கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் இலங்கையைக் கட்டுப்படுத்த பல நாடுகளுக்கு வாய்ப்பு இருக்கிறது. இலங்கையில் சீனாவும், இந்தியாவும் அதிக முதலீட்டைக் கொண்டிருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை இலங்கை மிக நெருக்கமாக உள்ள அண்டை நாடாகும். பண்பாட்டு ரீதியாகவும் இந்தியாவோடு இலங்கை நெருக்கமாக இருக்கிறது.
இந்நிலையில் இலங்கைக்குச் செல்லும் சீன "உளவுக் கப்பலின்" நடமாட்டத்தை இந்தியா உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இந்தக் கப்பல் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நிறுத்தப்படும். நாடு கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் நேரத்தில் இலங்கை துறைமுகத்திற்கு இந்தக் கப்பல் வருவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்தியா ஏற்கனவே கப்பலின் வருகைக்கு எதிராக இலங்கையிடம் வாய்மொழி எதிர்ப்பை தெரிவித்ததாக அறியப்படுகிறது.
சீன ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக் கப்பலான இதன் பெயர் யுவான் வாங் 5. இந்தக் கப்பல் நிற்கப்போகும் துறைமுகமான ஹம்பாந்தோட்டை சீனாவிடமிருந்து கடனை வாங்கி இலங்கை உருவாக்கிய ஆழ்கடல் துறைமுகமாகும். இந்தத் துறைமுகத்தின் இருப்பிடத்தைப் பொருத்தவரை புவியியல் அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்தக் கப்பலின் பணி என்ன? இது எதற்குப் பயன்படுகிறது? யுவான் வாங் வகை கப்பல்கள் செயற்கைக்கோள், ராக்கெட் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM) ஏவுதல்களைக் கண்காணிக்கப் பயன்படும் கப்பல்களாகும். பசிபிக், அட்லாண்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்கள் முழுவதும் இந்த வகைக் கப்பலின் கண்காணிக்கும் திறனில் வருகிறது. சீனாவிடம் இந்த வகைக் கப்பல்கள் ஏழு உள்ளன. இந்தக் கப்பலின் கண்காணிப்பு தகவல்கள் அனைத்தும் சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கின் நிலம் சார்ந்த கண்காணிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன.
அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அறிக்கையின்படி, இந்த விண்வெளி கண்காணிப்பு கப்பல்கள் மக்கள் விடுதலைப் படை (பிஎல்ஏ) என்றழைக்கப்படும் சீன இராணுவத்தின் மூலோபாய ஆதரவுப் படையான எஸ்எஸ்எஃப் மூலம் இயக்கப்படுகின்றன. இது பிஎல்ஏவின் மூலோபாய நோக்கங்களுக்காக சைபர் துறை, மின்னணு, தகவல், தகவல் தொடர்பு, மற்றும் உளவியல் போர் பணிகள் மற்றும் இதர போர் திறன்கள் ஆகியவற்றை மையப்படுத்துவதற்காக நிறுவப்பட்ட கட்டளை அமைப்பாகும்.
யுவான் வாங் 5 சீனாவின் ஜியாங்னான் கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டு செப்டம்பர் 2007 இல் சேவையில் சேர்ந்தது. 222மீட்டர் நீளமும் 25.2 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கப்பலில் கடல்கடந்த வான்வெளி கண்காணிப்புக்கான அதிநவீன கண்காணிப்பு தொழில்நுட்பக் கருவிகள் உள்ளன. சமீபத்தில் சீனாவின் லாங் மார்ச் 5 பி ராக்கெட் ஏவப்பட்டது. அதுதான் யுவான் வாங் 5 கப்பல் கடைசியாகச் செய்த கண்காணிப்பு பணி.
இலங்கையின் பெல்ட் அண்ட் ரோட் இனிஷியேட்டிவ் (BRISL) இணையதளத்தின்படி, யுவான் வாங் 5 ஆகஸ்ட் 11 ஆம் தேதி அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழையும். பிறகு எரிபொருள் உணவு, குடிநீர் போன்ற மற்ற சேவைப் பொருட்கள் கப்பலில் நிரப்பப்பட்ட பின்னர் ஒரு வாரம் கழித்து ஆகஸ்ட் 17 ஆம் தேதி புறப்படும்.
யுவான் வாங் 5 கப்பலானது ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் வடமேற்கு பகுதியில் சீனாவின் செயற்கைக்கோள்களின் கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி குறித்த கண்காணிப்பை நடத்தும் என்று BRISL தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் அந்த இணையதளம் யுவான் வாங் 5 ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு விஜயம் செய்வது இலங்கை மற்றும் பிராந்தியத்தில் உள்ள வளரும் நாடுகளுக்கு அவர்களின் சொந்த விண்வெளி திட்டங்களை கற்றுக் கொள்வதற்கும் மேம்படுத்துவதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
ஆனால் ரொட்டிக்கும், எரிபொருளுக்கும் அல்லாடும் இலங்கை, விண்வெளி திட்டங்களை கற்றுக் கொள்ளும் என்பது சாத்தியமா?
யுவான் வாங் 5 என்பது ஒரு சக்தி வாய்ந்த கண்காணிப்பு கப்பலாகும். அதன் குறிப்பிடத்தக்க வான்வழி கண்காணிப்பில் சுமார் 750 கிமீ - அதாவது கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பல துறைமுகங்கள் சீனாவின் ரேடாரில் இருக்கக் கூடும். தென்னிந்தியாவில் உள்ள பல முக்கிய இராணுவ மற்றும் தொழில்துறை நிறுவனங்கள் உளவு பார்க்கப்படும் அபாயத்தில் இருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.
கடந்த வாரம் இந்த கப்பல் பிரச்சினை குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியதாவது: “இந்தக் கப்பல் ஆகஸ்ட் மாதம் ஹம்பாந்தோட்டைக்கு விஜயம் செய்ய இருப்பதாக வரும் செய்திகளை நாங்கள் அறிவோம். இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களைப் பாதிக்கும் எந்தவொரு செயலையும் அரசாங்கம் கவனமாகக் கண்காணிக்கிறது. அவற்றைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறது.”
பதிலுக்கு, சீனாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: "சீனாவின் கடல்சார் அறிவியல் ஆராய்ச்சி நடவடிக்கைகளைச் சம்பந்தப்பட்ட தரப்பினர் சரியாகப் பார்த்துப் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம். மற்றும் சாதாரண மற்றும் சட்டப்பூர்வமான கடல் நடவடிக்கைகளில் அவர்கள் (இந்தியா) தலையிடுவதைத் தவிர்ப்பார்கள் என்று சீனா நம்புகிறது."
இதிலிருந்து தெரிவது என்னவென்றால் சீனா நினைத்தால் தென்னிந்தியாவைக் கண்காணிக்க முடியும். அதைத் தடுக்க இந்தியா என்ன செய்யப் போகிறது என்பதுதான் தெரியவில்லை. இருநாடுகளும் சட்ட மொழியில் பேசிக் கொண்டாலும் உண்மை இதுதான்.
இரண்டாவது பெரிய இலங்கை துறைமுகமான ஹம்பாந்தோட்டை தென்கிழக்கு ஆசியாவை ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவுடன் இணைக்கும் பாதையில் அமைந்துள்ளது. சீனாவைப் பொறுத்த வரை, அதன் பெல்ட் அண்ட் ரோடு (கடல் வழி பட்டு வழிச்சாலை) முன்முயற்சியில் இது ஒரு முக்கியமான துறைமுகமாகும். அதன் அபிவிருத்திக்கு பெரும்பாலும் சீனா நிதியுதவியைக் கடனாக அளித்துள்ளது. மேலும் 2017 இல், வளர்ந்து வரும் கடனை இலங்கை திருப்பிச் செலுத்தத் தவறியதால், இலங்கை அரசு தனது பெரும்பான்மையான பங்குகளைச் சீன நிறுவனத்திடம் ஒப்படைத்து விட்டது.
இந்தத் துறைமுகத்தின் மீதான சீனக் கட்டுப்பாடு, சீன மக்கள் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த கடற்படையின் மையமாக மாறுவதன் மூலம் இந்தியப் பெருங்கடலில் தங்கள் நலன்களுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று இந்தியாவும் அமெரிக்காவும் பலமுறை கவலை தெரிவித்துள்ளன.
இந்தியாவிலுள்ள பாதுகாப்பு வல்லுநர்கள் இந்த துறைமுகத்தின் பொருளாதார நம்பகத்தன்மையை அடிக்கடி கேள்வி எழுப்பியுள்ளனர். அதாவது வணிக ரீதியாக இது லாபகரமாக நடப்பதை விட இராணுவ ரீதியாகப் பயன்படும் வாய்ப்பு அதிகம்.
அதே சமயம் சீனா தனது நிலம் மற்றும் கடல்வழி தடங்களை அதிகரிப்பதன் மூலம் இந்தியப் பெருங்கடலில் இந்தியாவைச் சுற்றி வளைக்கும் வேலையை செய்து வருகிறது. இது சீனாவின் 'முத்து சரம்' மூலோபாயத் திட்டத்திற்குச் சரியாகப் பொருந்துகிறது என்று சுட்டிக் காட்டுகின்றனர்.
முத்துக்களின் சரம் என்பது 2004 ஆம் ஆண்டில் அமெரிக்க அரசியல் ஆராய்ச்சியாளர்களால் முன்மொழியப்பட்ட புவிசார் அரசியல் கருதுகோள் ஆகும். இந்த வார்த்தையானது சீன இராணுவ மற்றும் வணிக வசதிகள் மற்றும் அதன் கடல்வழித் தொடர்புகளின் வலையமைப்பைக் குறிக்கிறது. இது சீன நிலப்பரப்பிலிருந்து ஆப்பிரிக்காவில் உள்ள சூடான் துறைமுகம் வரை நீண்டுள்ளது. மாண்டேப் ஜலசந்தி, மலாக்கா ஜலசந்தி, ஹார்முஸ் ஜலசந்தி, மற்றும் லோம்போக் ஜலசந்தி மற்றும் பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், மாலத்தீவுகள், சோமாலியா போன்ற மூலோபாய கடல்சார் மையங்கள் வழியாகச் சீனாவின் முத்துச் சரம் கடல் வழிப்பாதை நீள்கிறது.
இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகம் இந்தியாவுக்கு அருகாமையில் இருப்பது, சீன கடற்படை நீண்ட காலமாக இந்தியாவை இலக்காகக் கொண்ட கடல்சார் வளையக் கண்காணிப்பை அனுமதிக்கும் திறனைக் கொண்டுள்ளது.
வடக்கில் இந்தியச் சீன எல்லைத் தகராறு இருக்கும் போது தெற்கே கடலில் சீனா தனக்கென ஒரு துறைமுகத்தையே கொண்டுள்ளது. இதை எதிர்த்து இந்தியாவும், அமெரிக்காவும் என்ன செய்யப் போகின்றன என்பது கேள்வி. இப்படி வல்லரசுகளுக்கு இடையில் மாட்டிக் கொண்ட இலங்கை மக்கள் பொருளாதார நெருக்கடியில் மட்டுமல்ல அரசியல் நெருக்கடியிலும் சிக்கியுள்ளார்கள்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust