புத்த பூர்ணிமா: வைகாசி பொறந்தாச்சு

இந்தியா, நேபாளம், பூட்டான், பர்மா, வியட்நாம், மங்கோலியா, கம்போடியா, சிங்கப்பூர், தாய்லாந்து, திபெத், சீனா, கொரியா, லாவோஸ்,ஸ்ரீ லங்கா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் புத்த பூர்ணிமா ஒரு பெரிய பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது .
புத்தர்
புத்தர்twitter
Published on

“ யாரும் ஆசைப்படக்கூடாது என புத்தர் ஆசைப்பட்டார்” – என ஒரு வாசகம் பார்த்திருப்போம். புத்தர் இப்போது உயிருடன் இருந்திருந்தால், நான் அப்படி சொன்னேனாடா என கொஞ்சம் சத்தமாகவே கேட்டிருப்பார். வித்தியாசமாக யோசிக்கிறேன் என்ற பேர்வழிகளும், ரைமிங், டைமிங் பட்டி மன்ற பேச்சாளர்களும் உருவாக்கி, உலவ விட்ட வாசகம் அது.

அதற்கும் அர்த்தம் புரியாமல், “செம்ம்ம ல்ல” எனக் கைதட்டிவிட்டு, புத்தரையே ‘நீயே அப்படித்தான்..என்ன சொல்றியா’ என்ற மிதப்பில் அடுத்த ஆசைகளோடு நோக்கி அதிரடியாய் ஓடுவார்கள்.

இன்னும் சிலர் தன் கருத்துக்களை, வாட்சப் வள்ளல்கள் சொன்னவற்றை எல்லாம் அள்ளி வீசி, இறுதியில் ‘புத்தரின் பொன் மொழிகள்’ எனக் கீழே எழுதிப் பரப்பிவிட்டு செல்கிறார்கள். அவரவர்களாக மாறாமல், எந்த மாற்றமும் வந்துவிடப்போவதில்லை.

Buddha
Buddhatwitter

“புத்தருக்கு போதி மரத்தடியில் ஞானம் கிடைத்தது” இது மட்டுமே மாணவர்கள் மனதில் காலங்காலமாகப் புகுத்தப்பட்டது. இன்று புத்தர் பொம்மைகளை விதம் விதமான வடிவத்தில் காணும்போது, சில தேடல்கள் இருக்கும் அடுத்த தலைமுறையினர் தேடிப்பார்த்து அவரைப்பற்றி தெரிந்து கொள்கின்றனர்.

பெற்றோர்களும் அவரவர்களுக்குத் தெரிந்ததை அடுத்த தலைமுறையினருக்குத் தெரிவிக்கின்றனர். முன்பெல்லாம் பள்ளிப்பாடங்களில்.. புத்தர், கோபத்தில் வீட்டைவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார், கையில் பிச்சைப்பாத்திரம் ஏந்தி துறவறம் கொண்டார். அரசமரத்தடியில் உட்கார ஞானம் கிடைத்தது எனச் சொல்லி வைத்தார்கள்.

ஆனால் இன்னொரு ஆதாரப்பூர்வமான வரலாறுகள் வேறுவிதமாக சொல்கின்றன. சித்தார்த்த கௌதம் எனும் புத்தர் நேபாளத்தில் லும்பினி எனும் இடத்தில் பிறந்தது, புத்தகயா எனும் இடத்தில் அவர் புத்த நிலையை அடைந்தது, புத்தர் முக்தி அடைந்த நாள் என்று மூன்று நிகழ்வும் நடந்ததினம் வைகாசி பெளர்ணமி அன்றுதான் எனப் புத்தர்களால் நம்பட்டு, புத்த பூர்ணிமாவாக உலகெங்கிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

Buddha
Buddhatwitter

புத்தர் வரலாறு

அன்றைய காலத்தில்.. கோசல அரசின் சிற்றரசுகளாக கோலிய அரசும் சாக்கிய அரசும் இருந்தது. அந்த சாக்கிய சங்கத்தின் உறுப்பினராகச் சித்தார்த்தன் இருந்தார். தமிழக- கர்நாடகா காவிரி நீர் பிரச்சனை போல, இரு அரசுக்கும் நடுவில் ஓடும் ரோஹினி நதி நீர் தொடர்பாகப் பிரச்சனை எழுந்தது. அதைத் தீர்க்கும் பொருட்டு பெரிய வாக்கெடுப்பு முதல் வாக்குவாதம் வரை நடைபெற்றது. கோலியர்கள் மீது போர் தொடுக்கலாம் என முடிவானது. அதற்கு சாக்கிய சங்கத்தில் எதிர்ப்பு தெரிவித்தவர் நமது சித்தார்த்தன்.

போர் ஒரு தீர்வாகாது என சொல்லி, இவர் பக்கம் நியாயம் சொல்லப்பட.. இவர் பக்கம் வழிமொழியும் நபர்கள் குறைவே இருந்தது. இறுதியில் தோற்றும் போனார். சாக்கிய சங்கத்திற்கு எதிராக செயல்பட்டதற்காக சங்கத்தில் தண்டனை கொடுக்க வேண்டும் என்ற நிர்பந்தம் வந்தது. நானே துறவறம் மேற்கொண்டு போகிறேன். அதுவே ஒருவித நாடுகடத்தல்தான் எனச் சொல்லி சித்தார்த்தன் துறவறம் மேற்கொண்டார்.

காடுமேடு சுற்றி, ஆசிரமங்கள் பல அடைந்தார். தியான மார்க்கம் பயின்றார். சாக்கியம் சமாதி மார்க்கம் பல பயின்று வெளியேறினார். காயாய நகரின் ராஜ ரிஷியான நெகரியின் ஆசிரமத்தில் தங்கினார் சித்தார்த்தன். பல கடும் தவ பயிற்சிகளை மேற்கொண்டார். உண்ணா நோன்பிருந்து உடலெல்லாம் எலும்பும் தோலுமாக இருந்தது. சுமார் 35 வயதான காலத்தில் தன்னுடைய தக்கோலத்தைக் கலைத்து, கயாவை நோக்கிச் சென்றார். ஒரு அரசமரத்தடியில் சுமார் 40 நாட்கள் மெய் ஞான தவம் செய்தார். ஞான ஒளியும் கிடைத்தது.

Buddha
Buddhatwitter

பெளத்தம் பிறந்தது

மனிதர்கள் இருவகையான பயணங்களை மேற்கொண்டுள்ளனர். இல்லறம், பொருளாதாரம்,குடும்ப வாழ்க்கை, இன்பம் துன்பம் இப்படியான ஒரு பயணப்பாதை. மற்றொன்று, இறைவன், சொர்க்கம், நகரம், துரவு, பாவம், புண்ணியம் இப்படியான பயணம். இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு தெளிவாக, வழியாக பிறந்ததே பெளத்தம். சுமார் 45 ஆண்டுகள் பலதேங்கள் பயணப்பட்டார்.

துறவிகள், வேற்று மதத்தவர்கள், கொள்ளையர்கள், அமைதி தேடி அலைவோர், வாழ்வின் வழி தெரியாது அலைந்தோர், சாமானியன் முதல் அரசன் வரை எனப் பலரும் பெளத்தம் மதத்திற்கு மாறினார்கள். சுமார் 80 வயதானபோது தன் உயிர் நீத்தார் சித்தார்த்தன் எனும் கெளதம புத்தர். அவர் இறந்த நாளும் பிறந்த நாளும் வைகாசி பெளர்ணமி அன்றே. இந்த வருடம் 2022-ல் மே15ம் தேதி வருகிறது புத்த பூர்ணிமா.

Buddha
Buddhatwitter

உலகெங்கிலும் புத்த பூர்ணிமா

இந்தியா, நேபாளம், பூட்டான், பர்மா, வியட்நாம், மங்கோலியா, கம்போடியா, சிங்கப்பூர், தாய்லாந்து, திபெத், சீனா, கொரியா, லாவோஸ்,ஸ்ரீ லங்கா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் புத்த பூர்ணிமா ஒரு பெரிய பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது . இருப்பினும் ஒவ்வொரு நாடும் இந்தத் திருவிழாவை வித்தியாசமாகக் கொண்டாடுகிறது.

புத்த பூர்ணிமா அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் புத்த கயா வருகிறார்கள். இத்திருநாளில் புத்தகயாவில் புத்தரின் சிலை புனித நீரால் அபிஷேகம் செய்வது, வழிபாடு செய்வது. இன்னும் பல வழிகளில் வழிபாடுகளும் கொண்டாட்டங்களும் நடத்துவார்கள். ஒவ்வொரு பக்தர்களும் தங்கள் பகுதிக்கும் தங்கள் கலாச்சாரத்திற்கும் ஏற்ற வகையில் இந்நாளைக் கொண்டாடுகின்றனர். சில பக்தர்கள் தங்களாலான தர்மங்களை உணவாக கொடுத்து மகிழ்வார்கள். சிலர் பணமாக , பொருளாக தானமாக வழங்குகின்றனர்.

பர்மா போன்ற நாடுகளில், புத்தர் முக்தியடைந்ததை நினைவு கூர்ந்து மரியாதையைச் செய்யும் விதத்தில், போதி மரங்களுக்கு நீர் விடுவதை ஒரு வழக்கமாக கொண்டிருக்கின்றனர். ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில் மக்கள் வீடுகளை தீபங்களால் அலங்கரிப்பார்கள். கிறிஸ்துமஸ்க்கு நட்சத்திரங்களைக் கட்டி வைப்பதைப்போன்று அவர்களும், மூங்கில் குச்சிகளில் நட்சத்திரங்களை கட்டி வைக்கின்றனர்

புத்தர்
ஸ்ரீ ராம நவமி 2022 : 108 முறை ’ஸ்ரீராம ஜெயம்’ சொல்வதால் என்னென்ன பலன்கள்?

இன்று நாம் காணும் புத்தம்

கிமு.563 வது ஆண்டு காலத்தில் புத்தர் பிறந்த வருடமாகக் கருதப்படுகிறது. உலகெங்கிலும் பரவி இருக்கும் புத்தம் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. சுமார் 1880 ஆண்டு காலத்தில் இன்று நாம் காணும் வடிவில் புத்தம் மீட்டெடுக்கப்பட்டது. பன்னெடுங்காலமாகவே உலகமெங்கும் புத்தம் பரவி இருந்தாலும், அந்த மதப்பிரிவினர்களுக்கு இடையே ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லை. அவர்கள் ஒரே மதத்தைத்தான் பின்பற்றுகிறார்கள், ஆனால் வெவ்வேறு பிரிவுகள் தான் என்பது கூட அவர்களுக்கு தெரியவில்லை.

பௌத்தத்தை மீட்டு இன்றைய வடிவில் ஒரு பெரும் மதமாக ஒன்றிணைத்ததில் பெரும் பங்கு வகித்தவர்கள் மூன்று ஆய்வாளர்கள்.

முதலாமானவர் ஹென்றிஸ்டீல் ஆல்காட், என்பவர் 1908ல் எழுதிய பெளத்த ஞானச்சுருக்கம் எனும் நூல், பலருக்கும் புத்த மதம் பற்றிய சரியான புரிதல் சென்றடைய காரணமாக இருந்தது. பால் காரஸ் என்பவர் 1894 ல் எழுதிய எழுதிய ‘புத்தரின் நற்செய்தி’ என்ற நூல்,] புத்தரை உலகம் புரிந்து கொள்ள வழிவகுத்தது. ரய்ஸ் டேவிட்ஸ் என்பவர் எழுதிய பௌத்த இந்தியா என்ற புத்தகம், பௌத்த மதத்தின் வரலாற்றைக் கட்டமைத்தது.

Buddha
Buddhatwitter

இறுதியாக, புத்தரின் போதனைகள், வரலாறு என பலவும் கற்று மறந்தவர்களும் உண்டு. பின்பற்றுபவர்களும் உண்டு.

நேற்று வரை “ சின்ன சின்ன ஆசைகள்தான் வாழ்வை அழகாக்கின்றன. அத்தனைக்கும் ஆசைப்படு” என்று கூறியவர்களே.. புத்தபூர்ணிமா அன்று “ஆசையே துன்பத்திற்குக் காரணம்” என வாட்சப்பில் ஸ்டேட்டஸ் வைப்பார்கள். கடந்துதான் போக வேண்டும்.

அதனால்.. அடுத்தவர்களைப் பற்றிச் சிரித்து, சிந்தித்து நேரத்தை வீணாக்காமல், புத்தர் கூறியது போல மூச்சினை கவனித்து தியானம் மேற்கொண்டு, அவரவர்கள் வாழ்வைக் கவனித்தால், சரி செய்துகொண்டால், அதுவே நாம் புத்தருக்கு செய்யும் பேருதவியாகும் ! நாமும் புத்தராவதற்கு வழிகளாகும்.

மனநிறைவே மாபெரும் செல்வம் –புத்தர்.

புத்தம் சரணம் கச்சாமி !

புத்தர்
திருப்பங்கள் தரும் திருவோணம் : குணநலன் முதல் விரதமுறை வரை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com