டெல்லி காவல்துறையில் உதவி துணை ஆய்வாளராக (Assistant Sub Inspector) பதவியில் இருக்கும் 45 வயதான லலிதா மத்வால் குடியரசுத் தலைவரின் வீடு மற்றும் அலுவலகமாகத் திகழும் ராஷ்டிரபதி பவனின் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றி வருகிறார்.
இவர் சமீபத்தில் நெதர்லாந்து நாட்டில் உள்ள ராட்டர்டேம் நகரத்தில் நடந்து முடிந்த உலக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை தடகள விளையாட்டுப் போட்டிகள் 2022 (World Police and Fire Games) போட்டியில் இந்தியா சார்பாகக் கலந்து கொண்டு 5 தங்கப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்று ஒட்டுமொத்த இந்தியக் காவல் துறையையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.
2,000 மீட்டர் ஸ்டீபில் சேஸ் (உலக காவல்துறை போட்டிகளில் புதிய உலக சாதனை), 800 மீட்டர், 1,500 மீட்டர், 5,000 மீட்டர் ,10,000 மீட்டர் போன்ற போட்டிகளில் தங்கப் பதக்கமும் 4 * 100 மீட்டர் ரிலே போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார்.
லலிதா மத்வால் சுமார் 12 வயதாக இருக்கும் போது தடகளத்தின் மீது காதல் கொண்டார். தன் ஆவலை ஒரு பயிற்றுனரிடம் தெரிவித்த போது அவரும் லலிதாவுக்குப் பயிற்சி அளிக்க ஒப்புக்கொண்டார். அப்போதிலிருந்து புதுடெல்லியில் உள்ள தியாகராஜ் விளையாட்டு மைதானம் அவரது வீடானது.
1995 ஆம் ஆண்டு அவரது மூத்த சகோதரர் திடீரென உயிரிழந்ததால் ஒட்டுமொத்த குடும்பமும் மிகக் கடுமையான பொருளாதார சிக்கலை எதிர்கொண்டது. குடும்பத்தின் பணக்கஷ்டத்தைப் போக்கவும் தனக்கென ஓர் எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளவும் அரசுப் பணிகளை நோக்கி தன்னை தயார்ப்படுத்திக் கொள்ளத் தொடங்கினார் லலிதா மத்வால்.
அரசுப் பணிகள் என்ற உடன் மைதானத்தில் அதிக நேரம் செலவழிப்பதைக் கைவிட்டு மெல்லத் தட்டச்சு, ஸ்டெனோகிராபி போன்ற பல்வேறு படிப்புகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தொடர்ந்து முயன்றதன் பலனாக 2000 ஆம் ஆண்டு தில்லி காவல்துறையில் பணியில் சேர்ந்தார்.
காக்கிச் சட்டை பல்வேறு காவலர்களின் வாழ்க்கையில் ஒரு நேர்மறையான எண்ணத்தை விதைத்தது போல லலிதா மத்வாலின் வாழ்க்கையிலும் காக்கி மீண்டும் ஒரு புதிய நம்பிக்கையைக் கொடுத்தது. காவலர்களுக்கான பயிற்சியின் போது மிகச் சிறப்பாகப் பயிற்சிகளை மேற்கொண்டு சிறந்த கமாண்டோ என்கிற பட்டத்தையும் பெற்றார். லலிதாவின் கால்கள் மீண்டும் தடகளத்தை நோக்கி ஓடின.
மீண்டும் தன் தடகளப் பயிற்சியை உச்சக்கட்டத்திற்குக் கொண்டு சென்று பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய தடகளப் போட்டிகளிலும் மாரத்தான் போட்டிகளிலும் பங்கெடுத்தார். டெல்லியில் நடைபெற்ற ஏர்டெல் ஹாஃப் மாரத்தான், டாடா நிறுவனம் நடத்தும் மும்பை மாரத்தான் எனப் பல மாரத்தான் போட்டிகளில் பங்கெடுத்தார்.
இப்படி தடகளத்தில் மீண்டும் ஒரு உச்சத்தைத் தொடும் தருவாயில் தாயானார் லலிதா மத்வால். ஒரு விளையாட்டு வீரர் தொடர்ந்து ஆறு ஏழு மாதங்கள் பயிற்சி மேற்கொள்ளவில்லை என்றால் அவருடைய பார்ம் எந்த அளவுக்குச் சிதைந்து போகும், அவரால் மீண்டும் அந்த பார்முக்கு வர முடியுமா என்பதை ஒரு விளையாட்டு வீரரால் மட்டுமே உணர முடியும்.
தாயான பின் லலிதா மத்வாலின் உடல் எடை கணிசமாக அதிகரித்து இருந்தது. அவரால் தன் பழைய நிலையில் ஓடக் கூட முடியவில்லை.
"அப்போது நான் எடுத்த படங்களை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் இது நான்தானா என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடியாது" என்று வேடிக்கையாகக் கூறுகிறார் லலிதா.
பலமுறை தனக்குள் இருந்த நம்பிக்கை பாதிக்கப்பட்டதாகவும், இதெல்லாம் என்னால் செய்ய முடியுமா எனத் தன்னை தானே கண்ணாடியில் பார்த்து வருத்தப்பட்டுக் கொண்டதாகவும் அவரே தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையிடம் கூறியுள்ளார். ஆனால் அதையெல்லாம் கடந்து மீண்டும் தடகளத்தில் தன்னுடைய பழைய ஃபார்முக்கு வந்து இன்று பல தங்கப் பதக்கங்களை வென்று குவித்துள்ளார் லலிதா மத்வால்.
என் கணவர் ராஜேந்திர சிங் மத்வால் எனக்கு எப்போதும் ஊக்கம் அளித்து வந்தார் என லலிதா கூறியுள்ளார். நான் மீண்டும் நல்ல உடல் திறனோடு வர என் கணவர் எனக்கு மிகவும் உதவினார் என மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.
உங்கள் எதிர்காலம் என்ன என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது இந்த வயதில் என்னால் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுக்க முடியாது ஆனால் மிஷின் ஒலிம்பிக்ஸ் திட்டத்தின் கீழ் இளம் தலைமுறை வீரர்களுக்குப் பயிற்சி அளிக்க விரும்புகிறேன், அது எனக்கு மகிழ்வைத் தரும் எனக் கூறியுள்ளார் லலிதா மத்வால்.
விடாமுயற்சியில் விஸ்வரூப வெற்றி பெற்றுள்ள லலிதா மத்வாலுக்கும் அவரை தொடர்ந்து ஊக்குவித்த அவர் கணவர் ராஜேந்திர சிங் மத்வாலுக்கும் நம் பாராட்டுக்கள்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust