Dinosaur Twitter
உலகம்

அண்டார்டிகா: நாம் டைனோசர் காலத்திற்குத் திரும்புகிறோமா?

Govind

அண்டார்டிகா என்றால் நமக்கு என்ன ஞாபகம் வரும்? எங்கும் பனிக்கட்டி, தரிசான பனி நிலம், பாழடைந்த சூழல், கடும் குளிர் என்றுதான் நாம் நினைக்கிறோம். இவை உண்மையென்றாலும் ஒரு காலத்தில் அண்டார்டிகா அப்படி இல்லை.


அண்டார்டிகாவில் டைனோசர்கள் வாழ்ந்தது எப்படி?

அப்போது அண்டார்டிகாவின் பெரும் தெற்கு நிலப்பரப்பு காடுகளால் சூழப்பட்டிருந்தது. அதில் டைனோசர்கள் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்தன. இப்போது பனிக்கட்டிகளால் சூழப்பட்டிருக்கும் அண்டார்டிகா, ஒரு காலத்தில் பிரம்மாண்டமான டைனோசர்களை தாங்கும் அளவிற்கு எப்படி வெப்பப் பகுதியாக இருந்திருக்கும்?

இதைப் புரிந்து கொள்ள நாம் புவியியல் துறையின் வரலாற்றுக் காலத்திற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். 145 முதல் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த காலத்தை கிரேட்டேசியஸ் என்று கூறுகிறார்கள். அப்போது அண்டார்டிகாவில் பனி இல்லை. இதை உங்களால் நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால் விண்ணிலிருந்து ஒரு சிறு கோள் பூமியைத் தாக்கிய பிறகே டைனோசர்கள் ஒழிந்தன. அந்த தாக்குதல்தான் அதன் கடைசிக் காலம்.

Climate Change

இக்காலத்தில் ஆர்டிக், அண்டார்டிக் இரு துருவங்களிலும் காடுகள் இருந்தன. அதற்கு ஆதாரமாக இப்போது இரு துருவங்களிலும் புதையுண்ட மரங்கள் மற்றும் ஊர்வன பூச்சிகள் மற்றும் விலங்கினங்கள் கிடைக்கின்றன. அவை விஞ்ஞானிகளுக்கு இங்கே காலநிலை எப்படி இருந்திருக்கும் என்பது குறித்த ஒரு சித்திரத்தை உருவாக்க உதவுகின்றது.

குளிர் இரத்தம் கொண்ட ஊர்வன உயிரினங்கள் உயிர் வாழ சூரிய வெப்பம் தேவை. இன்று இந்த உயிரினங்கள் பகலில் சூடாக வெயிலில் திரிகின்றன. குளிர்கால மாதங்களில் சூரியன் மறையும் இரு துருவங்களில் இருளில் உயிர் வாழும் அளவுக்கு அங்கே வெப்பம் இருந்திருக்க வேண்டும்.

இதை ஆய்வு செய்ய ஃபோராமினிஃபெரா எனப்படும் கடலில் வாழ்ந்து புதைந்து போன உயிரினங்களின் ஓடுகளையும் விஞ்ஞானிகள் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் கடந்த காலத்தின் காலநிலையைப் புரிந்து கொள்ள முடியும். அந்த ஓடுகளின் வேதியியலைப் பகுப்பாய்வு செய்தவன் மூலம், வெவ்வேறு உயிரினங்கள் வாழ்ந்த கால இடைவெளியை அறிவதோடு, அந்த நேரத்தில் கடல்நீரில் வெப்பநிலை எப்படி இருந்தது என்பதையும் மதிப்பிடலாம்.

அண்டார்டிகா

கடல் அதிகரிப்பும் எரிமலை வெடிப்பும் பூமியின் வெப்பநிலையை உயர்த்தின

ஸ்மித்சோனியன் எனப்படும் இயற்கை வரலாற்றின் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த டாக்டர் பிரையன் ஹூபர் தனது குழுவினருடன் இது குறித்து ஆய்வு செய்கிறார். அவர் அண்டார்காவைச் சுற்றியுள்ள ஆழ்கடல் தளங்களில் கவனம் செலுத்தி கிரேட்டேசியஸ் காலம் பற்றி ஆராய்கிறார்.

உலகெங்கிலும் உள்ள கடலின் பல்வேறு பகுதிகளிலிருந்து கிடைக்கும் புதை படிவ ஃபோராமினிஃபெரா ஓடுகளைப் பகுப்பாய்வு செய்தால் காலநிலை எப்படி பரிமாண வளர்ச்சி அடைந்தது என்பதை அறிய முடியும் என்கிறார் அவர்.

வளிமண்டலத்தில் அதிகரித்த கார்பன் டை ஆக்சைடு காரணமாக ஏற்படும் சூடான பசுமை இல்ல விளைவு அப்போது ஏற்பட்டது. கிரேட்டேசியஸ் வெப்ப இல்லம் எனப்படும் இது கிரேட்டேசியஸின் நடுப்பகுதியில் ஏற்பட்டது. அப்போது உயர் வெப்பநிலை நிலவியது. ஆனால் இன்றைய தரிசு பனி வயல்களைப் போலல்லாமல் அண்டார்டிகாவில் மரங்களும் டைனோசர்களும் நடமாடும் உலகத்தை உருவாக்கும் வண்ணம் கிரேட்டேசியஸில் என்ன நடந்தது?

ஹூபரின் புரிதல் படி கிரேட்டேசியஸ் காலத்தின் நடுப்பகுதியில் கடலின் பரப்பளவு அதிகரித்து வந்தது. அதே போன்று கார்பன்டை ஆக்சைடை உமிழும் பெரும் எரிமலைகளும் நிறைய உருவாகின. இதன் மூலம்தான் அண்டார்டிகா உள்ளிட்டு முழு பூமியும் வெப்பநிலையை அடைந்திருக்குமா என்று ஆய்வு தொடர்கிறது.

புவி வெப்பமயதாலால் அண்டார்டிகா மீண்டும் வெப்ப பகுதியாக மாறுமா?

காலநிலை மாற்றங்களை நாம் அனைவரும் அறிவோம். அது கடந்த காலத்திலிருந்தது. இப்போது மாறுகிறது மற்றும் எதிர்காலத்திலும் அது மாறும். ஆனால் கிரெட்டேசியஸ் காலத்தில் என்ன நடந்தது என்பதை ஒப்பிடும் போது நாம் இப்போது என்ன செய்கிறோம் என்பதில் என்ன வித்தியாசம்? அண்டார்டிகா விரைவில் பனிக்கட்டி இல்லாத ஒன்றாக மாறிவிடுமா?

சில பத்தாண்டுகளில் நூற்றுக்கணக்கான பில்லியன் டன்கள் கார்பன்டை ஆக்சைடை வளிமண்டலத்தில் வெளியிடுகிறோம். பிரம்மாண்டமான எரிமலைகள் இருந்தாலும் நமது அளவு கார்பன்டை ஆக்சைடை குறுகிய காலத்தில் உற்பத்தி செய்யமுடியாது என ஹூபர் கூறுகிறார்.

புவி வெப்பமயதாலால் அண்டார்டிகாவில் இருக்கும் பனி உருகும் வேகம் அதிகரிக்கிறது. இதனால் கடல் மட்டம் வேகமாக உயரும். சில தலைமுறைகளில் அண்டார்டிகா இப்போது போல இல்லாமல் நேரெதிராக மாறிவிடும் என்று பனிப்பாறை ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

அண்டார்டிகாவில் டைனோசர்கள் மீண்டும் உலவாமல் இருக்கலாம். ஆனால் அது பனிக்கட்டி இல்லாமல் இருக்கும் நிலை வரலாம் என்பதை மறுக்க முடியாது. இரு துருவங்களிலும் பனிக்கட்டி இல்லாமல் மனித இனம் எப்படி வாழ முடியும் என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் அதுதான் கடல்நீர் மற்றும் குடிநீரைச் சமநிலைப்படுத்தும் பணியினைச் செய்கிறது. அண்டார்டிகாவில் உள்ள நன்னீர் உருகி கடலில் உப்பு நீராக மாறி கடல் மட்டம் உயர்ந்தால் மனிதன் வாழ இயலாத சூழல் பூமியில் ஏற்படும்.

ஆகவே நாம் டைனோசர் இருந்த காலநிலை வரலாற்றுக்குத் திரும்புகிறோமா என்ற கேள்வியும் கவலையும் எழுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?