இந்தியப் பத்திரிகைகள் அம்பானியின் வளர்ச்சியை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்குமா என்ன? மெல்ல இந்தியத் தொழில் துறையின் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருந்த திருபாய் அம்பானியைக் குறித்துத் தோண்டித் துருவி செய்திகளை வெளியிடத் தொடங்கின.
ஆனால் அதையும் திருபாய் அம்பானி தன் போக்கில் அசால்டாக கையாண்டார். கணிசமான பத்திரிகைகளை, தன் விளம்பரங்களின் மூலம் கட்டிப் போட்டு வைத்திருந்தார் திருபாய் அம்பானி. ஒருமுறை ஒரு பத்திரிகை, ரிலையன்ஸுக்கு எதிரான செய்தியை வெளியிட்டதன் காரணமாக, அப்பத்திரிகைக்கு வழங்கி வந்த கிட்டத்தட்ட ஆறு லட்சம் ரூபாய் மதிப்பிலான விளம்பரங்களை நிறுத்தினார்.
மிரண்டு போன அப்பத்திரிகை ஆசிரியர், அம்பானியைச் சமாதானப்படுத்தி மீண்டும் விளம்பரங்களைப் பெற்றார். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே அதே பத்திரிகையில் ரிலையன்ஸ் மற்றும் அம்பானிக்கு ஆதரவான செய்திகள் பிரசுரமாயின.
கவரில் காசு கொடுக்கும் கலாச்சாரத்தை இந்தியாவில் பிரபலமடையச் செய்ததில் திருபாய் அம்பானிக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டென, கூறப்படும் கடும் விமர்சனத்தை நீங்கள் படித்திருக்கலாம். பத்திரிகையாளர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால், அவர்கள் எப்போது வேண்டுமானாலும் ரசிக்பாயைத் தொடர்பு கொள்ளலாம் என்கிற அளவுக்குச் சூழல் இருந்ததாம்.
சில பத்திரிகைகள் திருபாயின் விளம்பர மிரட்டலுக்கு அடிபணிந்தாலும் இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற சில பத்திரிகைகள் நெஞ்சை நிமிர்த்தி நின்றன.
இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைவர் ராம்நாத் கோயங்காவுக்கும், பாம்பே டையிங் நிறுவனத்தின் தலைவர் நுஸ்லி வாடியாவுக்கும் இடையில் நல்ல நட்பு இருந்தது மற்றும் ராம்நாத் கொஞ்சம் வலது சாரி சிந்தனை கொண்டவராக இருந்ததால் தான், இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் இப்படி கடுமையாக அம்பானியை எதிர்த்து எழுதியதாகவும் சில விமர்சனங்கள் இன்று வரை முன்வைக்கப்படுகின்றன.
ஆனால் எதார்த்தத்தில், இந்தியன் எக்ஸ்பிரஸ் தலைவர் ராம்நாத் கோயங்கா மற்றும் திருபாய் அம்பானிக்கு இடையில் நல்ல நட்பு இருந்தது. முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி ராம்நாத்தை தாத்தா என்றழைக்கும் அளவுக்கு அம்பானி குடும்பம் அவர் மீது மரியாதை வைத்திருந்தது.
நுஸ்லி வாடியாவோடும் நல்ல நட்பு கொண்டிருந்த ராம்நாத் கோயங்கா, ஒருநாள் எதேச்சையாக வியாபாரத்தைப் பற்றிக் கேட்டார். அப்போது வாடியாவின் மனைவி, ரிலையன்ஸ் நிறுவனம் கொடுக்கும் அழுத்தத்தைக் குறித்தும், இந்தியன் எக்ஸ்பிரஸ் உட்படப் பல பத்திரிகைகள் பாம்பே டையிங்கை விமர்சிப்பது குறித்தும் விளக்கினார். ராம்நாத் பெரிதாக பதில் ஏதும் கூறாமல் அச்சந்திப்பு முடிந்தது.
திருபாயைச் சந்தித்த போது, வாடியா கூறிய பிரச்சனைகள் குறித்து ராம்நாத் பேசிய போது, அவர்களது நட்பு பகையாக வெடித்தது. அம்பானியின் சட்ட விரோத செயல்முறைகள் மற்றும் அரசைக் கையில் போட்டுக் கொண்டு ரிலையன்ஸ் செய்யும் காரியங்களை அம்பலப்படுத்தத் தீர்மானித்தார் ராம்நாத் கோயங்கா.
அம்பானியை அம்பலப்படுத்த, தன் பத்திரிகை குழும ஆசிரியர்களில் ஒருவரையோ, பத்திரிகையாளர்களையோ களமிறக்கவில்லை. மாறாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த, ராம்நாத் கோயங்காவின் நிறுவன கணக்கு வழக்குகளைக் கவனித்துக் கொண்ட பட்டயக் கணக்காளர் ஒருவரைத் தேர்வு செய்தார். அவர் பெயர் குருமூர்த்தி சுவாமிநாதன்.
இதற்கிடையில் சமாதான உடன்படிக்கைக்கு அவரது மகள் நீனாவின் திருமணத்தை பயன்படுத்தினார் திருபாய் அம்பானி. நுஸ்லி வாடியாவுக்கு நேரிலேயே சென்று பத்திரிகை வைத்து, நீனாவின் திருமணத்தின் போது இருவரும் சேர்ந்திருப்பது போன்ற புகைப்படங்களை மொத்த பத்திரிகை உலகத்துக்கும் பரப்பினார்.
குருமூர்த்தி, அம்பானியைக் குறித்து அமெரிக்காவுக்கெல்லாம் சென்று பல்வேறு நபர்களிடம் கலந்து பேசி, தனியார் புலனாய்வு நிறுவனங்களை எல்லாம் பயன்படுத்தி ஆதாரங்களைத் திரட்டி கட்டுரைகளை எழுதத் தொடங்கினார்.
ரிலையன்ஸ் பி டி ஏ ஆசிட் ஆலையைத் தொடங்கி லாபகரமாக இயங்க, அரசின் பி டி ஏ ஆசிட் ஆலையின் அளவைக் குறைத்து கடைசியில், அரசு தரப்பில் ஆலையே நிறுவப்படவில்லை எனக் குருமூர்த்தி இந்தியன் எக்ஸ்பிரஸில் குற்றம்சாட்டினார். இந்திய ஜவுளித் துறையில் பயன்படுத்தப்பட்டு வந்த பல முக்கிய ரசாயணங்களில் கணிசமான சந்தையை ரிலையன்ஸ் பிடித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டி விமர்சித்தார்.
அதனைத் தொடர்ந்து ரிலையன்ஸ் வெளியிடும் கடன் பத்திரங்களில் நடந்த குளறுபடிகள் மற்றும் ரிலையன்ஸின் துணை நிறுவனங்கள் மற்றும் அம்பானியின் நிறுவனங்களே ரிலையன்ஸ் பங்கில் முதலீடு செய்வது போன்ற சிக்கல்களையும் இந்தியன் எக்ஸ்பிரசில் விமர்சித்தார்.
ரிலையன்ஸ் நிறுவனம், தன் பாலியஸ்டர் யான் எந்திரங்களின் உதிரிப் பாகங்கள் என்று கூறி, வெளிநாடுகளிலிருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள எந்திர பாகங்களைக் கடத்தியதாகக் குற்றம்சாட்டி இந்தியன் எக்ஸ்பிரசில் கட்டுரை எழுதினார். சுருக்கமாக உதிரிப் பாகங்களைக் கொண்டு தனி ஆலையையே நிறுவப்பட்டதாகக் குற்றச்சாட்டினார். இதன் விளைவாக சுமார் 25,000 டன் மட்டுமே பாலியஸ்டர் யானை தயாரிக்க வழங்கப்பட்டிருக்கும் உரிமத்தை வைத்துக் கொண்டு, சுமார் 70,000 டன் பாலியஸ்டர் யானை ரிலையன்ஸ் தயாரிப்பதாகக் குற்றம்சாட்டினார்.
மற்றொரு பக்கம், மத்திய ரிசர்வ் வங்கியே தலையிட்டு, வங்கிகள் ரிலையன்ஸ் நிறுவனத்துக்குப் பல விதிமுறைகளை மீறி கடன்களை வாரி வழங்கியதைக் கண்டுபிடித்தது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust