கச்சா எண்ணெய் Twitter
உலகம்

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா : கோடி கணக்கில் மிச்சப்படுத்தும் அரசு?

Gautham

கடந்த 2022 பிப்ரவரி மாதம் ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்தது. அப்போர் இப்போது வரை உலக பொருளாதாரத்திலும், பல நாடுகளின் எரிசக்தி & மின்சாரம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளில் பாரதூர விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. உலக அரங்கில் கச்சா எண்ணெய் விலையையும் ரஷ்யா உக்ரைன் போர் கடுமையாகப் பாதித்துள்ளது.

பல மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் கடுமையான நிலைப்பாட்டை எதிர்த்து, அதன் மீது வர்த்தக ரீதியில் பல தடைகளை விதித்துள்ளன. ஆனால் இந்தியா தொடர்ந்து ரஷ்யாவோடு ஓர் இணக்கமான போக்கையே கடைப்பிடித்து, வர்த்தக உறவுகளைத் தொடர்ந்து வருகிறது. இந்தியா, தொடர்ந்து தன் கச்சா எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து வாங்குவதால் இதுவரை சுமார் 35,000 கோடி ரூபாயை மிச்சப்படுத்தி இருக்கலாம் என டைம்ஸ் ஆஃப் இந்தியா தளத்தில் வெளியான செய்தி ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் நுகர்வோர் பணவீக்கம் மற்றும் மொத்த விலைப் பணவீக்கம் என இரண்டுமே கணிசமாக அதிகரித்துள்ளன. அதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்குவதும் ஒரு திட்டமென மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொது நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டார். இந்தியா மட்டுமின்றி, மற்ற பல உலக நாடுகளும் தங்கள் நாட்டில் நிலவும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இதே போன்ற பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

2020ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று உச்சத்திலிருந்த போது, கச்சா எண்ணெய் விலை தரை தட்டியது நினைவிருக்கலாம். அப்போது கூட இந்தியா தன்னுடைய கச்சா எண்ணெய்க் கிடங்குகளைப் பேரம் பேசி நிரப்பிக் கொண்டதும் இங்கு நினைவுகூரத்தக்கது. இப்படி கச்சா எண்ணெயை சேமித்து வைத்ததன் மூலம், பிற்காலத்தில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்த பிறகு சுமார் 25,000 கோடி ரூபாய் வரை மத்திய அரசு மிச்சப்படுத்தியதாகச் செய்திகள் வெளியாயின.

ஒரு பக்கம் உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது, மறுபக்கம் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெயை வாங்கக் கூடாது என வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை வாங்கிக் கொண்டிருக்கிறது.

எவ்வளவு வாங்குகிறது..?

இன்றைய தேதிக்கு இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய கச்சா எண்ணெய் விநியோகஸ்தர் ரஷ்யா என்கிறது ராய்டர்ஸ் செய்தி முகமை. ஜூலை 2022ல் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சப்ளையராகவும் ரஷ்யா இருந்தது கவனிக்கத்தக்கது. அதே போல ரஷ்யாவின் இரண்டாவது மிகப்பெரிய வாடிக்கையாளர் இந்தியாதான்.

இந்தியாவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 12 சதவீத எண்ணெய் ரஷ்யாவிலிருந்து வருகிறது. உக்ரைன் ரஷ்யா போருக்கு முன் இது வெறும் 1% அல்லது அதற்கும் குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

2022 ஏப்ரல் - ஜூலை மாத காளத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு வெறும் 1.3 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து, தற்போது 11.2 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. இதில் 7 பில்லியன் அமெரிக்க டாலருக்கான வர்த்தகம் ஜூன் & ஜூலை மாதங்களில் மட்டும் நடந்துள்ளது இங்குக் குறிப்பிடத்தக்கது.

ஏன் தொடர்ந்து ரஷ்யாவிடம் வாங்குகிறது இந்தியா?

இந்தியா தன்னுடைய ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் தேவைகளில் சுமார் 83 சதவீதத்தை இறக்குமதி செய்து கொள்கிறது. கடந்த 2021 - 22 காலத்தில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி 119 பில்லியன் டாலராக அதிகரித்தது, இந்தியப் பொருளாதாரத்தையே அசைத்துப் பார்த்தது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு, பணவீக்கப் பிரச்னைகளை சரிக்கட்டுவது, ஓரளவுக்காவது பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவது, கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்குப் பிறகு பொருளாதாரத்தில் புதிய பாய்ச்சலைக் கொண்டு வருவது, இந்திய அரசாங்கத்தின் செலவீனங்களைக் குறைக்க வேண்டிய கட்டாயம், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை... என பல்வேறு காரணங்களுக்காக இந்திய அரசு விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஆகையால் தான் பல மேற்கத்திய நாடுகளின் வலியுறுத்தல்களைக் கூட பொருட்படுத்தாமல் ரஷ்யா உடனான வர்த்தக உறவைத் தொடர்கிறது இந்தியா.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?