கடந்த சில நாட்களாக, பா.ஜ.க குறித்து அ.தி.மு.கவின் மூத்த தலைவர்கள் பேசிய கருத்து வைரலானது. இந்நிலையில், சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "அ.தி.மு.க.-பா.ஜ.க. உறவில் விரிசல் இல்லை. கூட்டணி நன்றாக உள்ளது. ஒவ்வொரு கட்சியும் வளர வேண்டும் என்று தான் நினைப்பார்கள். தொண்டர்களை உற்சாகப்படுத்த அவர்கள் சில விஷயங்களைப் பேசுவார்கள். அப்படிப் பேசியதற்காக பா.ஜ.க.வைப் பற்றி முன்னாள் அமைச்சர் பொன்னையன் பேசிய கருத்து அவரது சொந்த கருத்து என்று கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து விட்டார்." என்றார்.
தமிழக அரசு, தமிழக மீனவர்களுடைய பங்களிப்பின் மூலம் கடலோரப் பாதுகாப்பை வலுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, உயிர் காக்கும் நீச்சல் வீரர்களுக்கான பயிற்சி மீனவ இளைஞர்களுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதன்படி, 1,000 மீனவ இளைஞர்களுக்கு உயிர் பாதுகாப்பு, மீட்பு பயிற்சித் திட்டத்தைச் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். முதல் கட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் 25 பேருக்கான பயிற்சியை முதல்வர் தெடங்கி வைக்கிறார். 14 கடலோர மாவட்டங்களில், கடலில் மூழ்கி தவிப்பவர்களை பாதுகாக்க 1,000 மீனவ இளைஞர்களுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
போரிஸ் ஜான்சன் இங்கிலாந்து பிரதமராக 2019 -ல் பதவியேற்றார். 2020ல் கொரோனா முதல் அலையின் போது ஊரடங்கு சட்டத்தை மீறியது, பிரதமர் அலுவலக நிர்வாகிகளுக்கு மது விருந்து நடத்தியது எனத் தொடர் சர்ச்சைகளில் சிக்கி வந்தார். இந்த இரு விவகாரங்களை முன் வைத்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எதிராகச் சொந்த கட்சியான கன்சர்வேடிவ் கட்சியினரே பதவி விலகும்படி வலியுறுத்தினர். பெரும்பான்மை எம்.பி.க்கள் போரிஸ் ஜான்சனுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனக் கட்சித் தலைமைக்குக் கடிதம் எழுதினர். இதையடுத்து போரிஸ் ஜான்சன் அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் வெற்றிபெற்றார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கொலை செய்வதற்காகச் சதி நடைபெறுவதாக வதந்திகள் கிளம்பி. இதனையொட்டி அவருக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இம்ரான் கானைக் காயப்படுத்தினால் தற்கொலைத் தாக்குதல் நடத்துவேன் எனப் பாகிஸ்தான் எம்.பி அத்தாவுல்லா பிரதமர் ஷெபாஸ் அரசுக்கு மிரட்டல் விடுத்திருக்கிறார். அவர் ட்விட்டரில் வெளியிட்ட வீடியோவில், " நாட்டை வழிநடத்துபவர்களுக்கு நான் எச்சரிக்கை விடுக்கிறேன். இம்ரான் கானின் தலையில் ஒரு முடி பாதிக்கப்பட்டால்கூட, நீங்களும் உங்கள் குழந்தைகளும் இருக்க மாட்டீர்கள். முதலில் நான்தான் உங்கள் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்துவேன். உங்களை விடமாட்டேன். அதே போல, 1000 -த்துக்கும் மேலான தொழிலாளர்கள் தற்கொலைத் தாக்குதல் நடத்தத் தயாராக இருக்கிறார்கள்." எனப் பேசியிருக்கிறார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp