வரலாற்றில் RSS அமைப்பு சந்தித்த தடைகள் : ஒரு வரலாற்று பார்வை

தொடக்கத்தில் ஆர் எஸ் எஸ் ஒரு இந்து கலாச்சார அமைப்பாகவே தன்னை அழைத்துக் கொண்டது. இந்து கலாச்சாரத்தை மக்கள் மனதில் விதைப்பது, இந்து ஒழுக்கத்தை இளைஞர்கள் மத்தியில் பரவச் செய்வது, இந்து சமுதாயத்தை ஒருங்கிணைப்பது, இந்து தேசத்தை உருவாக்குவது இவர்களின் கொள்கைகளாக இருந்து வருகின்றன.
RSS அமைப்பு
RSS அமைப்புtwitter
Published on

இந்திய ஒன்றிய அரசால் பாபுலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்கிற இஸ்லாமிய அமைப்பு தடை செய்யப்பட்ட செய்தி நேற்றைய இந்திய தலைப்பு செய்தி. ஆனால் இதே போல ஒரு காலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தாய் கழகமாகக் கருதப்படும் ஆர் எஸ் எஸ் அமைப்பு இந்திய ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்ட வரலாறு தெரியுமா?

ஆர் எஸ் எஸ் அமைப்பு இந்தியாவில் மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற போது தடை செய்யப்பட்டதை பலரும் பரவலாக அறிந்திருக்கலாம். ஆனால் அதைத் தாண்டி, இரண்டு முறை வேறு சில காரணங்களுக்காகவும் தடை செய்யப்பட்டு, மீண்டும் தடை நீக்கப்பட்டது. எப்போது ஆர் எஸ் எஸ் தடை செய்யப்பட்டது? ஆர் எஸ் எஸ் எப்படி காங்கிரஸை ஆதரித்தது? வாருங்கள் பார்ப்போம்.

ஆர் எஸ் எஸ் வரலாறு:

ராஸ்ட்ரிய ஸ்வயம் சேவக் (ஆர் எஸ் எஸ்) என்கிற பெயரில், காங்கிரஸ் கட்சி மீது நம்பிக்கை இழந்த கேஷவ் பாலிராம் ஹெட்கெவார் என்பவர் ஆர் எஸ் எஸ் அமைப்பை 1925ஆம் ஆண்டு தொடங்கியதாக பல்வேறு வலைத்தளங்கள் மற்றும் செய்திகளில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. 

தொடக்கத்தில் ஆர் எஸ் எஸ் ஒரு இந்து கலாச்சார அமைப்பாகவே தன்னை அழைத்துக் கொண்டது. இந்து கலாச்சாரத்தை மக்கள் மனதில் விதைப்பது, இந்து ஒழுக்கத்தை இளைஞர்கள் மத்தியில் பரவச் செய்வது, இந்து சமுதாயத்தை ஒருங்கிணைப்பது, இந்து தேசத்தை உருவாக்குவது இவர்களின் கொள்கைகளாக இருந்து வருகின்றன.

1947 ஜனவரி காலகட்டத்தில், இந்தியா சுதந்திரம் பெறுவதற்கும், பாகிஸ்தான் என்கிற நாடு தனியாக பிரிக்கப்படுவதற்கு முன்பே, ஒருங்கிணைந்த பஞ்சாப் மாகாணத்தில் ஆர் எஸ் எஸ் அமைப்பு முதல் முறையாக தடையை எதிர்கொண்டது. 

கடும் விமர்சனத்தை முன் வைத்த ஜவஹர்லால் நேரு

இந்தியாவின் முதல் பிரதமராக, இந்தியாவை ஒரு சோசியலிச நாடாக வளர்த்து எடுக்க விரும்பியவர் ஜவஹர்லால் நேரு. இவர் எப்போதும் ஆர் எஸ் எஸ் அமைப்பை கடுமையாக விமர்சிக்கத் தவறியதில்லை. அப்படியே ஆர் எஸ் எஸ் அமைப்பைப் பாராட்டினாலும் வெகு அபூர்வமாகப் பாராட்டினார்.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, பாகிஸ்தான், ஜம்மு & காஷ்மீர் பகுதியைத் தாக்கிய போது, அங்கு ஆர் எஸ் எஸ் சேவகர்கள் சேவை செய்ய களமிறங்கினர். அதை நேரு வெளிப்படையாகப் பாராட்டினார் என்கிற இந்தியா டுடேவின் கட்டுரை ஒன்று. ஜவலர்ஹால் நேரு இறப்பதற்கு முன், 1963ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள ஆர் எஸ் எஸ் அமைப்புக்கு அழைப்புவிடுத்ததாகவும் அதே இந்தியா டுடே  கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர இந்திய அரசால் முதல் தடை - 1948

1948ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி, மகாத்மா காந்தி டெல்லியில் உள்ள பிர்லா ஹவுஸ் என்கிற இடத்தில் பிரார்த்தனைக்குச் செல்லும் வழியில், ஆர் எஸ் எஸ் அமைப்போடு தொடர்புடைய நாதுராம் கோட்ஸே, செமி ஆட்டோமேட்டிக் M1934 பெரெட்டா ரக துப்பாக்கியை வைத்து சுட்டார்.

RSS அமைப்பு
இலங்கை திரும்பினார் கோத்தபய ராஜபக்சே - மீண்டும் அரசியலில் ஈடுபடுவாரா?

நாதுராம் கோட்ஸே மூன்று முறை காந்தியைச் சுட்டதில், மகாத்மா காந்தியின் உயிர் அங்கேயே பிரிந்தது. இதனைத் தொடர்ந்து இந்திய ஒன்றிய அரசு, 1948 பிப்ரவரி 4ஆம் தேதி ஓர் அரசு உத்தரவின் மூலம் ஆர் எஸ் எஸ் அமைப்பு தடை செய்யப்பட்டது. அப்போது இந்திய அரசில் உள்துறை அமைச்சராக இருந்தவர் சர்தார் வல்லபாய் படேல். 

இந்தியாவில் இருக்கும் வெறுப்பு & வன்முறை செய்பவர்களைக் களையவும், இந்தியா என்கிற தேசத்தில் இருக்கும் சுதந்திரத்தை சீர்குலைக்கும் & இந்தியாவுக்குக் களங்கம் ஏற்படுத்துவதைத் தடுக்கவும் ஆர் எஸ் எஸ் அமைப்பைத் தடை செய்வதாகக் கூறினார் சர்தார் வல்லபாய் படேல். 

மேலும், இந்தியாவில் விரும்பத்தகாத & ஆபத்தான செயல்களில் இந்த அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர். இந்தியாவில் பல இடங்களில் ஆர் எஸ் எஸ் அமைப்பைச் சேர்ந்த தனிப்பட்ட உறுப்பினர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும், திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளை, சட்டவிரோதமாக ஆயுதங்களைச் சேகரித்தது போன்ற குற்றங்களில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் வல்லபாய் படேல் கூறினார்.

இதே சர்தார் படேல், ஷியாமா பிரசாத் முகர்ஜி என்கிற இந்துத்துவ தலைவருக்கு எழுதிய கடிதத்தில் "இந்த சதித்திட்டத்தில் இந்து மகாசபையைச் சேர்ந்த சில கடும்போக்குவாதிகள் ஈடுபட்டுள்ளனர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இந்திய அரசு மற்றும் இந்தியா என்கிற நாட்டுக்கு ஆர் எஸ் எஸ் என்கிற அமைப்பின் செயல்பாடுகள் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது தெளிவாகத் தெரிகிறது" என குறிப்பிட்டு இருந்தார். இதை எல்லாம் ஒரு பக்கம் வைத்துவிட்டுப் பார்த்தாலும், அண்ணல் காந்தியடிகளைக் கொன்ற அமைப்பு என, அன்றைய தேதிக்கு இந்தியாவில் ஆர் எஸ் எஸ் அமைப்பின் மீது மிகப்பெரிய அதிருப்தி நிலவியது.

கிட்டத்தட்ட 18 மாதங்களுக்குப் பிறகு, அதே சர்தார் வல்லபாய் படேல் ஆர் எஸ் எஸ் மீதான தடையை விலக்கினார். ஆர் எஸ் எஸ் அமைப்பு அரசியலிலிருந்து விலகி இருக்க வேண்டும் என ஓர் மறைமுக நிபந்தனை வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

இந்த ஒப்பந்தத்தை மதிக்கும் வகையில்தான் பாரதிய ஜன சங்க் (இன்றைய பாஜகவின் முன்னோடி) உருவாக்கப்பட்டதாக பல்வேறு கல்வியாளர்கள் மற்றும் அரசியல் பகுப்பாய்வாளர்கள் கருதுவதாகச் செய்திகளில் பார்க்க முடிகிறது. 

ஆனால், ஆர் எஸ் எஸ் அமைப்போடு நெருக்கமான தொடர்புகொண்ட ஆடிட்டர் குருமூர்த்தியோ இதை மறுக்கிறார். ஆர் எஸ் எஸ் அமைப்பு மீதான தடை 1949ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி எந்த வித நிபந்தனைகளுமின்றி நீக்கப்படுவதாக மொரார்ஜி தேசாய் பம்பாய் சட்டமன்றத்தில் பேசியதைச் சுட்டிக் காட்டுகிறார்.

இரண்டாவது தடை - 1975

இந்திரா காந்தி அம்மையார் இந்தியாவின் சக்தி வாய்ந்த தலைவராக வலம் வந்து கொண்டிருந்த காலம். 1975 ஜூன் 25ஆம் தேதி இந்திரா காந்தி இந்தியாவில் அவசரநிலையை பிரகடனப்படுத்தினார். அப்போது ஆர் எஸ் எஸ் அமைப்பு காங்கிரஸ் & இந்திரா காந்திக்கு எதிராக அரசியல் ரீதியில் தீவிரமாக செயல்பட்டு வந்தது. எனவே, இந்திய ஒன்றிய அரசு ஆர் எஸ் எஸ் அமைப்பு மீது தடைவிதித்தது.

இந்திரா காந்திக்கு ஆதரவு:

விஸ்வ இந்து பரிஷத் என்கிற அமைப்பு "ஏகத்மதா யாத்ரா" என்கிற பெயரில் ஒரு யாத்திரையை நடத்த இந்திரா காந்தி 1980களின் தொடக்கத்தில் அனுமதி கொடுத்து, அதை தொடங்கி வைக்கவும் ஒப்புக் கொண்டார். அந்த காலத்தில், அது வி ஹெச் பி அமைப்பின் மக்கள் கூட்ட நிகழ்வுகளில் பெரியது, முதன்மையானதாக அமைந்தது. அது ஆர் எஸ் எஸ் அமைப்பினருக்கிடையே இந்திரா காந்திக்கு இந்துக்கள் மீது கரிசனம் இருப்பதாக ஒரு கருத்தை உருவாக்கியது.

இந்திரா காந்தியோ, ஒரு நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் மக்களை ஒருங்கிணைக்க உதவும், இந்துக்கள் கடைபிடிக்கும் சடங்குகள், குறியீடுகள் அரசியல் லாபத்துக்கும், புகழுக்கும் பயன்படும் என்று கருதியதாக ஒரு விளக்கம் கூறப்படுகிறது.

இது இந்திராகாந்திக்கு இஸ்லாமியர்களின் சமூக பாதுகாப்பு குறித்த அக்கரை குறைவாக இருப்பதை வெளிக்காட்டியதாக எஸ் எஸ் கில் என்கிற மூத்த அரசு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு எல்லாம் ஒருபடி மேலே போய் "இந்து கலாச்சாரம் & காங்கிரஸ் கலாச்சாரம் ஒன்று தான்" என இந்திரா காந்தியின் நம்பிக்கைக்கு உரியவரான சி எம் ஸ்டீஃபன் 1983ஆம் ஆண்டு கூறினார்.

RSS அமைப்பு
"நாங்கள் வெளியிட்டது Paid News இல்லை" - பாஜக குற்றச்சாட்டை மறுத்த நியூயார்க் டைம்ஸ்

இந்தியாவில் உள்ள பெரும்பான்மை சமூகத்துக்கு ஓர் அநீதி இழைக்கப்பட்டால் அல்லது அவர்கள் தங்களுக்கான உரிமையைப் பெறமுடியவில்லை என்றால், அது இந்தியாவின் ஒற்றுமைக்கு ஆபத்தை விளைவிக்கும் என்கிற பார்வையை இந்திரா காந்தி கொண்டிருந்ததாக அதே இந்தியா டுடே இணையதள கட்டுரையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

1984 நவம்பர் 25ஆம் தேதி, நானாஜி தேஷ்முக் என்கிற முக்கிய ஆர் எஸ் எஸ் பிரமுகர் "பிரதிபக்‌ஷ்" என்கிற இந்தி மொழி பத்திரிகையில் எழுதிய கட்டுரை ஒன்றில், இந்திரா காந்தியை வெகுவாக பாராட்டி, அவர் ஆத்மா சாந்தியடையட்டும் என எழுதி இருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.

ராஜிவ் காந்திக்கு ஆதரவு:

எந்த காங்கிரஸ் கட்சி ஆர் எஸ் எஸ் அமைப்பைத் தொடர்ந்து இந்தியாவில் தடை செய்ததோ, அதே காங்கிரஸ் கட்சியை 1984ஆம் ஆண்டு ஆதரிப்பதற்காக, அன்றைய பிரதமர் வேட்பாளராக இருந்த ராஜிவ் காந்தி மற்றும் அன்றைய ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைவர் பாலாசாகெப் தியோராஸ் பல முறை சந்தித்துப் பேசிக் கொண்டதாகவும் இந்தியா டுடே கட்டுரையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இத்தனைக்கும் 1984 காலத்தில் பாஜக என்கிற கட்சியும் தேர்தலில் போட்டியிட்டது நினைவுகூரத்தக்கது.

இதற்கு ஆர் எஸ் எஸ் அமைப்பு இரண்டு கோரிக்கைகளை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.

1. பாபர் மசூதியிலிருந்த ராம ஜென்ம பூமியைத் திறந்துவிடுவது

2. ராமானந்த் சாகரின் ராமாயண டிவி சீரியல் தொடருக்கு சட்டென அனுமதி வழங்கப்பட்டு தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது.


பாபர் மசூதி இடிப்புகாகத் தடை - 1992

இந்திய அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாகக் கருதப்படும் பாபர் மசூதி இடிப்பு,1992ஆம் ஆண்டு டிசம்பர் காலத்தில் அரங்கேறியது. இந்த விவகாரத்தில் 1992ஆம் ஆண்டு மீண்டும் ஆர் எஸ் எஸ் அமைப்பு மீது இந்திய ஒன்றிய அரசு தடை விதித்தது.  

இந்த முறை பி வி நரசிம்மா ராவ் பிரதமராகவும், ஷங்கர் ராவ் பல்வந்த் ராவ் சவான் உள்துறை அமைச்சராகவும் இருந்தனர். தீர்ப்பாயத்தில் ஆர் எஸ் எஸ் மீது விதிக்கப்பட்ட தடையை நியாயப்படுத்த முடியாமல் இந்திய ஒன்றிய அரசு தடுமாறியது.

இந்திரா காந்தி, ராஜிவ் காந்தியைத் தொடர்ந்து பிரதமரான பி வி நரசிம்மா ராவ் அரசு ஆர் எஸ் எஸ் அமைப்பு மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்காமல் இருந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

நரசிம்மா ராவ் மற்றும் அப்போதைய ஆர் எஸ் எஸ் தலைவர் நெருங்கிய உறவிலிருந்ததாகவும், பாபர் மசூதி வழக்கை நீதிமன்றத்துக்கு வெளியே வைத்து தீர்த்துக் கொள்ள பேச்சு வார்த்தை நடத்தியதாகவும் அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

RSS அமைப்பு
ராகுல் காந்தியின் 41 ஆயிரம் ரூபாய் டி-சர்ட் : பாஜக விமர்சனம் - பதிலளித்த காங்கிரஸ்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com