சல்மான் ருஷ்டி டிவிட்டர்
உலகம்

சல்மான் ருஷ்டி: யார் இவர்? தாக்குதலுக்கு காரணம் என்ன? - விரிவான தகவல்கள்

இதுநாள் வரை அவருடைய பணிகளிலேயே மிகவும் சர்ச்சைக்குரிய மற்றும் மிகக் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட நாவல் என்றால் அது தி சாத்தானிக் வெர்சஸ்தான் (The Satanic Verses)

NewsSense Editorial Team

யார் இந்த சல்மான் ருஷ்டி?

இவருக்கு எதிராக இரான் நாடே ஃபத்வா விதித்த கதை தெரியுமா? உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, நேற்று (2022 ஆகஸ்ட் 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை) அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த இலக்கிய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, ஓர் உரை நிகழ்த்தவிருந்த போது ஒருவரால் தாக்கப்பட்டார்.

75 வயதான சல்மான் ருஷ்டிக்கு கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் கூர்மையான ஆயுதம்கொண்டு தாக்கியதில் பலத்த காயம் இருப்பதாகவும், அவரது கணையம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், ஒரு கண் பார்வையை இழக்க வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

அவரைக் குத்தியவர் ஹதி மடர் (Hadi Matar) என பல்வேறு செய்தி முகமைகள் குறிப்பிட்டுள்ளன.

யார் இவர்?

சல்மான் ருஷ்டிக்கு பெரிய அறிமுகம் தேவையில்லை. பிரிட்டனின் ஆகச் சிறந்த மற்றும் வெற்றிகரமான நாவல் எழுத்தாளர்களில் ஒருவராக இருக்கும் இவர் கடந்த ஐந்து தசாப்த காலமாக எழுத்து பணியாற்றி வருகிறார்.

1981 ஆம் ஆண்டு மிட்நைட்ஸ் சில்ட்ரன் (Midnight's Children) என்கிற தன் இரண்டாவது நாவலுக்காக எழுத்தாளர்களுக்கான உயரிய அங்கீகாரங்களில் ஒன்றான புக்கர் பரிசை வென்றார். இவருடைய தி சாத்தானிக் வெர்சஸ் (The Satanic Verses) என்கிற நான்காவது நாவல் 1988 ஆம் ஆண்டு வெளியானது.

சர்ச்சைகளின் துவக்கம்

இதுநாள் வரை அவருடைய பணிகளிலேயே மிகவும் சர்ச்சைக்குரிய மற்றும் மிகக் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட நாவல் என்றால் அது தி சாத்தானிக் வெர்சஸ்தான். இந்த நாவல் பிரிட்டன் நாட்டை தாண்டி சர்வதேச அளவில், மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த நாவலில் இஸ்லாமிய மதத்தின் இறை தூதர் முகமது நபிகளை அவமதிக்கும் வகையில் சித்தரித்து இருப்பதாக உலகம் முழுக்க உள்ள பல்வேறு இஸ்லாமியர்களும் இஸ்லாமிய அமைப்புகளும் அப்புத்தகத்துக்கு எதிராக தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.

அவரை கொலை செய்ய பரிசுத் தொகை எல்லாம் அறிவிக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாக அவர் தலைமறைவாகவும் பிரிட்டன் அரசின் காவல்துறையின் பாதுகாப்பின் கீழ் வாழ்ந்து வந்தார். இரான் நாடு, பிரிட்டன் உடனான தன் உறவை முறித்துக் கொண்டது. 1989 ஆம் ஆண்டு இரானின் அதி உயர் தலைவர் ஆயத்துல்லா காமினேனி, சல்மான் ருஷ்டிக்கு எதிராக ஃபத்வா வெளியிட்டார்.

பிறந்தது, படித்தது, வளர்ந்தது:


இந்தியா பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் வாங்க ஒரு சில மாதங்களுக்கு முன் இன்றைய மும்பையில், அன்றைய பம்பாயில் பிறந்தார் சல்மான் ருஷ்டி.

அவரது 14வது வயதில் கல்விக்காக இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டார். உலகப் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கிங்ஸ் கல்லூரியில் வரலாற்றுப் பிரிவில் ஹானர்ஸ் பட்டம் பெற்றார்.

ஒரு கட்டத்தில் பிரிட்டன் குடிமகனாக மாறியவர், மெல்ல இஸ்லாமிய நம்பிக்கைகளையும் கைவிடத் தொடங்கினார். நாவல்களை எழுதி கொண்டிருக்கும்போதே மற்றொரு பக்கம் ஒரு நடிகராகவும் விளம்பர எழுத்தாளராகவும் பணியாற்றினார்.

அவருடைய முதல் புத்தகமான கிரிமஸ் (grimus) பெரிய வரவேற்பைப் பெறவில்லை. ஆனால் சில விமர்சகர்கள் சல்மான் ருஷ்டியை ஒரு திறமையான நபராக அப்போதே அடையாளம் கண்டனர்.

புக்கர் பரிசு

கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் எடுத்துக்கொண்டு மிட்நைட்ஸ் சில்ட்ரன் என்கிற தன்னுடைய இரண்டாவது புத்தகத்தை வெளியிட்டு 1981 ஆம் ஆண்டு உலகப் புகழ்பெற்ற புக்கர் பரிசை வென்றார் சல்மான் ருஷ்டி.

அந்த காலகட்டத்திலேயே, அப்புத்தகம் சுமார் 5 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்றுத் தீர்ந்தன.
தன்னுடைய மூன்றாவது புத்தகமாக ஷேம் (shame) என்கிற பெயரில் பாகிஸ்தான் குறித்து எழுதினார். தி ஜாகுவார் ஸ்மைல் (The Jaguar Smile) என்கிற பெயரில் தன்னுடைய நான்காவது புத்தகத்தை சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து எழுதினார்.

1988 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவரை உலகப் புகழின் உச்சிக்கும், பல மக்களின் உச்சபட்ச வெறுப்பை நோக்கியும் அழைத்துச் சென்ற தி சாத்தானிக் வெர்சஸ் என்கிற புத்தகத்தை வெளியிட்டார். அது உலகின் பல நாடுகளில் வாழ்ந்து வந்த இஸ்லாமியர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்பை அதிருப்தியில் ஆழ்த்தியது.

தி சாத்தானிக் வெர்சஸ் புத்தகத்தை தடை செய்த முதல் நாடு இந்தியா தான். இந்தியாவை தொடர்ந்து பாகிஸ்தான் உட்பட பல்வேறு இஸ்லாமிய நாடுகளும் தென்னாப்பிரிக்காவும் அப்புத்தகத்திற்கு தடை விதித்தன. ஒரு கட்டத்தில் புத்தகத்தை எதிர்த்து பல்வேறு இஸ்லாமிய மக்கள் சாலைகளில் இறங்கி போராடத் தொடங்கினர்.

அந்தப் புத்தகத்தில், இரு பாலுறவு தொழிலாளிகளுக்கு இறைதூதர் முஹம்மது அவர்களின் மனைவிகளின் பெயரை சூட்டியது இஸ்லாத்தையும் இறைதூதர் முகம்மது நபிகளையும் கொச்சைப்படுத்துவதாக பல்வேறு இஸ்லாமியர்கள் கருதிக் கொந்தளித்தனர்.

நாளடைவில் சல்மான் ருஷ்டியின் சாத்தானிக் வெர்சஸ் புத்தகத்திற்கான எதிர்ப்பு அரசியல் எதிர்ப்பாக உருவெடுக்க தொடங்கியது. மும்பை நகரத்திலேயே ஏற்பட்ட கலவரத்தில் 12 மக்கள் கொல்லப்பட்டனர்.

டெஹ்ரானில் இருக்கும் பிரிட்டன் தூதரகத்தின் மீது போராட்டக்காரர்கள் கற்களை எறிந்து தாக்கினர். ஒரு நாட்டின் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்துவது அந்நாட்டின் மீது போர் தொடுப்பதற்கு சமம் என்பதது இங்கு குறிப்பிடத்தக்கது. சல்மான் ருஷ்டியின் தலைக்கு 3 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசெல்லாம் அறிவிக்கப்பட்டது.

அமெரிக்கா, பிரான்ஸ்... போன்ற மேற்கத்திய நாடுகள் சல்மான் ருஷ்டிக்கு எதிரான மரண அச்சுறுத்தல்களைக் கடுமையாகக் கண்டித்தன.

இந்த காலகட்டத்தில் தான் சல்மான் ருஷ்டி பிரிட்டன் காவல்துறையின் பாதுகாப்பின் கீழ் தலைமறைவாக வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் உலக இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தியதற்கு மன்னிப்பு கோரினார். இருப்பினும் சல்மான் ருஷ்டி மீதான கோபம் தணியவில்லை.

கொந்தளிப்போடு இருந்த மக்கள் கையில் சல்மான் ருஷ்டி சிக்கவில்லை. ஆனால் அவரது தி சாத்தானிக்கு வெர்சஸ் புத்தகத்தை ஜப்பானிய மொழியில் மொழி பெயர்த்த ஹிடோஷி இகராஷி (hitoshi igarashi) 1991 ஆம் ஆண்டு ஜூலை மாதம் டோக்கியோவின் வடகிழக்குப் பகுதியில் கொல்லப்பட்டார். மொழிபெயர்ப்பாளர் ஹிடோஷி இகராஷியைக் கொன்றது யார் என இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை.


அதேபோல தி சாத்தானிக் வெர்சஸ் புத்தகத்தை நார்வே மொழியில் மொழி பெயர்த்த வில்லியம் நைட்காட் (William Nygaard) 1993 ஆம் ஆண்டு ஆஸ்லோ நகரத்தில் அவரது வீட்டின் வெளியே வைத்து சுடப்பட்டார். மயிரிழையில் உயர்த்தினார்.

அதேபோல தி சாத்தானிக் வெர்சஸ் புத்தகத்தை இத்தாலிய மொழியில் மொழி பெயர்த்த Ettore caprioloவை, மிலன் நகரத்தில் அவருடைய அடுக்குமாடி குடியிருப்பிலேயே வைத்து கத்தியால் குத்தப்பட்டார். அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.

இப்படி கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலத்துக்கு சல்மான் ருஷ்டி, மரண அச்சுறுத்தல்களுக்கு இடையில், தலைமறைவாகவே வாழ்ந்து வந்தார். 1998 ஆம் ஆண்டு இரான் அரசு இவருக்கு விதித்திருந்த மரண தண்டனையை பின் வலித்துக் கொண்டது. அதன் பிறகு தான் இவரால் சகஜமாக பொதுவெளியில் நடமாட முடிந்தது.

கடந்த 20 ஆண்டுகளில Shalimar the clown, the enchantress of Florence, 2 years 8 months and 28 nights... என பல புத்தகங்களை எழுதினார்.

சல்மான் ருஷ்டி இதுவரை நான்கு பெண்களைத் திருமணம் செய்து விவாகரத்து செய்துள்ளார். இவருக்கு இரண்டு குழந்தைகள். தற்போது சல்மான் ருஷ்டி அமெரிக்காவில் வசித்து வருகிறார். கடந்த 2007 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கு இவருடைய

பங்களிப்பிற்காக நைட் பேச்சுலர் விருது வழங்கி கௌரவித்தது பிரிட்டன் அரசு. 2012 ஆம் ஆண்டு சாத்தானிக் வெர்சஸ் புத்தகம் எழுதிய பின் ஏற்பட்ட விளைவுகள் மற்றும் தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை எல்லாம் தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட்டார்.

அப்பேர்பட்ட நபர் தான், நேற்று ஒரு மனிதரால் தாக்கப்பட்டு, தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். சல்மான் விரைவில் நலம் பெற வாழ்த்துகள்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?