அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சவுதி அரேபியாவைப் பற்றி கடுமையான வார்த்தைகளில் விமர்சித்திருக்கிறார். மேலும் சவுதி அரேபியாவிற்கு இராணுவத் தளவாடங்கள் ஏற்றுமதி செய்வதையும் அமெரிக்கா தடை செய்திருக்கிறது. ஆனால் உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பு போருக்குப் பிறகு அதிபர் ஜோ பைடன் சவுதி அரேபியாவுடனான உறவை புதுப்பிக்க விரும்புகிறார். இருநாடுகளின் பேச்சுவார்த்தையில் கச்சா எண்ணெய் மற்றும் ஆயத ஏற்றுமதி இடம் பெறும் என்று தெரிகிறது.
மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் அவரது பயணத்தில் சவுதி அரேபியாவும் இடம் பெற்றிருப்பது அமெரிக்காவில் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இஸ்ரேல் நாட்டு விஜயத்திற்கு பிறகு சவுதி அரேபியாவிற்கு செல்லும் தனது முடிவை பலர் ஏற்கவில்லை என்று ஜோ பைடன் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் எழுதியிருக்கிறார்.
அதில் தனது நியாயத்தை அவர் விளக்குகிறார். மனித உரிமை பற்றிய தனது பார்வைகள் தெளிவாகவும் நீண்ட கால நோக்கிலும் இருப்பது மாறாது என்கிறார். ஆனால் வெள்ளியன்று சவுதி தலைவர்களோடு அவர் நீண்டகால உறவு மற்றும் பரஸ்பர நலன், பொறுப்பு பற்றிப் பேச இருப்பதாகக் கூறுகிறார். அதே நேரம் அமெரிக்காவின் அடிப்படை மதிப்பீடுகளுக்கு தான் உண்மையாக இருப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.
2018 இல் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் வைத்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இதை ஜோ பைடன் கடுமையாக விமர்சித்திருக்கிறார். சவுதி அரேபியாவை தீண்டத்தகாத நாடு என்றும் அவர் கூறியிருக்கிறார். தற்போது அவர் குற்றம் சாட்டிய சவுதி இளவரசர் முகமது பின் சல்மானை சந்திக்கிறார். எனில் இந்த சந்திப்பு எப்படி சுமுகமாக இருக்கும் என்ற கேள்வி எழுகிறது.
ஈரான் ஆதரவோடு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமனில் போராடி வருகின்றனர். அவர்களை எதிர்த்து சவுதி தலைமையிலான கூட்டணி நாடுகளது இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. 2021 பிப்ரவரியில் இந்த தாக்குதலுக்கு ஆதரவு இல்லை என பைடன் நிர்வாகம் அறிவித்தது. கூடவே இராணுவ ஆயுதங்கள் சவுதிக்கு வழங்கப்படமாட்டாது என்றும் கூறியது.
இருப்பினும் தற்போதைய பேச்சுவார்த்தையில் இவற்றைப் பற்றி ஜோ பைடன் பேசமாட்டார் என்று தெரிகிறது.
பைடன் முன்னர் வெளியிட்ட அறிக்கையின் காலத்திலிருந்து உலகம் கணிசமாக மாறிவிட்டது. பைடன் தனது நீண்டகால நட்பு நாடான இஸ்ரேலுடன் சவுதி அரேபியா உறவு கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். இஸ்ரேல் பல மத்திய கிழக்கு நாடுகளுடன் உறவை மேம்படுத்துவதற்காக ஆபிரகாம் என்று அழைக்கப்படும் ஒப்பந்தத்தை அமல்படுத்தி வருகிறது. ஆனால் சவுதி இந்த ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திடுவது சாத்தியமில்லை.
ஆனாலும் திரைமறைவில் சவுதிக்கும் இஸ்ரேலுக்கும் உறவுகள் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். சவுதி அரேபியா தனது வான்வெளியை இஸ்ரேலின் வணிக விமானப் போக்குவரத்திற்கு திறக்க வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் மத்திய கிழக்கு நாடுகளுக்கென நோட்டோ போன்ற ஒப்பந்தம் போடுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக ஊகங்கள் இருக்கின்றன.
எது எப்படியோ அமெரிக்க அதிபரின் சவுதி அரேபிய விஜயத்திற்கு உக்ரைன் போர் ஒரு முக்கியமான காரணி ஆகும். ஐரோப்பாவில் நடக்கும் இந்தப் போர் உலகிற்கு பெரும் பொருளாதார சவாலாக மாறிவருகிறது. ரஷ்ய எரிபொருள் மீதான தடைகள் காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் எரிவாயு மற்றும் எண்ணெய் விலைகள் பெருமளவில் உயர்ந்துள்ளன.
அமெரிக்கப் பாராளுமன்றத்திற்கான தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதில் பெட்ரோல் விலை உயர்வு தீவிரமான பங்கை வகிக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்காகத்தான் அதிபர் பிடன் சவுதி அரேபியத் தனது எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க விரும்புகிறார்.
பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பான ஓபெக் பிளஸ் ஜூன் மாதத்தில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க ஒப்புக் கொண்டன. இந்த அமைப்பில் சவுதி, ரஷ்யாவை உள்ளடக்கிப் பல நாடுகள் உள்ளன. ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் கச்சா எண்ணெய் உற்பத்தி என்பது நாளொன்றுக்கு 6,48,000 பீப்பாய்கள் அதிகரித்தன. ஆனால் இந்த உற்பத்தி அதிகரிப்பு என்பது இந்த அமைப்பின் முந்தைய திட்டத்தின் படியே நடந்தது. மாறாக அமெரிக்கா விரும்பியதால் அல்ல.
