உண்ணும் உணவில் பிளாஸ்டிக் - அதிர வைக்கும் தகவல்

உலகின் கடல் பரப்புகளின் மேற்பகுதிகளில் மட்டும் சுமார் 24.4 ட்ரில்லியன் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக ஆய்வு ஒன்று மதிப்பிடுகிறது. அதேபோல பல நிலப்பரப்புகளிலும், மண்ணிலும், நாம் சாப்பிடும் உணவில் கூட பிளாஸ்டிக் நுண் துகள்கள் இருக்கின்றன.
Microplastics
MicroplasticsCanva

இன்று நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்கள் நம் பூமியின் எல்லாவற்றிலும் ஊடுருவிவிட்டன.

அண்டார்டிகாவில் உள்ள பனி அடுக்குகளின் கீழ் பகுதிகள் தொடங்கி பெருங்கடல்களின் ஆழமான பகுதிகளில் மட்டுமே வாழும் உயிரினங்களின் வயிறு வரை, அவ்வளவு ஏன் குடிக்கும் தண்ணீரில் கூட நுண் பிளாஸ்டிக் துகள்கள் கலந்துவிட்டது.

நம் உணவில் பிளாஸ்டிக்குகள்

மைக்ரோ பிளாஸ்டிக் என்று அழைக்கப்படும் நுண் பிளாஸ்டிக்குகள் எங்கும் பரவி கிடக்கின்றன. அது மிகச் சிறியதாக இருப்பதால் நம்மால் அதை காண முடிவதில்லை. அதோடு நுண் பிளாஸ்டிக்குகள் மிக நீண்ட காலத்திற்கு இந்த உலகில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

மனிதர்கள் அத்தனை எளிதில் அணுக முடியாத கடற்கரைகள் தொடங்கி மனிதர்கள் உயிர் வாழாத தீவுகள் வரையிலான கடல் நீர் மாதிரிகளில் கூட நுண்துகள் பிளாஸ்டிக்குகள் காணப்படுகின்றன.

உலகின் கடல் பரப்புகளின் மேற்பகுதிகளில் மட்டும் சுமார் 24.4 ட்ரில்லியன் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக ஆய்வு ஒன்று மதிப்பிடுகிறது. அதேபோல பல நிலப்பரப்புகளிலும், மண்ணிலும், நாம் சாப்பிடும் உணவில் கூட பிளாஸ்டிக் நுண் துகள்கள் இருக்கின்றன.

Microplastics
Coober Pedy: பாலைவன பூமிக்குள் பளபளக்கும் வினோத நகரம்- சுரங்கங்களில் வாழும் மக்களின் கதை!

என்னது மனிதர்கள் சாப்பிடும் உணவில் கூட பிளாஸ்டிக் நுண் துகள்கள் கலந்து இருக்கிறதா? என்று கேட்டால் ஆம். நாம் சாப்பிடும் ஒவ்வொரு வாய் உணவிலும் கண்ணுக்கு தெரியாத மிகச் சிறிய, நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள இருக்கின்றன என்கிறது பிபிசி வலைதள கட்டுரை ஒன்று.

2022 ஆம் ஆண்டு என்விரான்மென்டல் வொர்க்கிங் குரூப் என்று அழைக்கப்படும் சுற்றுச்சூழல் சார்ந்த லாப நோக்கற்ற அமைப்பு மேற்கொண்ட பகுப்பாய்வு ஒன்றில்,

sewage sludge என்றழைக்கப்படும் கழிவுநீர் சேறு காரணமாக, சுமார் 20 மில்லியன் ஏக்கர் விவசாய நிலங்கள் அமெரிக்காவில் பி எஃப் ஏ எஸ் (per and polyfluoroalkyl substances ) என்கிற ரசாயனத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அந்த ரசாயணம் சாதாரண சுற்றுச்சூழல்களில் கரைந்து போகாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

கழிவு நீர் சேறு எனும் உரம்:

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஒரு நகராட்சிக்கு வரும் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு கடைசியில் தங்கும் சேறு போன்ற கழிவு நீரைத் தான் கழிவுநீர் சேறு (sewage sludge) என்கிறார்கள்.

இந்த கழிவுநீர் சேற்றை அப்புறப்படுத்துவதற்கு அதிகம் செலவாகிறது, அதோடு அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது என்பதால் இந்த கழிவு நீர் சேற்றை ஓர் ஆர்கானிக் உரமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பயன்படுத்துகின்றன.

ஐரோப்பாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 முதல் 10 மில்லியன் டன் கழிவு நீர் சேறு உருவாவதாகவும், அதில் சுமார் 40% விவசாய நிலங்களில் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

எனவே ஐரோப்பிய விவசாய நிலங்கள் உலக அளவில் மிகப்பெரிய நுண் பிளாஸ்டிக் துகள்களின் தோற்றுவாயாக இருக்கலாம் என்று கார்டிஃப் பல்கலைக்கழக ஆய்வு ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதை எண்ணிக்கை அடிப்படையில் கூற வேண்டுமானால் 31 முதல் 42 ஆயிரம் டன் நுண் பிளாஸ்டிக் துகள் அல்லது 86 முதல் 710 ட்ரில்லியன் பிளாஸ்டிக் துகள்கள் ஐரோப்பிய விவசாய நிலங்களை ஒவ்வொரு ஆண்டும் மாசுபடுத்துவதாகக் கூறலாம்.

பிரிட்டன் நாட்டில், சவுத் வேல்ஸ் பகுதியிலுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை ஒன்றில், நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 650 மில்லியன் நுண் பிளாஸ்டிக் துகள்கள் வந்து சேர்வதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

1 மில்லி மீட்டர் முதல் 5 மில்லி மீட்டர் வரை உள்ள நுண் பிளாஸ்டிக் துகள்களை ஆங்கிலத்தில் மைக்ரோ பிளாஸ்டிக் என்கிறார்கள்.

இந்த நுண் துகள் பிளாஸ்டிக் கழிவுநீர் சேற்றில் சென்று கலக்கின்றன. கழிவு நீர் சேற்றின் மொத்த எடையில், இந்த நுண் பிளாஸ்டிக்குகள் சுமார் ஒரு சதவீதம் அளவுக்கு இருக்கிறது என்றால் பிரச்னையின் வீரியத்தைப் புரிந்து கொள்ளலாம்.

Microplastics
எதிர்கால இந்தியா : பாதுகாப்பிற்காகப் போராடும் சுற்றுச்சூழல் போராளிகள்

நுண்துகள் பிளாஸ்டிக்குகள் விவசாய நிலங்களில் சென்று சேரும் அளவு அனேகமாக குறைத்து மதிப்பிடப்பட்டு இருக்கலாம் என்கிறார் கார்டிஃப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கேத்தரின் வில்சன் (Catherine Wilson).

ஐரோப்பிய நாடுகளின் விவசாய நிலங்களில் உள்ள பிளாஸ்டிக் நுண் துகள்களின் அளவு பெருங்கடல் பரப்புகளில் உள்ள நுண்துகள் பிளாஸ்டிக் நுண் துகள்களின் அளவுகளுக்கு இணையாக இருப்பதாக, கார்டிஃப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக இருக்கும் ஜேம்ஸ் லாஃப்டி (James Lofty) கூறியுள்ளார்.

கனடா நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி ஒன்றில், 99 சதவீத பிளாஸ்டிக் நுண் துகள்கள், கழிவுநீர் சேரு வைக்கப்பட்டு இருந்த அல்லது கலக்கப்பட்டு இருந்த இடத்தில் இருந்து நீர் நிலைகளுக்கு வந்து சேர்ந்து இருப்பதாக கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

சுற்றுச்சூழல் பாதிப்பு

இதுபோக நுண் பிளாஸ்டிக் துகள் கலக்கப்படும் மண்ணில், பிளாஸ்டிக் துகள்கள் நச்சுத்தன்மை கொண்ட ரசாயனங்களை வெளியிடும். அதோடு மற்ற பல நச்சுத் தன்மை கொண்ட விஷயங்களையும் அந்த பிளாஸ்டிக் துகள்கள் உறிஞ்சிக் கொள்ளும் என்றும் ஜேம்ஸ் கூறியுள்ளார்.

பிரிட்டன் நாட்டில் விவசாய நிலங்களைச் சென்றடையும் இந்தக் கழிவு நீர் சேற்றில், dioxins, polycyclic aromatic hydrocarbons போன்ற மனித உடலுக்கு அபாயம் ஏற்படுத்தக் கூடிய ரசாயணங்கள் இருப்பதாக பிரிட்டனின் சுற்றுச்சூழல் முகமையின் அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

2020ஆம் ஆண்டு கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் வேளான் விஞ்ஞானி மேரி பெத் கிர்க்ஹம் (Mary Beth Kirkham) மேற்கொண்ட ஆய்வில் பிளாஸ்டிக் கலந்த மண், கேட்மியம் (cadmium) போன்ற நச்சுத் தன்மை கொண்ட ரசாயணங்களை உட்கொள்ள, பிளாஸ்டிக் துகள்கள் வழிவகுபதாகக் கண்டு பிடித்திருக்கிறார்.

அதே நேரத்தில் நுண் பிளாஸ்டிக்குகள், மண்புழுக்களின் வளர்ச்சியை தடுப்பதாகவும், அதன் உடல் எடையைக் குறைக்க காரணமாக அமைவதாகவும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

மண்புழுக்களின் உடல் எடை குறைவுக்கு முழுமையான காரணங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், நுண் பிளாஸ்டிக் துகள்களால் மண் புழுக்களின் செரிமாண மண்டலம் முழுமையாக செயல்பட முடியாமல் பாதிக்கப்படலாம் என ஒரு கோட்பாடு முன் வைக்கப்படுகிறது.

இதனால் மண் புழுக்களால் முழுமையாக சத்துக்களை எடுத்துக் கொள்ள முடியாமல், அதன் வளர்ச்சி தடைபடுவதாகவும் கூறப்படுகிறது.

மண்புழுக்கள் தான் ஒட்டுமொத்த மண்ணின் வளத்தை பாதுகாப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது என்பதை நாம் அறிவோம்.

மண்புழுக்கள் இருப்பதால் தான் மண்ணில் போதுமான காற்றோட்டம் உறுதி செய்யப்படுகிறது, மண் சரிவுகள் தவிர்க்கப்படுகின்றன, மண்ணில் வரும் தண்ணீர் பெரிய அளவில் நிலத்தடியில் வடிகிறது, ஊட்டச்சத்துகள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன.

உணவுப் பொருட்களில் நுண் பிளாஸ்டிக் & நானோ பிளாஸ்டிக்

கடந்த 2020ஆம் ஆண்டு பழங்கள் & காய்கறிகளில் நுண் பிளாஸ்டிக் & நானோ பிளாஸ்டிக் துகள் இருப்பதை ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது.

இத்தாலியில் உள்ள சிசிலி நகர சூப்பர் மார்கெட் மற்றும் உள்ளூர் வியாபாரிகள் விற்று வந்த விவசாய விளைச்சல்களில் நுண் பிளாஸ்டிக் துகள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் குறிப்பாக ஆப்பிள் பழங்கள் தான் சோதனைக்கு உள்ளான பழ வகைகளில் அதிகம் மாசுபட்டதாகவும், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட காய்கறிகளில் கேரட்கள் தான் அதிக அளவில் மைக்ரோ பிளாஸ்டிக் கொண்டதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.

தாவரங்களின் வேரில் நானோ பிளாஸ்டிக்

நெதர்லாந்தில் உள்ள லெய்டன் (Leiden) பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வில்லி பெய்ஜ்னென்பர்க் (Willie Peijnenburg) மேற்கொண்ட ஆய்வில், விவசாயப் பயிர்கள் நானோ பிளாஸ்டிக் துகள்களை, தங்களைச் சுற்றியுள்ள தண்ணீர் & மண்ணில் இருந்து,

தங்கள் வேரில் உள்ள சிறு வெடிப்புகள் வழி உட்கொள்வதாகக் கண்டுபிடித்துள்ளார். நானோ பிளாஸ்டிக் என்பது 1 - 100 நானோ மீட்டர் அளவுகொண்டது. ஒரு மீட்டரை 1 பில்லியனால் வகுத்தால் கிடைப்பது ஒரு நானோ மீட்டர்.

இப்படி தாவரங்களின் வேரின் வழி நுழையும் நானோ பிளாஸ்டிக்குகள், அதன் மேற்பகுதிகளுக்கு வருவது மிகக் குறைவே. தாவரங்களின் இலைகளுக்கு 1%க்கும் குறைவான நானோ பிளாஸ்டிக்குகளே வந்து சேர்கின்றன என்கிறார் வில்லி பெய்ஜ்னென்பர்க்.

இலை தழைக் காய்கறிகளான முட்டைக் கோஸ், லெட்டியூஸ் போன்றவைகளில் குறைந்த அளவிலேயே நானோ பிளாஸ்டிக்குகள் இருப்பதாகவும், வேரில் உருவாகும் காய்கறிகளான கேரட், முள்ளங்கி, டர்னிப் போன்றவைகளில் அதிக பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாகவும் எச்சரிக்கிறார்.

பொதுவாக தாவரங்கள் மிக நுண்ணிய நானோ பிளாஸ்டிக் துகள்களையே எடுத்துக் கொள்கின்றன. மைக்ரோ பிளாஸ்டிக் என்று வகைப்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளை எடுத்துக் கொள்வதில்லை என சந்தோஷப்பட முடியாது. காரணம் இதே மைக்ரோ பிளாஸ்டிக்குகள் தான், உடைந்து சிதைந்து நாளை நானோ பிளாஸ்டிக்குகளாக உருவாகின்றன.

இந்த பிளாஸ்டிக் துகள்கள் தாவரங்களின் வளர்ச்சியை பாதிப்பதில்லை, மாறாக நம் தட்டில் உணவாக வந்தமர்ந்து விடுகின்றன. அதன் விளைவாக பல்வேறு நோய்கள் உருவாகின்றன. இப்பிரச்னை, காலப் போக்கில் பெரிதாகுமே ஒழிய குறையாது என்கிறார் வில்லி பெய்ஜ்னென்பர்க்.

நம் சுற்றுச் சூழலில் இருந்து பிளாஸ்டிக்கை முழுமையாக நீக்க பல தசாப்தங்கள் ஆகலாம். இப்போதைக்கு இந்த நுண் பிளாஸ்டிக்குகளால் நமக்குப் பெரிய ஆபத்து இல்லை என்றாலும், தொடர்ந்து நம் விவசாய நிலங்களில் ரசாயணங்கள் இருப்பது நல்லதல்ல. அதுவே ஒரு காலத்தில் ஒரு அபாயமாக உருவெடுக்கலாம் என்கிறார் வில்லி பெய்ஜ்னென்பர்க்.

Microplastics
Water fasting : தண்ணீர் உடல் எடையை குறைக்க உதவுமா? மருத்துவர்கள் கூறுவதென்ன?

உடல் நலக்குறைவுகள்

பிளாஸ்டிக் உற்பத்தியின் போது கலக்கப்படும் ரசாயணங்களால், மனித உடலில் உள்ள நாளமில்லா சுரப்பி மண்டலங்கள் மற்றும் மனித உடலின் வளர்ச்சிக்கான ஹார்மோன்கள் பாதிக்கப்படுவதாக பிபிசி வலைதளம் சொல்கிறது.

அதோடு புற்றுநோய், இதய நோய், போன்ற பிரச்னைகளும் வர வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதிக அளவில் நுண் பிளாஸ்டிக் துகள்கள் மனித உடலுக்குள் சென்றால், அது உடலில் உள்ள செல்களை பாதித்து, அழற்சி, ஒவ்வாமை போன்ற பிரச்னைகள் ஏற்படலாம் என பிரிட்டனில் உள்ள ஹல் பல்கலைக்கழகத்தின் ஆய்வுகள் சொல்கின்றன.

கழிவுநீர் சேற்றை தடை செய்த நாடுகள்

கழிவு நீரைச் சுத்தீகரித்து, மீதமிருக்கும் கழிவு நீர் சேற்றை தங்கள் விவசாய நிலங்களில் கலப்பதை நெதர்லாந்து கடந்த 1995ஆம் ஆண்டே தடை செய்துவிட்டது.

தொடக்கத்தில் தன் கழிவுநீர் சேற்றை அழித்துக் கொண்டிருந்த நெதர்லாந்து, காலப் போக்கில், பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியது. பிரிட்டனில் அதே கழிவு நீர் சேறு, உரமாகப் பயன்படுத்தப்பட்டது.

கழிவுநீர் சேற்றை உரங்களாகப் பயன்படுத்துவதை சுவிர்சர்லாந்து கடந்த 2003ஆம் ஆண்டே நிறுத்திவிட்டது. அதற்கு கழிவுநீர் சேற்றில் பல அபாயகரமான விஷயங்கள் இருப்பதாகக் காரணம் கூறியது.

அமெரிக்காவில் உள்ள மைன் (Maine) மாகாணத்தில், கடந்த 2022 ஏப்ரல் மாதத்தில் sewage sludge எனப்படும் கழிவுநீர் சேற்றை உரமாகப் பயன்படுத்துவதை தடை செய்தது. அம்மாகாணத்தில் சுற்றுச்சூழல் அதிகாரிகள் விவசாய நிலங்கள், பயிர்கள், தண்ணீரில் அதிக அளவில் பி எஃப் ஏ எஸ் என்றழைக்கப்படும் per- and polyfluoroalkyl substances ரசாயணங்கள் அதிக அளவில் இருப்பதாகக் கண்டுபிடித்தனர்.

இதை எல்லாம் விடக் கொடுமையான விஷயம் என்னவென்றால், அப்பகுதியில் உள்ள விவசாயிகளின் ரத்தத்தில் கூட பி எஃப் ஏ எஸ் ரசாயணம் அதிக அளவில் கலந்திருப்பது தெரிய வந்தது.

இதனால் பல விளைநிலங்களே மொத்தமாக மூடப்பட்டதாகச் சொல்கிறது பிபிசி வலைதளம்.

எனவே மைக்ரோ பிளாஸ்டிக் & நானோ பிளாஸ்டிக்குகள் சட்டத்தின் முன்பும், வரையறைக்குள்ளும் கொண்டு வரப்பட வேண்டும். இல்லையெனில் இன்று ஒரு பிரச்னையாக உருவெடுத்திருக்கும் இது, நாளை மனித குலத்தையே விழுங்கும் அபாயமாக மாறக்கூடும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com