சாமிக்கண்ணு வின்சென்ட் : உலகம் கொண்டாட வேண்டிய தமிழ் சினிமாகாரரின் கதை

தமிழகத்திலிருந்து தொடங்கி லக்னோ, லாகூர் என அலைந்து திரிந்து திரைப்படங்களைக் காட்டி மக்களை மகிழ்வித்த சாமிக்கண்ணு வின்சென்ட் யார்? அவர் ஆற்றிய பணி என்ன என்பதைக் காணலாம்.
சாமிக்கண்ணு வின்சென்ட்
சாமிக்கண்ணு வின்சென்ட்Twitter

(இன்று சாமிக்கண்ணு வின்சென்ட் நினைவு நாள். அவர்18 ஏப்ரல்1883 பிறந்து; 22 ஏப்ரல் 1942-ல் மறைந்தார்)

சாமிக்கண்ணு வின்சென்ட் எனும் தமிழர் ஆங்கிலேயர்கள் மட்டும் கோலோச்சி இருந்த சினிமா துறையின் தொடக்கக் கால வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருந்திருக்கிறார் என்பதை நாம் அறிவோமா? *கோயம்புத்தூரைச் சேர்ந்த* அவர் ஊர் ஊராகா டூரிங் டாக்கீஸ் சினிமவை தோளில் தூக்கிக்கொண்டு திரிந்தவர். இன்று உலக அளவில் வளர்ந்து பல தலை சிறந்த படைப்புகளை உருவாக்கும் தமிழ் சினிமாவுக்கு விதை போட்டவர்களுள் சாமிக்கண்ணுவும் ஒருவர்.

தமிழகத்திலிருந்து தொடங்கி லக்னோ, லாகூர் என அலைந்து திரிந்து திரைப்படங்களைக் காட்டி மக்களை மகிழ்வித்த சாமிக்கண்ணு வின்சென்ட் யார்? அவர் ஆற்றிய பணி என்ன என்பதைக் காணலாம்.

புரொஜக்டர்
புரொஜக்டர்Representational

பிரான்சிலிருந்து வந்த புரொஜக்டர்

டூபாண்ட் எனும் பிரான்ஸ் நாட்டுக்காரர் ஊர் ஊராகக் கிறிஸ்தவ திரைப்படங்களைத் திரையிட்டு வந்தார். அதுவரை திரைப்படங்களைப் பார்த்திடாத மக்கள் அவர் காட்டும் அசையும் படங்களை ஆர்வத்துடன் பார்த்து வந்தனர். தங்களைப் போன்ற மனிதர்கள் திரையில் நடிப்பதை, நடனமாடுவதை ஆச்சரியத்துடன் ரசித்தனர். டூபண்ட் அந்த உன்னத பணியை மேற்கொண்டவாறு இலங்கையிலிருந்து திருச்சி வந்தார்.

1905ம் ஆண்டு. அப்போது சாமிக்கண்ணு வின்சென்ட் திருச்சி ரயில்வேவில் பணியாற்றிவந்தார். ஒரு நாள் டூபாண்ட் திருச்சியில் “லைஃப் ஆஃப் ஜீசஸ்” படத்தைத் திரையிடுவதை சாமிக்கண்ணு பார்க்கிறார். அரங்கிலிருக்கும் எல்லோரும் திரையைக் கண்ணசைக்காமல் பார்த்த போது அந்த பிம்பங்களை உருவாக்கும் மாயக்கருவியைப் பார்த்து மோகம் கொள்கிறார் சாமிக்கண்ணு!

எதிர்பாராத விதமாக டூபாண்டுவின் உடல் நிலை மோசமாகிறது. அவர் தன் புரோஜக்டரை விற்க முடிவு செய்கிறார். அந்த காலத்திலேயே அதன் விலை 2250 ரூபாய். சாமிக்கண்ணு ஒரு நல்ல ரயில்வே வேலையில் இருப்பவர். ஆனால் 2250 ரூபாய்க்கு ஒரு கருவியை வாங்கும் அளவு அல்ல. அந்த விலைக்கு அதை வாங்கி ஒரு ரயில்வே ஊழியர் என்ன செய்வது?. எனினும் அவர் துணிச்சலாக முடிவு செய்தார். தன் மொத்த வாழ்வையும் பணையம் வைத்து அதனை வாங்க முடிவு செய்கிறார். அவரது அக்காவிடமும் இன்னும் சிலரிடமும் இருந்து உதவிகள் பெற்று அந்த மாயக்கருவியை தனக்குச் சொந்தமாக்கிக்கொள்கிறார்.

