Vladimir Putin

 

Twitter

உலகம்

உக்ரைன் போர்: ரசிய ஆக்கிரமிப்பின் 17 வது நாளில் என்ன நடந்தது ?

ரசியா நடத்தும் போரினால் இதுவரை 1,300 உக்ரைனிய துருப்புகள் கொல்லப்பட்டதாகவும், வெள்ளியன்று சுமார் 500 -600 ரசிய துருப்புகள் உக்ரைனிய படைகளிடம் சரணடைந்ததாகவும் அதிபர் செலன்ஸ்கி செய்தியாளர்களிடம் கூறினார்

NewsSense Editorial Team

ரசியா உக்ரைன் மீது படையெடுத்து 17 நாட்கள் ஆகிவிட்டன. இன்று உக்ரைனிய மக்கள் ரசியாவின் முற்றுகை மற்றும் குண்டு வீச்சுகளுக்கு மத்தியில் தங்களது நகரங்களிலிருந்து வெளியேற முயன்றனர். அதே நேரம் உக்ரைன் தலைநகரம் கீவில் போர் தீவிரமடைந்திருக்கிறது.

தெற்கு துறைமுக நகரமான மரியுபோல், ரசிய எல்லைக்கு அருகில் உள்ள சுமி நகரம் மற்றும் கீவுக்கு வெளியே உள்ள நகரங்கள், கிராமங்கள் போரினால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் இவ்விடங்களில் இருந்து வெளியேறுவதற்கு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு மனிதாபிமானத்தோடு பல்வேறு வழிகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

பிரிட்டீஷ் உளவுத்துறை செய்தியின் படி தலைநகரம் கீவுக்கு அருகே ரசிய படைகள் பெருமளவில் குவிக்கப்பட்டிருக்கின்றன. மாஸ்கோ தங்கள் மீது பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டிருப்பதாக உக்ரைனிய அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

Migrating People

பாதிப்படைந்த நகரங்களிலிருந்து மக்கள் வெளியேறுகின்றனர்

சனிக்கிழமை தலைநகர் கீவுக்கு அருகில் இருந்த இர்பின் நகரிலிருந்து மக்கள் வெளியேறினாலும் அது கடினமாக இருந்தது. மனிதாபிமானத்துடன் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் முற்றிலும் அமலுக்கு வரவில்லை. உக்ரைனின் தாக்குதல் உள்ளிட்டு இருதரப்பும் மாறி மாறி குண்டுகளை வீசியும், சண்டையை நடத்தியும் வருகின்றனர்.

ரசியாவின் தாக்குதலால் உருக்குலைந்து போன மரியுபோல் நகரத்தில் உணவு, தண்ணீர், மின்சாரத்திற்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. இனியும் அங்கிருந்தால் ஆபத்து என்ற நிலையில் மக்கள் வெளியேறுவதற்கு எந்த அபயாங்களையும் சந்தித்தாலும் பரவாயில்லை என்று கருதுகின்றனர். இருப்பினும் சனிக்கிழமை மாலை வரை அவர்கள் வெளியேறுவதற்கான பேருந்துகள் நகரத்திற்குள் வரவே இல்லை.

சனிக்கிழமை அன்று உக்ரைனின் பாதுகாப்பான மனிதாபிமான வழிகள் மூலம் 13,000 மக்கள் வெளியேற்றப்பட்டனர் என்று உக்ரைன் துணை பிரதமர் கூறினார். ஆனாலும் மரியுபோல் நகரிலிருந்து ஒருவர் கூட வெளியேற முடியவில்லை.

தலைநகர் கீவின் வட மேற்கு பகுதியில் இருக்கும் ஒரு கிராமத்தில் ரசிய துருப்புகள் நடத்திய தாக்குதலால் ஏழு பேர் கொல்லப்பட்டதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதைப் பற்றி மாஸ்கோவிடமிருந்து கருத்து ஏதுமில்லை.

Ukraine Russia war

உக்ரைனுக்கு ஆயுத விநோயகம் குறித்து ரசியா எச்சரிக்கை

உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவி செய்தால் அந்த உதவி வரும் அணிவகுப்பை ரசியாவின் படைகள் தாக்க நேரிடும் என்று ரசியாவின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் கூறியிருக்கிறார்.

பல மேற்கத்திய நாடுகளில் இருந்து ஆயுதங்களை உக்ரைனுக்குள் அனுப்புவது குறித்து அமெரிக்காவை எச்சரித்துள்ளதாகவும், அப்படி அனுப்பினால் அதை தாக்குவதற்கு தங்களுக்கு சட்டப்பூர்வ உரிமை உள்ளதாக அமைச்சர் அரசு தொலைக்காட்சியில் தெரிவித்தார்.

வான் பாதுகாப்பு ஆயுதங்கள், டாங்க் எதிர்ப்பு ஏவுகணைகள் போன்றவற்றை உக்ரைனுக்கு அனுப்புவது பொறுப்பற்றது என்றும், ரசியாவின் எச்சரிக்கைகளை அமெரிக்கா தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

Ukraine Russsia War

1300 வீரர்கள் மரணமடைந்ததாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அறிவிப்பு

ரசியா நடத்தும் போரினால் இதுவரை 1,300 உக்ரைனிய துருப்புகள் கொல்லப்பட்டதாகவும், வெள்ளியன்று சுமார் 500 -600 ரசிய துருப்புகள் உக்ரைனிய படைகளிடம் சரணடைந்ததாகவும் அதிபர் செலன்ஸ்கி செய்தியாளர்களிடம் கூறினார்.

மிக அதிக எண்ணிக்கையில் ரசிய வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறிய செலன்ஸ்கி இது போன்ற எந்த இறப்புகள் குறித்தும் தாம் மகிழ்ச்சி அடைய வில்லை என்றும் அவர் கூறினார். ஒரு மதிப்பீட்டின் படி ரசிய வீரர்கள் 12,000 பேர் இறந்திருந்தாலும் இது என்னை மகிழ்ச்சி படுத்தாது, நான் உலகைப் பார்க்கும் அப்படி அல்ல என்று அதிபர் உருக்கத்துடன் கூறினார்.

Zelensky

மெலிடோபோல் மேயர் கடத்தப்பட்டதை எதிர்த்து மக்கள் போராட்டம்

இதற்கிடையில் தென்கிழக்கு உக்ரைனில் இருக்கும் சிறிய நகரமான மெலிடோபோல் நகர மக்கள் தமது மேயர் ரசிய படைகளால் கடத்தப்பட்டதைக் கண்டித்து வீதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வெள்ளிக்கிழமை மேயர் இவான் ஃபெடோரோவ் ரசிய வீரர்களால் இழுத்துச் செல்லப்படும் வீடியோவை உக்ரைனிய அதிகாரிகள் வெளியிட்டனர். இது உலக அளவில் வைரலானது.

Ukraine Russia War

லிவிவ் நகரத்தின் புராதான கலைப்பொருட்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள்

மேற்கு நகரமான லிவிவில், யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் உள்ள அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. இங்குள்ள கலைப்பொருட்களை பாதுகாக்க பெரும் நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது. லிவிவில் இருக்கும் தேசிய அருங்காட்சியகம்தான் உக்ரைனில் மிகப்பெரிய அருங்காட்சியகம். இங்கு வைக்கப்பட்டிருந்த 1,500 அரிய கலைப்பொருட்கள் ஒவ்வொன்றும் பல அடி ஆழமுள்ள பதுங்கு அறைகளில் வைக்கப்பட்டிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது வரை இந்நகரில் போர் தொடங்கவில்லை என்றாலும் சோதனைச் சாவடிகள், வீதிகளில் இராணுவ வீரர்கள் என இந்த அழகிய நகரம் போருக்கு தயாராகி வருகிறது.

உக்ரைன் மீதான ரசியாவின் ஆக்கிரமிப்பு போர் காரணமாக இதுவரை 25 இலட்சம் உக்ரைனிய மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு சென்றுள்ளனர். தங்களது நாட்டில் மட்டும் 16 இலட்சம் மக்கள் அகதிகளாக வந்துள்ளதாக போலந்து கூறுகிறது. சிறிய நாடான மால்டோவா இனிமேல் வரும் அகதிகளை சமாளிக்க முடியாது எனுமளவுக்கு அதிகம் பேர் வந்துவிட்டதாக அந்நாடு கூறுகிறது.

போர் ஆரம்பித்து 17 ஆவது நாளின் நிலைமை இது. இன்னும் என்ன துன்பங்களையெல்லாம் உக்ரைனிய மக்களும் உலக மக்களும் அனுபவிக்க வேண்டுமோ தெரியவில்லை.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?