முகமது பின் சயீத் NewsSense
உலகம்

முகமது பின் சயீத் : ஐக்கிய அரபு எமிரேட்ஸின் புதிய அதிபர் - யார் இவர்? இவர் வரலாறு என்ன?

NewsSense Editorial Team

கடந்த சனிக்கிழமை அன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராக ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் முறையாக தெரிவு செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே மத்திய கிழக்கு நாடுகளில் ஒரு வலிமையான தலைவராக திகழ்கிறார். ஈரானை எதிர்ப்பதாக இருக்கட்டும், இஸ்ரேலுடன் உறவு கொள்வதாக இருக்கட்டும் அனைத்திலும் இவர் மத்திய கிழக்கின் அரசியலை முன்னெடுப்பவராக உள்ளார்.

உண்மையான தலைவராக பல ஆண்டுகளாக திரைக்குப் பின்னால் பணியாற்றிய ஷேக் முகமதுக்கு வயது 61 ஆகும். ஐக்கிய அரபு அமீரகத்தின் இராணுவத்தை உயர் தொழில்நுட்பப் படையாக மாற்றியதில் இவரது பங்கு முக்கியானது. மேலும் எண்ணெய் வளம், வணிக மையம் போன்றவற்றுடன் அமீரகம் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறுவதற்கு இவரும் ஒரு முக்கிய காரணமாகும்.

வெள்ளிக்கிழமை இறந்த அவரது ஒன்றுவிட்ட சகோதரர் முன்னாள் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத், 2014 இல் பக்கவாதம் உட்பட நோயால் பாதிக்கப்பட்ட காலத்தில் இருந்து முகமது பின் சயீத் அதிகாரத்தைப் பயன்படுத்தத் தொடங்கினார்.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கான முன்னாள் அமெரிக்க தூதர் பார்பரா இலையின் கூற்றுப்படி, வளைகுடா அரேபிய ஆட்சியாளர்கள் தங்கள் முக்கிய ஆதரவாளரான அமெரிக்காவை இனி நம்ப முடியாது எனும் சிந்தனை முகமது பின் சயீத்துக்கு உண்டு. குறிப்பாக அமெரிக்கா, எகிப்தின் ஹோஸ்னி முபாரக்கை கைவிட்ட பிறகு சயீத்துக்கு இந்தப் பார்வை அதிகரித்தது. ஒரு வேளை அமீரகத்தில் அத்தகைய நிகழ்வுகள் நடந்தால் அமெரிக்க தன்னையும் கைவிட்டு விடுமோ என்ற அச்சம் அவருக்கு உண்டு.

அமெரிக்க அதிபர் ஒபாமா ஆட்சியில் இருந்த போதே ஷேக் முகமது இத்தகைய கிளர்ச்சிகளை அமெரிக்கா ஆதரிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்படி இந்த கிளர்ச்சிகள் மத்திய கிழக்கில் பரவினால் அரபு நாடுகளை ஆளக்கூடிய மன்னர் பரம்பரைக்கு ஆபத்து ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டதாக ஒபாமா தனது நினைவுக் குறிப்பு நூலில் தெரிவித்துள்ளார். மேலும் முகமது பின் சயீத்தை ஒரு அறிவார்ந்த தலைவர் என்றும் ஒபாமா குறிப்பிடுகிறார்.

அமெரிக்க அதிபர் பிடன் நிர்வாகத்தில் பணியாற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் பேசும் போது சமீபத்திய மாதங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் நிறைய உறவுகளைக் கொண்டிருந்ததாக குறிப்பிட்டார். ஷேக் முகமது பின் சயீத்தை நீண்ட கால நோக்கில் வரலாற்றுக் கண்ணோட்டம் கொண்டவர் என்றும் குறிப்பிடுகிறார்.

"அவர் நிகழ்காலத்தைப் பற்றி மட்டும் பேசுவார், ஆனால் சில சந்தர்ப்பங்களில் பல பத்தாண்டுகள் பின்னோக்கி சென்றும் விவாதிப்பார். அதே போல எதிர்காலப் போக்குகளைப் பற்றியும் பேசுவார்" என்று அந்த அதிகாரி கூறினார்.

2013 ஆம் ஆண்டு எகிப்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லீம் சகோதரத்துவக் கட்சியின் தலைவர் மொஹமட் மோர்சியை இராணுவம் அகற்றியதை அமீரகத்தின் முகம்மது பின் சயீத் ஆதரித்தார்.மேலும் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் 2017 அரண்மனை சதியில் ஆட்சிக்கு வந்ததும், அவரை அமெரிக்காவை சமாளிக்கக்கூடிய ஒரு மனிதர் என்றும் சவுதியை வெற்றிகரமாக ஆளக்கூடியவர் என்றும் சயீத் கூறியிருக்கிறார்.

அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உடனான நெருக்கமான உறவை சவுதி இளவரசரும், அமீரகத்தின் சயீத்தும் வைத்துக் கொண்டனர். மேலும் இருவரும் ஈரான் மீது வாஷிங்டனின் அதிகபட்ச அழுத்தத்தை கொடுக்க வேண்டுமென்றும் வற்புறுத்தினர், முஸ்லீம் சகோதரத்துவக் கட்சியை ஆதரித்தற்காக அண்டை நாடான கத்தாரைப் புறக்கணித்தனர். மற்றும் யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஈரானுடன் இணைந்து நடத்தி வரும் கிளர்ச்சிக்கு எதிராக ஒரு போரையும் துவங்கினர்.

ஐக்கிய அரபு அமீரகம், சோமாலியாவிலிருந்து லிபியா மற்றும் சூடான் வரையிலான மோதல்களில் தலையிட்டது. பல பத்தாண்டுகளாக அரபு நாடுகள் ஒருமித்த கருத்தை மேம்படுத்துவதற்கு முன்பு சவுதியும், அமீரகமும் 2020 இல் இஸ்ரேலுடன் இணைந்து ஒப்பந்தம் போட்டனர். இதை பஹ்ரைன் நாடும் இணைந்து ஆதரித்தது. பாலஸ்தீனிய கோபத்தை ஈர்த்த இந்த ஒப்பந்தம் ஆபிரகாம் ஒப்பந்தங்கள் என்று அழைக்கப்படுகிறது. இதற்கான ராஜாங்க வேலைகளில் அமெரிக்கா ஈடுபட்டது.

இந்த ஒப்பந்தங்கள் ஈரான் மீதான எதிர்ப்பால் உந்தப்பட்டவை. கூடவே ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத்திற்கான நன்மைகள் அதில் இடம் பெற்றிருந்தது. இஸ்ரேலுடனான இந்த ஒப்பந்தத்தால் பாலஸ்தீனம் கவலையடையும் என்பதை அமீரகமும், சவுதியும் அக்கறை கொள்ளவில்லை.

தந்திரமான சிந்தனையாளர் முகம்மது பின் சயீத்

சவுதி மற்றும் அமெரிக்காவுடனான கூட்டணியை அமீரகம் பேணினாலும் தனது பொருளாதார நலன்கள் என்று வரும் போது அது சுதந்திரமாகச் செயல்படுவதற்கும் தயங்குவது இல்லை.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைக் கண்டித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் வாக்கெடுப்பில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் வெளிநடப்பு செய்தது. மேலும் ஓபெக் எனப்படும் பெட்ரோல் ஏற்றுமதி கவுன்சிலின் உறுப்பினர்களாக அமீரகமும், சவுதியும் இருக்கின்றன. ரஷ்யாவைக் கண்டிக்கும் ஐரோப்பிய நாடுகள் தமது எரிபொருள் தேவைக்காக ரஷ்யாவை சார்ந்திருக்கின்றன. இந்த நிலையை மாற்ற சவுதியும், அமீரகமும் எண்ணைய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் அழைப்பை இருநாடுகளும் நிராகரித்தன.

அதுமட்டமல்ல லிபியாவின் அரசை சர்வதேச நாடுகள் அமெரிக்கா உள்ளிட்டு அங்கீரித்த நிலையில் லிபிய அரசை எதிர்க்கும் கலீஃபா ஹப்தாருக்கு ஆயுத உதவியையும், நிதி உதவியையும் அமீரகம் செய்து வருகிறது. அதே போன்று அமெரிக்கா எதிர்க்கும் சிரியாவின் அதிபர் பஷர் அல் அசாத்தையும் அது ஆதரிக்கிறது. சமீபத்தில் கூட அசாத் அமீரகத்தின் தலைநகரம் அபுதாபிக்கு வந்து சென்றது குறிப்பிடத்தக்கது. இப்படியான சர்வதேச உறவுகளில் அமெரிக்காவிற்கு எதிராக அமீரகம் செயல்பட்டு வருகிறது.

ஏமன் போரில் அமீரகம் 100 க்கும் மேற்பட்ட வீரர்களை இழந்தது. எனவே இந்தப் போரில் இருந்து அமீகரம் விலகியது சவுதியுடனான உறவில் ஒரு சிக்கலை ஏற்படுத்தியது.

சூடானின் அதிபர் உமர் ஹசன் அல்-பஷீர், எகிப்தில் முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பு எனும் இஸ்லாமிய கூட்டாளிகளை கைவிடுவதாக அளித்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்கிய போது, அமீரகம் அவருக்கு எதிராக 2019 சதிப்புரட்சியை ஏற்பாடு செய்தது.

அமீரக அதிபர் முகம்மது பின் சயீத் தனது இளமை பருவத்தில் முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டதாக கூறினாலும், தற்போது மத்திய கிழக்கின் ஸ்திரத்தன்மைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாக முஸ்லிம் சகோதரத்துவத்தை கருதுகிறார்.

சயீத் இங்கிலாந்தில் படித்தவர்

முகம்மது பின் சயீத் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இங்கிலாந்தில் உள்ள சாண்ட்டுஹர்ஸ்டில் உள்ள இராணுவ அதிகாரிகள் கல்லூரியில் படித்தவர். அவருக்கு முஸ்லீம் சகோதரத்துவக் குழுவின் மீதான அவநம்பிக்கை 2001 க்குப் பிறகு அதிகரித்தது. செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவில் இரட்டைக் கோபுர தாக்குதல்களில் ஈடுபட்ட 19 கடத்தல்காரர்களில் அமீரகத்தைச் சேர்ந்த இருவர் அடக்கம்.

"அவர் அரபுரக நாடுகளின் நாடித்துடிப்பை துல்லியமாக அறிந்தார். இப்பகுதியில் உள்ள இளைய தலைமுறையினர் பலர் ஒசாமா பின்லேடனின் மேற்கத்திய எதிர்ப்பு மந்திரத்தால் மிகவும் ஈர்க்கப்பட்டதைக் கண்டார்" என்று மற்றொரு தூதர் கூறினார்.

கோவிட் பொது முடக்கம் அமீரகத்தின் பொருளாதார வளர்ச்சியை பாதித்தது. அதனால் பல ஆண்டுகள் பகை இருந்தாலும் ஈரான் மற்றும் துருக்கியுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். சவுதி அரேபியாவுடனான பொருளாதார போட்டி இருந்ததால் அமீரகம் மேலும் பொருளாதார தாராளமயமாக்கத்தை நோக்கிச் சென்றது. அதற்காக அரசியல் கருத்து வேறுபாடுகளை கடந்து போனது.

உள்நாட்டில் நவீனத்தை பின்பற்றுபவராகவும், மேற்குல நாடுகளைப் பொறுத்த வரை இவர் சிறந்த இராஜங்க நிபணரவும் அவர் கருதப்படுகிறார. எண்ணெய் வளமான நாடாக இருந்தாலும் அமீரகத்தை பிற எரிபொருள், அடிக்கட்டுமான வசதிகள் மற்றும் தொழில் நுட்ப நாடாக மாற்ற சயீத் முயற்சிக்கிறார்.

அமீரக ஆயுதப்படைகளின் துணை தலைமைத் தளபதியாக இருந்த அவர் ஐக்கிய அரபு அமீரக இராணுவத்தை அரபு உலகில் மிகவும் நவீனமான இராணுவமாக மாற்றிய பெருமைக்குரியவர். இராணுவத்தை அமீரகத்தின் தேசியவாதத்தை வளர்க்கும் பொருட்டு மாற்றியமைத்திருக்கிறார் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதுநாள் வரை இருந்த அமீரகம் வேறு இப்போது அது சென்று கொண்டிருக்கும் பாதை வேறு என்பதையே முகம்மது பின் சயீத்தின் அணுகுமுறைகள் காட்டுகின்றன.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?