மதங்களுக்கு புத்திசம், இந்துயிஸம் என்று சொல்லிக் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் நியூடிசம் என்கிற சொல்லை நம்மில் பலர் இப்போது முதல் முறையாகக் படிக்கலாம் அல்லது முதல் முறையாகக் கேட்கலாம். எனவே நியூடிசம் என்றால் என்ன? என்கிற கேள்வியிலிருந்தே இதைத் தொடங்குவோம்.
ஒரு மனிதன் இயற்கையோடு மிக நெருக்கமாக இருக்க, பொது இடங்களைத் தவிர, தனியாக இருக்கும் போது ஆடைகளை அணியாமல் இருக்க விரும்புவது நியூடிசம் என்கிறது பிரிட்டானிகா.
இவர்கள் நேச்சரிசத்திலிருந்து சற்றே மாறுபட்டவர்கள். நேச்சரிஸத்தை பின்பற்றுபவர்கள், எல்லாவற்றையும் இயற்கையாகவே பெறுவர். உதாரணத்துக்கு குகைகளில் வாழ்வது, காடுகளில் விளைவதை உண்பது, ஆறுகளில் குளிப்பது போன்றவைகளை சொல்லலாம். இவர்கள் எல்லா இடத்திலும் நிர்வாணமாகவே இருப்பர்.
ஆனால் நியூடிசத்தில் தனியாக இருக்கும் போது மட்டுமே நிர்வாணமாக இருப்பர். நகர வாழ்கையை மற்ற மனிதர்களைப் போல் வாழ்வர்.
மனித உடலில் சூரிய ஒளி நேரடியாகப் படும் போது அதிக அளவில் வைட்டமின் டி சத்து கிடைக்கும். எனவேதான் உடற்பயிற்சி செய்யும் போது உடலில் 40 - 50 சதவீதம் வெளியே தெரியும் படி ஆடைகளை அணிந்து உடற்பயிற்சி செய்யச் சொல்வர். பொதுவாகவே வைட்டமின் டி சத்து ஒருவரின் மனநிலையை நன்றாக வைத்திருக்கும் என மருத்துவ வலைத்தளங்களில் கூறப்படுகிறது.
ஆடை அணியாமல் இருப்பதால் ஒருவரின் தராதரம், அந்தஸ்து போன்ற வெட்டி ஜம்பங்களைக் களைந்து எல்லோரோடும் சரிசமமாகப் பழக முடியும் என்கிறார்கள். இதனால் மன அழுத்தம் கணிசமாகக் குறையும் என்கிறார்கள்.
இறுக்கமாக ஆடைகளை அணிவது போன்ற சில பிரச்சனைகளால், நமக்கே தெரியாமல் ரத்த ஓட்டம் உடலில் தடை படுகிறது என நேச்சரைஸ் மீ என்கிற வலைதளம் சொல்கிறது. ஆடைகளை அணியாமல் இருக்கும் போது ரத்த ஓட்டம் குறிப்பிடத்தக்க அளவில் சீராவதாகவும் சொல்கிறது அத்தளம். இதனால் தோலில் உள்ள சுருக்கங்கள், வறட்சி எல்லாம் நீங்குவதாகவும் சொல்கிறார்கள்.
இதை எல்லாம் விட முக்கியமாக, நிர்வாணமாக இருப்பதால் உடலின் வெப்பநிலை குறைவதாகவும், இதனால் நல்ல தூக்கம் கிடைக்கும் என்றும் நேச்சரைஸ் மீ வலைதளம் சொல்கிறது.
மீண்டும் இந்தியாவில் உள்ள நியூடிசத்துக்கு வருவோம்.
சைவ சமயம், சமண சமயத்தில் நிர்வாணத்துக்கு மிகப்பெரிய மரியாதை கொடுக்கப்பட்டு இருக்கும் இதே இந்திய மண்ணில், ஒரு சாதாரண மனிதன் நிர்வாணமாக நடக்க முடியாது. அதையும் மீறி ஒருவர் பொதுவெளியில் நிர்வாணமாக நடந்தால், அது சட்டப்படி குற்றமாகக் கருதப்படுகிறது.
எனவே இந்தியாவில் நியூடிசத்தைப் பின்பற்றுபவர்கள், ரகசிய குழுக்களாக அல்லது சமூகங்களாக மட்டுமே பின்பற்றுகிறார்கள்.
நியூடிசத்தைப் பின்பற்றுபவர்கள் கூட, பல சமயங்களில் ஆண், பெண் என தனித்தனி குழுக்களாகச் செயல்பட்டு வருவதாகவும் வைஸ் என்கிற வலைத்தள கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
பூஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற 33 வயது பெண்மணி பெங்களூரில் வசித்து வருகிறார். அவருடைய கணவர் சற்று பழமைவாதத்தை கடைபிடிக்கும் குடும்பத்திலிருந்து வந்தவர். ஆனால் பூஜாவவோ நியூடிசத்தை பின்பற்றுபவர். ஒரு நண்பர் மூலம் கொல்கத்தா நகரத்தில் நியூடிசம் குறித்து தெரிய வந்து, கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஒரு நியூடிஸ்டாக வாழ்ந்து வருகிறார்.
பொது இடங்களில் எல்லாம் ஒரு சாதாரண மனிதரைப் போல ஆடைகளை அணிவார், ஆனால் தனியாக இருக்க வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், ஆடைகளைக் களைந்துவிட்டு நிர்வாணமாக இருப்பார். இது குறித்து அவர் கணவருக்குக் கூடத் தெரியாது.
இவரைப் போன்ற ஒத்த சிந்தனை கொண்ட நியூடிச இணையக் குழுவில் இருப்பவர்கள் தினமும் காலை நிர்வாணமாக தேநீர் குடிப்பது அல்லது காலைப் பணிகளை மேற்கொள்வது போன்ற படங்களைப் பதிவு செய்கின்றனர். மற்றவர்களும் நிர்வாண செல்ஃபி புகைப்படங்களோடு காலை வணக்கம் சொல்லி தங்கள் பணிகளைத் தொடங்குவார்கள் என்கிறார் பூஜா.
ஒரு சில தைரியமான நியூடிஸ்ட்கள், தங்கள் முகம் தெரியாத, அதே நேரத்தில் ஆபாசமற்ற வண்ணம், தங்கள் நிர்வாணப் படத்தை இன்ஸ்டாகிராம் போன்ற வெகுஜன சமூக ஊடகங்களிலேயே பதிவேற்றுகின்றனர்.
கொல்கத்தாவில் நியூடிசத்தை பின்பற்றத் தொடங்கியவர், இன்று நியூடிசப் பார்ட்டியில் தைரியமாக நிர்வாணமாக ஆண்கள் - பெண்கள் பாகுபாடின்றி சாதாரணமாகப் பழகும் அளவுக்கு வந்துவிட்டார்.
இது போன்ற நியூடிசப் பார்ட்டியில் ஆண், பெண் என எல்லா தரப்பினரும் இருப்பர். இசை, சினிமா, அரசியல், நகைச்சுவை, பொருளாதாரம், கல்வி... என எல்லாவற்றைக் குறித்தும் நல்ல உணவு & பானங்களோடு பேசுவர். ஆனால் அந்த விருந்தில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் நிர்வாணமாக இருப்பர் அவ்வளவு தான் வித்தியாசம்.
இப்படி நியூடிசத்தை பின்பற்றுபவர்கள் கூட, இணையத்தில் சந்திப்பவர்களை நேரில் பார்த்தால் சகஜமாகச் சந்தித்துப் பேச முடியாது என்கிறார் பூஜா. இணையவெளியில் நடக்கும் இந்த சந்திப்பில் கலந்து கொள்பவர்களுக்கே பல விதிமுறைகளை எல்லாம் விளக்கித் தான் கூட்டத்தை நடத்துகிறார்களாம்.
சில சமயங்களில் தவறான எண்ணத்தோடு கூட்டத்தில் பங்கெடுப்பவர்களும் இருந்திருக்கிறார்கள், இப்போதும் பங்கெடுக்கிறார்கள். ஆனால் அவர்களை எல்லாம் வடிகட்ட சில வழிமுறைகளை நியூடிசக் குழுவினர் கையாள்கின்றனர்.
