எட்டி NewsSense
உலகம்

எட்டி : இமயமலை பனி மனிதன் இருப்பது உண்மையா? - மர்ம உயிர் பற்றி ஆய்வாளர்கள் சொல்வதென்ன?

எட்டி பெரும் தசைகள் கொண்டதாகவும், அடர் சாம்பல் அல்லது சிவப்பு-பழுப்பு நிற முடியால் மூடப்பட்டதாகவும், 91 முதல் 181 கிலோகிராம் வரை எடையுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது வட அமெரிக்காவின் பிக்ஃபூட்டுடன் (அமெரிக்காவில் இருப்பதாக நிரூபிக்கப்படாத குரங்கு மனிதன்) ஒப்பிடும்போது சிறியது.

Govind

ஒரு காலத்தில் அருவருப்பான பனிமனிதன் என்று அழைக்கப்படும் எட்டி, ஆசியாவின் மலைகளில் வாழ்வதாகக் கூறப்படும் ஒரு மர்மமான இரு கால் உயிரினமாகும். இது சில நேரங்களில் பனியில் தடங்களை விட்டுச் செல்வதாகவும், இமயமலை பனிக் கோட்டிற்கு கீழே வசிப்பதாகவும் கூறப்படுகிறது. ரஷ்யா, சீனா மற்றும் நேபாளத்தின் தொலைதூர மலைப் பகுதிகளுக்கு டஜன் கணக்கான பயணிகள் பயணம் செய்த போதிலும், எட்டியின் இருப்பு இன்றும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

எட்டி பெரும் தசைகள் கொண்டதாகவும், அடர் சாம்பல் அல்லது சிவப்பு-பழுப்பு நிற முடியால் மூடப்பட்டதாகவும், 91 முதல் 181 கிலோகிராம் வரை எடையுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது வட அமெரிக்காவின் பிக்ஃபூட்டுடன் (அமெரிக்காவில் இருப்பதாக நிரூபிக்கப்படாத குரங்கு மனிதன்) ஒப்பிடும்போது சிறியது. சராசரியாக 6 அடி (1.8 மீட்டர்) உயரம் கொண்டது. இது மிகவும் பொதுவான வடிவமாக இருந்தாலும், எட்டி பல்வேறு வடிவங்களில் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எட்டியின் வரலாறு

எட்டி என்பது இமயமலை மக்களின் பண்டைய புனைவுகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளில் ஒரு பாத்திரம். பெரும்பாலான கதைகளில், எட்டி ஆபத்தின் உருவம் என்று எழுத்தாளர் ஷிவா தாகல் கூறுகிறார். கதைகளின் நோக்கமானது ஆபத்தான காட்டு விலங்குகளைத் தவிர்ப்பதற்கும், சமூகத்தில் பாதுகாப்பாக இருப்பதற்குமான ஒரு எச்சரிக்கையாகும். பின்னர் பலர் கட்டுக்கதைகளின் மூலம் இதை உண்மையென நம்ப ஆரம்பித்தனர்.

கி.மு 326 இல் சிந்து சமவெளியைக் கைப்பற்றியபோது கிரேக்க பேரரசர் அலெக்சாண்டர் எட்டியைப் பார்க்கக் கோரினார். ஆனால், அந்த உயிரினங்கள் குறைந்த உயரத்தில் உயிர்வாழ முடியாததால், தங்களால் காட்ட முடியவில்லை என்று உள்ளூர் மக்கள் அவரிடம் தெரிவித்தனர்.

1921 ஆம் ஆண்டில், ஹென்றி நியூமன் என்ற பத்திரிகையாளர், எவரெஸ்ட் மலைப் பயணத்திலிருந்து திரும்பி வந்த பிரிட்டிஷ் ஆய்வாளர்களின் குழுவை நேர்காணல் செய்தார். ஆய்வாளர்கள் அவரிடம், மலையில் சில மிகப் பெரிய கால்தடங்களைக் கண்டுபிடித்ததாகத் தெரிவித்தனர். அதற்கு அவர்களின் வழிகாட்டிகள் "மெட்டோ-காங்மி" என்று கூறியுள்ளனர். அதாவது "மனிதன்-கரடி பனிமனிதன்" என்று பொருள். நியூமன் "பனிமனிதன்" பகுதியை சரியாக மொழி பெயர்த்தார். ஆனால் "மெத்தோ" என்பதை "இழிந்த" என்று தவறாக மொழிபெயர்த்து பின்னர் அதை "அருவருப்பானது" என்று அச்சுறுத்தும் வகையில் மாற்றினார். இவ்வாறு ஒரு புராணக்கதை உயிர் பெற்றது.

நேபாளம் மற்றும் திபெத்தில் பல மாதங்கள் தங்கியிருந்த புகழ்பெற்ற மலையேறும் வீரர் ரெய்ன்ஹோல்ட் மெஸ்னர், பெரிய கரடிகள் மற்றும் அவற்றின் தடங்கள் பெரும்பாலும் எட்டி என்று தவறாகக் கருதப்பட்டதாக முடிவு செய்தார். ஆனால் இந்தக் காட்சிகள் உண்மையானவையா, புரளிகளா அல்லது தவறாக அடையாளம் காணப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்கிறார். அவர் ஒரு பெரிய, அடையாளம் காண முடியாத உயிரினத்துடன் தனது சொந்த சந்திப்பை "எட்டிக்கான எனது தேடுதல்: இமயமலையின் ஆழமான மர்மத்தை எதிர்கொள்வது" (செயின்ட் மார்ட்டின், 2001) புத்தகத்தில் விவரிக்கிறார்.

மார்ச் 1986 இல், அந்தோனி வூல்ட்ரிட்ஜ், இமயமலையில் ஒரு மலையேறுபவர், 500 அடி (152 மீட்டர்) தொலைவில் உள்ள ஒரு முகடு அருகே பனியில் நிற்பது எட்டி என்று நினைத்தார். அது நகரவில்லை அல்லது சத்தம் போடவில்லை. ஆனால் வூல்ட்ரிட்ஜ் பனியில் ஒற்றைப்படை தடங்களைக் கண்டார். அது அந்த உருவத்தை நோக்கிச் சென்றது. அவர் அந்த உயிரினத்தின் இரண்டு புகைப்படங்களை எடுத்தார். பின்னர் அவை ஆய்வு செய்யப்பட்டு உண்மையானவை என்று நிரூபிக்கப்பட்டது.

அடுத்த ஆண்டு, வூல்ட்ரிட்ஜ் புகைப்படங்களை எடுத்த இடத்திற்குத் சென்ற ஆராய்ச்சியாளர்கள், அவரது நிலையில் இருந்து செங்குத்தாகத் தெரிந்த ஒரு இருண்ட பாறையை அவர் வெறுமனே பார்த்ததைக் கண்டுபிடித்தனர். இது ஒரு தவறான செய்தி என்று அவர்கள் கூறியது - சில எட்டி விசுவாசிகளுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது.

Himalayas

எட்டி பனிமனிதனுக்கான ஆதாரங்கள் இருக்கிறதா?

எட்டிக்கான பெரும்பாலான சான்றுகள், பார்வைகள் மற்றும் அறிக்கைகள் மூலம் வருகின்றன. அமெரிக்காவின் பிக்ஃபூட் மற்றும் ஸ்காட்லாந்தின் புராணக்கதையின் படி நம்பப்படும் கடலில் வாழும் பெரும் உயிரினமான லோச் நெஸ் அசுரனைப் போலவே எட்டியின் இருப்புக்கான ஆதாரம் தெளவில்லாதது. இருப்பினும் பல ஆண்டுகளாக துண்டு துக்காணியாக சில ஆதாரங்கள் வெளிவந்துள்ளன.

1960 இல் எவரெஸ்ட் சிகரத்தை அளந்த முதல் மனிதரான எட்மண்ட் ஹிலாரி எட்டியின் ஆதாரங்களைத் தேடினார். அவர் ஹெல்மெட் போன்ற தலை உள்ள ஒன்றைக் கண்டார். பின்னர் விஞ்ஞானிகள் அது இமயமலையில் வாழும் ஆடு போன்ற ஒரு விலங்கு என்பதைக் கண்டுபிடித்தனர்.

2007 ஆம் ஆண்டில், அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜோஷ் கேட்ஸ், இமயமலையில் ஒரு நீரோடை அருகே பனியில் மூன்று மர்மமான கால்தடங்களைக் கண்டுபிடித்ததாகக் கூறினார். உள்ளூர்வாசிகள் சந்தேகமடைந்தனர். கேட்ஸ் - சுமார் ஒரு வாரம் மட்டுமே அந்தப் பகுதியில் இருந்தவர் - வெறுமனே கரடி பாதையை தவறாகப் புரிந்துகொண்டார்.

2010 ஆம் ஆண்டில், சீனாவில் வேட்டையாடுபவர்கள் எட்டி என்று கூறி ஒரு விசித்திரமான விலங்கைப் பிடித்தனர். இந்த மர்மமான, முடி இல்லாத, நான்கு கால்கள் கொண்ட விலங்கு ஆரம்பத்தில் கரடியைப் போன்ற அம்சங்களைக் கொண்டதாக விவரிக்கப்பட்டது. ஆனால் இறுதியாக ஒரு சிவெட், நோயால் முடியை இழந்த ஒரு சிறிய பூனை போன்ற விலங்கு என அடையாளம் காணப்பட்டது.

நேபாளத்தில் உள்ள ஒரு மடாலயத்தில் ஒரு மர்மமான விரல் கண்டுபிடிக்கப்பட்டு அது எட்டியினுடையது என்று நம்பப்பட்டது. இந்த விரல் எடின்பர்க் உயிரியல் பூங்காவில் ஆராய்ச்சியாளர்களால் 2011 இல் பரிசோதிக்கப்பட்டது. மரபணு பகுப்பாய்வு மூலம் அந்த விரல் மனிதனுடையது என்று நிரூபிக்கப்பட்டது. அந்த விரல் ஒரு துறவியின் சடலத்திலிருந்து கைப்பற்றப்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறினர்.

எட்டி - பனிமனிதனைத் தேடிய ரஷ்யர்கள்

ரஷ்ய அரசாங்கம் 2011 இல் எட்டியில் ஆர்வம் காட்டி, மேற்கு சைபீரியாவில் நிபுணர்களின் மாநாட்டை ஏற்பாடு செய்தது. பிக்ஃபூட் ஆராய்ச்சியாளரும் உயிரியலாளருமான ஜான் பிண்டர்நாகல், எட்டி இருப்பது மட்டுமல்லாமல், முறுக்கப்பட்ட மரக்கிளைகளிலிருந்து கூடுகளையும் தங்குமிடங்களையும் உருவாக்குகிறது என்பதற்கான ஆதாரங்களைக் கண்டதாகக் கூறினார். எட்டியின் "மறுக்க முடியாத ஆதாரம்" தங்களிடம் இருப்பதாகவும், குகையில் உள்ள பாசியில் காணப்படும் சில நரை முடிகளின் அடிப்படையில் அது 95 சதவிகிதம் உறுதியாக இருப்பதாகவும் அவர்கள் அறிக்கை வெளியிட்டபோது இச்செய்தி உலகம் முழுவதும் தலைப்புச் செய்திகளை உருவாக்கியது.

ஆனால் அதே பயணத்தில் பங்கேற்ற மற்றொரு விஞ்ஞானி "மறுக்க முடியாத" ஆதாரம் புரளி என்று முடிவு செய்தார். பிக்ஃபூட்டின் இருப்பை அங்கீகரிக்கும் இடாஹோ மாநில பல்கலைக்கழகத்தின் உடற்கூறியல் பேராசிரியரும் மானுடவியலாளருமான ஜெஃப் மெல்ட்ரம், முறுக்கப்பட்ட மரக்கிளைகள் போலியானவை என்று தான் சந்தேகிப்பதாகக் கூறினார்.

ரஷ்யாவின் இந்தப் பணி ஒரு தீவிர அறிவியல் முயற்சியல்ல, ஒரு விளம்பர ஸ்டண்ட் என்று மெல்ட்ரம் முடிவு செய்தார். இது ரஷ்யாவின் ஏழ்மையான நிலக்கரி சுரங்க பகுதியில் சுற்றுலாவை அதிகரிக்க திட்டமிட்ட கூட்டம் என்றார். இறுதியில் எட்டியின் இருப்புக்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

எட்டியின் மரபணு ஆய்வு

2013 ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்டு பல்கலையின் மரபியல் வல்லுநர் பிரையன் சைக்ஸ் எட்டியின் முடி, பற்கள், திசு என்று கூறப்பட்ட 36 மாதிரிகளை மரபணு சோதனை செய்தார். அவற்றில் பெரும்பாலனவை மாடுகள், குதிரைகள், கரடிகளிடமிருந்து வந்தவை. இரண்டு மாதிரிகள் 40,000 முதல் 1,20,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ப்ளீஸ்டோசீன் துருவ கரடியின் தாடை எலும்புடன் பொருந்தியதாக சைக்ஸ் கண்டறிந்தார். வேறு இரண்டு விஞ்ஞானிகள் இந்த மாதிரி அரிய கிளையினமான இமாலய கரடிக்கு சொந்தமானது என்று கூறினர். இந்த ஆய்வு முடிகள் ராயல் சொசைட்டி இதழில் வெளியிடப்பட்டன.

இப்படி அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லையென்றாலும் எட்டியின் விசுவாசிகள் தமது நம்பிக்கையை விடுவதில்லை. இந்த மர்ம உயிரினங்கள் நிரூபிக்கப்படவில்லை என்பது அவை இல்லை என்பதற்கான ஆதாரங்களாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. மாறாக அவை அரிதாக, கண்ணுக்கு புலப்படாத, தனிமைப்படுத்தப்பட்ட உயிரினங்கள் என்று நம்புகிறார்கள். ஆகவே இந்த விலங்குகள் இல்லை என்றாலும் மக்கள் சிலரிடம் அவை வாழ்ந்து கொண்டே இருக்கும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?