இந்தியாவிற்கு வரவழைக்கப்பட்ட ஆப்பிரிக்க சிறுத்தைகள் : அரசு செய்தது சரியா? தவறா?

இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நமீபியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த வன உயிரின பாதுகாவலர்கள் இதில் பங்கேற்றனர். இந்தியாவின் மேற்குப் பகுதி மற்றும் மத்தியப் பகுதியில் எத்தனை சிறுத்தைகள் அறிமுகப்படுத்தப்படலாம் என மதிப்பீடு செய்வதாக அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
Cheetah
CheetahCanva
Published on

சமீபத்தில் நமீபியாவில் இருந்து இந்தியா கொண்டு வரப்பட்ட ஐந்து பெண் மற்றும் மூன்று ஆண் சிறுத்தைகளை, மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவுக்குள் விடுவித்தார் பிரதமர் நரேந்திர மோடி.

வழக்கம் போல, இந்திய அரசின் இந்த நடவடிக்கையை ஒருசாரார் ஆதரிக்கவும், மற்றொரு சாரார் எதிர்த்தும் வருகின்றனர். சிறுத்தை அறிமுகத்தை எதிர்ப்பவர்கள், இந்தியாவில்  அழிவின் விளிம்பில் இருக்கும் எத்தனையோ உயிரினங்களைக் காக்க வேண்டியுள்ளது. அதை எல்லாம் விட்டுவிட்டு சிறுத்தைகள் மீது கவனம் செலுத்துவது ஏன் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

இந்தியாவில் சிறுத்தைகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் ஏதோ வெள்ளிக்கிழமை திட்டமிட்டு திங்கட்கிழமை நிறைவேற்றப்பட்ட திட்டமல்ல. கிட்டத்தட்ட பல தசாப்தங்களுக்கு மேலாக இத்திட்டம் குறித்து பேசப்பட்டும், ஆலோசனைகள் பெறப்பட்டும் வருகிறது.

70களில் துவங்கிய பேச்சுவார்த்தை:

1970களிலேயே இந்தியா ஈரானோடு வனவிலங்குகள் பரிமாற்றம் குறித்து பேசி வந்தது. ஈரான் இந்தியாவுக்கு சில ஆசிய சிங்கங்களைக் கொடுக்கும், பதிலுக்கு இந்தியா சில ஆசிய சிறுத்தைகளைக் (Acinonyx jubatus venaticus) கொடுக்கும் என பேசப்பட்டு வந்ததாக இந்தியா டைம்ஸ் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் அந்த ஒப்பந்தம் நிறைவேறவில்லை, 1979ஆம் ஆண்டு ஈரானில் ஷா வம்சத்தினர் மக்கள் புரட்சியால் ஆட்சியிலிருந்து  இறக்கப்பட்டனர்.

2009ஆம் ஆண்டு மீண்டும் சிறுத்தைகளை இந்தியாவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக சில முன்னெடுப்புகள் நடந்தன. குறிப்பாக ஆப்பிரிக்க சிறுத்தைகள் நமீபியா மற்றும் தென் ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட பேச்சுவார்த்தைகள் நடந்தன. 2009 செப்டம்பர் 9 & 10 தேதிகளில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கஜ்னெரில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நமீபியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த வன உயிரின பாதுகாவலர்கள் இதில் பங்கேற்றனர். இந்தியாவின் மேற்குப் பகுதி மற்றும் மத்தியப் பகுதியில் எத்தனை சிறுத்தைகள் அறிமுகப்படுத்தப்படலாம் என மதிப்பீடு செய்வதாக அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

எப்படி குனோ - பல்பூர் வன உயிரின சரணாலயம் தேர்வு செய்யப்பட்டது?

2010ஆம் ஆண்டு வெளியான அறிக்கை ஒன்றில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள குனோ - பல்பூர், ஷாகர் (Shahgarh), நாருதேஹி வன உயிரின சரணாலயம் போன்ற இடங்களில் சிறுத்தைகள் அறிமுகப்படுத்தப்படலாம் என கள ஆய்வின் அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. 

ஆனால் சிறுத்தைகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன், இந்த மூன்று இடங்களும் முறையாக, போதுமான இயற்கை வளங்களோடு தயார்ப்படுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதோடு சிறுத்தைகள் விஷயத்தில் இந்திய ஒன்றிய & மாநில அரசு முழு ஈடுபாட்டோடு இருப்பதை உறுதிப்படுத்தும் விதத்தில், நிதி ஒதுக்கீடு, வேலைக்கு ஆட்களை அமர்த்துவது போன்ற விஷயங்களைச் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. 

இதற்கு மத்தியில் 2012 - 13 காலகட்டத்தில், குனோ வனவிலங்கு சரணாலயத்தில் சிறுத்தைகள் அறிமுகப்படுத்தப்படுவது தொடர்பான வழக்கில், சிறுத்தைகளை கொண்டு வரும் திட்டத்துக்கு தடைவிதித்தது உச்ச நீதிமன்றம்.

Cheetah
உக்ரைன் ரசியா போர் : இந்தியாவுக்கு ஏற்பட போகும் பாதிப்பு என்ன ?

2020ஆம் ஆண்டு அனுமதி:

கடந்த 2020 ஜனவரியில், இந்தியாவில் சிறுத்தைகளை பரிசோதனை அடிப்படையில், மிகுந்த கட்டுப்பாடுகளோடு அறிமுகப்படுத்த உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது. 

இந்த அனுமதியைத் தொடர்ந்துதான், தற்போது இந்தியாவில் சிறுத்தைகளைக் கொண்டு வர முடிந்தது. இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, சிறுத்தை வழக்கம் போல வனத்தின் வேட்டை உயிரினமாக பரிணமிப்பது, கடந்த காலங்களில் எங்கெல்லாம் சிறுத்தைகள் சுற்றித் திரிந்தனவோ, அங்கெல்லாம் மீண்டும் சிறுத்தைகள் வாழ்வதை உறுதி செய்வது, அதோடு உலக அளவில் சிறுத்தைகளின் பாதுகாப்புக்கு பங்களிப்பது போன்றவை இதன் நோக்கமாக இருக்கின்றன.

Cheetah
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்கும் நாடுகளில் முதலிடம் யார் தெரியுமா?

திட்டம் ஓகே - செயலில் இல்லை:

மேலே குறிப்பிட்ட திட்டம், அதற்கான நோக்கம் எல்லாம் பிரமாதமாக இருக்கின்றன, ஆனால் அத்திட்டத்தை நிறைவேற்றத் தேவையான விஷயங்கள் செயல்படுத்தப்படவில்லை என்பது கடந்த 2022 ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட செயல் திட்டத்தில் தெளிவாகத் தெரிந்தது.

குனோ வனவிலங்கு சரணாலயத்தில் மட்டுமே சிறுத்தைகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அங்கு கூட 36 சிறுத்தைகள் மட்டுமே வாழ முடியும் என்றும் கூறப்பட்டன.

அப்படியே சிறுத்தைகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் தன்னிச்சையாக வாழ்வது சிரமம் என கூறப்பட்டது. அதீத பொருட்செலவில் குனோ சரணாலயம் மேம்படுத்தப்பட்டு தற்போது ஒரு சஃபாரி பூங்கா போல மாற்றப்பட்டுள்ளது. 

சில இடங்களில், தீவிர கண்காணிப்பு மற்றும் நிர்வாகத்துக்குப் பிறகும், மிக சிறிய எண்ணிக்கையிலான சிறுத்தைகள் மட்டுமே உயிர் வாழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒட்டுமொத்த இந்திய ஒன்றிய அரசுக்கும் மிகப்பெரிய அளவில் பண நஷ்டத்தைத் தான் ஏற்படுத்தும். 

அதோடு மிகக் குறைவான எண்ணிக்கையில் சிறுத்தைகள் அறிமுகப்படுத்தப்படுவது இந்திய வனவிலங்கு சூழலியலில் பெரிய மாற்றங்கள் எதையும் கொண்டு வந்துவிடாது. மேலும் ஆப்பிரிக்கச் சிறுத்தைகள் எந்த வித அறிவியல் அறிக்கைகள் அல்லது சூழலியல் பரிந்துரைகள் அடிப்படையில் கொண்டு வரப்படவில்லை.

சிறுத்தைகளுக்கு எந்த வித தேசிய பாதுகாப்பு முன்னுரிமையும் இல்லாத காலத்தில் ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. துரதிர்ஷ்டவசமாக இந்த விஷயம், அவசரமாக பாதுகாப்பைக் கோரும் பல விஷயங்களிலிருந்து திசைதிருப்புவதாகவே அமையும். இதில் ஆசிய சிங்கங்கள் இடமாற்றப் பரிந்துரையும் அடக்கம்.

Cheetah
பிரதமர் மோடி பயன்படுத்திய கேமராவின் லென்ஸ் மூடப்பட்டு இருந்ததா? - உண்மை என்ன? |Fact Check

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com