அதே போலக் கூட்டத்தில் பங்கெடுப்பவர்களுக்கு விரைப்பு ஏற்பட்டாலோ அல்லது மத நீர் வடிந்தாலோ அதைத் துடைத்துக் கொள்ள அல்லது விரைப்பை மறைத்துக் கொள்ள ஒரு துண்டு வைத்துக் கொள்ளுமாறு கூறுகிறார்கள்.
தொடக்கத்தில் பங்கேற்பவர்கள் தயங்கினாலும், கொஞ்சம் காமம் தலையெடுத்தாலும் போகப் போக, மற்றவர்களின் கண்களை மட்டும் பார்த்துப் பேசும் அளவுக்குப் பக்குவப்பட்டுப் போகிறார்கள்.
அதோடு நியூடிசத்தை மேற்கொள்பவர்களின் புகைப்படம், காணொளி எல்லாம் இணையத்தில் கசிந்துவிடாமல் இருக்க, நியூடிச இணையக் கூட்டத்தில் பங்கெடுப்போர் எந்த அதிநவீன சாதனங்களையும் கொண்டு வரவேண்டாம் என அறிவுறுத்துகிறார்களாம்.
நியூடிச கூட்டத்தை நடத்துவோர் மட்டுமே புகைப்படம் அல்லது காணொளியை எடுத்துப் பங்கெடுத்தவர்களுக்குப் பகிர்வார்களாம். அப்படி புகைப்படம் எடுக்கும் போது கூட, அது எந்த ஒரு பங்கேற்பாளரின் ஆண் அல்லது பெண் குறியைப் பிரதானமாகக் காட்டாத படி எடுக்கிறார்கள்.
இப்படி இந்தியாவில் கோவா, போபால், கொல்கத்தா போன்ற நகரங்களைத் தாண்டி, தமிழ் நாட்டில் உள்ள சென்னை, கோவை போன்ற நகரங்களிலும் நியூடிச இணைய வெளி சந்திப்புகளை பூஜா நடத்தியுள்ளாராம்.
இந்தியா மட்டுமின்றி பல வெளிநாடுகளில் நியூடிசம் ஒரு தனி வழிமுறையாக வாழ்ந்து வருகிறார்கள். சில நாடுகளில் ஒட்டுமொத்த குடும்பமே நியூடிசத்தைப் பின்பற்றி வாழ்கிறார்கள் என்கிறது வைஸ் வலைத்தளம்.
இந்தியாவைப் பொறுத்தவரைக் கலாச்சாரம் என்கிற பெயரில் இன்னும் கணிசமான மக்கள், நிர்வாணமாகச் சுற்றித் திரிவதை ஏற்பதில்லை. காதலர் தினத்தன்று ஆணும், பெண்ணும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாலே தாலியைக் கொடுத்துக் கட்டச் சொல்லும் கும்பலைக் குறித்து நாம் செய்திகளில் படித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.
இந்தியச் சமூகத்தில் ஆடை என்பது மரியாதையோடு தொடர்புடைய ஒன்றாகவே பன்னெடுங்காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒருவர் ஆடை அணிந்திருந்தாலும் அவர் தன் உடலை எவ்வளவு வெளிக்காட்டுகிறார் என்பதைப் பொருத்து அவருக்கான மதிப்பு மரியாதை எல்லாம் தீர்மானிக்கப்படுகிறது.
உதாரணத்துக்கு ஒரு நடிகை சிறப்பாகப் பட்டுப்புடவை அணிந்திருந்தால் கூட, ஜாக்கெட் ஏன் முழு கைக்கு இல்லை என சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பும் பூமர் அங்கில், ஆண்டிகளை இந்த நொடி கூட ட்விட்டர், ஃபேஸ்புக்கில் பார்க்க முடியும். சுருக்கமாக, இந்தியா இதுவரை நிர்வாணமாக வாழ விரும்புவோருக்கு ஆதரவான சூழலைத் தருவதில்லை.
மிலிந்த் சோமனைக் குறித்து நாம் அவ்வப்போது செய்திகளில் படித்திருப்போம். அவரும், 1992ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா யுனிவர்ஸ் போட்டியில் முதலிடமும், மிஸ் யுனிவர்ஸ் சர்வதேசப் போட்டியில் இரண்டாவது இடமும் பிடித்த மாடல் அழகி மது சாப்ரேவும், 1995ஆம் ஆண்டு இணைந்து காம சூத்ரா என்கிற ஆணுறை விளம்பரத்தில் நிர்வாணமாக நடித்தனர். அவர்கள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்தகாலத்தில் அது பத்திரிகைகளில் பெரிதும் பேசப்பட்டது.
அதே போலக் கடந்த 2020ஆம் ஆண்டு, மிலிந்த் சோமன் நிர்வாணப் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய குற்றத்துக்காக அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.
அவ்வளவு ஏன், இதே 2022ஆம் ஆண்டில், சில மாதங்களுக்கு முன், இந்தி மொழி சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான ரன்வீர் சிங், கிட்டத்தட்ட முழு நிர்வாணமாக ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியதற்காக அவர் மீது புகார்கள் கொடுக்கப்பட்டன என்றால், இந்தியாவில் நிர்வாணம் குறித்த பார்வை எப்படி இருக்கிறது என்பதை நீங்களே பார்த்துக் கொள்ளலாம்.
சமூகம் ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் ஒரு பக்கம் இருக்கட்டும். ஒருவருக்கு நியூடிசம் பிடித்தால் அவரை, அவரது சொந்தக் குடும்பம் எப்படிப் பார்க்கும் என்பதற்கும் ஒரு உதாரணத்தை வைஸ் வலைதளக் கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறது.
ஒடிஷா மாநிலத்தின் ஜார்சிகுடா மாவட்டத்தைச் சேர்ந்த சிங் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் 2000ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் நியூடிசம் குறித்து தெரிய வந்து, அதைப் பின்பற்றத் தொடங்கினார்
காலப் போக்கில் அவரது மனைவியும் நியூடிசத்தை ஏற்றுக் கொண்டார். இயல்பாகவே தன் மனைவி குறைவான ஆடைகளையே உடுத்துவார் என்றும், ஏன் இப்படி நிர்வாணமாக இருக்க விரும்புகிறாய் அல்லது குறைவான ஆடை உடுத்த விரும்புகிறாய் என சிங் தன் மனைவியிடம் கேட்ட போது "நான் ஆடை அணியவில்லை எனில், என்னால் நன்றாகச் சுவாசிக்க முடிகிறது" என்று கூறுவாராம்.
இந்த அளவுக்குக் கணவனும் மனைவியும் புரிதலோடு நியூடிசத்தை அணுகி வாழ்ந்து வந்த போதிலும், 2018ஆம் ஆண்டு ஒரு தாய்லாந்து பத்திரிகையில் நியூடிசம் குறித்த கட்டுரை ஒன்றில் சிங்கின் படம் பிரசுரமாகிவிட்டது. அது மெல்ல இந்தியாவுக்குப் பரவி, கடைசியில் சிங் குடும்பத்தினர் மத்தியிலேயே பரவிவிட்டது.
அவரைத் திட்டித் தீர்க்காத குடும்ப உறுப்பினர்கள் இல்லை, அவரை அவமானப்படுத்தாத நபர்கள் இல்லை எனலாம். அந்த சம்பவத்துக்குப் பிறகு சிங், நியூடிசக் கூட்டங்களில் பங்கெடுப்பதில்லை என வருத்தத்தோடு வைஸ் வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்தியாவில் இன்றைய தேதிக்கு நியூடிசத்தை கோடி கணக்கில் அல்லது லட்சக் கணக்கிலான மக்கள் பின்பற்றவில்லை என்றாலும், குறைந்தபட்சம் ஆயிரக் கணக்கிலான மக்களாவது பின்பற்றுகிறார்கள் என உறுதியாகக் கூற முடியும் என்கிறார் சிங்.
ஒருவர் நியூடிசத்தை பின்பற்ற விரும்புகிறார் என்றால், அவர் நியூடிசத்தைத் தொடர, அதை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு நம் மனநிலை மாற வேண்டும் என்கிறார் சிங். உண்மைதான் மற்றவர்கள் வாழ்கையையும், அவர்களுடைய தேர்வையும் விமர்சிக்க நாம் யார்..?
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust