ஒரே மாதிரியான சுழற்சி வாழ்க்கை, காலையில் இட்லி சாப்பிட்டு அலுவலகத்துக்குக் கிளம்பினால், அடுத்த 3 மணி நேர வேலை, ஒரு டீ அல்லது காபி, மீண்டும் ஒரு மணி நேர வேலை, பிறகு மதியம் புளி சோறு, தயிர்ச் சோறு உணவு, மீண்டும் வேலை, டீ காபி, வேலை வீட்டுக்குச் செல்வது... எனத் தேய்ந்த ரெக்கார்ட் போல வாழ்க்கை சோர்வாக இருக்கிறதா?
முதலில் மூன்று நாட்கள் விடுப்பு எடுத்து, மூட்டை முடிச்சுகளை எல்லாம் கட்டிக் கொண்டு ஒரு சுற்றுலா செல்லுங்கள் என நண்பர்கள் கூறுவர். அப்படி சுற்றுலா செல்லவிருக்கிறீர்கள் என்றால், அகும்பே நகரத்தை உங்கள் லிஸ்டில் வைத்துக் கொள்ளுங்கள்.
தென்னிந்தியாவின் சிரபூஞ்சி என்று அழைக்கப்படும் ஒரு அழகிய நகரம் தான் அகும்பே. ஆண்டுக்கு சுமார் 7,600 மில்லிமீட்டர் மழை பொழிவை எதிர்கொள்ளும் இந்த அகும்பே நகரம், கர்நாடகா மாநிலத்தில் சிமோகா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. பெங்களூரிலிருந்து சுமார் 380 கிலோ மீட்டர் பயணப்பட்டால், இறைவன் ஆசீர்வதித்த இந்த அழகிய எழில் கொஞ்சும் நகரத்தைச் சென்றடையலாம்.
அகும்பே நகரம் இந்தியாவிலேயே அதிக மழைப்பொழிவை எதிர்கொள்ளும் இரண்டாவது நகரம் என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. சோமேஸ்வர் கட் மலைப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த நகரம் மிகப்பெரிய பல்லுயிர் பெருக்கம் கொண்ட பிரதேசமும் கூட என்பது பலரும் அறியாத விஷயம்.
இந்தியாவின் மிக முக்கிய மழைக்காடுகளில் அகும்பே மழைக் காடுகளும் ஒன்று. மழைக்காடுகளை ஆராய்வதற்கு என்றே பிரத்யேகமாக இந்தியாவில் நிறுவப்பட்ட மழைக்காடு ஆராய்ச்சி மையம் அகும்பேவில் தான் இருக்கிறது. அதே ஆராய்ச்சி மையத்தில் தான் இந்தியாவிலேயே முதல் முறையாகத் தானியங்கி வானிலை ஆய்வு மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. மழைக்காடுகளின் தட்பவெப்ப நிலை மாற்றத்தைத் தொடர்ந்து கண்காணிப்பதே இதனுடைய பிரதான வேலை.
பல்வேறு மருத்துவ குணம் கொண்ட Garcinia, Myristica, Listsaea, Diospyrous... போன்ற செடிகொடிகளும் அகும்பே காடுகளில் கிடைக்கின்றன. இந்தியாவில் தொடர்ச்சியாக அமைந்திருக்கும் மிகப்பெரிய மழைக்காடு அகும்பேதான் என சில வலைத்தளங்கள் கூறுகின்றன.
இந்த காட்டில் மற்றொரு சிறப்பு என்னவென்றால், இது ராஜ நாகங்களின் தலைநகரமாக திகழ்வதுதான். அந்த அளவுக்கு ராஜநாகங்கள் இக்காட்டில் மிக அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. இருப்பினும் மனிதர்கள் மற்றும் நாகப் பாம்புகளுக்கு மத்தியிலான மோதல்கள் மிக அதிகமாகவே காணப்படுகின்றன.
ராஜ நாகங்களின் உடலில் ரேடியோ டிரான்ஸ்மிட்டர் கருவிகளை செயற்கையாகப் பொருத்தி அதை மீண்டும் காட்டுக்குள் விட்டு, இந்த ரேடியோ டிரான்ஸ்மிட்டர் கருவி மூலம் கிடைக்கும் தரவுகளை வைத்துக்கொண்டு, ராஜ நாகங்களை நிர்வகிக்கும் ஆய்வு இந்தியாவில் முதன்முதலில் முன்னெடுக்கப்பட்ட இடம் அகும்பே நகரம் தான்.
சரி அகும்பே நகரத்தில் சுற்றிப்பார்க்க என்ன இருக்கிறது
திரும்பும் திசையெங்கும் நீர்வீழ்ச்சிகள். குட்ல தீர்த்தம் நீர்வீழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றது. சொல்லப்பனால் குட்ல தீர்த்த நீர்வீழ்ச்சியை காண மேற்கொள்ளும் பயணமே ஒரு பிரமாதமான வாழ்க்கை பயணமாக அமைய வாய்ப்பிருக்கிறது. ஆனால் சகட்டுமேனிக்கு அட்டைப் பூச்சிகள் இருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.
குஞ்சிக்கல் நீர்வீழ்ச்சி, பர்கானா நீர்வீழ்ச்சி, ஒனக்கே அப்பி நீர்வீழ்ச்சி, ஜோகிகுன்டி நீர்வீழ்ச்சி... என அருவிகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம்.
சன்செட் பாயிண்ட் என்றழக்கப்படும் சூரிய அஸ்தமனத்தை பார்ப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து, ஒட்டுமொத்த அகும்பே நகரத்தையும் அதன் இயற்கை எழிலையும் பார்த்து ரசிக்கலாம் காலமும் சூழலும் கைகூடி வந்தால், வானம் தெளிவாக இருந்தால் அரபிக்கடலைக் கூட பார்த்து ரசிக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கலாம்.
ஹொய்சால சாம்ராஜ்யம் உச்சத்தில் இருந்த போது கட்டப்பட்ட கோயில்களைப் பார்த்து ஒரு வணக்கம் செலுத்தி வரலாம். அருமையான கட்டடக்கலை.
நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் அகும்பே நகரத்தை பார்க்க ஏதுவான காலமாக இருக்கும் என பல்வேறு வலைதளங்கள் பரிந்துரைக்கின்றன.
அகும்பே நகரம் மிகச்சிறிய ஒரு மலை வாசஸ்தலம் என்பதால் தங்குவதற்கு அத்தனை பெரிய வசதிகள் இல்லை. அகும்பே நகரத்திலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் உடுப்பி நகரத்திற்கு வந்தால், நன்றாக செலவு செய்து தங்குவதற்கு வசதியான சொகுசான ஹோட்டல்கள் தொடங்கி பட்ஜெட் லாட்ஜ்கள் வரை பல தங்குமிட வசதிகள் இருக்கின்றன.
அகும்பே நகரத்துக்குச் செல்பவர்கள், கட்டாயம் வெண்ணிலா சுவை கொண்ட தேநீரைப் பருக மறந்துவிடாதீர்கள். ஐயோ மழை, குளிர்ச்சி, டீ என்ற உடன் எச்சில் ஊறுகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp