விஜய் தேர்தலில் வெல்ல முடியுமா? அரசியலுக்கு வந்த நடிகர்களுக்கு என்ன ஆனது?

சமூக சேவைகளின் மூலமாக இப்போது மக்கள் மனதில் இடம் பிடிக்க நினைக்கிறார் எனக் கருதப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் வரவேற்பைப் பெற்றாலும் அரசியல் களம் விஜயகாந்த் காலத்தில் இருந்தது போல இல்லை என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும்.
விஜய் தேர்தலில் வெல்ல முடியுமா? அரசியலுக்கு வந்த நடிகர்களுக்கு என்ன ஆனது?
விஜய் தேர்தலில் வெல்ல முடியுமா? அரசியலுக்கு வந்த நடிகர்களுக்கு என்ன ஆனது?instagram

தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம். அரசியல் சுற்றுவட்டாரத்திலும் அவர் வருகையால் ஏற்படும் மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்படுகின்றன.

லைம்லைட்டில் இருக்கும் நடிகர் அரசியலுக்கு வருவது எப்போதும் விவாதிக்கப்படும் விஷயமே. அரசியல் கட்சிகளும் எப்போதும் திரைத்துறையினரின் பிரபலத்துவத்தைப் பயன்படுத்திக்கொள்ள தயங்குவதில்லை.

தமிழக மக்களிடம் அரசியல் என்றில்லை, எந்த ஒரு கருத்தையும் கொண்டு சேர்க்க எளிதாக முடியுமென்றால் அது சினிமாக்காரர்களால் தான் முடியும் என்ற நிலை இருந்தது. அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என திரைத்துறையினர் மட்டுமே 5 தசாப்தங்களுக்கும் மேலாக தமிழகத்தை ஆண்டிருக்கின்றனர்.

எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் முன்னணி நடிகர்களாக கிடைத்த புகழை அரசியலில் கச்சிதமாக பயன்படுத்திக்கொண்டவர்கள்.

தமிழகத்தில் அசைக்க முடியாத சக்திகளாக ஊன்றியிருக்கும் திராவிட கழகங்களின் அடித்தளம் சினிமாக்காரர்களால் போடப்பட்டது. எம்.ஆர்.ராதா, எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் என அனைவரும் திராவிட இயக்கத்தின் பிரச்சார பீரங்கிகளாக இருந்தவர்கள். ஆனால் இன்றைய நிலை முன்பு போலில்லை என்றுதான் கூறவேண்டும்.

சமுக வலைத்தளங்கள் வளர்ந்துவிட்ட சூழலில் எந்த ஒரு அரசியல் தலைவராலும் தங்களது கருத்துக்களை நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்க்க முடிகிறது. மக்களை வசீகரிக்கும் கவர்ச்சி அரசியல் வாதிகளிடம் இல்லை என்றாலும், ஐடி விங்குகள் மூலமும் சமூக ஊடங்களில் பிரபலமானவர்கள் வழியாகவும் தங்களை வெளிப்படுத்திக்கொள்கின்றனர்.

நடிகர் விஜய்யைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் இருக்கும் எந்த ஒரு நபரையும் விட பொது மக்களால் விரும்பப்படுகிறார். ஆனால் திரையில் இருக்கும் அன்பு வாக்காக மாறாது என்பதற்கு நம்முன் பல உதாரணங்கள் இருக்கின்றன.

ஆனால் எப்போதும் நடிகர்கள் அரசியலுக்கு வரும்போதும் தமிழக மக்கள் அவர்களை வரவேற்றிருக்கின்றனர். வரவேற்பை வாக்காக மாற்றுவது கம்ப சூத்திரம் இல்லை.

நடிகர் விஜய்க்கு அரசியல் களம் பல சவால்களை வைத்திருக்கிறது. இவற்றில் சிலவற்றை முன்னதாக அரசியலில் இருந்த நடிகர்கள் சந்தித்திருக்கின்றனர். அவர்களுக்கு என்ன நடந்தது என்பதைப் பார்க்கலாம்.

சிவாஜி

நடிகர்கள் அரசியல் பிரவேசம் பற்றி பேசினாலே சிவாஜியால் ஜொலிக்க முடியவில்லை என்பதை உதாரணமாக சொல்வார்கள். சிவாஜி கணேசன் ஆரம்பகாலத்தில் திராவிட இயக்கத்துடன் தன்னை நெருக்கமாக பிணைத்துக்கொண்டவர்.

அண்ணாவின் நாடகத்தினால் அடையாளம் காணப்பட்ட கணேசனுக்கு "சிவாஜி கணேசன்" எனப் பெயர் வைத்தது பெரியார். திமுக மேடையில்  “அண்ணா ஆணையிட்டால் நான் பட ஒப்பந்தங்களை எல்லாம் கிழித்தெறிந்துவிட்டு, (திராவிட நாட்டு விடுதலை) போரில் ஈடுபடுவேன்” என்றெல்லாம் உணர்ச்சிப்பீறிட பேசியிருக்கிறார்.

ஆனால் திராவிட முன்னேற்ற கழகத்தில் எம்.ஜி.ஆருக்கு கிடைத்த முக்கியத்துவம் சிவாஜிக்கு கிடைக்கவில்லை. நாத்திகத்தில் இருந்தும் தன்னை மெதுவாக விடுவித்துக்கொண்டவரை கப் என பிடித்துக்கொண்டார் காமராஜர்.

காங்கிரஸில் சிறந்த மேடைப் பேச்சாளராக தன்னை நிலைநிறுத்தினார். காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸையும் இந்திரா காங்கிரஸையும் இணைப்பத்தில் முக்கிய பங்கு வகித்தார்.

காங்கிரஸ் திமுக மற்றும் அதிமுகவுடன் மாறி மாறி கூட்டணி வைத்தது. அதிமுக கூட்டணியில் இருந்த போது, எம்.ஜி.ஆர் மறைந்து அதிமுகவில் விரிசல் ஏற்பட்டது. அப்போது ஜானகியை ஆதரித்தார் சிவாஜி, ஆனால் ராஜீவ் ஜெயலலிதாவை ஆதரிக்க முடிவெடுத்தார்.

விளைவாக 10 பிப்ரவரி 1988 அன்று தமிழக முன்னேற்ற முன்னணியைத் தொடங்கினார். ஆனால் ஜானகி அணி தேர்தலில் ஜொலிக்கவில்லை. திருவையாறு தொகுதியில் தோற்றுப்போனார் சிவாஜி.

அதோடு அரசியலை விட்டு விலகியிருந்த சிவாஜியை வலுக்கட்டாயமாக அழைத்து ஜனதாதள தமிழக தலைவர் பொறுப்பில் அமர்த்தினார் வி.பி.சிங். அந்த தேர்தலில் சிவாஜியும் கலைஞரும் இணைந்து பிரச்சாரம் செய்தனர். ஆனால் வெற்றி அவர்களுக்கு கிட்டவில்லை. அரசியலில் இருந்து மூட்டையைக் கட்டினார் சிவாஜி.

விஜயகாந்த்

2005-ஆம் ஆண்டு, செப்டம்பர் 14-ஆம் தேதி மதுரையில் மாபெரும் மாநாடை நடத்தி, அதில், ”தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்” என்ற தனது கட்சியின் பெயரையும் அறிவித்தார்.

கமல்ஹாசன் போல அரசியலில் ஒரு கால், சினிமாவில் ஒரு கால் என்றில்லாமல் முழு நேர அரசியலில் குதித்தார் விஜயகாந்த்.

விஜயகாந்த் படப்பிடிப்புத்தளத்தில் கதாநாயகன் முதல் லைட் மேன் வரை அனைவரும் நல்ல உணவை உண்ண வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் என்பது நமக்குத் தெரியும். இதையே அரசியலிலும் செய்தார். தனது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கடைபிடிக்க வேண்டினார், இன்றுவரை அவரது கட்சி தொண்டர்கள் அந்த நாளில் சமூக சேவைகளை செய்து வருகின்றனர்.

2006 தேர்தலில் 234 தொகுதியிலும் தனித்து நின்றது தே.மு.தி.க, 8.45% வாக்குகளைப் பெற்றது. விருத்தாசலம் தொகுதியில் வென்று சட்டமன்ற உறுப்பினரானார் விஜயகாந்த். 100 தொகுதிக்கும் மேலாக வெற்றியை நிச்சயிக்கும் சக்தியாக வளர்ந்திருந்தது அவரது கட்சி. (தேர்தலை வென்றது திமுக)

2009 நாடாளுமன்ற தேர்தலிலும் தனித்து நின்று 10.45 விழுக்காடு வாக்குகளை வென்ற விஜயகாந்த், திமுக, அதிமுக கட்சிகளை மிரள வைத்தார்.

2011ம் ஆண்டு ஒரு கட்சி மாநாட்டைப் போட்டு தொண்டர்களிடம் கருத்து கேட்டு கூட்டணி முடிவை அறிவித்தார். கலைஞரின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமெனக் கூறி, அதிமுகவுடன் கூட்டணி வைத்தார்.

41 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக 29 தொகுதிகளில் வென்றது. கட்சியின் வாக்கு சதவீதம் 7.9 விழுக்காடாக குறைந்தாலும் எதிர்கட்சி தலைவர் பதவி கிடைத்தது விஜயகாந்துக்கு.

ஆனால் தேர்தல் முடிந்த கொஞ்ச காலத்திலேயே அதிமுக - தேதிமுக இடையே விரிசல் விழுந்தது. விஜயகாந்தால் பதவிக்கு வந்தவர்கள் தனித்தனியாக ஜெயலலிதாவை சந்திக்கச் சென்றனர். பின்னாளில் அதிமுகவில் இணைந்தனர். விஜயகாந்துடன் கடைசி வரை இருந்தவர்களில் 8 பேர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய பதவியை இழந்தார் விஜயகாந்த்.

அதன் பிறகு அரசியலில் செய்வதறியாது திகைத்த விஜயகாந்துக்கு உடல் நலமும் மோசமானது. அவர் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று திரும்ப 2014 தேர்தல் வந்தது.

2011 தேர்தலுக்கு பிறகு, விஜயகாந்த் சட்டமன்றத்தில் ஜெயலலிதா முன் நாக்கை திருத்திய சம்பவம் அனைவருக்கும் நினைவிருக்கும். இப்போதும் ரீல்களில் அந்த வீடியோ ட்ரெண்ட் ஆகிறது. அந்த சம்பவத்துக்கு வெளியில் இருந்தும் கட்சிக்குள் இருந்தும் பலத்த எதிர்ப்பு, தேமுதிக நழுவி அதிமுகவில் விழுந்தது அந்த சம்பவத்தில் இருந்துதான். அந்த சம்பவத்தில் இருந்து விஜயகாந்த்தின் இமேஜ் கடுமையாக டேமேஜாக தொடங்கியது, அது மக்களிடம் பிரதிபலித்தது.

2014 தேர்தலில் தான் எதிரியாக கருதிய ராமதாஸ் அங்கம் வகித்த ஜனநாயக கூட்டணியிலேயே 14 சீட்டுகள் பெற்றார். ஆனால் அவரால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.

2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கட்சியின் முக்கிய பிரமுகர்களின் விருப்பத்துக்கு மாறாக மக்கள் நல கூட்டணியில் இணைந்தார். முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். எதிர்த்த சிலரைக் கட்சியை விட்டு நீக்கினார். விஜயகாந்தின் மனைவி, மைத்துனரிடமே கட்சி இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

தேர்தல் முடிவில் 2.36 விழுக்காடு வாக்குகளை மட்டுமே தேமுதிக பெற்றது. இந்த தேர்தலுக்கு பிறகு அதள பாதாளத்துக்கு சென்ற தேமுதிக மீண்டும் எழவே இல்லை.

ஜெயலலிதா, கருணாநிதி போன்ற ஆளுமைகள் இல்லாத இந்த காலம் விஜயகாந்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டது போல இருக்கிறது. கட்சியில் குடும்பத்தின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தாமல் விட்டது, எதிர்கட்சி தலைவர் பதவியை நழுவ விட்டது, பொதுவெளியில் லூஸ்டாக் விட்டது போன்றவற்றைக் கட்டுப்படுத்தியிருந்தால் இன்று தமிழகத்தின் முகமாக திகழ்ந்திருப்பார் விஜயகாந்த்.

விஜய் தேர்தலில் வெல்ல முடியுமா? அரசியலுக்கு வந்த நடிகர்களுக்கு என்ன ஆனது?
எம்.ஜி.ஆர் எனும் முன்ஜாக்கிரதை முத்தண்ணா ! - MGR குறித்து அதிகம் அறியப்படாத தகவல்கள்

கமல்ஹாசன்

விஜயகாந்த் வழியிலேயே மதுரையில் மாபெரும் மாநாட்டை நடத்தி கட்சியைத் தொடங்கினார் கமல்ஹாசன். 2019 நாடாளுமன்ற தேர்தலில் 3 விழுக்காடு வாக்குகளை வென்றார். அரசியலில் கமல் மீது மக்கள் முற்றிலும் நம்பிக்கையற்று இல்லை என்பதை எல்லா கட்சிகளுக்கும் உணர்த்தியது தேர்தல் முடிவுகள்.

2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஐஜேகே, சமக கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலைப் போட்டியிட்டார்.

சட்டமன்ற தேர்தல் திமுகவுக்கு பெரும் வெற்றியாக அமைய, கமல் கட்சியில் அனைவருமே தோல்வியைத் தழுவினர். கமல் கோவையில் 1,700 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.

துணைத் தலைவர் பொறுப்பில் இருந்த மகேந்திரன், சந்தோஷ்பாபு, முருகானந்தம், சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளராக இருந்த பத்மபிரியா, தொழில்முனைவோர் அணியின் மாநிலச் செயலாளராக இருந்த வீரசக்தி என முக்கிய பொறுப்பில் இருந்த பலர் விலகினர்.

கட்சியின் தோல்விக்கு காரணம் கிராம அளவில் கட்சியை பலப்படுத்தாதது தான் என கட்சியின் நிர்வாகிகளே கூறியிருக்கின்றனர். ஆனால் மக்கள் நீதி மய்யம் இன்றும் அதனைச் செய்யவில்லை என்பது கண்கூடு.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கமல் கங்கிரஸுடன் கூட்டணி வைப்பார் என்பதை யூகிக்க முடிகிறது. அவர் எம்.பி ஆனாலும் அவர் மட்டுமே பலன் பெறுவார் அன்றி கட்சி பலனடையாது. அவர் சிந்தித்த மாற்றத்தை விளைவிக்க கட்சியை பலப்படுத்துவது அவசியம்.

விஜய் தேர்தலில் வெல்ல முடியுமா? அரசியலுக்கு வந்த நடிகர்களுக்கு என்ன ஆனது?
அரசியல் முதல் பயங்கரவாதம் வரை : உலகையே கட்டுப்படுத்தும் 13 குடும்பங்கள் - யார் இவர்கள்?

இதைத் தவிர கே.பாக்கியராஜ், டி.ராஜேந்தர், கருணாஸ், சரத்குமார், கார்த்திக் என அரசியலில் குதித்த நடிகர்கள் என ஒரு பட்டியல் இருக்கிறது. விஜய்யின் அரசியல் பிரவேசத்தை ஒப்பிட சரியான நபர்கள் பற்றி நாம் பார்த்திருக்கிறோம்.

சிவாஜி இளமைப் பருவம் முதலே திமுக மேடைகளில் உரையாற்றியவர். அதனால் தான் சில முயற்சிகளிலாவது அவரால் வெற்றி பெற முடிந்தது. விஜயகாந்த் சரியான ஆட்களின் ஆலோசனையை கேட்காமல், சரியான அணியுடன் கூட்டணி அமைக்காமல் சறுக்கினார். கமல் ரசிகர்களிடம் அரசியலை புகுத்த தவறினார். அதோடு அரசியலை மிகவும் மேலோட்டமாக அணுகி வருகிறார். கமலிடம் கட்சியை அடித்தளம் வரை கட்டமைக்க போதுமான நிதி இல்லை என்பதும் உண்மை.

விஜய் தேர்தலில் வெல்ல முடியுமா? அரசியலுக்கு வந்த நடிகர்களுக்கு என்ன ஆனது?
Senthil Balaji: 1996ல் திமுக தொண்டர், இன்று 3 துறைகளுக்கு அமைச்சர்- விறுவிறு அரசியல் பயணம்

இவர்கள் அனைவரில் இருந்தும் மாறுபட்டவர் விஜய். சமூக சேவைகளின் மூலமாக இப்போது மக்கள் மனதில் இடம் பிடிக்க நினைக்கிறார் எனக் கருதப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் வரவேற்பைப் பெற்றாலும் அரசியல் களம் விஜயகாந்த் காலத்தில் இருந்தது போல இல்லை என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும். மேலும் இந்த காலத்தில் அரசியல் மிகவும் காஸ்ட்லியான பிசினஸாக இருக்கிறது, நேர்மையான அரசியலுக்கு இரண்டு மடங்கு விலை கொடுக்க வேண்டும்.

விஜய்யின் அரசியல் வருகை மறைமுகமாக தெரிவிக்கப்பட்டாலும், நேரடியாக மறுத்தே வருகிறது அவரது இயக்கம். 2024 தேர்தல் அவரது நோக்கம் இல்லை என்றும் 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் களம் காண்பார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் விஜய்யிடம் 2026 வரை லைன்-அப் இருக்கிறது. பிசியான பட வேலைகளுக்கு நடுவில் அவர் அரசியலில் எந்த அளவு ஈடுபாடு காட்ட முடியும் என்பது தெரியவில்லை. அப்படி பார்ட்-டைமாக அரசியலை அணுகியதன் விளைவுதான் கமல்ஹாசனுக்கு நடந்தது.

பொறுத்திருந்து பார்ப்போம் தமிழக மக்கள் நீண்டகாலமாக வேண்டும் மாற்றத்தை விஜய் எடுத்துவருகிறாரா என்று!

விஜய் தேர்தலில் வெல்ல முடியுமா? அரசியலுக்கு வந்த நடிகர்களுக்கு என்ன ஆனது?
மாவீரன் : சிவகார்த்திகேயன் பேசும் சென்னையின் அரசியல் - படம் சொல்வதென்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com