டூரிங்டாக்கிஸ் ஒன்றுக்குச் சொந்தம் கொண்டாடும் முதல் தமிழனாகிறார் சாமிக்கண்ணு!

சாமிக்கண்ணு சிலை
சாமிக்கண்ணு சிலை
சாமிக்கண்ணு வின்சென்ட்
கரிகாலன் கட்டிய Grand Anicut கல்லணை வரலாறு : வியக்க வைக்கும் தமிழரின் அறிவியல் அறிவு

சினிமாவுடன் திரிந்த பயணி

முதல் முதலாகத் திருச்சி பிஷப் கல்லூரி அருகில் லைஃப் ஆஃப் ஜீசஸ் படத்தைத் திரையிட்டுக்காட்டுகிறார் சாமிக்கண்ணு. அதன் பிறகு தமிழகமெங்கும் தன் கருவியைத் தூக்கிச் சுமந்தார். அவர் போகுமிடமெங்கும் திருவிழாவானது. திரையில் மனிதர்கள் அசையும் அதிசயத்தை நிகழ்த்திக்காட்ட வரும் சாமிக்கண்ணுவை மக்கள் ஆர்ப்பரித்து வரவேற்றனர். தமிழகத்தைக் கடந்து பம்பாய், லக்னெள, லாகூர், பெஷாவர் என இந்தியாவின் பல பகுதிகளுக்குச் சென்று திரைப்படங்களைக் கட்டினார். டூரிங் சினிமாவுடன் வரும் தூதுவனுக்கு எல்லா இடத்திலும் வரவேற்பு கிடைத்தது. பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாத அக்காலத்தில் மக்கள் சாமிக்கண்ணுவுக்காகக் காத்திருந்தனர்.

ஒரு மேஜிக் கலைஞன்

1909ம் ஆண்டு சென்னை வந்த சாமிக்கண்ணு பாரிஸ் கார்னர் அருகில் டென்ட் அமைத்து துண்டுப்படங்களை திரையிடத் தொடங்கினார். அப்போது

Pathé projector நிறுவனத்துக்கான முகவராகவும் வளர்ந்திருந்தார்.

திரையில் ஊமைப் படங்களைப் பார்க்கும் ஆச்சர்யத்துக்கு மத்தியிலும் சில நேரங்களில் மக்களுக்கு அயர்ச்சி தட்டியது. அந்த வேலைகளில் மெஜிசியனாக மாறிவிடுவார் சாமிக்கண்ணு. சில கண்கட்டி வித்தைகளையும் காட்டி மக்களை மகிழ்விப்பார். ஆனால் இதுவே அவருக்கு பின்னாட்களில் பிரச்சனையை உண்டாக்கியது.

இந்த மேஜிக் விவகாரம் கிறிஸ்தவ மத போதகர்களுக்குப் பிடிக்கவில்லை. இதானால் அதிருப்தியடைந்த அவர்கள் சாமிக்கண்ணு திரைப்படங்கள் காட்டுவதற்கு சில தொல்லைகள் கொடுத்தனர். அவர் செய்வது மதத்திற்கு எதிரானது என்று கருதினர். சாமிக்கண்ணு வின்சென்ட் அவர்கள் முன் தான் செய்வது மந்திரமில்லை தந்திரம் தான் என நிரூபித்தப்பின்னரே அவர் தொடர்ந்து திரையிட அனுமதிக்கப்பட்டார்.

