர்களாகவும் கருதியதால், அவர்களில் பெரும்பாலோர், தங்கள் வேடர் மரபை மறைக்க தங்கள் பெயர்களை மாற்றிக்கொண்டதாக குனபண்டிலாத்தோ கூறினார். அவர்களின் மொழி கூட பரிணமித்ததோடு, தொடர்பு கொள்ள சிங்கள வார்த்தைகளைக் கொண்டு மாற்றியமைத்தது.
ரதுகல குகையில் வாழ்ந்த ஏழு குடும்பங்கள் தங்கள் பாரம்பரியத்தை சிறிது காலம் கடைப்பிடித்து, காட்டில் வாழ்ந்து, வேட்டையாடி உணவு தேடி, பின்னர் அவர்கள் படிப்படியாக சிங்கள விவசாயிகள் மற்றும் அருகிலுள்ள நகரங்களின் முஸ்லிம் வணிகர்களுடன் கலந்தனர். காட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டபோது, குணபாண்டிலத்தோவின் பெற்றோர் சோளம், தினை, வெண்டைக்காய், பனை போன்றவற்றை பயிரிட்டனர். "நாங்கள் மெல்ல மெல்ல எங்கள் வாழ்க்கை முறையை இழக்க ஆரம்பித்தோம்," என்று அவர் கூறினார்.
ஆனால் இப்போது, இலங்கையின் இந்த முதல் மக்கள் மீதான பார்வைகள் மெதுவாக மாறி வருகின்றன. "சிங்களவர்கள் எங்களை இழிவாகப் பார்த்தார்கள், ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது, மக்கள் அதிகம் படித்தவர்கள், அவர்கள் எங்களைப் பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வமாக உள்ளனர்" என்று குணபாண்டிலஅத்தோ கூறினார்.
தொல்பொருள் திணைக்களம் மற்றும் பாரம்பரிய அமைச்சகம் ஆகியவை தொற்றுநோய்க்கு சற்று முன்னர் ரதுகலவில் வேடர் பாரம்பரிய மையத்தை கட்டியுள்ளன, அங்கு குணபாண்டிலதோ ஏப்ரல் மாதம் தொடங்கி பார்வையாளர்களுக்கான சுற்றுப்பயணங்களை வழிநடத்துவார்.
அவரது கலாச்சாரம் மற்றும் மரபுகளைப் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொண்ட குணபாண்டிலத்தோ, மையத்தின் சிறிய மண் குடிசைகளுக்கு அழைத்துச் சென்று காட்டுகிறார். அது அவர்களின் முன்னோர்கள் வாழ்ந்த குகைக்கு அருகில் உள்ளது.
"எங்கள் இளைய தலைமுறையினருக்கு எங்கள் கலாச்சார கூறுகளை வழங்க விரும்புகிறோம்," என்று கிரிபண்டிலாத்தோ கூறினார். இந்த மையத்தை வைத்திருப்பதில் மகிழ்ச்சி அடைவதாக கூறுகிறார். கொரோனா தொற்றுநோயால் சிறிது காலம் நிறுத்தப்பட்டாலும், கிரிபண்டிலாத்தோ ஒவ்வொரு வார இறுதியிலும் 22 வேடர் குழந்தைகளுக்கு பூர்வீக வகுப்புகளை மையத்தில் நடத்தி, அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் அவர்களின் மொழி மற்றும் மரபுகளைப் பற்றி கற்பிக்கிறார்.
"நாங்கள் சிறியவர்களாக இருந்தபோது, எங்கள் பெற்றோர்கள் எங்களைக் காட்டிற்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் எங்களுக்கு குகைகள் கண்டுபிடிப்பது, தண்ணீர் எங்கே குடிக்க வேண்டும், பசியால் வாடாதபடி உணவை எப்படி கண்டுபிடிப்பது என்று கற்பித்தார்கள். அவர்கள் வறண்டு போகாத நீரோடைகளைக் காட்டினார்கள். நாங்கள் இப்போது காட்டிற்குச் செல்லும்போது, நமக்கு அருகில் யானை அல்லது காட்டு கரடி இருக்கிறதா என்று அவற்றின் வாசனையை வைத்து சொல்ல முடியும் ”என்று குணபாண்டிலாத்தோ கூறினார். "எங்கள் சிறு குழந்தைகளுக்கும் அதே அறிவைக் கொடுக்க விரும்புகிறோம்."
இன்று, பெரும்பாலான வேடர்கள் பௌத்தர்கள், ஆனால் அவர்களது ஆன்மிக நம்பிக்கைகள் இன்னும் ஆழமாகப் பதிந்துள்ளன. "மரத்தில் இருந்து பூ அல்லது இலையைப் பறிக்க வேண்டாம் என்று நாங்கள் குழந்தைகளுக்கு கற்பிக்கிறோம், அதனால் உங்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்றால், ஆற்றின் அருகே மரங்களை வெட்ட வேண்டாம், ஏனெனில் அது காய்ந்துவிடும்."
உமயங்கனா பூஜானி குணசேகர எனும் வரலாற்று அறிஞர் நீண்ட காலமாக, வேடர்கள் இலங்கையில் ஒரு சுற்றுலா ஆர்வமாக பார்க்கப்பட்டு வருவதாக விளக்கினார். ரதுகலவிலிருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தம்பன கிராமத்தில் உள்ள பரம்பரையைச் சேர்ந்த வேடர்களின் தாயகம், எடுத்துக்காட்டாக, பெரிதும் வணிகமயமாக்கப்பட்டுள்ளது. "பெரும்பாலான மக்கள் தங்கள் வரலாறு மற்றும் மரபுகள் பற்றி விளக்குவதற்கு வேடர்கள் பணம் கேட்பதாக புகார் கூறுகிறார்கள்," என்று குணசேகர கூறினார். "ஆனால் நீங்கள் அவர்களைக் குறை கூற முடியாது. வனச்சட்டம் போன்ற அரசாங்க விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தபோது, அவர்களால் காடுகளுக்கு வேட்டையாட முடியவில்லை. சுற்றுச்சூழல் உணர்வுள்ள பாரம்பரிய வாழ்க்கை முறை மற்றும் உணவு வழிகளை அவர்கள் இழந்தனர். எனவே, அவர்கள் வாழ ஒரு வழி தேவைப்பட்டது. ."
தற்போது, தம்பனாவில் உள்ள வேடர்கள் தங்கள் கைவினைப் பொருட்களை சுற்றுலாப் பயணிகளுக்கு விற்க பேரம் பேச வேண்டியுள்ளது, அவர்கள் அடிக்கடி கிராமத்திற்குச் சென்று தலைவருடன் புகைப்படம் எடுக்கின்றனர். குணபாண்டிலாத்தோ மற்றும் கிரிபண்டிலாத்தோ இருவரும் சுற்றுலா, சமூகத்தில் ஒரு நல்ல மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று நம்பிக்கை கொண்டுள்ளனர்.
"அரசாங்கம் எங்களைக் கைவிட்டு விட்டது. அவர்கள் வேடர்களை அங்கீகரித்திருந்தால், அது எங்களது கலாச்சாரத்தை சிறப்பாகப் பாதுகாக்க உதவும்," என்று குணபாண்டிலாத்தோ கூறினார். தனது சமூகம் தங்கள் பாரம்பரியங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி பேசுவதற்காக மாதாந்திர கூட்டத்தை நடத்துவதாகவும், சில இளைஞர்கள் தங்கள் பாரம்பரியத்தைப் பற்றி வலுவாக உணர்கிறார்கள், என்கிறார் அவர்.
"விஜய மன்னன் [முதல் ஆரிய மன்னர்] வருவதற்கு முன்பு நாங்கள் இங்கு இருந்தோம். நாங்கள் நாட்டில் வாழும் மிகப் பழமையான குடிமக்கள் - நாங்கள் இங்கு இருக்கிறோம் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எங்களிடம் எங்கள் மொழி இருக்கிறது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும், அதை முன்னோக்கி கொண்டு செல்ல நாங்கள் விரும்புகிறோம்." என்கிறார் குணபாண்டிலாத்தோ.
அழிவின் விளிம்பில் இருக்கும் வேடர் சமூகத்தின் தற்போதைய நிலை இதுதான். இலங்கையின் பூர்வகுடி மக்களை பாதுகாக்க வேண்டியது இலங்கை அரசின் கடமை.