இந்தியச் சந்தையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் துணிகள் சரியாக விற்க முடியாமல் இருந்தது திருபாயின் கண்களை உறுத்திக் கொண்டிருந்தது. ஆடை தயாரிப்பாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் இடைத்தரகர்கள் மற்றும் டீலர்கள் மிகப்பெரிய பாலமாக இருந்தனர்.
அவர்கள் தங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும் பெரிய நிறுவன ஆடைகளை மட்டுமே விற்க விரும்பினர். ரிலையன்ஸ் போன்ற வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு ஆடை நிறுவனத்தின் துணிகளை, சேலைகளை விற்க ஆர்வம் காட்டவில்லை. அது வியாபார எதார்த்தம் தான், நாம் என்ன செய்ய முடியும் என நகத்தை கடிக்கவில்லை திருபாய்.
மாறாக, டீலர்கள் மற்றும் இடைத்தரகர்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு, சிங்கம் சிங்கிலாத் தான் வரும்... என ரிலையன்ஸின் நேரடி பார்வையில் இந்தியா முழுக்க கடைகளை திறந்து வாடிக்கையாளர்களைச் சென்று சேர விரும்பினார்.
இரண்டு வரியில் சட்டென சொல்ல முடிந்த இந்த விஷயத்தை செய்வது, எத்தனை சிரமமானது என்பதை ஒரு சிறிய பொட்டிக் கடை நடத்தும் நண்பர்களுக்கு தெரியும்.
கடையை நடத்த ஆர்வம் உள்ள, அதே நேரத்தில் கடையை நிர்வகிக்கும் திறமையுள்ள மக்களைக் கண்டுபிடித்து, அவர்களுக்குத் தேவையான வசதிகளை எல்லாம் செய்து கொடுத்து, சரக்கை அனுப்பி வைத்து, விற்ற பின் மாதாமாதம் முறையாக அவர்களிடமிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு, மீண்டும் வியாபாரத்துக்குச் சரக்கை அனுப்பி வைப்பது.... மஹேந்திர சிங் தோனியை கபடி ஆடச் செய்வது போல சிரமமானது.
கொஞ்சம் பிசகினால் கூட ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்துக்கு, சமாதி கட்டிவிடும் நடவடிக்கை இது என்கிற அபாயத்தைப் பார்த்து ரிலையன்ஸ் நிறுவனத்தில் பலரும் அஞ்சினர். ஆனால் திருபாய் அம்பானி, அதில் உள்ள நன்மைகளையும், அதனால் எதிர்காலத்தில் நிறுவனத்துக்கு கிடைக்கவிருக்கும் கூடுதல் பலன்களையும் பெருக்கி வகுத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.
இத்தனை மெனக்கெடல்களை எதிர்கொண்டு தனிக்கடைகள் திறக்கப்பட்டால், நிறுவனத்திற்கு தேவையான விஷயங்களை நேரடியாக விற்கமுடியும், ரிலையன்ஸ் நிறுவனம் தான் விரும்பும் விளம்பரங்களை தன்னுடைய நேரடிப் பார்வையில் இருக்கும் கடைகளில் விளம்பரப்படுத்தலாம், மிக முக்கியமாக இடைத்தரகர்களின் தலையீடு & விலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்காது, வாடிக்கையாளர்களிடம் குறைந்த விலையில் ரிலையன்ஸ் நிறுவன பொருட்களை விற்று அதிக லாபம் பார்க்கலாம், டேர்ன் ஓவர் அதிகரிக்கும்... என திருபாய் போட்ட நன்மை கணக்கு கூடுதல் பக்கங்களைக் கேட்டது.
எதிர்கொள்ள வேண்டிய அறுப்பை விட, கிடைக்கும் அல்வா அதிகம் என்பதால் திருபாய் அத்திட்டத்தை முன்னெடுத்தார்.
பல மாத முயற்சிக்குப் பிறகு மொத்த அமைப்பும் தயாரானது. முதல் கட்டமாக சுமார் 400 கடைகள் தொடங்கப்பட்டன. அது போக, மக்கள் மனதில் 'புளியோதரை புளிக்கும்' என்பது போல பளிச்சென ரிலையன்ஸின் பிராண்டை பிரதிபலிக்கச் செய்யும் 'ஒன்லி விமல்' பிராண்டை மேலும் பிரபலப்படுத்த, மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க விரும்பினார்.