பேலஸ் திரையரங்கு வாசலில் சாமிக்கண்ணு
பேலஸ் திரையரங்கு வாசலில் சாமிக்கண்ணு M Niyas Ahmed

திரையரங்குகள்

சினிமா மீதான காதல் சாமிக்கண்ணுவை டூரிங் உடன் நிற்கவிடவில்லை. அவர் பின்னாட்களில் வெரைட்டி ஹால் மற்றும் பேலஸ், எடிசன் ஆகிய திரையரங்குகளைக் கோவையில் கட்டினார். டிலைட் என்று அழைக்கப்பட்ட வெரைட்டி ஹாலில் இந்தி படங்களும், பேலஸ் திரையரங்கில் ஆங்கில படங்களும், எடிசன் திரையரங்கத்தில் தமிழ்ப் படங்களும் திரையிடப்பட்டன.

திரைப்பட நடிகர் சத்தியராஜ் தான் சிறுவனாக இருந்த போது டிலைட் திரையரங்கில் நிறையப் படங்கள் பார்த்ததாகவும், அங்கு ஷோலே என்ற திரைப்படம் 25 வாரங்கள் ஓடியது தனக்கு நினைவிருப்பதாகவும் நேர்காணல்களில் பகிர்ந்திருக்கிறார்.

அது மட்டுமின்றி, தனது தாத்தா காலிங்கராயரும், சாமிக்கண்ணுவும் நல்ல நண்பர்கள் என்றும், காலிகராயர் வெரைட்டி ஹால் திரையரங்கினை வாங்க விரும்பினார் என்றும் சத்தியராஜ் கூறியிருக்கிறார்.

கோவையில் உள்ள வெரைட்டி ஹால் சாலைக்கு இந்த திரையரங்கின் பெயரே சூட்டப்பட்டிருக்கும்.

 வள்ளி திருமணம்
வள்ளி திருமணம் Twitter

தயாரிப்பாளர்

வருடங்கள் கடக்கக் கடக்க சாமிக்கண்ணுவின் சினிமா வளர்ந்து கொண்டே போனது. ஒரு கட்டத்தில் திரைப்பட தயாரிப்பாளராகவும் களமிறங்கினார். 1933ஆம் ஆண்டு பயோனிர் ஃப்லிம்ஸுடன் இணைந்து வள்ளி திருமணம் திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறார். சம்பூர்ண ஹரிசந்திராவும், சுபத்ர பரிணயமும் இவர் தயாரிப்பில் வந்த திரைப்படங்களே.

அறுத்தெறியப்பட வேண்டிய சாதிக்கட்டமைப்பு தமிழ்ச் சமூகத்தில் வேரூன்றியிருக்கும் நிலையில் திரைப்படங்கள் அதன் தாக்கத்தை மட்டுப்படுத்த உதவின. அனைத்து சமூகத்தினரும் ஒன்றாகக் கூடும் இடமாகத் திரையரங்குகள் சமூக புரட்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. டூரிங் டாக்கிஸ் காலம் முதலே இந்த புரட்சியின் அங்கமாக இருந்திருக்கிறார் சாமிக்கண்ணு வின்சென்ட்.

அவர் செய்த அனைத்து சாதனைகளையும் தாண்டி, மின்சாரக் கூடம் அமைத்து சிறிய அளவில் மின்சார உற்பத்தியிலும் சாமிக்கண்ணு ஈடுபட்டார். இவரே இங்கிலீஷ் கிளப், புனித ஃபிரான்சிஸ் கான்வண்ட், இம்பிரீயல் வங்கி ஆகியவற்றுக்கும் மின் விநியோகம் செய்திருக்கிறார். தான் திரையிடும் படங்களுக்கான போஸ்டர் தேவைகளுக்காக அச்சு தொழிலில் ஈடுபட்ட இவர் தமிழகத்தின் அச்சுத் துறையிலும் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்.

சாமிக்கண்ணு வின்சென்ட் பற்றிய தரவுகள்

இந்தியத் திரைப்பட வரலாற்று ஆய்வாளர் தியடோர் பாஸ்கரனும் கோவையைச் சேர்ந்த இரா.பாவேந்தனும் சாமிக்கண்ணு குறித்து விரிவாக ஆய்வு செய்திருக்கின்றனர். அவரின் புகைப்படம், அவர் கட்டிய திரையரங்குகளின் புகைப்படம் என பல தரவுகளைப் பொக்கிஷமாகச் சேர்த்து வைத்திருந்த பாவேந்தன் கடந்த 2019ம் மரணித்தார்.

சாமிக்கண்ணு வின்சென்ட்
இந்தியர்கள் சைவ பிரியர்களா, இறைச்சி ரசிகர்களா - உண்மை என்ன?
சாமிக்கண்ணு வின்சென்ட் கல்லறை
சாமிக்கண்ணு வின்சென்ட் கல்லறை M Niyas Ahmed

வரலாற்றில் மறைந்தவர்கள்

சாமிக்கண்ணு மட்டுமல்ல அவரைப் போல ஆரம்பக்காலத்தில் தமிழ் திரைத்துறைக்கு அஸ்திவாரம் போட்ட பலரை நினைவு கூற மறுத்திருக்கிறது இந்த சமூகம்.

1916ஆம் ஆண்டு தென்னகத்தின் முதல் சலனப்படமான "கீசக வதம்" படத்தைத் தயாரித்து வெளியிட்டவர் ரங்கசாமி நடராஜ முதலியார், சென்னையில் முதல்முதலாக விமானம் தீவுத்திடலில் வந்திறங்கிய போது அந்த நிகழ்வைப் படமாக்கிய மருதமுத்து மூப்பனார், தானே சுயம்பாக கற்று சென்னை ஃப்லிம் லேபரட்டரி அமைத்து படம் தயாரித்த ஜோசஃப் டேவிட் ஆகியோர் பற்றிய ஆவணங்கள் கூட இல்லாமலிருக்கின்றன.

தியோடோர் பாஸ்கரன்
தியோடோர் பாஸ்கரன்Twitter
சாமிக்கண்ணு வின்சென்ட்
இலங்கை நெருக்கடி இந்தியாவிற்கும் வருமா? எச்சரிக்கும் ஒரு ஆய்வு


இந்த சமூகத்துக்கு நாட்டை ஆளும் முதல்வர்களைக் கொடுத்த சினிமாவுக்கு திருப்பிக் கொடுக்க ஆயிரக்கணக்கில் மிச்சமிருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

தமிழ் சினிமாவின் முன்னோடிகளை, சினிமாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அவர்களின் வாழ்வை அடுத்த தலைமுறைக்குக் கடத்த தியடோர் பாஸ்கரன், மெசேஜ் பியரெர்ஸ், சினிமா கட்டுரைகளின் தொகுப்பாக வந்த சித்திரம் பேசுதடி, பாம்பின் கண் ஆகிய புத்தகங்களை எழுதி இருக்கிறார். இவையே சினிமா குறித்த முக்கிய ஆவணங்களாக உள்ளன.

தியடோர் பாஸ்கரன், நிழல் திருநாவுக்கரசு, தமிழ் ஸ்டுடியோ அருண் மோ, எழுத்தாளர் பாமரன் என விரல்விட்டு எண்ணக்கூடிய தனி மனிதர்களும், சில திரைப்பட இயக்கங்களும் மட்டுமே உடன் இருக்கின்றன.

முதல் மலையாள மௌனத் திரைப்படமான விகதகுமாரன் படத்தை இயக்கிய தமிழர் ஜே.சி.டேனியலை அந்த திரையுலகம் தலையில் வைத்துக் கொண்டாடுகிறது. அவர் குறித்து ஒரு திரைப்படமே வந்திருக்கிறது. சலனபடங்களின் முன்னோடிகளில் ஒருவரான ரகுபதி பிரகாசாவின் பேரில் ஆந்திரா அரசு ஒரு விருதை ஏற்படுத்தி இருக்கிறது. இது போல சினிமாவுக்கான அங்கிகாரங்களைத் தமிழ் சினிமாவுக்கும் அதன் ஆளுமைகளுக்கும் பெற்றுத் தர வேண்டியது ஒவ்வொரு சினிமா ரசிகருடைய கடமையும் ஆகும்.

சாமிக்கண்ணு வின்சென்ட்
Twitter CEO பராக் முதல் ISRO சிவன் வரை; IIT -ல் படித்து உச்சத்தை எட்டிய 10 பேர்
சாமிக்கண்ணு வின்சென்ட்
சோடா வியாபாரி டூ 650 கோடி ரூபாய் ஐஸ் கிரீம் சாம்ராஜ்ஜியம் - வாடிலாலின் வியக்க வைக்கும் கதை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com