ஒரு மனிதரின் பிறப்பு அவரின் வாழ்கையைத் தீர்ர்மானித்துவிடுவதில்லை என்பதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். அப்படி ஒரு நல்ல உதாரணமாக தன் வாழ்கையை வாழ்ந்து காட்டியவர் தான் மாலிக் அம்பர்.
ஒரு கறுப்பின அடிமையாக தன் வாழ்கையைத் தொடங்கி, பிறகு ராணுவத்தில் பணியாற்றி, நாளடைவில் அரசின் முக்கிய நிர்வாகியாக உயர்ந்தவர்.
தென்னிந்தியாவில் முகலாயர்கள் அத்தனை எளிதில் நுழைந்து விடாமல் பல ஆண்டுகளுக்கு கட்டிக் காத்தது இந்த கருப்பு வைரம் தான் என்றால் அது மிகை இல்லை.
கொரில்லா போர் முறையை பெரிதும் பயன்படுத்தி தென் இந்தியாவில் பிரபலப்படுத்தியவர் என இவர் பெருமையைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
இன்றைய எத்தியோப்பியா நாடு இருக்கும் இடத்தில் கம்பட்டா என்கிற பிராந்தியத்தில் "சாப்பு" என்கிற பெயரோடு 1548 ஆம் ஆண்டு, ஒரொமோ மலைவாழ் மக்கள் இனத்தில் பிறந்தார் மாலிக் அம்பர்.
குடும்பத்தின் ஏழ்மை காரணமாகவோ, போரினாலோ இவர் அடிமையாக வாழ வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டு இருக்கலாம் என இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரை ஒன்று சொல்கிறது.
ஓர் அடிமையாக தன் வாழ்க்கையை தொடங்கியவர் அவருடைய முதலாளி மிர் காசிம் அல்பாக்தாதி என்பவரால் வாங்கப்பட்டார்.
சாப்பூவின் திறனைப் புரிந்து கொண்டு அவர் கல்வி கற்க உதவியதாகாவும், இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அவரிடம் இருந்த கூர்மையான அறிவு மற்றும் நற்குணங்கள் காரணமாக "அம்பர்" என பெயரிடப்பட்டாராம்.
ஒரு அடிமை முதலாளியிடம் இருந்து மற்றொரு அடிமை முதலாளி என பல பேரிடம் அடிமையாகவே வேலை பார்த்தவர் கடைசியில் அகமது நகர் சுல்தனத் சாம்ராஜ்யத்தில் பேஸ்வாவாக இருந்த செங்கிஸ்கான் என்பவரிடம் அடிமையாக வேலைக்கு சேர்ந்தார்.
அப்போது அபினீசிய அடிமைகள், விசுவாசமானவர்கள், வீரம் செரிந்தவர்கள், நல்ல உடல் ஆரோக்கியம் கொண்டவர்கள் என்பதால் சந்தையில் அவர்களுக்கு நல்ல டிமாண்ட் இருந்தது. ராஜ குடும்பம் இவர்களை விலைக்கு வாங்கி ராணுவத்தில் பணிக்குச் சேர்த்தனர். அபினீசியர்களும் தங்கள் இனத்துக்குக் கிடைத்திருந்த நற்பெயரை தொடர்ந்து காப்பாற்றி வந்தார்கள்.
செங்கிஸ்கான் காலமான பிறகு அவருடைய மனைவி அம்பருக்கு விடுதலை கொடுத்தார். பல்லாண்டு கால அடிமை வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற்ற அம்பர் திருமணம் செய்து கொண்டு பிஜேபூர் சுல்தான் சாம்ராஜ்யத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.
அங்குதான் அவருக்கு "மாலிக்" என்கிற பட்டம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகுதான் "மாலிக் அம்பர்" என்கிற பெயர் நிலைத்துப் போகிறது.
என்னானதோ ஏதானதோ பீஜப்பூரில் மாலிக் அம்பருக்கு போதிய ஆதரவு மற்றும் உதவிகள் கிடைக்காததால் பணியிலிருந்து வெளியேறினார்.
போர் கண்ட சிங்கம் போர்வை போத்திக் கொண்டு தூங்குமா என்ன.... அகமது நகரை ஆண்டு வந்த நிஜாம் ஷாகி வம்சத்தில் ஆட்சி செய்து வந்த அரசரின் ராணுவத்தில் பணிக்குச் சேர்ந்தார்.
மெல்ல ராணுவத்தில் தன் திறமையைக் காட்டி உயர்ந்தவர் ஒரு கட்டத்தில் நிசாம் ஷாஹி ராஜ வம்சத்தின் பாதுகாவலராகத் திகழ்ந்தார்.
1607-ம் ஆண்டு முதல் 1627 ஆம் ஆண்டு வரை அகமது நகர் சாம்ராஜ்யத்தையே திறம்பட நிர்வகித்தார் என சில வலைத்தளங்கள் செல்கின்றன.
இந்த காலகட்டத்தில் தான், அகமது நகர் சுல்தனத்தில் வெறும் நூற்றுக்கணக்கிலிருந்த குதிரைகளைக் கொண்ட சிறு குதிரைப் படையை, சுமார் 7000க்கும் மேற்பட்ட குதிரைகளைக் கொண்ட கம்பீரமான படையாக மாற்றினார்.
வட இந்திய முகலாயர்களை எதிர்க்க, சிதறிக் கிடந்த மராத்தியர்கள், உட்படப் பல தென் இந்தியச் சாம்ராஜ்ஜியங்களை ஒருங்கிணைத்து ஒரு பெரும் படையைக் கட்டமைத்தார்.
ராணுவத்தில் பணி புரிந்த ஆட்களின் எண்ணிக்கையை பலமுடன் அதிகரித்தார். ராணுவத்தில் சேர்ந்து பெரிய பொறுப்புகளுக்கு வந்தபின் அதிகாரத்தைக் கைப்பற்றியவர் என்பதால், தன்னைச் சுற்றி என்ன மாதிரியான எதிரிகள் இருக்கிறார்கள்... தன் படைக்கு எத்தகைய திறமையான பயிற்சிகள் தேவை... என்பதை உணர்ந்து தன் ராணுவத்தைக் கட்டுக்கோப்பு மிக்க போர்க்களத்தில் வெற்றிகளைக் குவித்துத் தரக்கூடிய ராணுவமாக மேம்படுத்தினார்.
இதன் விளைவாக அப்போது முகலாய சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியாக இருந்த ஜஹாங்கிரின் பெரும்படையையே நேரில் போரிட்டு வென்றதாக கூறப்படுகிறது.
இப்படி பலமுறை பல்வேறு முகலாய தளபதிகள் மாலிக் அம்பரின் போர் திறனுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தோல்வியை சந்தித்தனர்.
முகலாயத் தளபதிகள் போரில் தோற்று திரும்பத் திரும்ப, மாலிக் அம்பரின் புகழ் திக்கெட்டும் பரவியது. மாலிக் அம்பரின் திறனை நம்பி போர் வீரர்கள் அவர் பக்கம் திரண்டனர்.
ஜஹாங்கிரி வாழ்க்கை வரலாற்றுப் பக்கங்களிலேயே மாலிக் அம்பரை மிகக் கடுமையாகத் திட்டி தீர்த்து இருப்பதாக சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுவதாக சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
கடைசியில் முகலாயப் படை, ஷாஜகான் தலைமையில் ஒரு பெரும் படையோடு வந்து மாலிக் அம்பரோடு போரிட்டு அவரை வென்றது.
போரில் தன் தோல்வியை ஒப்புக்கொள்ளும் விதமாக உயிரினும் மேலாகக் கருதிப் பாதுகாத்து வந்த அகமத் நகர் கோட்டையை முகலாயர்களிடம் விட்டுக் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதன் பிறகு மாலிக் அம்பரின் அதிகாரம், பலம் எல்லாம் முடங்கிப் போனது.
இதே காலகட்டத்தில் மாலிக் அம்பர் அகமதுநகர் சுல்தனத்தின் தலைநகரை பராண்டா என்கிற பகுதியில் இருந்து ஜுன்னர் (இன்று புனேவில் இருக்கிறது) என்கிற பகுதிக்கு மாற்றினார்.
அப்பகுதியில் கட்கி (Khadki) என்கிற பெயரில் ஒரு புதிய தலைநகரையே கட்டமைத்தார். இன்று அந்த வரலாற்று சிறப்புமிக்க நகரம் அவுரங்காபாத் என்கிற பெயரில் அழைக்கப்படுகிறது.
முகலாய மன்னர் அவுரங்கசீப், அகமத் நகரை வெற்றி கொண்ட பின், கட்சி அவுரங்காபாத்தாக பெயர் மாற்றமடைந்து இன்று வரை அப்படியே நிலைத்துவிட்டது.
துப்பாக்கி, நைட் விஷன் கண்ணாடி, ட்ரோன் தாக்குதல்... வரை பல அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் கொரில்லா தாக்குதல் முறை என்பது, இன்று வரை நடைமுறை எதார்த்தத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அப்பேர்ப்பட்ட கொரில்லா போர் முறையைத் தென்னிந்தியப் பகுதிகளில் பெரிய அளவில் பயன்படுத்திய முன்னோடிகளில் மாலிக் அம்பரும் ஒருவர் என சில வலைத்தளங்கள் சொல்கின்றன.
எந்த ஒரு நாட்டுக்கும் வரிகளை வசூலிப்பது மற்றும் அது முறையாக கஜானாவுக்ககு கொண்டு வந்து சேர்ந்து நிர்வாகம் செய்வது மிகவும் முக்கியமானது.
அதை மாலிக் அம்பர் சிறப்பாகச் செய்ததாகவும், அவர் காலத்துக்குப் பின் வந்த மராத்திய மன்னர்கள், மாலிக் அம்பரின் முறையைப் பின்பற்றியதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் வலைத்தளத்தில் கூறப்பட்டுள்ளது.
சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் தாத்தா மலோஜி, மாலிக் அம்பர் உடன் பணியாற்றியதாகவும் அதே கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மராத்தியவர்களின் வீரத் திலகமாகத் திகழும் சிவாஜி மகாராஜாவின் "சிவபாரதா" புத்தகத்தில் மாலிக் அம்பர் என்கிற கறுப்பின இஸ்லாமியரை தன் வாயால் புகழ்ந்து பாடியுள்ளதாக மிண்ட் பத்திரிகையின் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
வெறுமனே ஒரு நகரத்தை உருவாக்கியவர், அருமையான கட்டடங்களைக் கட்டி எழுப்பினார், கலா ரசிகனாக இருந்தார்... என்பதை எல்லாம் தாண்டி இன்றுவரை அவுரங்காபாத் என்று அழைக்கப்படும் நகரத்தில், அவர் அமைத்த கால்வாய் நீர் அமைப்பு இன்று வரை பெருமையாகப் பேசப்பட்டு வருகிறது.
கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகளுக்கு மேல் மாலிக் அம்பர் கட்டி எழுப்பிய ' நார் இ அம்பாரி' (Nahr e Ambari) என்கிற கால்வாய் அமைப்பு எந்தவித பராமரிப்பும் தேவைப்படாமல் செயல்பட்டதாகவும், கடந்த 1931 ஆம் ஆண்டு அக்கால்வாய்க்குப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் சில வலைத்தளங்கள் செல்கின்றன.
1626 ஆம் ஆண்டு தன்னுடைய 77ஆவது வயதில் காலமானதாக சில வலைத்தளங்கள் சொல்கின்றன. மாலிக் அம்பரின் கல்லறை அவுரங்காபாத் மாவட்டத்தில் குல்தாபாத் என்கிற பகுதியில் இன்று வரை இருக்கிறது. இதே பகுதியில் தான் இந்தியாவின் புகழ்பெற்ற சூஃபி ஞானி சர் சரி பக்க்ஷ் என்பவரின் கல்லறையும் இருக்கிறது.
அவருக்கு ஈடு இணை எவரும் இல்லை, அவருடைய நிர்வாகத்துக்கும், தெளிவான கணிப்புக்கும், போர் தந்திரங்களுக்கும் சரி சமமானவர் இல்லை என முகலாயர்களின் வரலாற்றிலேயே கூறப்பட்டுள்ளதாக வரலாற்று ஆசிரியர்கள் சொல்கின்றனர். அதை குல்தாபாத்தில் படுத்திருக்கும் மாலிக் அம்பர் படித்திருப்பாரா என்று தெரியவில்லை.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust