கேரளா ஷவர்மா : சிறுமியை கொன்ற ஷிகெல்லா பாக்டீரியா என்றால் என்ன? - Explained

கேரள மாணவி மரணத்துக்கு காரணமான ஷிகெல்லா என்ற பாக்டீரியா தொற்று எவ்வளவு பொதுவானது, அதன் அறிகுறிகள் என்ன, நீங்கள் எப்போது மருத்துவரை அணுக வேண்டும் போன்றவற்றைப் பார்க்கலாம்.
shawarma
shawarmaTwitter

தமிழகத்தின் நகரங்களில் டீக்கடைகள் போல ஆங்காங்கே ஷவர்மா கடைகள் பெருகியிருகின்றன. கோழிக்கறையை பிசைந்து சுட்டு ஒரு ரொட்டியில் சுருட்டி உண்பதே ஷவர்மா. ஒரு மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக பிரபலமாகியிருக்கும் ஷவர்மா இப்போது ஒரு விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கேரள மாநிலத்தின் காசர்கோட்டில் உள்ள ஒரு உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட 16 வயது சிறுமி இறந்தார். மற்றும் 18 பேர் ஃபுட் பாய்ஸன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

காசர்கோட் அருகே உள்ள கரிவள்ளூரில் வசிக்கும் தேவானந்தா, காஞ்சங்காடு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

ஷவர்மா விற்ற கடைக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணையைத் தொடர்ந்து கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

18 பள்ளி மாணவர்கள் உடல்நிலை சரியில்லாமல் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், ஆனால் அவர்களின் நிலை மோசமாக இல்லை என்று கூறப்படுகிறது.

மேற்கண்ட கடையில் சிக்கன் ஷவர்மாவை சாப்பிட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களின் ரத்தம் மற்றும் மலத்தில் பாக்டீரியா இருப்பது உறுதி செய்யப்பட்டது. உணவகத்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.

ஃபுட் பாய்ஸன் மிகவும் பொதுவானது மற்றும் பல்வேறு சூழ்நிலைகளில் ஏற்படலாம். ஷிகெல்லா என்ற பாக்டீரியா தொற்று எவ்வளவு பொதுவானது, அதன் அறிகுறிகள் என்ன, நீங்கள் எப்போது மருத்துவரை அணுக வேண்டும் போன்றவற்றைப் பார்க்கலாம்.

பாக்டீரியா
பாக்டீரியாTwitter

ஷிகெல்லா என்றால் என்ன?

ஷிகெல்லா என்பது என்டோரோபாக்டர் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாக்டீரியமாகும். குடலில் வசிக்கும் பாக்டீரியாக்கள் அடங்கிய இந்தக் குழுவின் அனைத்து வகைகளும் எல்லா மனிதர்களுக்கு நோயை ஏற்படுத்தாது. ஆனால் சில நேரம் இது முக்கியமாக குடலைப் பாதிப்பதுடன் வயிற்றுப்போக்கு, சில நேரங்களில் இரத்தப்போக்கு, வயிற்று வலி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்துகிறது.

"ஒருவரை நோயுறச் செய்ய குறைந்த எண்ணிக்கையிலான பாக்டீரியாக்கள்" மட்டுமே தேவைப்படுவதால், தொற்று எளிதில் பரவுகிறது என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) கூறுகிறது. இது உணவு மற்றும் நீரினால் பரவும் நோய்த்தொற்று ஆகும். மேலும் யாராவது அசுத்தமான உணவை உட்கொள்ளும் போதும் கழுவப்படாத பழங்கள் அல்லது காய்கறிகளை உட்கொள்ளும் போது இந்த பாக்டீரியா தொற்று ஏற்படலாம்.

நோயாளியின் மலத்துடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு கொள்வதன் மூலம் நோய் எளிதில் பரவுகிறது. அசுத்தமான நீரில் நீந்தினாலோ அல்லது குளித்தாலோ கூட தொற்று ஏற்படலாம்.

பாக்டீரியா
பாக்டீரியாTwitter

ஷிகெல்லா தொற்று எவ்வளவு பரவலாக உள்ளது?

"ஷிகெல்லோசிஸ் ஏற்படுகிறது, ஆனால் இது மிகவும் பொதுவான தொற்று அல்ல. அசுத்தமான உணவுகளால் டைபாய்டு மற்றும் காலரா போன்ற தொற்றுநோய்களை நாம் பொதுவாகப் பார்க்கிறோம். எங்கள் மருத்துவமனையில் வயிற்றுப்போக்கு ஏற்படும் 100 நோயாளிகளில் ஒருவர் ஷிகெல்லோசிஸ் ஆல் பாதிக்கப் பட்டிருக்கலாம்” என்று புதுதில்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையின் உள் மருத்துவத்தின் மூத்த ஆலோசகர் டாக்டர் சுரஞ்சித் சாட்டர்ஜி கூறினார்.

கர்ப்ப காலத்தில் மற்றும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கும் ஷிகெல்லா நோய்த் தாக்கம் அதிகரிக்கிறது.

மனிதர்களைப் பாதிக்கும் நான்கு வகையான ஷிகெல்லா பாக்டீரியாக்கள் உள்ளன. அவை ஷிகெல்லா சோனி, ஷிகெல்லா ஃப்ளெக்ஸ்னெரி, ஷிகெல்லா பாய்டி மற்றும் ஷிகெல்லா டிசென்டீரியா. நான்காவது வகை மிகவும் கடுமையான நோயை ஏற்படுத்துகிறது. ஏனெனில் அது நச்சுக்களை உற்பத்தி செய்கிறது.

Dead
DeadTwitter

நோய்த் தொற்றால் மக்கள் இறப்பது பொதுவானதா?

அப்படி சொல்ல முடியாது. நோயாளிக்கு பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு அல்லது நோய்க் கிருமி பரிந்துரைக்கப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை எதிர்க்கும் வரை, தொற்று பொதுவாக தீவிரமடையாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். “இது சிகிச்சையளிக்கக்கூடிய நோய்தான். ஒரு நோயாளி சரியான நேரத்தில் மருத்துவமனைக்குச் சென்றால், IV – ஐ.வி நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் (ஆன்டிபயாட்டிக்) பயன்படுத்தி திறம்பட சிகிச்சை அளிக்க முடியும், ”என்று டாக்டர் சாட்டர்ஜி கூறினார்.

எந்த நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (ஆன்டிபயாடிக்) சிறப்பாகச் செயல்படக்கூடும் என்பதைத் தீர்மானிக்க, எந்த நோய்க் கிருமி அறிகுறிகளை ஏற்படுத்துகிறது என்பதைப் பார்க்க வேண்டும். கடுமையான வயிற்றுப் போக்கு உள்ள நோயாளிகளின் மாதிரிகளை மருத்துவர்கள் பொதுவாக சோதனைக்காக அனுப்புவார்கள் என்று அவர் கூறினார். "இதற்கிடையில், வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் பொதுவான நோய்த் தொற்றுகளுக்கு மருத்துவர்கள் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பரிந்துரைக்கின்றனர், மேலும் அவை பொதுவாக ஷிகெல்லாவிற்கும் வேலை செய்யும்" என்று டாக்டர் சாட்டர்ஜி கூறினார்.

இருப்பினும், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் வேலை செய்யாதபோது சிக்கல் ஏற்படுகிறது, ஏனெனில் பாக்டீரியாக்கள் அதை எதிர்க்கின்றன.

shawarma
வெயில் காலம் தானேனு அளவுக்கு அதிகமாக மோர் குடிக்காதீங்க - நன்மைகளும் தீமைகளும்

"ஷிகெல்லாவின் பிரச்சனை என்னவென்றால், அது மற்ற அனைத்து உறுப்புகளையும் பாதிக்கக்கூடிய நச்சுகளை அதிக அளவில் உற்பத்தி செய்கிறது. எனவே, நுண்ணுயிர் எதிர்ப்பிகளைக் கொடுத்த பிறகும் பாக்டீரியாக்கள் உடலில் தொடர்ந்து பெருகினால், அது தொடர்ந்து நச்சுகளை உற்பத்தி செய்யும். இது சிறுநீரகத்தை பாதித்து, வலிப்புத் தாக்கங்களை ஏற்படுத்துகிறது. பல உறுப்பு செயலிழப்பு மற்றும் அதிர்ச்சிக்கு வழிவகுக்கும். மேலும் மரணத்திற்கு வழிவகுக்கும்.” என்று பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் தொற்று நோய் ஆராய்ச்சி மையத்தின் இணைப் பேராசிரியர் டாக்டர் அமித் சிங் கூறினார்.

இருப்பினும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இது நடக்காது. டாக்டர் சிங் மேலும் கூறும் போது "தொற்றின் இறப்பு 1% க்கும் குறைவாக உள்ளது," என்கிறார்.

vomiting
vomitingTwitter

உங்களுக்கு வயிற்றில் அசௌகரியம் அல்லது வயிற்றில் தொந்தரவு இருந்தால், எந்த கட்டத்தில் நீங்கள் கவலைப்பட ஆரம்பிக்க வேண்டும்?

ஒவ்வொரு முறையும் உங்களுக்கு லூஸ் மோஷன் எனப்படும் வயிற்றுப் போக்கு ஏற்படும் போது மருத்துவரிடம் அல்லது மருத்துவமனைக்கு விரைந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று டாக்டர் சாட்டர்ஜி கூறினார். இருப்பினும், அதிக காய்ச்சல், மலத்தில் இரத்தம் அல்லது தொடர்ந்து வாந்தியெடுத்தல் ஆகியவற்றுடன் உங்களுக்கு தளர்வான சோர்வு இருந்தால், நீங்கள் எந்த திரவத்தையும் உட்கொள்ள முடியாத நிலை இருந்தால், நீங்கள் ஒரு மருத்துவரை கட்டாயம் அணுக வேண்டும்.

shawarma
ஷவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு - தொடரும் உணவகங்களின் அலட்சியம்

கடுமையான வயிற்றுப்போக்கு உள்ள ஒரு நபர் - அதாவது ஒரு நாளில் 20 அல்லது அதற்கு மேற்பட்ட வயிற்றுப் போக்கிருந்தால் - ஒரு நாளுக்குள் மருத்துவரை சந்திக்க வேண்டும். லேசான வயிற்றுப்போக்கு உள்ள நோயாளி மருத்துவரிடம் செல்வதற்கு முன் மூன்று முதல் நான்கு நாட்கள் வரை காத்திருக்கலாம்.

"இது எந்தவொரு வயிற்றுப் போக்கிற்கும், அது ஷிகெல்லா அல்லது வேறு எந்த காரணத்திற்காக இருந்தாலும் சரி" என்று டாக்டர் சாட்டர்ஜி கூறினார். ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்த கேரளாவை சேர்ந்த மாணவிக்கு உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் இருக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார்.

shawarma
Summer Health Tips: வெயிலினால் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் - பாதுகாப்பது எப்படி?

என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?

ஷிகெல்லா நோய்த் தொற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மற்ற உணவு மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுகளைப் போலவே இருக்கும். உணவு உண்பதற்கு முன்னும் பின்னும் கைகளை நன்றாகக் கழுவவும். மலம் கழித்த பிறகு உங்கள் கைகளை சரியாகக் கழுவவும். நீங்கள் குடிக்கும் தண்ணீர் சுத்தமாகவும், பழங்கள் மற்றும் காய்கறிகள் புதியதாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

"பால், கோழி மற்றும் மீன் போன்ற பொருட்கள் எளிதில் பாதிக்கப்படலாம். அவை சரியான வெப்பநிலையில் வைக்கப்பட வேண்டும் மற்றும் சரியாக சமைக்கப்பட வேண்டும்” என்று டாக்டர் சிங் கூறினார்.

ஆகவே இந்த ஷவர்மா பிரச்சினையில் இருந்து மக்கள் கற்றுக் கொள்ள வேண்டிய சுகாதாரம், பாக்டீரியா போன்ற விசயங்கள் நிறைய இருக்கின்றன. பொதுவில் உணவு வகைகளை சுத்தமாக சமைப்பதும், காலைக்கடன் முடித்த பிறகு கைகளை கழுவுவதும் முக்கியமானது. அதிக வயிற்றுப் போக்கு இருந்தால் உடன் மருத்துவரை அணுக வேண்டும்.

இதன் மூலம் இந்த ஷிகெல்லா பாக்டீரியாவை நாம் எதிர் கொள்ள முடியும்.

shawarma
இரான் : கள்ளச் சாராயம் அருந்திய 8 பேர் பலி - நடந்தது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com