தற்போது அதிபர் பைடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தினாலும் அமெரிக்கா விரும்பிய படி சவுதி உற்பத்தியை அதிகரிக்குமா என்பதைச் சொல்வது கடினம். கொரோனா பொது முடக்கத்தின் போது கச்சா எண்ணெய் விலைகள் குறைவாக இருந்தன. இதனால் சவுதி அரேபியா தனது பட்ஜெட்டில் பற்றாக்குறையைச் சந்தித்தது. தற்போது கச்சா எண்ணெய் விலைகள் கூடுவது பொருளாதார ரீதியாக நல்லது என்பது சவுதி அரேபியாவின் பார்வை.
அதிபர் பைடன் சவுதி அரேபியாவிற்கு விஜயம் செய்யும் தருணத்தில் பொதுவாக மத்திய கிழக்கில் அமெரிக்காவின் செல்வாக்கு சரிந்து வருகிறது. இது பைடனுக்கும் தெரியும். பராக் ஒபாமா மற்றும் டொனால்ட் டிரம்ப் உட்படக் கடைசியாக இருந்த அமெரிக்க அரசு நிர்வாகங்கள் மத்திய கிழக்கு பிரச்சினைகளில் இருந்து பின்வாங்கின. தற்போது இங்கே அமெரிக்கா பிரச்சினைகளைப் பஞ்சாயத்து செய்து தீர்க்கும் தரகராக இல்லை.
அமெரிக்காவிற்கு எதிர் முகாமில் உள்ள ரஷ்யா மற்றும் சீனா இப்போது சவுதியின் கூட்டாளிகளாக உள்ளன. சீனர்கள் சவுதி அரேபியாவிற்குக் கண்டம் விட்டு கண்டம் தாவும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை உருவாக்க உதவுகிறார்கள். ரஷ்யர்கள் அணு உலைகளை உருவாக்க உதவுகிறார்கள்.
அதே சமயம் பாதுகாப்பு விஷயத்தில் சவுதி அரேபியாவின் முக்கியமான பங்காளியாக அமெரிக்கா இன்னும் உள்ளது. 2016 மற்றும் 2020க்கு இடைப்பட்ட காலத்தில் அமெரிக்காவின் ஆயுத விற்பனையில் 24% சவுதி அரேபியா வாங்கி மிகப்பெரும் வாடிக்கையாளராக உள்ளது.
இருப்பினும் ஏமன் போர் காரணமாக அதிபர் பைடன் நிர்வாகம் ஆயுத ஏற்றுமதியைத் தடை செய்தது அமெரிக்கா மீதான சவுதியின் நம்பிக்கையைப் பலவீனப்படுத்தியிருக்கலாம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஈரானின் ஆதரவுடன் சவுதி எண்ணெய் கட்டமைப்புகளைத் தாக்குவதை அமெரிக்க வேடிக்கை பார்ப்பதாகச் சவுதிக்கு வருத்தம் இருக்கிறது. இப்போதைக்குப் பாதுகாப்பு உறவில் அமெரிக்காவைச் சவுதி துண்டிக்காது என்றாலும் அதனது யதார்த்தம் கொஞ்சம் மாறி ரஷ்யா, சீனாவோடு தொடர்பு ஏற்பட்டிருக்கிறது.
மத்திய கிழக்கில் அமெரிக்கா ஆதரிக்கும் சில நாடுகள் ஜனநாயகத்தைக் கொண்டிருக்கவில்லை. ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா இரண்டும் மன்னராட்சியைக் கொண்டிருக்கும் முடியாட்சிகள். இங்கே ஆட்சியாளர்களோடு யாரும் கருத்து வேறுபாடுகளை முன்வைக்க முடியாது. அப்படித்தான் ஜமால் கஷோகி கொல்லப்பட்டார்.
2011 இல் தொடங்கிய அரபு வசந்தப் போராட்டங்களின் போது அமெரிக்கா சர்வாதிகாரிகளை விடுத்து ஜனநாயகத்தை ஆதரித்தது. இதனால் தனது பழைய நண்பர்களான சர்வாதிகாரிகளைக் கைவிட்டது. அதில் ஒருவர் எகிப்தின் தலைவர் ஹோஸ்னி முபாரக். இவர் வெளியேற்றப்பட்ட போது அமெரிக்க வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. இது சவுதி அரேபியா மற்றும் அமீரகத்திற்கு ஒரு பாடம்.
ரஷ்ய அதிபர் புடின் உள்நாட்டில் சுதந்திர ஊடகம், ஜனநாயகம், கருத்துரிமை அனைத்தையும் இரும்புக் கரம் கொண்டு அடக்குகிறார். ஒரு நாட்டை எப்படி ஆளவேண்டும் என்று பார்த்தால் சவுதி போன்ற ஆட்சியாளர்கள் ரஷ்யாவைப் பார்க்கிறார்களே அன்றி அமெரிக்காவை அல்ல.
இந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது அதிபர் பைடனின் சவுதி விஜயத்தால் தீர்ந்து விடும் பிரச்சினைகள் அல்ல. எதிர்காலத்திலும் இவை அமெரிக்கா சமாளிக்க வேண்டிய பிரச்சினைகள்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust