உலகிலேயே தேநீர் என்கிற டீ-யை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம். சமீபத்தில் டீ போர்ட் ஆஃப் இந்தியா (Tea Board of India) என்கிற அமைப்பு எடுத்த கருத்துக்கணிப்பில், இந்தியாவில் உள்ள சுமார் 88 சதவீத குடும்பங்கள் தேநீர் அருந்துகிறார்கள். இந்தியாவில் உள்ள மக்களில் சுமார் 64% பேர் தேநீர் குடிக்கிறார்கள் என்கிறது கருத்து கணிப்பு.
இந்தியாவைப் பொறுத்தவரை டி என்பது ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் அடைத்து விட முடியாத பானம். எனவே டீ என்றாலே தண்ணீர், பால், சர்க்கரை, டீத் தூள் அல்லது காய வைத்த தேயிலை... என பொதுமைப்படுத்திவிட முடியாது.
உதாரணமாக கேரளாவில் பால் சேர்க்காமல் தயாரிக்கப்படும் டீ, கட்டன் என்று அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் பால் தண்ணீர் டீ தூள் சேர்த்து தயாரிக்கப்படும் டீயிலேயே சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி கூட கலக்கப்படுகிறது.
வட இந்தியாவின் பல மாநிலங்களில் பல்வேறு சுவை சேர்க்கப்பட்ட தேநீர்கள் தயாரிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் மசாலா டீக்கும், வட இந்தியாவில் தயாரிக்கப்படும் மசாலா டீக்கும் 10 வித்தியாசங்களைச் சொல்ல முடியும். அந்த அளவுக்கு இந்தியர்கள் நாவில் ஊறிப் போன, அதே நேரத்தில் பலதரப்பட்ட தனித்தன்மை கொண்ட ஒரு பானம். ஏற்கனவே புழக்கத்தில் உள்ள டீ வகைகள் போக, புதிது புதிதாக ரெசிபிக்களும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
எனவே இந்தியாவில் டீக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே இந்தியாவில் டீ உற்பத்தியும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக செய்திகளில் பார்க்க முடிகிறது.
இந்தியாவில் வெறுமனே தேயிலை உற்பத்தி மற்றும் நுகர்வை தாண்டி பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கூட டீ விற்று கல்லா கட்டி வருகின்றன.
இந்தியாவில் உள்ள பல சராசரி இளைஞர்களுக்கு கனவாக இருக்கும் முதுகலை வணிக மேலாண்மை (எம் பி ஏ) படிப்பை முடித்துவிட்டு ஒரு பெரும் நிறுவனத்தில் வேலை பார்க்க வேண்டும் என்பதுதான் ப்ரஃபுல் பில்லோரின் கனவு.
ஆனால் கடந்த 2017 ஆம் ஆண்டு எம்பிஏ சாய் பாலா என்கிற பெயரில் டீக்கடையை தொடங்கிய பில்லோர் 2019 - 20 நிதியாண்டிலேயே சுமார் 3 கோடி ரூபாய் வியாபாரம் செய்து இருந்ததாக சில ஊடகங்களில் செய்திகளில் பார்க்க முடிகிறது. இப்போது ப்ரஃபுல் பில்லோருக்கு இந்தியாவின் பல நகரங்களில் தன் எம் பி ஏ சாய்வாலா கடைகளை திறந்து இருக்கிறார்.
அஹமதாபாத் நகரத்தில் வாழும் இவர் போபால், ஸ்ரீநகர், சூரத், டெல்லி... என சுமார் 100 நகரங்களுக்கு மேல் தன் டீ கடையை நடத்தி வருகிறார். இந்த ஆண்டு நிறைவடைவதற்குள் மேலும் 100 கடைகளை திறக்க இருப்பதாக ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அவர் கனவு கண்டு கொண்டிருந்த முதுகலை வணிக மேலாண்மை படிப்பை நிறைவு செய்யாத மனிதர். இப்போது இந்தியாவின் புகழ் பெற்ற எம்பிஏ கல்லூரிகளான ஐ ஐ எம் போன்ற பல கல்வி நிறுவனங்களில் சிறப்பு உரையாற்றும் அளவுக்கு வளர்ந்து இருக்கிறார்.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு வந்த அமுலிக் சிங் பெஜ்ரால் 2010 ஆம் ஆண்டு சாய் பாயின்ட் என்கிற டீக்கடையை தொடங்கினார். சொல்லப்போனால் இந்தியாவில் டீ விற்க தொடங்கிய முதல் ஸ்டார்ட் அப் இவருடையது தான் என்கிறது இந்தியா டைம்ஸ் கட்டுரை ஒன்று.
அருமையான, தரமான உட்பொருட்களை கொண்டு புத்துணர்ச்சி கொடுக்கும் டீ-யை தயாரித்து வாடிக்கையாளர்களை மயக்குவது தான் இவரின் நோக்கமாக இருந்தது. அதை செயல்படுத்தி நாளொன்றுக்கு சுமார் 3 லட்சம் குவளை டீ விற்கிறார் இவர்.
தற்போது இவருக்கு இந்தியாவில் சுமார் 100க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கின்றன. கடந்த 2018 ஆம் ஆண்டு இவருடைய விற்பனை 88 கோடி ரூபாயாக இருந்தது 2020 ஆம் ஆண்டு 190 கோடி ரூபாயாக அதிகரித்து இருக்கிறது என இந்தியா டைம்ஸ் பத்திரிகையில் வெளியான கட்டுரை ஒன்று கூறுகிறது.
இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 911 மில்லியன் கிலோ தேநீர் உற்பத்தி செய்யப்படுவதாகவும், அதன் மதிப்பு 33,000 கோடி ரூபாய் என்றால் அதன் நுகர்வை கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என நம்மை தரவுகளால் மிரளச் செய்கிறார் அமுலிக் சிங்.
நாம் முன்பே கூறியது போல, இந்தியா என்கிற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் பல மாநிலங்களும் பல வகையான டீ வகைகளை உருவாக்கியுள்ளனர்.
ஒவ்வொரு நபருக்கும் ஒரு தனிப்பட்ட சுவை இருக்கிறது. ஒருவருக்கு டீ திடமாக இருக்க வேண்டும், மற்றொருவருக்கு பால் சுவை கூடுதலாக இருக்க வேண்டும், ஒருவருக்கு இஞ்சி தூக்கலாக இருக்க வேண்டும்.... இப்படி ஒரு டீக்கடையில் ஒரு மனிதர் என்ன மாற்றங்களைக் கூறினாலும் தங்கள் இஷ்டத்திற்கு ஒரு டீயை போட்டுக் கொடுக்கும் டீ மாஸ்டரை தான் நாம் அதிகம் பார்த்திருப்போம்.
ஆனால் சாயோஸ் அதையே தன் வியாபாரமாக மாற்றிக் கொண்டது. கிட்டத்தட்ட 80,000க்கும் மேற்பட்ட தனிப்பட்ட டீ தேர்வுகளை அல்லது விருப்பங்களை சாயோஸ் வழங்குகிறது என அந்நிறுவன தரப்பிலிருந்து கூறப்பட்டிருக்கிறது.
இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி என்கிற இந்தியாவின் புகழ்பெற்ற பொறியியல் கல்லூரியில் படித்த நிதின் சலூஜா மற்றும் ராகவ் வர்மா இந்த நிறுவனத்தை கடந்த 2012 ஆம் ஆண்டு தொடங்கினர்.
குருகிராம் நகரத்தில் உள்ள சைபர் சிட்டியில் தங்கள் முதல் கடையை தொடங்கிய இந்த நண்பர்கள், தற்போது இந்தியா முழுக்க சுமார் 6 பெருநகரங்களில் 190 கடைகளை நடத்தி வருகின்றனர். 2022 ஆம் ஆண்டின் முடிவுக்குள் மேலும் 100 கடைகளை திறக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
வெறுமனே டீ என்றவுடன் தண்ணீர் டீத்தூள் பால் சர்க்கரை இஞ்சி மசாலா பொருட்கள் என்கிற வழக்கமான ரெசிப்பிகளை தாண்டி கிரீன் டீயில் மிளகாய் (green chilli tea) கலந்து கொடுப்பது மாங்காய் (aam papad tea) பயன்படுத்தி டீ தயாரிப்பது என பல புதிய சுவைகளையும் அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகின்றனர். இதுபோக மற்ற தின்பண்டங்கள், சாட் வகைகளும் இவர்கள் கடையில் கிடைக்கின்றன.
Statista நிறுவன தரவுகள் படி சாயோஸ் நிறுவனத்தின் வருவாய் 2020 நிதியாண்டில் சுமார் 1,000 கோடி ரூபாய் என்கிறது. சாயோஸ் நிறுவனத்தில் உலகப்புகழ் பெற்ற வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான டைகர் குளோபல் போன்ற சில நிறுவனங்களும் முதலீடு செய்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து, நன்கு படித்து ஒரு நல்ல வேலையில் சேர விரும்பிய ஒரு சராசரி மாணவர் தான் அனுபவ் தூபே. முதலில் சி ஏ என்கிற பட்டயக் கணக்காளர் படிப்பிலும் பிறகு ஐஏஎஸ், ஐபிஎஸ் இந்திய குடிமைப் பணிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வுகளிலும் தேர்ச்சி பெற முயன்று தோற்றுப் போனார்.
பிறகு தொழில் முனைவோர் ஆகலாம் என முடிவெடுத்து. என்ன வியாபாரம் செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தபோது உலக அளவில் தண்ணீருக்கு பிறகு அதிகம் உட்கொள்ளப்படும் ஒரு விஷயம் தேநீர் தான் என்கிற விஷயம் அவருக்கு தெரிய வருகிறது.
அனுபவ் தூபே அவருடைய நண்பர்கள் ஆனந்த் நாயக், ராகுல் படிடர் உடன் இணைந்து 2016 ஆம் ஆண்டு சாய் சுட்டா பார் என்கிற டீக்கடையை இந்தூர் நகரத்தில் ஒரு பெண்கள் விடுதிக்கு முன் திறந்தார்.
இவர்களுடைய தனி சிறப்பே குல்ஹட் (Kulhad) என்று அழைக்கப்படும் மண்பாண்டங்களில் தேநீரை பரிமாறுவதுதான். காலப்போக்கில் மெல்ல இஞ்சி டீ, சாக்லேட் டீ, மசாலா டீ, ஏலக்காய் டீ, துளசி டீ, குங்குமப்பூ டீ என பல டீகளை களத்தில் இறக்கினார்.
பல்வேறு ஏற்ற இறக்கங்களுக்கு பிறகு இன்று இந்தியாவில் உள்ள 190 நகரங்களில் சுமார் 400 கடைகளை திறந்து இருக்கிறார். ஐந்து கடைகள் வெளிநாடுகளில் செயல்பட்டு வருகின்றன. நாளொன்றுக்கு சுமார் 4.5 லட்சம் குல்ஹட் டீ விற்கப்படுவதாக சில வலைதள தரவுகள் கூறுகின்றன.
2012 ஆம் ஆண்டு கெளசல் துகர் என்பவரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், ஒரு பிரீமியம் டீ தூள் மற்றும் தேயிலை விற்கும் நிறுவனமாக மிளிர்ந்து கொண்டிருக்கிறது. டீ பாக்ஸ் பிராண்டு குறித்து இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா என பல நாடுகளில் ஏற்கனவே பிரபலமாக பேசப்பட்டு வருகின்றன.
இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடாவே டீ பாக்ஸ் நிறுவனத்தில் ஒரு கணிசமான தொகையை முதலீடு செய்திருப்பதாகவும் சில செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
2019 ஆம் ஆண்டு நிலவரத்திலேயே டீ பாக்ஸ் நிறுவனம் சுமார் 100 கோடி கப் டீயை 117 நாடுகளில் உள்ள மக்களுக்கு அனுப்பியுள்ளதாக இந்தியா டைம்ஸ் வலைத்தள கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
டி பி எஸ் வங்கி, ஆக்சல்... போன்ற பல வெஞ்சர் கேப்பிட்டல் நிறுவனங்களிடம் இருந்தும் முதலீடுகளை பெற்றுள்ளது டீ பாக்ஸ். சமீபத்தில் இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூரு நகரத்தில் கூட ஒரு கடையை திறந்திருக்கிறது டி பாக்ஸ் நிறுவனம்.
இந்தியா மற்றும் நேபாள் நாடுகளில், சுமார் 120 தேயிலை எஸ்டேட்டுகளில் இருந்து டீ பாக்ஸ் நிறுவனம் தனக்கான, முதல் தர தேயிலைகளை கொள்முதல் செய்து கொள்கிறதாம். ஒரு கிலோ தேயிலை அல்லது டீத்தூளின் விலை சுமார் 8,000 ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறது.
பங்கஜ் ஜட்ஜ் என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு சாய் தெலா என்கிற டீக்கடையை தொடங்கினார். வீட்டில் தயாரிக்கப்படுவது போல ஒரு சுவையான டீ யோடு சில தின்பண்டங்களையும் வழங்குவது தான் இவர்களின் ஸ்பெஷாலிட்டி.
அந்த தின்பண்டங்களோடு, அவர்கள் பரிமாறும் டீ பொருந்தி போவதே இவர்களுடைய பலமாக கருதப்படுகிறது. இந்தியாவில் சுமார் 9 மாநிலங்களில் 35 கடைகளை நடத்தி வருகிறார் பங்கஜ்.
பங்கஜ் ஒரு சராசரி இந்தியரை போல தன்னுடைய முதல் வியாபாரத்தில் தோற்று, பிறகு தான் டீக்கடை தொடங்கலாம் என்கிற யோசனை அவருக்கு வந்திருக்கிறது. பங்கஜின் இரண்டாவது தொழிலுக்கு தரன்ஜீத் சாப்ரா, பியூஸ் பரத்வாஜ், பிஷ்னீத் சிங் ஆகிய நண்பர்கள் உதவி இருக்கிறார்கள்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust