Amazon நிறுவனரை விட அதிக சொத்து மதிப்பை எட்டிய அதானி! - எப்படிச் சாத்தியமானது தெரியுமா?

அதிகம் சம்பாதிக்கும் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பிசாஸை விட, குறைவாகச் சம்பாதிக்கும் அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானியின் சொத்து மதிப்பு அதிகமாக இருப்பது ஏன்? இந்த கேள்விக்கு விடை காண்பதற்கு முன் சில விஷயங்களைத் தெளிவுபடுத்திக் கொள்வோம்.
Adani
AdaniTwitter
Published on

ஒரு நபர் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார், மற்றொருவர் 90 லட்சம் சம்பளம் வாங்குகிறார்... இதில் யார் பெரிய பணக்காரர்?  ரமேஷிடம் 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலபுலன்கள் இருக்கின்றன... ரஹீமிடம் 110 கோடி ரூபாய் மதிப்பிலான நிலபுலன்கள் இருக்கின்றன... இதில் யாரிடம் அதிக சொத்து இருக்கிறது? என்று கேட்டால் ஒரு கோடி சம்பாதிப்பவரும், 110 கோடிக்கு நிலபுலன் வைத்திருப்பவரும் பெரிய பணக்காரர் என்று சொல்லிவிடலாம்.

ஆனால் பங்குச் சந்தையைக் கையில் எடுத்துக் கொண்டால் கணக்கிடுவது கொஞ்சம் சிரமமான காரியம். 

உதாரணத்துக்கு: அப்துல் ஒரு வியாபாரி, ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டி வாழ்ந்து வருகிறார். குமரன் பங்குச் சந்தையில் முதலீடு செய்து லாபம் பார்ப்பவர். அவர் முன்பு செய்த முதலீடுகளின் மதிப்பு இன்றைய தேதிக்கு ஒரு கோடி ரூபாய் என வைத்துக் கொள்வோம். இப்போது சொத்து மதிப்பை வைத்துப் பார்த்தால் இருவருமே சமமாக இருக்கிறார்கள்.

அடுத்த ஆண்டு குமரன் முதலீடு செய்த பங்குகளின் மதிப்பு 5 கோடி, அப்துல்லுக்கு வியாபாரத்தில் 3 கோடி தான் லாபம் என்றால் இப்போது குமரன் எதையும் செய்யாலமேயே அப்துலை விடப் பெரிய பணக்காரர் ஆகிவிட்டார். இப்படித் தான் கெளதம் அதானியும் சடசடவென உலகின் நம்பர் 1 பணக்காரர் என்கிற இடத்தை நோக்கி நகர்ந்து வருகிறார்.

ஓர் அடிப்படை சந்தேகம்

அதிகம் சம்பாதிக்கும் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பிசாஸை விட, குறைவாகச் சம்பாதிக்கும் அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானியின் சொத்து மதிப்பு அதிகமாக இருப்பது ஏன்? இந்த கேள்விக்கு விடை காண்பதற்கு முன் சில விஷயங்களைத் தெளிவுபடுத்திக் கொள்வோம்.

சொத்து மதிப்பு என்ன?

அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பிசாஸின் சொத்து மதிப்பு சுமார் 145 பில்லியன் டாலராகவும், கெளதம் அதானியின் சொத்து மதிப்பு 152 பில்லியன் அமெரிக்க டாலராகவும் இருக்கிறது.

இரு குழுமத்தின் வருவாய் & லாபம் என்ன?

அமேசான்

2021

வருவாய் - 469 பில்லியன் அமெரிக்க டாலர்

லாபம் (Net Income from Continuing & Discontinued) - 33 பில்லியன் அமெரிக்க டாலர்

சோர்ஸ்: யாஹூ ஃபைனான்ஸ்

அதானி குழுமம்

2021 - 22

வருவாய் - (2.02 லட்சம் கோடி ரூபாய்) சுமார் 26 பில்லியன் அமெரிக்க டாலர்

லாபம் - (13,500 கோடி ரூபாய்) 1.7 பில்லியன் அமெரிக்க டாலர்

சோர்ஸ்: இந்தியா டைம்ஸ்

ஜெஃப் பிசாஸ் ஈட்டும் வருவாயில் சுமார் 5.5 சதவீதம் கூட ஈட்டாத நபர் எப்படி அவரை விட அதிக சொத்து மதிப்பை வைத்திருக்கிறார்? இதற்கு ஒற்றைச் சொல்லில் விடை வேண்டுமானால் பங்குச் சந்தை + க்ரோனி கேப்பிட்டலிசம்.

ஜெஃப் பிசாஸின் அமேசான் நிறுவனத்தின் பங்கு மதிப்பினால் எப்படி 145 பில்லியன் அமெரிக்க டாலருக்கு அதிபதியாக இருக்கிறாரோ, அப்படி கெளதம் அதானி, அதானி குழுமத்தின் பல நிறுவனங்களில் கணிசமான பங்குகளை வைத்திருக்கிறார். அதுதான் அவரை 152 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்பு கொண்ட இந்தியராக உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெறச் செய்தது.

மூன்று ஆண்டில் அசுர வளர்ச்சி:

2013ஆம் ஆண்டில் வெறும் $2.6 பில்லியன் சொத்துபத்துக்களோடு இந்தியாவின் 15ஆவது பெரிய பணக்காரராக குஜராத்தில் வியாபாரம் செய்து கொண்டிருந்த கெளதம் அதானி, இன்று உலகின் நம்பர் 1 இடத்துக்கு போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்.

கெளதம் அதானியின் சொத்து மதிப்பு 2.6 பில்லியனில் இருந்து 58 மடங்கு (5,846%) அதிகரித்து 152 பில்லியனைத் தொட்டுள்ளது. இந்த 10 ஆண்டுகளில் அதானிக்கு இத்தனை பெரிய வளர்ச்சி எப்படி சாத்தியமானது என்பதைப் பார்ப்பதற்கு முன், எந்த காலகட்டத்தில் அவரின் சொத்து மதிப்பு அதிகரித்திருக்கிறது என்பதைப் பார்த்துவிடுவோம்.

2013ஆம் ஆண்டில் 2.6 பில்லியனாக இருந்த கெளதமின் சொத்து மதிப்பு, 2020ஆம் ஆண்டில் 8.9 பில்லியனாக அதிகரித்தது. சுமார் 2.5 மடங்கு வளர்ச்சி. ஆனால், 2020 முதல் 2022 வரையான மூன்றாண்டு காலத்தில்தான் கெளதம் அதானியின் சொத்துமதிப்பு 152 பில்லியன் டாலரைத் தொட்டது. 2020ஆம் ஆண்டிலிருந்து பார்த்தால் இது, சுமார் 16 மடங்கு வளர்ச்சி இந்த மூன்று ஆண்டு காலத்தில்தான் சாத்தியமாகி இருக்கிறது. கெளதம் அதானிக்கு மட்டும் பல மடங்கு சொத்து பத்துக்கள் குறுகிய காலத்தில் அதிகரித்தது எப்படி..?

1. பெரிதினும் பெரிது கேள்!

அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எகனாமிக் சோன்ஸ் : இந்தியாவில் உள்ள துறைமுகங்களில் ஆண்டுக்கு சராசரியாக 1,250 மில்லியன் மெட்ரிக் டன் சரக்கு கையாளப்படுகிறது. கடந்த 2021 - 22 நிதியாண்டில், அதானி போர்ட்ஸ் மட்டும் சுமார் 312 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இது போக, இந்தியாவின் முக்கியமான 15 துறைமுகங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது அதானி குழுமம். இந்தியாவின் மிகப்பெரிய, பிரமாண்ட தனியார் துறைமுக நிர்வாக நிறுவனம் இது.

அதானி ஏர்போர்ட்ஸ் : கடந்த அக்டோபர் 2021 நிலவரப்படி டெல்லி, மும்பை, அஹமதாபாத், ஜெய்பூர், லக்னெள, கெளஹாத்தி, திருவனந்தபுரம், மங்களூரு ஆகிய எட்டு விமான நிலையங்கள் Public Private Partnership (PPP) முறையில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதில் டெல்லி நீங்களாக மற்ற 7 விமான நிலையங்களும் அதானியின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இந்தியாவிலேயே மிகப்பெரிய விமானநிலைய நிர்வாக நிறுவனமிது.

அதானி பவர் : இந்தியாவின் மிகப்பெரிய தனியார் அனல்மின் நிலையம் வைத்திருக்கும் நிறுவனமிது. 14,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன்கொண்டது.

Adani
அதானி : வங்காள தேசம் பிரதமரை சந்தித்த இந்திய தொழிலதிபர் - பின்னணி என்ன?

அதானி டிரான்ஸ்மிஷன் : இந்தியாவில் 18,795 சர்கியூட் கிலோமீட்டருக்கு மின்சாரத்தை விநியோகிக்கும் அளவுக்கு வலுவான கட்டமைப்பைக் கொண்டுள்ள நிறுவனம். இந்தியாவின் மிகப்பெரிய தனியார் மின்பகிர்மான நிறுவனமிது.

அதானி கிரீன் எனர்ஜி : இந்தியாவின் மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி நிறுவனம். ஏற்கனவே 5,400 மெகாவாட் மின்சார திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இன்னும் 14,600 மெகாவாட் திட்டங்கள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன.

அதானி டோட்டல் கேஸ்: இந்தியாவின் மிகப்பெரிய எரிவாயு விநியோகம் நிறுவனம். இந்தியாவில் 33 இடங்களில் எரிவாயுவை விநியோகிக்க அனுமதி பெற்றுள்ளது.

அதான் வில்மர் : ஃபார்ட்ச்யூன் சமையல் எண்ணெய் பிராண்ட் அதானி வில்மருடையதுதான். இந்த எண்ணெய் இந்தியாவின் எஃப் எம் சி ஜி சந்தையில் சுமார் 19 சதவீதத்தை தன் வசம் வைத்துள்ளது.

அதானி எண்டர்பிரைசஸ் : இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரி இறக்குமதியாளர். அதோடு இந்தியாவின் மிகப்பெரிய கனிம வள, தாதுப் பொருட்கள் வர்த்தக நிறுவனம் இது.

Adani
அதானி சாம்ராஜ்ஜியம் கடனில் மூழ்கும் ?: பங்குகளை சரியவைத்த அறிக்கை | Explained

2. அதானி கையில் உள்ள பங்குகள் + அதன் அசுர வளர்ச்சி

இப்படி எதற்கு எடுத்தாலும் "இந்தியாவின் மிகப்பெரிய தனியார்..." என்கிற அடைமொழி வரும் அளவுக்கு தன் வியாபார அடித்தளத்தை வனமாகக் கட்டமைத்தார், கட்டமைத்து வருகிறார் கெளதம் அதானி.

இந்திய ஒன்றிய அரசுடனான நட்பு, பழம் நழுவி பாலில் விழுவது போல பல்வேறு அரசு ஒப்பந்தங்கள் அதானி குழுமத்துக்குக் கிடைப்பது, அதானி குழுமத்தின் பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் தேடிப் பிடித்து முதலீடு செய்து வைத்திருக்கிறார்கள். இப்படி வெளிநாட்டு & மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்துவிட்டால் பொது மக்கள் அப்பங்குகளை எளிதில் வாங்க முடியாது. சிறு முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு வித தட்டுப்பாட்டை உருவாக்கும், பங்கின் விலை நிலையாக நிற்க பெரிதும் உதவும். இப்படிப் பல காரணங்களால் அதானி குழும பங்குகளின் விலை தடாலடியாக அதிகரித்தது, அதிகரித்து வருகிறது. 

பொதுவாகப் பங்குச் சந்தையில் இருப்பவர்கள் PE விகிதம் என ஒன்றைப் பார்ப்பார்கள். அதாவது ஒரு பங்குக்கு எவ்வளவு வருமானம் வருகிறது, அதை விட எத்தனை மடங்கு அதிக விலையை அந்த நிறுவனப் பங்குக்குச் சந்தை கொடுக்கிறது என்பதை இந்த விகிதம் உணர்த்து.

உதாரணத்துக்கு... ஜி & கோ, ஒரு பங்குக்கு 2 ரூபாய் லாபம் ஈட்டுகிறது. ஜி & கோவின் பங்கு விலை 50 ரூபாய் என்றால் பி இ விகிதம் 50 / 2 = 25. 2 ரூபாய் லாபம் ஈட்டும் பங்குக்கு 25 மடங்கு சந்தை அதிக விலை கொடுத்திருக்கிறது என்று பொருள்.

அதானி நிறுவனங்கள் & 12 மாத பி இ விகிதங்கள் (%)

அதானி டோட்டல் கேஸ் - 776

அதானி கிரீன் எனர்ஜி - 772

அதானி டிரான்ஸ்மிஷன் - 451

அதானி எண்டர்பிரைசஸ் - 440

அதானி வில்மர் - 125

அதானி போர்ட்ஸ் - 43

அதானி பவர் - 16

இந்தியப் பங்குச் சந்தையில் ஒரு பங்கின் பி இ விகிதம் 100க்கு மேல் இருந்தாலே அது மிக அதிக விலையில் வர்த்தகமாவதாகக் கூறுவர். ஆனால் அதானி குழுமத்தின் 7 நிறுவனங்களில் 5 நிறுவனங்களின் பி இ விகிதம் 125க்கு மேல், அதில் நான்கு நிறுவனங்களின் பி இ விகிதம் 400க்கு மேல் என்பது, அந்நிறுவனங்களின் பங்குகளுக்குச் சந்தையில் மிக அதிக விலை கொடுக்கப்பட்டிருப்பதை உறுதி செய்கிறது. அதே நேரத்தில் பெரிய லாபம் ஈட்டவில்லை என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

அதானி குழுமத்தில், 7 வியாபாரங்கள் தனித்தனியாக இந்தியப் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளன. பங்குச் சந்தை மூலம் அதானியின் நிறுவனங்களுக்கான மதிப்பு முழுமையாக வெளிப்படுகிறது. அது கெளதம் அதானியின் சொத்துமதிப்பிலும் எதிரொலிக்கிறது.

அதானி குழுமத்தின் 7 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் சுமார் 24 சதவீதம் முதல் 57 சதவீதம் வரை ஒவ்வொரு நிறுவனத்திலும் அதிக அளவிலான பங்குகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் அதானி. இப்படி அதிகப்படியான பங்குகளை வைத்திருப்பது + பங்குகளின் மதிப்பு அதிகரிப்பால், தன்னிச்சையாக அதானி பில்லியனர்கள் பட்டியலில் முதலிடத்துக்குப் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறார்.

Adani
அதானி : சந்தை மதிப்பில் டாடாவை வீழ்த்தி சாதனை - விரிவான தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com