வளைகுடா நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் என்றாலே அது இஸ்லாத்தின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் நாடு. அங்கு இஸ்லாத்தைத் தவிர மற்ற மதங்கள், நம்பிக்கைகளுக்கு எப்போதுமே மதிப்பு அளிக்கப்படாது என்கிற பொது பிம்பத்தைப் பார்க்க முடியும்.
ஆனால் எதார்த்தத்தில், சில மாதங்களுக்கு முன் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜெபெல் அலி பகுதியில் இந்து நம்பிக்கையைப் பின்பற்றுபவர்களுக்கென ஒரு பிரமாண்ட, அழகிய கோயில் திறக்கப்பட்டதை நாம் செய்திகளில் பார்த்தோம்.
இப்போது தான் மெல்ல வளைகுடா நாடுகளில் மற்ற மதங்களுக்கு இடமளிக்கப்படுகிறது என நாம் கருதினால் அது தவறு என்கிறது சமீபத்தில் அராப் நியூஸ் வலைதளத்தில் ஜானதன் கார்னால் எழுதி பிரசுரமாகி இருக்கும் கட்டுரை.
வளைகுடா நாடுகள், மத்தியக் கிழக்கு நாடுகளில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கிறிஸ்தவம் செழித்தோங்கி இருந்ததாகவும், இஸ்லாத்தும், கிறிஸ்தவமும் ஒன்றோடு ஒன்று சமகாலத்தில் பின்பற்றப்பட்டிருப்பதாகவும் பல ஆதாரங்கள் முன் வைக்கப்படுகின்றன.
1986 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், சவுதி அரேபியாவின் ஜுபைல் (Jubail) பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடற்கரை நகரத்தின் மேற்கு பகுதியில் தன்னுடைய புதிய வாகனத்தை மணல் குவியல்களுக்கு மத்தியில் அதிவேகமாக ஓட்டினார். அவர் அதிக தூரம் செல்வதற்கு முன்பே வண்டியை முன்னேற விடாமல் ஏதோ தடுத்திருக்கிறது.
என்ன... ஏது... என பார்த்து, தன் வாகனத்தை விடுவித்துக் கொண்டு ஜுபையில் பகுதிக்கு சென்ற அந்த இளைஞர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தன் வாகனம் தட்டுப்பட்டதை குறித்து தெரிவித்தார்.
அது என்ன ஏது என்று தோண்டித் துருவிப் பார்த்தபோது மண்ணில் புதைந்திருந்த ஒரு மிகப்பெரிய சுவர் என தெரிய வந்தது. அப்படி அந்த இளைஞரின் வாகனத்தை முன்னேற விடாமல் தடுத்த அச்சுவர் ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தினுடையது. காலப்போக்கில் மணல் குவிந்து அந்த தேவாலயமே மண்ணுக்கடியில் புதைந்து விட்டது என தெரிய வந்தது.
ஆழ்வாராய்ச்சியாளர்கள் அந்த சுவரை கண்டுபிடித்து முழுமையாக தோண்டி எடுத்த போது அந்த தேவாலயம் மற்றும் அதன் அமைப்புகள், அறைகள் எல்லாம் தெளிவாகத் தெரிய வந்தன.
அச்சுவர்கள் அனைத்துமே ஜிப்சம் பிளாஸ்டரால் பூசப்பட்டிருந்தது. சுவர்களில் கிறிஸ்தவ மத குறியீடான சிலுவைக் குறிகள் இருந்தன. ஒவ்வொரு குறியீடும் சுமார் 30 சென்டிமீட்டர் உயரம் கொண்டதாக இருந்தது.
இது ஏதோ ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தை தோண்டி எடுக்கப்பட்டது அல்ல. இந்த கிறிஸ்தவ தேவாலயம் கிபி நான்காவது நூற்றாண்டை சேர்ந்தது என கண்டுபிடிக்கப்பட்டது. சொல்லப்போனால் இஸ்லாத் மதம் உருவாவதற்கு சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பே இந்த தேவாலயம் இருந்ததாக கூறப்படுகிறது. ஆக உலகிலேயே மிகப் பழமையான கிறிஸ்தவ தேவாலயம் அது என அராப் நியூஸ் வலைதள கட்டுரை கூறுகிறது.
இஸ்லாத்தும் கிறிஸ்தவமும் அரேபிய கடற்கரைகளில் வளைகுடா பகுதிகளில் ஒன்றாக ஒரே காலகட்டத்தில் இருந்திருக்கின்றன என்பதற்கான சான்று இது.
இப்போது சுமார் 36 ஆண்டுகளுக்குப் பிறகு சினியா (Siniyah) தீவில் ஒரு கிறிஸ்தவ தேவாலயம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள உம் அல் கவின் (Umm Al-Quwain) கடற்கரையில் அமைந்திருக்கிறது. அந்த தேவாலயத்தில் உள்ள பொருட்களை கார்பன் டேட்டிங் முறையில் பரிசோதித்து பார்த்தபோது கிறிஸ்துவுக்கு பிறகு 534 முதல் 656 வரையான காலகட்டத்தைச் சேர்ந்தது என கண்டுபிடித்திருக்கிறார்கள். இறை தூதர் முகமது நபிகள்
கிறிஸ்துக்குப் பிறகு 570 ஆம் ஆண்டில் பிறந்து 632 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்ததாக கூறப்படுகிறது.
இந்த தேவாலயம் எட்டாம் நூற்றாண்டில் பராமரிப்புகள் ஏதும் செய்யப்படாமல் கைவிடப்பட்டு இருக்கலாமென கருதப்படுகிறது. அதற்கு இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களுக்கு இடையிலான மோதல்கள் காரணமல்ல. இஸ்லாத்து மதத்தை பின்பற்றி வந்தவர்களின் உள்ளேயே ஏற்பட்ட முரண்பாடுகளே காரணம் என அகழ்வாராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.
சினியா தீவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் தேவாலயத்தில், அந்தக் கட்டடத்தை அழிக்க முயன்றதற்கான தடயங்களோ, கட்டிடத்தை பாதிப்பிற்கு உள்ளாக்குவதற்கான முயற்சிகள் எதுவும் தென்படவில்லை.
கிறிஸ்தவத்தில் இயேசுபிரான் கடைசியாக சாப்பிட்ட விருந்தை குறிக்கும் பண்டிகையை கொண்டாடுவதற்கு பயன்படுத்தப்படும் கண்ணாடி கோப்பைகள், ஒயினை கலப்பதற்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் அனைத்தும் அதனதன் இடங்களிலேயே இருந்தன என்கிறார் ஐக்கிய அரபு அமீரக பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் டீம் பவர். இவரே சினியா தீவு அகழாய்வு திட்டத்தின் துணை இயக்குநராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தேவாலயம் மத ரீதியிலான கருத்து வேறுபாடுகளால் கைவிடப்படவில்லை, மாறாக கிறிஸ்துவுக்கு பிறகு 750 வது ஆண்டு வாக்கில் அப்பாசிட் (Abbasid) படையெடுப்பினால் கைவிடப்பட்டு இருக்கலாம் என நம்புகிறார் டிம் பவர். இது செராமிக் டேட்டிங் மற்றும் ரேடியோ கார்பன் டேட்டிங் தரவுகளோடும் ஒத்துப்போவதாகவும் கூறுகிறார் அவர்.
மெசபடோமியாவை அடிப்படையாகக் கொண்ட அப்பாசிட் (Abbasid) படையெடுப்புகள் மிக கோரமானவை. அவர்கள் படையெடுப்பினால் பல கடற்கரையை ஒட்டியுள்ள நகரங்கள் அழிக்கப்பட்டது என்பதையும் நாம் அறிவோம் என்கிறார் டிம் பவர்.
எனவேதான் இந்த தேவாலயங்கள் கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாத் மதங்களுக்கு இடையிலான கருத்து மோதல்களால் கைவிடப்படவில்லை இரு வேறு இஸ்லாமிய பிரிவுகளுக்கு மத்தியிலான மோதல் காரணமாக கைவிடப்பட்டது என்கிறார்.
இறைத்தூதர் நபிகள் நாயகம் கிறிஸ்துவுக்கு பிறகு 632 வது ஆண்டு காலமானதாக நாம் முன்பே குறிப்பிட்டோம். ஆனால் சினியா தீவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் சுமார் கிறிஸ்துவுக்கு பிறகு 750 ஆவது ஆண்டு வரை இருந்திருக்கிறது.
இறை தூதர் நபிகள் நாயகம் இறைவனடி சேர்ந்த பிறகும் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலத்திற்கு மேல் இஸ்லாத்தும் கிறிஸ்தவமும் சகிப்புத்தன்மையோடு, சகோதரத்துவத்தோடும், ஒரே நிலப்பரப்பில் ஒரே காலகட்டத்தில் இருந்திருக்கிறது என்பது நிரூபணம் ஆகிறது.
வளைகுடா பகுதிகளில் இஸ்லாத் செழித்து வளர தொடங்கிய போது, கிறிஸ்தவ மக்கள் அந்நியர்கள் என்று கருதுவது பொதுவாக இருக்கும் ஒரு தவறான புரிதல் என்கிறார் டீம் பவர்.
அதேபோல கிறிஸ்தவம் ஒரு மத்திய கிழக்கு மதம். இயேசு பிரான் அராமியா மொழியில் பேசினார். அந்த மொழி, மத்திய கிழக்கின் மொழி என ஒரு வாதம் முன் வைக்கப்படுகிறது.
இந்த கிறிஸ்தவ மடாலயங்கள் மற்றும் தேவாலயங்கள் அனைத்தும் யாரோ வெளிநாட்டுக்காரர்களால் இக்கடற்கரைகளில் வந்து கட்டியமைக்கப்படவில்லை. இதே மத்திய கிழக்கில் வாழ்ந்து வந்த அராபிய கிறிஸ்தவ சமூகத்தவர்களால், உள்ளூர் மக்களுக்கு கட்டி எழுப்பப்பட்டு பயன்படுத்தப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
ஒட்டுமொத்த அரேபிய தீபகற்பத்திலேயே இஸ்லாத் செழித்து வளர்வதற்கு முன் பெரும்பாலான மக்கள் கிறிஸ்தவத்தையே பற்றி இருக்கலாம் என பல்வேறு வரலாற்று ரீதியிலான ஆதாரங்கள் மற்றும் கல்வெட்டுக்கள் நமக்குச் சொல்கின்றன.
மத்திய கிழக்கில் இஸ்லாத் வளரத் தொடங்கிய பிறகு, மெல்ல கிறிஸ்தவம் இறங்கு முகம் காணத் தொடங்கியது. அந்த காலகட்டத்தில் கிறிஸ்தவர்கள் வெளி ஆட்களாக பார்க்கப்படவில்லை, காரணம் அவர்கள் குடும்பத்தில் ஒருவராகப் பார்க்கப்பட்டனர்.
பல தலைமுறைகளாக அரேபிய கிறிஸ்தவர்களாக இருந்தவர்கள், மெல்ல இஸ்லாத்துக்கு மாறத் தொடங்கினர். இன்று வரை இஸ்லாமியராக இருக்கும் ஒருவர் தன்னுடைய சகோதர சகோதரிகளில் ஒருவர் கிறிஸ்தவராக இருக்கிறார் என்று சொல்வதைக் கேட்டிருக்கலாம். எனவே இந்த இரண்டு சமூகங்களும் நெருங்கிய உறவை கொண்டு இருக்கின்றன.
கடந்த 1992 ஆம் ஆண்டு, அபுதாபி ஐலேண்ட்ஸ் ஆர்க்கியாலஜிக்கல் சர்வே என்கிற புதிதாக அமைக்கப்பட்ட அமைப்பு மூன்று தீவுகளை தேர்வு செய்து தன் அகழாய்வு பணிகளை மேற்கொண்டது.
அபுதாபியின் மேற்குப் பக்கத்தில், சார் பனியாஸ் என்கிற பகுதியில் வீடுகளின் முற்றப் பகுதிகள், உடைந்த பானை போன்றவை கண்டறியப்பட்டன. அதை ஆராய்ந்த போது, அப்பொருட்கள் கிறிஸ்துவுக்குப் பிறகு ஆறு முதல் ஏழாம் நூற்றாண்டுக்குள் உட்பட்டதாக இருக்கலாம் என கண்டுபிடிக்கப்பட்டது.
இன்று வளைகுடா நாடுகள் என்று அழைக்கப்படும் பகுதிகளில், 1994 ஆம் ஆண்டு முதல் முறையாக, அங்கு கிறிஸ்தவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாக பிளாஸ்டரால் செய்யப்பட்ட சிலுவைகளின் உடைந்த பாகங்கள் கிடைத்தன.
ஆக வளைகுடா நாடுகளில் குறைந்தபட்சம் நான்காம் நூற்றாண்டில் இருந்து இஸ்லாம் செழித்து வளரத் தொடங்கிய சில நூற்றாண்டுகள் வரை கிறிஸ்தவமும் வளைகுடா நாடுகளில் இருந்திருக்கிறது என்பதற்கான பல ஆதாரங்கள், அகழாய்வு சான்றுகள் இருக்கின்றன.
கிறிஸ்துவுக்கு பிறகு 225 வது ஆண்டிலேயே பல கிறிஸ்தவ மறை மாவட்டங்கள் வளைகுடா பகுதிகளில் இருந்திருப்பதற்கான ஆதாரங்களையும் சுட்டிக்காட்டுகிறது அராப் நியூஸ் வலைதளம்.
அவ்வளவு ஏன் தென் மத்திய ஈராக் பகுதியில் ஹிரா என்கிற இடத்தில் 1931 ஆம் ஆண்டு, ஒரு முக்கிய ஆதாரம் கிடைத்தது. அந்த நகரம் லாக்மிட்ஸ் என்று அழைக்கப்படும் மக்களின் தலைநகரமாக இருந்தது. லாக்மட்ஸ் (Lakhmids) என்பது ஏமன் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவ மலைவாழ் மக்கள் இனம் என்பது குறிப்பிடத்தக்கது.
1960 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அகழ்வாராய்ச்சியாளர் ரோமன் கிரஹ்மென், ஈரான் நாட்டில் உள்ள கார்க் (Kharg) தீவில் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிறிஸ்தவ மடாலயத்தைக் கண்டுபிடித்தார். 1988 ஆம் ஆண்டு குவைத் நாட்டில் உள்ள பைலாகா தீவில் (Failaka Island) ஒரு கிறிஸ்தவ தேவாலயம் கண்டுபிடிக்கப்பட்டது.
இன்று சவுதி அரேபியா என்றழைக்கப்படும் நிலப்பகுதிகளில் தாருத் தீவு (Tarut Island) என ஒரு பகுதி இருக்கிறது. இப்பகுதியில் சுமார் 1.20 லட்சம் பேர் வாழ்ந்து வருகிறார்கள். இதை ஒரு கிறிஸ்தவ தலம் என்று அழைக்கிறார்கள்.
இந்த பகுதியை மேம்படுத்த, இதை ஒரு சுற்றுலாத் தலமாக உருவாக்க சவூதி அரேபியாவின் முடி இளவரசர் முஹம்மத் பின் சல்மான் கடந்த நவம்பர் மாத மத்தியில் சுமார் 703 மில்லியன் அமெரிக்க டாலரை ஒதுக்கி உள்ளார்.
அதோடு, வளைகுடா பகுதியில் கட்டாயப்படுத்தி கிறிஸ்தவர்கள் இஸ்லாத்திற்கு மதம் மாற்றப்படவில்லை என்றும் பல நூற்றாண்டுகளுக்கு கிறிஸ்தவமே வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் முதன்மை மதமாக இருந்தது என்றும், அதையே பெரும்பாலான மக்கள் கடை பிடித்தார்கள் என்றும் ஜான் லாங்ஃபெல்ட் (John Langfeldt) தன் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
மெல்ல மெல்ல பல நூற்றாண்டுகளில் பல்வேறு காரணங்களால் கிட்டத்தட்ட வளைகுடா பகுதியில் வாழ்ந்து வந்த ஒட்டுமொத்த மக்களும் இஸ்லாத்துக்கு மாறிவிட்டனர் என்கிறார் ஜான். இதற்கு வரிச் சுமை, மற்ற கிறிஸ்தவ சமூகத்தினரோடு தொடர்பில்லாமல் இருந்தது, தங்களுடைய வசதிக்காக மதம் மாறியது, இஸ்லாத்தின் சில மிக அருமையான கொள்கைகள்... என பலவற்றை காரணமாக கூறுகிறார் ஜான் லாங்ஃபெல்ட்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust