புலம்பெயர் தொழிலாளர்களால் நிறைந்த நாடு இது. இங்கு வருமான வரி கிடையாது. இந்த நாட்டின் ஒட்டு மொத்த மக்களில் சுமார் 80% பேர் தலைநகரத்தில் மட்டுமே வாழும் வித்தியாசமான நாடு இது. அதன் பெயர் கத்தார்.
சுமார் 11,500சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட கத்தார் நாட்டில் சுமார் 30 லட்சம் பேர் வாழ்ந்து வருகிறார்கள். இதில் கிட்டத்தட்ட 80% பேர் வெளிநாட்டிலிருந்து கத்தாருக்கு வந்து வேலை செய்து பிழைப்பவர்கள்.
கத்தார் போன்ற ஒரு பணக்கார நாட்டில் வாழும் ஒட்டு மொத்த மக்களில் 27 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள் என்பது ஆச்சரியமான தரவு.
ஒரு காலத்தில் மிகச்சிறிய சாதாரண நாடாக இருந்த கத்தார் இன்று உலக அளவில் செல்வச் செழிப்பான நாடுகளில் ஒன்றாகவும், பூகோள ரீதியிலும், ராஜரீக ரீதியிலான அரசியலிலும் முக்கிய பங்காற்றும் நாடாக வளர்ந்துள்ளது. கத்தார் நாட்டின் அல் உதெய்ட் விமான தளத்தில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் படைகளும் பயன்படுத்திக் கொள்கின்றன. அமெரிக்காவின் மத்திய ராணுவ தலைமையகமாகவும் இது செயல்பட்டு வருகிறது.
சவுதி அரேபியாவோடு மட்டுமே நிலவழியில் தன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது கத்தார். மற்ற மூன்று திசையிலும் நீர் சூழ்ந்துள்ளது.
லட்சக்கணக்கான மக்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்கிற போதிலும் இந்நாட்டில் இஸ்லாமியர்கள் தான் எண்ணிக்கை அடிப்படையில் அதிகம். அவர்களைத் தொடர்ந்து இந்துக்களின் எண்ணிக்கையும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையும் வருகின்றன.
மக்களை இன ரீதியாக பார்த்தால் அல்லது அவர்கள் வந்திருக்கும் நாட்டின் அடிப்படையில் பார்த்தால் ஒட்டுமொத்த மக்களில் 40 சதவீத மக்கள் அரேபியர்கள். அவர்களைத் தொடர்ந்து சுமார் 36 சதவீதம் பேர் தெற்காசியர்கள்.
நிலப்பரப்பு அடிப்படையில் மிகச் சிறிய நாடாகக் கருதப்படும் கத்தார், 2022ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் ஃபிபா கால்பந்து உலக கோப்பை போட்டியை நடத்தவிருக்கிறார்கள்.
இந்த நாட்டில் பொருளாதாரத்தின் உயிர்நாடி என்றால் அது கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தான். உலகிலேயே மிகப்பெரிய எல் என் ஜி எனப்படும் லிக்விஃபைட் நேச்சுரல் கேஸ் எரிவாயுவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர் கத்தார்தான் என்கிறது விக்கீபீடியா.
கத்தார் நாட்டில் பர்சேசிங் பவர் பாரிட்டி அடிப்படையில் ஒரு தனி நபரின் வருமானம் 1.30 லட்சம் அமெரிக்க டாலர். நாமினல் ஜிடிபி அடிப்படையில் ஒரு தனி நபரின் பங்களிப்பு 52,000 அமெரிக்க டாலர் என எக்ஸ்பேட்டிகா என்கிற வலைத் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கத்தார் நாட்டில் இப்போதும் முடியாட்சி முறை பின்பற்றப்பட்டு வருகிறது. பரம்பரை பரம்பரையாகத் தனி (Thani) வம்சத்தினர் அரசர்களாக இருந்து நாட்டை வழி நடத்தி வருகின்றனர். தற்போது தமீம் பின் ஹமத் அல் தானி என்பவர் கத்தாரின் அரசராக அந்நாட்டை நிர்வகித்து வருகிறார். அரசரே அந்நாட்டில் பிரதமர், கேபினட் அமைச்சர்கள், நீதித்துறை அதிகாரிகள் வரை நியமிக்க அதிகாரம் உண்டு.
கத்தார் நாட்டில் அரபிக் மொழிதான் அதிகாரப்பூர்வமான மொழியாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 100 நாடுகளைச் சேர்ந்த மக்கள் இந்த நாட்டில் வேலை செய்து வருவதால் அனைவருக்குமிடையில் அடிப்படைத் தொடர்புக்கு ஆங்கிலம் மிக முக்கிய பங்காற்றுகிறது.
அரபிக் மொழி தெரியாதவர்கள் அரபி மொழியில் பேச முயற்சிப்பதை அந்நாட்டு மக்கள் வெகுவாக ரசிக்கிறார்கள் பாராட்டுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கத்தார் நாட்டில் மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், சொகுசு ஹோட்டல்கள் என ஜொலித்தாலும் அன்றாட ஏழை எளிய மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் சிறப்பாகச் செய்யப்பட்டிருக்கிறது.
பொதுப் போக்குவரத்து வசதிகள், தரமான சாலைகள், வரி இல்லாத சம்பளம், வேலை கொடுக்கும் நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கு வழங்கும் காப்பீடு வசதிகள் அல்லது அங்கு வேலை பார்ப்பவர்களே காப்பீடு எடுத்துக் கொள்ளும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கும் காப்பீடு வசதிகள், மருத்துவ காப்பீடு வசதிகள் என அடுக்கிக் கொண்டே போகலாம்.
கத்தார் நாட்டின் ஒட்டு மொத்த நிலப்பரப்பில் சில சதவீத நிலம் மட்டுமே விவசாயம் செய்து, பயிர்களை விளைவிக்கக் கூடிய நிலங்களாக இருக்கின்றன.
எனவே கத்தார் நாடு தன்னுடைய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்து கொள்கிறது. இதில் கத்தார் நாட்டிற்கு உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
கத்தார் நாட்டில் வேலை செய்யும் அனைவரும் பணக்காரர்களாக இருப்பதில்லை. நிதித்துறை தொழில்நுட்பம், காப்பீடு, சட்டம், ஐ டி சார்ந்த சேவைகள் போன்ற துறைகளில் வேலை செய்பவர்கள் நல்ல சம்பளம் ஈட்டுகிறார்கள். கட்டுமான தொழில் சமையல் உதவியாளர்கள் போன்ற பணிகளுக்கு அத்தனை பெரிய சம்பளம் கிடைப்பதில்லை என சில வலைதளங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
வெளிநாடுகளிலிருந்து கத்தாருக்கு வேலைக்கு வருபவர்களில் பலரும் கட்டுமானத் தொழிலாளர்களே அதிகம். தற்போது ஃபிஃபா உலகக் கோப்பைக்கான பல்வேறு விளையாட்டு மைதானங்கள் மற்றும் அப்போட்டி தொடர்பான கட்டுமானங்கள் நடந்து வருவதால் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
என்னதான் கத்தார் நாடு செல்வச் செழிப்பில் மிதந்தாலும் இப்போதும் அங்குப் பழமைவாதம் பாரம்பரிய வாதத்தையும் பார்க்க முடியும். கத்தார் நாட்டில் அரச குடும்பத்தை எதிர்த்து பொதுவெளியில் பேசுவதே ஒரு குற்றச் செயலாகக் கருதப்படுகிறது. அதேபோல ஒரு பாலின ஈர்ப்பாளர்கள், ஓரினச்சேர்க்கை போன்றவற்றுக்கு அனுமதி கிடையாது. அந்நாட்டின் சட்ட திட்டங்களில் பலதும் ஷரியா சட்டங்களைப் பிரதிபலிப்பதாக இருக்கும்.
கத்தார் நாட்டில் பத்திரிகைகளுக்கு அத்தனை பெரிய சுதந்திரம் எல்லாம் கிடையாது. உலக அளவில் பத்திரிகை சுதந்திரத்துக்கான பட்டியலில் கத்தார் நாட்டிற்கு 2022ஆம் ஆண்டில் 119 வது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவுக்கு இப்பட்டியலில் அதே 2022ஆம் ஆண்டில் 150வது இடம் வழங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
நம்மூரில் பிரியாணி எந்த அளவுக்குப் பிரபலமோ அதே போல கத்தாரில் மச்போஸ் என்று அழைக்கப்படும் ஒருவகையான அரிசி, இறைச்சி, காய்கறிகள் கலந்த உணவு மிகப் பிரபலம். அதேபோல் ஷவர்மாக்களும் மிகப் பிரபலம். அதுபோக ஏகப்பட்ட இந்திய மற்றும் தெற்காசிய உணவகங்கள் இருக்கின்றன.
கத்தார் போன்ற நாடுகளில் மதுபான பிரியர்கள் அத்தனை நிம்மதியாக வாழ முடியாது என்பது மட்டும் கொஞ்சம் வருத்தமான செய்தி. கத்தார் ஸ்டார் ஹோட்டல்களில் மட்டுமே அரசிடம் உரிமம் பெற்று மதுபானங்களை விற்க முடியும். இஸ்லாமியர் அல்லாத புலம்பெயர் தொழிலாளர்களும் மதுபானங்களை வாங்க உரிமம் பெறலாம். எனவே அந்நாட்டில் மதுபானம் தவிர பல்வேறு பானங்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறது.
கத்தார் நாடு கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு மட்டுமே சார்ந்து இருக்காமல் மற்ற துறைகளையும் கருத்தில் கொண்டு தன்னை விரிவாக்கி வருகிறது. எனவே கத்தாரில் புதிதாகத் தொழில் தொடங்குவது சுய தொழில் செய்வது கணிசமாக அதிகரித்து வருவதாக பல்வேறு வலைத்தளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில்கூட கத்தார் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் 3.45 சதவீதமாக அதிகரித்தது. ஆனால் சமீபத்தில் அந்த எண்ணிக்கை 0.12 சதவீதமாக குறைந்துள்ளது.
கத்தார் நாட்டில் இப்போதும் கிஃபாலா (kifala) முறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது ஒருவர் வேலைக்கு வரும்போது அவருக்கு ஸ்பான்சர் செய்யும் நிறுவனம், அவர் கத்தார் நாட்டில் தங்குவதற்கான உரிமையை ரத்து செய்யவும், வேறு நிறுவனத்துக்கு தடுக்கவும், கத்தார் நாட்டிலிருந்து வெளியேறத் தடை உத்தரவு பிறப்பிக்கவும் முடியும். கத்தார் நாடு இதை மறுசீரமைக்க இருப்பதாகக் கூறியுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust