இந்தியாவின் பெரும் நிறுவனங்களான ரிலையன்ஸ், டாடா குழும வரிசையில் மூன்றாவது இடத்தில் இருப்பது அதானி குழுமம். குஜராத்தைச் சேர்ந்த அதானி 1988ஆம் ஆண்டில் விவசாய சரக்கு வர்த்தகத்தின் மூலம் தனது வணிகத்தைத் துவங்கினார். பின்னர் இது விரிவடைந்து எரிசக்தி, போக்குவரத்து என்று பயணித்து தற்போது அதானி என்டர்பிரைசஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி துறைமுகம், அதானி பவர், அதானி எரிவாயு, அதானி டிரான்ஸ்மிஷன் என அதானி குழுமம் குறுகிய காலத்திலேயே பிரம்மாண்டமான வளர்ச்சியை எடுத்துள்ளது. எங்கும் எதிலும் அதானி மயம்தான்.
அதானி குழுமம் கடந்த ஜூலை மாதத்தில் இஸ்ரேலில் உள்ள ஹைஃபா துறைமுகத்தை 1.2 பில்லியன் டாலர்களுக்கும், சுவிஸ் நிறுவனமான ஹோல்சிம்மின் இந்திய சிமெண்ட் தொழிற்சாலைகளை கடந்த மே மாதத்தில் 10.5 பில்லியன் டாலர்களுக்கும் வாங்கியிருக்கிறது. சமீபத்தில் மட்டும் மூன்று டஜன் சிறிய மற்றும் பெரிய நிறுவன கையகப்படுத்தல்களை அதானி நிறுவனம் செய்திருக்கிறது. இந்த கையகப்படுத்தலில் ஊடகங்கள், சுகாதாரப் பாதுகாப்பு முதல் டிஜிட்டல் சேவை வரை பல வணிகங்கள் இருக்கின்றன.
தற்போது அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தோடு போட்டிப் போடும் அளவுக்கு அதானி குழுமத்தின் வளர்ச்சி இருக்கிறது. இருப்பினும் அடிக்கடி அதானி குழுமம் செய்திகளிலும் அடிபடுகிறது. பிரணாய் ராயின் என்டிடிவி ஊடக நிறுவனப் பங்குகளை அதானியின் நிறுவனம் வாங்கி கட்டுப்படுத்துவதாகக் கடந்த செவ்வாய்க்கிழமை செய்தி வெளிவந்தது. ஒரு சுதந்திர ஊடகம் பறிபோவதோடு அம்பானியின் குழுமம் ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் பெரும் சக்தியாக இருப்பதற்குப் போட்டியாகவும் இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
அதையடுத்து அதானி குழுமம் மீண்டும் செய்திகளில் அடிபட ஆரம்பித்திருக்கிறது. இப்போது அது ஏதோ ஒரு நிறுவனத்தைக் கைப்பற்றப் போகிறது என்பதற்காகச் செய்திகளில் வரவில்லை. மாறாக அதானியின் சாம்ராஜ்ஜியம் உண்மையிலேயே வலுவானதா இல்லை அதன் கட்டமைப்பு நொறுங்கி விடுமா என்ற கேள்வியை கிரெடிட்சைட்ஸ் எனும் கடன் ஆராய்ச்சி நிறுவனம் எழுப்பியுள்ளது.
கோவிட் தொற்றுநோயின் போது அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் பொருளாதாரம் தேங்கினாலும் அதானி குழுமத்தின் நிறுவனங்கள் அசுர வளர்ச்சி அடைந்துள்ளன. இந்த வளர்ச்சி பலரையும் குழப்பமடையச் செய்தது. அந்தக் குழப்பத்திற்கான விடைதான் மேற்கண்ட கடன் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை.
அதானி குழுமத்தின் அதிதீவிர விரிவாக்கம் ஆபத்தானது. அளவில்லா கடன், அதிதீவிர வணிக விரிவாக்கம், அறிமுகமில்லாத துறைகள் பலவற்றில் இறங்குவது போன்றவற்றை மேற்கொண்டு வரும் அதானி குழுமத்தின் கடனை கிரெடிட்சைட்ஸ் நிறுவனம் ஆய்வு செய்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் அதானி குழுமத்தின் பல்வேறு கடன் நிலுவைகள், அதானி குழுமத்தின் அதிதீவிர விரிவாக்கப் பணிகள் போன்றவை சுற்றுச்சூழல், சமூக மற்றும் அரசு ரீதியிலான அபாயங்களை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த சிவப்பு அறிக்கையை பிட்ச் குழுமத்தின் அங்கமான கிரெடிட்சைட்ஸ் எனும் கடன் தர நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில்தான் அதானி குழுமத்தின் வளர்ச்சி உண்மையா இல்லை அது ஒரு கடன் வலையில் சிக்குமா என்பது விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
அதானி குழுமத்தின் நிதி தொடர்பான பல்வேறு தரவுகளை ஆய்வு செய்தே கிரெடிட்சைட்ஸ் நிறுவனம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையைச் சாரமாக, அதானி குழுமம் மிகப் பெரிய அளவில் கடன் நிதி பெற்றுச் செய்யும் விரிவாக்கத்தை மிகக் கவனமான பார்க்க வேண்டும் என்று சொல்லலாம். அதாவது இந்த விரிவாக்கம் பல பிரச்சினைகளை உள்ளடக்கியது.
