திரௌபதி முர்மு இந்தியாவின் குடியரசுத் தலைவர் : யார் இவர்? - முழுமையான தகவல்கள்

பழங்குடியினர் பொதுவாக ஏழைகளாக உள்ளனர். அவர்கள் சமூகம், பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு ரீதியில் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டுள்ளனர். மேலும் அவர்களது தொலைதூர கிராமங்களில் சுகாதாரம் மற்றும் கல்விக்கான வசதிகள் இல்லை.
திரௌபதி முர்மு
திரௌபதி முர்முTwitter
Published on

திரௌபதி முர்மு என்ற பழங்குடியினப் பெண், இந்தியாவின் மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவியில் அமரக் கூடும். அவரது பதவிக் காலம் இந்தியாவின் ஒதுக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு உதவும் என்று பலர் நம்புகிறார்கள்.

15வது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக இந்தியாவின் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சுமார் 4,800 பேர் வாக்களித்தனர்.

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் திரௌபதி முர்மு எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை விட தெளிவான முன்னிலையில் உள்ளார். அவருக்கு ஆதரவாக 60% வாக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் பாஜக, தனது வேட்பாளரை வெல்ல வைப்பதற்கு, மத்திய மற்றும் மாநில சட்டமன்றங்களில் போதுமான இடங்களை வைத்திருக்கிறது. சில மாநிலச் சட்டசபைகளில் மற்ற பிராந்திய கட்சிகளின் ஆதரவையும் முர்மு பெறுவார் என அரசியல் ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

இந்திய அரசியலமைப்பு குடியரசுத் தலைவரைக் கௌரவமான அரச தலைவராக ஆக்குகிறது. அதே சமயம் அனைத்து உண்மையான அதிகாரங்களையும் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் குழுவிற்கு அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு வழங்குகிறது.

முர்முவின் நீண்ட கால அரசியல் வாழ்க்கை

முர்மு ஒடிசாவின் காடு சார்ந்த சந்தால் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். இந்த பழங்குடியினர் நான்கு மாநிலங்களில் பரவியுள்ளனர். பில்ஸ் மற்றும் கோண்டு பழங்குடியின மக்களுக்குப் (Bhils and Gonds ) பிறகு இந்தியாவின் மிகப் பெரிய பழங்குடி இனமாகச் சந்தால் பழங்குடியினர் இருக்கின்றனர்.

இந்தியா முழுவதும் பரவியுள்ள 698 சமூகங்களைச் சேர்ந்த 8 கோடியே 40 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பட்டியலின பழங்குடியினராக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் சமூகம், பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு ரீதியில் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டுள்ளனர். பழங்குடியினர் பொதுவாக ஏழைகளாக உள்ளனர். மேலும் அவர்களது தொலைதூர கிராமங்களில் சுகாதாரம் மற்றும் கல்விக்கான வசதிகள் இல்லை.

"அவரது தேர்தல் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இருக்கும். இது நாட்டிலுள்ள பழங்குடியின மக்களுக்கு நல்ல அதிர்ஷ்டம்" என்று அரசியல் அறிவியல் மாணவர் கிரண் குமார் சோரன் கூறுகிறார்.

முர்மு ஒடிசா மாநில அரசியலில் நுழைவதற்கு முன்பு ஆசிரியராகத் தன் பணியைத் தொடங்கினார். 2000 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் பாஜக சார்பில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். 2015 இல் கிழக்கு மாநிலமான ஜார்கண்டின் முதல் பெண் ஆளுநராக முர்மு நியமிக்கப்பட்டார். ஜூலை 2021 வரை அந்தப் பதவியிலிருந்தார்.

திரௌபதி முர்மு
பிர்சா முண்டா : உலகம் கொண்டாட வேண்டிய ஒரு நிஜ நாயகன் குறித்த சில தகவல்கள்

ஆளுநராக, முர்மு இரண்டு சர்ச்சைக்குரிய மசோதாக்களைத் திருப்பி அனுப்பினார். சோட்டாநாக்பூர் குத்தகை (CNT) சட்டம் மற்றும் சந்தால் பர்கானா குத்தகை (SPT) சட்டம், இரண்டும் பழங்குடியின மக்களது நிலத்தின் மீதான உரிமைகளை நீர்த்துப் போகச் செய்ய முயன்றதைக் கருத்தில் கொண்டு அரசிடம் திருப்பி அனுப்பினார்.

பட்டியலிடப்பட்ட பழங்குடியினர், மக்கள் தொகை விகிதத்திற்கேற்ப நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் இட ஒதுக்கீடு பெற்றிருக்கின்றனர். ஆனால் அவர்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக ஓரங்கட்டப்படுவதை நிவர்த்தி செய்வதற்கான முன்னேற்றம் மெதுவாகவே உள்ளது.

முர்முவை குடியரசுத் தலைவராக உயர்த்துவது பழங்குடியினரின் அரசியல் அபிலாஷைகளின் வெற்றியாகக் கருதப்படுகிறது. பல அரசாங்கங்களின் கீழ் நீண்டகாலமாகப் புறக்கணிக்கப்பட்டும் சுரண்டப்பட்டும் வந்த சமூகத்திற்கு இந்த வாய்ப்பை ஒரு திருப்பு முனையாகவும் சிலர் பார்க்கின்றனர்.

"அவரது நியமனத்தை நான் அடையாளப் பூர்வமானது என்று கூறமாட்டேன். இது மைய நீரோட்ட அரசியலிலும் தேசிய அரசியல் அமைப்பிலும் சட்டப்பூர்வமாகப் போராடுவதற்கான வாய்ப்பை அளிக்கிறது" என்று மும்பையைத் தளமாகக் கொண்ட டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸின் பேராசிரியரான ரிதம்பர ஹெப்பர் கூறுகிறார்.

திரௌபதி முர்மு - மோடி
திரௌபதி முர்மு - மோடிTwitter

இந்தியாவின் பழங்குடியினரை மேம்படுத்த முர்மு தேர்ந்தெடுக்கப்படுவது உதவுமா?

சில அரசியல் விமர்சகர்கள் முர்முவின் பதவி உயர்வு சாதாரண பழங்குடியினரின் வாழ்வில் ஏதேனும் மாற்றத்தைக் கொண்டு வருமா என்று சந்தேகிக்கின்றனர். கடந்த காலத்தில், ஒதுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை பின்னணியிலிருந்து வந்த முந்தைய குடியரசுத் தலைவர்கள் தங்கள் சமூகத்தவரின் கவலைகளை அரிதாகவே வெளிப்படுத்தினர்.

இந்தியாவின் இரண்டாவது தலித் குடியரசுத் தலைவராக தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இருக்கிறார். இவர் இந்து மதத்தின் சிக்கலான ஜாதிப் படிநிலையில் கடைசிப் படியில் இருக்கும் தலித்துகளுக்கு எதிரான அட்டூழியங்கள் பற்றிப் பேசியதே இல்லை என்று விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

2021 ஆம் ஆண்டில் மட்டும் தலித்துகளுக்கு எதிராக 50,291 குற்றங்கள் வெவ்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அரசாங்க புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ஒரு பெண் என்பதால் இந்தியாவில் பெண்களின் வாழ்க்கை மேம்படவில்லை என்பதை விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

திரௌபதி முர்மு
இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் சந்தால் ஆதிக்குடிகள் சமூகம் குறித்து தெரியுமா?

"ஒதுக்கப்பட்ட சமூகம் அல்லது குழுவிலிருந்து ஒரு தலைவரை உயர்த்துவது என்பது முழு சமூகமும் அல்லது குழுவும் பயனடையும் என்று அர்த்தமல்ல" என்று சந்தால் கவிஞரும் புது டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியருமான ஐவி இமோஜின் ஹன்ஸ்டாக் கூறுகிறார்.

"இந்தியாவின் பழங்குடியின மக்களின் வரலாறு அவர் மூலம் பொதுப் பார்வைக்கு வரக்கூடும் என்பது மட்டுமே நான் நம்பக்கூடிய ஒரே விஷயம். பதவியில் இருக்கும் போது அவருக்கு அதிகாரம் இல்லாவிட்டாலும், குடியரசுத் தலைவர் பதவியைப் பெறுவதன் மூலம் அவர் பழங்குடி மக்களின் மாற்றத்திற்கான கிரியா ஊக்கியாக இருக்க முடியும். " என்கிறார் ஹன்ஸ்டாக்.

திரௌபதி முர்மு
இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு : நாம் அறிய வேண்டிய 10 தகவல்கள்

ஆனால் முர்முவின் பதவியானது நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட பழங்குடியின உறுப்பினர்களைக் குடியரசுத் தலைவர் பதவிக்குக் கொண்டு வருவதைக் குறிக்கும் என்று பலர் நம்புகிறார்கள்.

"அவரது தேர்தல் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். மைய நீரோட்ட இந்தியாவில் பங்கேற்காத மற்றும் புறக்கணிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் நம்பிக்கையை அவர் நிரூபிக்க முடியும்," என்று ஜார்கண்டின் பள்ளி ஆசிரியர் சுரேஷ் முர்மு தெரிவிக்கிறார்.

கடந்த மாதம் பாஜக தலைமையிலான கூட்டணியால் அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது, ​​முர்மு தெரிவித்தார்: "எனக்கு ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. தொலைதூர மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடிப் பெண்ணான நான் ஒரு உயர் பதவி வேட்பாளராக வருவதைப் பற்றி கனவிலும் நினைக்கவில்லை."

குடியரசுத் தலைவர் ஜூலை 25ஆம் தேதி பதவியேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

திரௌபதி முர்மு
இந்திய குடியரசு தலைவர் : எவ்வளவு சம்பளம் தெரியுமா? அவருக்கான மற்ற சலுகைகள் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com