அச்சு & காட்சி ஊடகம், வானொலி... என எங்கும் எதிலும் விமல் விளம்பரங்கள் எதிரொலித்தன. விரைவிலேயே விமல் இந்தியர்களின் பிராண்டானது. 1980களின் தொடக்கத்திலேயே விமல் பிராண்டு துணிகளை விற்கும் கடைகளின் எண்ணிக்கை சுமார் 600-ஐக் கடந்தது.
அந்த காலத்திலேயே ரிலையன்ஸ் நிறுவனம் தன் விற்பனைக்காக ஆண்டுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்ததாம். இதெல்லாம் 1980களில் எந்த இந்திய நிறுவனங்களும் செய்யத் துணியாதவை என்பது குறிப்பிடத்தக்கது.
2002 ஆம் ஆண்டில் டைம்ஸ் ஆப் இந்தியா குழுமத்தின் வணிக நாளிதழான எகனாமிக் டைம்ஸ் வெளியிட்ட, இந்தியாவின் மிகவும் நம்பகமான பிராண்டுகள் பட்டியலில் துணிவகை பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது விமல். இன்று வரை, விமல் என்கிற பெயரின் கீழ் பலவித ஆடைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அவற்றில் பெரும்பாலானவை பாலியஸ்டர் ஆடைகள் தான்.
'ஆஹா... இதல்லவா வளர்ச்சி..' என ஜவுளி சந்தையும், பங்குச் சந்தையும் திருபாயைப் பார்த்து வாய் பிளந்து கொண்டிருக்க, அம்பானியோ, மேலும் செலவைக் குறைத்து லாபத்தைப் பெருக்க இன்னும் தன் வியாபாரத்தை ஆழ்ந்து நோக்கினார்.
பாலியஸ்டர் ஆடைகளை தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை நாமே தயாரித்தால் என்னவென கேட்டுக் கொண்டு, வழக்கம் போல மனக் கணக்குப்போட்டார் திருபாய்.
பாலியஸ்டர் துணி தயாரிக்க பாலியஸ்டர் ஸ்டேபில் பைபர் (Polyester Staple Fiber) மற்றும் பாலியஸ்டர் ஃபிலமென்ட் யான் (Polyester Filament Yarn) என்கிற இரண்டு பொருட்களும் அவசியமாக இருந்தன.
அந்த இரு மூலப் பொருட்களையும் ரிலையன்ஸ் நிறுவனமே தயாரிக்கும் பொறுப்பை மூத்த மகன் முகேஷிடம் கொடுத்தார் திருபாய். 1981ஆம் ஆண்டு ரிலையன்ஸில் இணைந்த முகேஷ் அம்பானி, ரசாயன பொறியியல் மற்றும் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை படித்துக் கொண்டிருந்த முகேஷ் அம்பானி (அவர் எம்பிஏ படிப்பை நிறைவு செய்யவில்லை), ரிலையன்ஸ் குழுமத்துக்குள் தன் திறமையை நிரூபிக்க அதை ஒரு நல்ல சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்டார்.
1982ஆம் ஆண்டு மேலே குறிப்பிட்ட பாலியஸ்டர் ஃபைபர் மற்றும் பாலியஸ்டர் யான் ஆகியவற்றைத் தயாரிக்க மகாராஷ்டிராவில் பாதால் கங்கா என்கிற இடத்தில் ஆலையை நிறுவ ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு செய்தது.
1983ஆம் ஆண்டு திருபாய் அம்பானியின் இளைய மகனான அனில் அம்பானியும் ரிலையன்ஸ் குழுமத்தில் இணைந்தார். அவர் அமெரிக்காவில் உள்ள வார்டன் பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை படித்தவர்.
இதே 1980களின் மத்தியில் தான், திருபாய் அம்பானி தனக்குப் போட்டியாக இருந்த ஆர்கே சில்க் மில்ஸ் நிறுவனத் தலைவர் கபல் மெஹ்ரா மற்றும் பாம்பே டையிங் நிறுவனத் தலைவர் நுஸ்லி வாடியாவை பின்னுக்குத் தள்ளி, இந்திய ஜவுளித் துறையில் தனிப்பெரும் அரசனாக வலம் வரத் தொடங்கினார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com