Vladimir Putin

 

Twitter

உலகம்

உக்ரைன் போர் : ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் தடை - இதுதான் ரஷ்யா எடுத்துள்ள புதிய நடவடிக்கை

ஆதிரை

இரண்டு வாரங்களுக்கும் மேலாக யுக்ரேனில் தாக்குதலை நடத்தி வருகிறது ரஷ்யா. பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்றும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை.

ரஷ்யா மீது சர்வதேச தடைகளை விதித்தபோதிலும் எதற்கும் அசையவில்லை புதின். போருக்கு அஞ்சி தப்பிச் செல்ல முயலும் யுக்ரேன் மக்களின் துயரத்தை நாம் அன்றாடம் ஊடகங்களின் மூலமாக பார்த்து வருகிறோம்.

சமூக ஊடகங்கள்

சமூக ஊடகங்கள்


இந்த படையெடுப்பின் ஒரு அங்கமாக சமூக ஊடகங்கள் மாறி வருவதையும் நாம் கண்டோம். அதில் ஒரு பகுதியாக ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரு தளங்களின் தாய் நிறுவனமான ’மெட்டா’ ரஷ்ய படையெடுப்புக்கு எதிரான வன்முறை பேச்சை தங்கள் தளங்களில் அனுமதிக்கும் விதமாக தனது கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக தெரிவித்துள்ளது.

பொதுவாக டிவிட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் ஆகிய தளங்கள் இம்மாதிரியான வன்முறை மற்றும் வெறுப்பு பேச்சுக்களை ஒடுக்க பல கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதுண்டு. டிவிட்டரில் பல பிரபலமான கணக்குகள் முடக்கப்பட்ட சம்பவங்களையும் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

ஆனால் இப்போது இதற்கு எதிர்மறையாக மெட்டா நிறுவனம், “ரஷ்ய ஊடுறுவல்காரர்களுக்கு மரணம்” போன்ற பதிவுகளை அனுமதிப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால் இது யுக்ரேன் உட்பட குறிப்பிட்ட சில நாடுகளுக்கே பொருந்தும். அதேபோல அந்த பதிவு ரஷ்ய படையெடுப்பை ஒட்டியதாக இருக்க வேண்டும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Vladimir Putin

வெறுப்பு


ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில், ரஷ்ய படையெடுப்பை ஒட்டி ரஷ்ய படை வீரர்களுக்கு எதிரான வெறுப்பு மற்றும் வன்முறை பேச்சுக்களை அனுமதிக்கும் வண்ணம் தங்களின் நிறுவனக் கொள்கைகளை தளர்த்தியிருப்பதாக ஊழியர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருப்பதாக ராயட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்திருந்தது.

இருப்பினும் ரஷ்ய மக்களுக்கு எதிரான வன்முறை பேச்சுக்களை அனுமதிப்பதில்லை என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தளர்த்தப்பட்ட கொள்கையின் மூலம் ”ரஷ்ய அதிபர் புதினுக்கு மரணம்” அல்லது ”பெலாரூஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவுக்கு மரணம்” போன்ற பதிவுகள் அனுமதிக்கப்படுகிறது.

யுக்ரேனில் ரஷ்யா படையெடுத்திருப்பதன் காரணமாக இந்த தற்காலிக கொள்கை மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனத்தின் செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Vladimir Putin

சும்மா இருக்குமா ரஷ்யா?


சரி மெட்டா இம்மாதிரியாக அறிவிப்பு கொடுத்தால் அதை ரஷ்யா பார்த்து கொண்டு சும்மா இருக்குமா. இதுகுறித்த ராயட்டர் செய்தியை சுட்டிக் காட்டி அமெரிக்காவில் உள்ள ரஷ்ய தூதரகம், மெட்டாவின் ’தீவிரவாத செயல்பாடுகளை’ தடுத்து நிறுத்த வேண்டும் என்று அமெரிக்காவை கேட்டுக் கொண்டுள்ளது.

ஆனால் யுக்ரேனுக்கு ஆதரவாக பயனர்கள் தங்கள் எண்ணங்களை பதிவு செய்யும் நோக்கிலேயே இம்மாதிரியாக கொள்கை தளர்வு நடைமுறையை மேற்கொண்டதாக மெட்டா தெரிவித்துள்ளது.

மெட்டா மீது ரஷ்யாவின் விசாரணை கமிட்டி வழக்கு தொடுத்துள்ளது. இந்த கமிட்டி ரஷ்ய அதிபர் புதினின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவில் முகநூலுக்கு ஏற்கனவே மார்ச் 4ஆம் தேதி முதல் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. ரஷ்யாவின் அரசு நிதியுதவியுடன் செயல்படும் ஆர்டி ஊடகத்தின் செய்திகள் சிலவற்றிற்கு முகநூல் கட்டுப்பாடுகளை விதிப்பதால் ஃபேஸ்புக்கின் மீது ரஷ்யா கட்டுப்பாடுகளை விதித்தது. ஆனால் தற்போது முழுவதுமாக ஃபேஸ்புக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல இந்த அறிவுப்புக்கு பிறகு இன்ஸ்டாகிராமிற்கும் கட்டுப்பாடுகளை விதிக்கிறது ரஷ்யா. ஆனால் வாட்சப் செயலி எப்போதும் போல இயங்கும்.

வாட்சப் என்பது ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள பயன்படுத்தும் தளம் என்பதாலும், பொதுவெளியில் ஒரு பதிவை அதில் இட வாய்ப்பில்லை என்பதாலும் அதனை பயன்படுத்த எந்த தடையும் இல்லை எனவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

இது மட்டுமல்லாமல் ஏற்கனவே ரஷ்யாவில் பல செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மறுபுறம் ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிர்வினையாற்றும் வகையில் அந்நாட்டின் ஸ்புட்நிக் மற்றும் ஆர் டி போன்ற ஊடகங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?