அறிக்கையிலிருந்து சில வரிகளைப் பார்க்கலாம். “ பொதுவாக அதானி குழுமமானது ஏற்கனவே இருக்கும் புதிய தொழில்களில் மிகத் தீவிரமாக முதலீடுகளை மேற்கொள்கிறது. அதில் அதிகப்படியான முதலீட்டுத் தொகையைக் கடன் பெற்றே செய்கிறது. இதன் விளைவாக அதிகப்படியான அந்நியச் செலாவணி மற்றும் கடனை திரும்பிச் செலுத்துவதில் சிக்கல்கள் எழலாம். இது ஒட்டுமொத்த குழுமத்தின் செயல்பாடுகள் மீது கவலையை ஏற்படுகிறது. மோசமானது என்னவென்றால் அதிகப்படியான கடன் பெற்று வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தும் போது அதானி குழுமம் ஒரு மிகப்பெரிய கடன் பொறியில் சிக்கிக் கொள்ளும் அபாயம் இருக்கிறது. இதனால் கடனைத் திரும்பிச் செலுத்த முடியாத நிலையை அடையலாம்" என்று அறிக்கை கூறுகிறது.
அதானி குழுமம் தனது விரிவாக்கம் மற்றும் புதிய தொழில்களைக் கையகப்படுத்துதல் ஆகியவற்றுக்குக் கடன் பெற்றே வணிகத்தில் ஈடுபடுகிறது. இந்தக் கடன் வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றிடம் இருந்து பெறப்படுகிறது. இப்படியாக அதானி குழுமம் பல தொழில்களின் விரிவாக்கத்திற்குத் தனது சொந்தப் பணத்தைப் பயன்படுத்தாமல் வங்கிகளிடம் அளவில்லாத தொகையைக் கடனாகப் பெற்றுத்தான் முதலீடு செய்கிறது. ஏற்கனவே இந்தியப் பொதுத்துறை வங்கிகளிடம் கடன் பெற்றுத் திரும்பிச் செலுத்தாமல் வெளிநாடுகளுக்குத் தப்பிச்சென்ற மல்லையா, நீரவ் மோடியின் கதைகள் நமக்குத் தெரியும்.
இதுவரை தான் கால்பதித்திராத புதிய வணிகங்கள் - தொழில்களில் அதானி குழுமம் ஈடுபடுவதால் அது பல ஆயிரம் கோடி வங்கிக் கடனை திரும்பிச் செலுத்தாமல் மாட்டிக் கொள்ளும் என்று கிரெடிட்சைட்ஸ் அறிக்கை கூறுகிறது. ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் எனக் கூறப்படும் அதானி தலைமையில் செயல்படும் அதானி குழுமம் தனது ஆக்ரோஷமான விரிவாக்கம் காரணமாகக் கடன் பொறியில் சிக்கி திவால் நிலையை நோக்கிச் செல்லலாம் எனக் கூறுகிறது இந்த அறிக்கை.
இந்த அறிக்கையினால் ஏற்பட்ட விளைவுகள் என்ன? முதலில் இந்த அறிக்கை குறித்து அதானி குழுமம் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. ஆனால் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் இந்த அறிக்கை பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியப் பங்குச் சந்தைகளில் அதானி குழுமத்தின் ஏழு நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஐந்து நிறுவனங்களின் பங்கு விலைகள் பெரும் சரிவைச் சந்தித்திருக்கின்றன.
இப்படி பங்குச் சந்தையில் ஒரு வீழ்ச்சியை பெற வைத்த கிரெடிட்சைட்ஸ் நிறுவனத்தின் அறிக்கையை லஷ்மணன், ரோஹன் கபூர் மற்றும் ஜொனாதன் டான் ஆகியோர் எழுதியுள்ளனர். இவ்வளவு இருந்தும் அதானி குழுமத்தின் பலம் எங்கே இருக்கிறது? அறிக்கையின் படி அதானி குழுமத்திற்கும் இந்திய வங்கிகள் மற்றும் பிரதமரோடு நல்ல உறவு இருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. இந்த நல்ல உறவும் அதானி குழுமத்தின் கடன் சுமையை மாற்றிவிடுமா என்பதுதான் கேள்வி.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust