ஆப்ரிக்காவின் சேகுவேரா: சதியால் கொல்லப்பட்ட தலைவர் இளைஞர்களின் ஹீரோவான வரலாறு

ஆப்ரிக்க மக்களின் வாழ்வில் ஒளி வீசும் ஒரு நாள் வரும். சுரண்டலற்ற சமூகம் ஆப்ரிக்காவில் உதயமாகும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு விட்டுச் சென்ற தலைவர் தாமஸ் சங்கரா. கியூபாவின் விடுதலையை தனது முன்மாதிரியாகக் கொண்டு ஆப்ரிக்க மக்களை ஒருங்கிணைத்த சங்கரா துரோகிகளின் சதிவலையில் வீழ்த்தப்பட்ட வரலாறு இது.
தாமஸ் சங்கரா
தாமஸ் சங்கராTwitter

ஆப்ரிக்கா கடந்த பல நூற்றாண்டுகளாக மேற்கு நாடுகளால் சுரண்டப்பட்டு வருகிறது. அங்கு வாழும் பெரும்பாலான மக்கள் சுகாதாரம், வசதி வாய்ப்புகள் உரிய கல்வி, உரிமைகளற்று தான் இருக்கின்றனர்.

ஆப்ரிக்க நிலத்தின் வளம் மேற்கு நாடுகளால் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. முதலில் காலனியவாதிகளால், இப்போது கார்ப்பரேட்டுகளால். ஆப்ரிக்க அரசியல்வாதிகளின் சுயநலப் போக்கும் மேற்கு நாடுகளின் சூட்சியும் ஆப்ரிக்கா எனும் பூமித்தாயின் கருவறையை அடிமைகளின் பிரதேசமாக வைத்திருக்கின்றன. ஆப்ரிக்க மக்களின் விடுதலை அந்த பெருங்கண்டத்தின் கனவாகவே இருக்கிறது.

ஆப்ரிக்கா மக்களின் எஜமானர்கள் மாறினர், போராளிகள் மாறினர், பிரச்னைகள் மாறின ஆனால் மக்களின் நிலை அப்படியேத் தொடர்ந்தது. ஆப்ரிக்காவின் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு கதை இருக்கிறது. ஒவ்வொரு கதையிலும் பல வில்லன்களை எதிர்த்த ஒரு ஹீரோ இருக்கிறார்.

அவர்களின் ஏழ்மையை ஒழிக்க, அவர்களின் வாழ்வில் ஒளிவீசச் செய்யக் கூடிய, அவர்களின் இழி நிலையைப் போக்க பல தலைவர்கள் உருவெடுத்தனர். அவர்களில் ஒருவர் தான் புர்கினா ஃபெசோவின் தாமஸ் சங்கரா.

தாமஸ் சங்கரா ஆப்ரிக்காவின் சேகுவேரா என்று அழைக்கப்படுகிறார். நிலங்களால் சூழப்பட்ட தற்போது 2 கோடி மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் மேற்கு ஆப்ரிக்க நாடான புர்கினா ஃபெசோவின் முன்னாள் குடியரசு தலைவர் அவர்.

1987, அக்டோபர் 5ம் தேதி நடந்த ஒரு சதியால் தாமஸ் சங்கரா கொல்லப்பட்டார். அன்று வரை அவருக்கு நண்பராக இருந்த பிளேஸ் கம்போரே என்பவர் அதற்கு பிறகு 2014 வரை புர்கினா ஃபெசோவின் குடியரசு தலைவராக இருந்தார்.

கியூபா புரட்சியாளர் சேகுவேராவை நிச்சயம் பார்த்திருப்பீர்கள். கடைகளில் டீசர்ட் டிசைனாக அல்லது கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டங்களில். புர்கினா இளைஞர்களுக்கு சங்கரா தான் சேகுவேரா. இவரது படத்தை டீசர்டில் பொறித்துக் கொள்கின்றனர் விடுதலைக்கான முழக்கத்துடன். அவரின் இடது சாரி சோசியலிச சிந்தனை மக்களை வெகுவாக கவர்ந்தது.

1949-ம் ஆண்டு பிறந்த சங்கரா "ஊழல் இல்லாத, மேற்கு நாடுகளின் சுரண்டல் இல்லாத ஆப்ரிக்காவை உருவாக்க விரும்பினார்" அதையே தன் கனவாக கொண்டார். இராணுவத்தில் பணிபுரிந்த அவர் வெறும் இராணுவ வீரராக மட்டுமில்லாமல் அரசியல் சிந்தனையாளராகவும் திகழ்ந்தார்.

கியூபா புரட்சி தான் அவரின் மனதில் நிலைத்திருந்த ஊக்கம். தனது நாட்டையும் நாட்டு மக்களையும் நேசித்த அவர் தனது முழு வாழ்வையும் அவர்களுக்காக ஒப்புக்கொடுக்க முடிவு செய்தார். தனது மக்கள் எவரொருவராலும் சுரண்டப்படுவதை அவர் வெறுத்தார்.

அரசியல் ரீதியில் சங்கரா ஓர் ஆளுமையாக உருவெடுத்த தருணத்தில் புர்கினா ஃபெசோவில் உள்ளதிகாரப் போராட்டம் ஏற்பட்டது. 1983ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அவர் ஜீன் பப்டிஸ்ட் என்பவருக்கு பதிலாக புர்கினாவின் குடியரசு தலைவராக ஆனார்.

கேப்டன் சங்கராவிலிருந்து ப்ரெசிடென்ட் சங்கராவாக உருவான அவர், பல மாற்றங்களைச் செய்தார். ஆப்ரிக்க மக்களின் நிரந்தர விடுதலைக்கான அடித்தளங்களை அமைத்தார். அவர் குடியரசு தலைவராக ஆனபோதும் இராணுவ உடையிலேயே இருந்தார். அது தான் சங்கரா. கட்டுக்போப்பான நடைமுறை ஒன்றை அவர் உருவாக்க முயன்றார். அதுவே ஆப்ரிக்கர்களின் விடுதலைக்கு வழிவகுக்கும் என நம்பினார்.

சங்கராவுக்கு கிட்டார் இசை மீது அலாதியான பிரியம் இருந்தது. கிட்டார் வாசிப்பது தான் அவரின் பொழுது போக்கு. சேகுவேராவைப் போல மேட்டார் சைக்கிள் பயணங்களிலும் அவருக்கு அதீத ஈடுபாடு இருந்தது.

Burkina Feso
Burkina FesoCanva

சங்கரா பதவியிருந்தது நான்கு ஆண்டுகள் மட்டுமே. ஆனால் அதுவே மேற்குலகம் அவரைப் பார்த்து அஞ்சுவதற்கு போதுமானதாக இருந்தது. புர்கினா ஃபெசோவில் பிரான்ஸ் ஏகாதிபத்தியம் ஓங்கியிருந்தது. இது போல ஒவ்வொரு ஆப்ரிக்க நாட்டின் மீதும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஐரோப்பிய நாடுகள் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வந்தது.

மேற்கு நாடுகள் ஆப்ரிக்கா மீது நிகழ்த்தும் சுரண்டலைச் சுட்டிக்காட்டிய சங்கரா அனைத்து ஆப்ரிக்க நாடுகளும் மேற்கு நாடுகளின் கடன்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இது ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தியது.

ஆப்ரிக்காவின் ஒற்றுமையே அங்கு நிலவும் சுரண்டலை ஒழிக்க உதவும் பெருங்கருவி என்பதை உணர்ந்திருந்தார். ஜெர்ரி லாரன்ஸ் என்ற கானா நாட்டு தலைவருடன் நட்புறவு கொண்டிருந்த சங்கரா இரண்டு நாடுகளையும் இணைப்பது குறித்தும் ஆலோசித்து வந்தார்.

ஆப்ரிக்காவின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதும் ஆப்ரிக்க மக்களுக்கு வளமான, சுகாதாரமான வாழ்வை உறுதி செய்வதும் சங்கராவின் ஆசையாக இருந்தது. இதற்கான பணிகளை மிகத் தீவிரமாக மேற்கொண்டார்.

கிராமப்புற மருத்துவ வசதிகளை மேம்படுத்தவும் சமுதாய கட்டமைப்புகளை உயர்த்தவும் அவர் பல திட்டங்களை வகுத்தார்.

Thomas Sankara
Thomas SankaraTwitter

1984ம் ஆண்டு 20 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் தடுப்பூசிப் போடப்பட்டது. வெறும் இரண்டே வாரத்தில் இந்த சாதனையை செய்து முடித்ததது சங்கராவின் அரசாங்கம்.

அதே ஆண்டில் சங்கரா பல நிலங்களை அரசுடைமையாக்கினார். ஏழை மக்கள் அதில் விவசாயம் செய்தனர். புர்கினா ஃபெசோவின் பருத்தி உற்பத்தி அவரது காலத்தில் கணிசமாக உயர்ந்தது.

ஆப்ரிக்காவின் வளர்ச்சிக்காக அவர் நம்பிய மற்றொரு பிரம்மாஸ்திரம் கல்வி. ஆப்ரிக்க மக்களில் படிப்பறிவு அற்றவர்கள் அதிகம். இவரது காலத்தில் ஆண்களும் பெண்களும் எழுத்தறிவு பெற்றனர். 1983ம் ஆண்டு புர்கினாவில் எழுத்தறிவு விகிதம் 13% இருந்தது. அதுவே சங்கரா மறைந்த 1987ம் ஆண்டு 70% உயர்ந்தது என்கிறது பிபிசி வலைத்தளம்.

1986ம் ஆண்டு மூன்று மாதத்தில் 35000 பேர் எழுத்தறிவு பெற்றனர். தங்களுக்கான நீதி மற்றும் அங்கீகாரத்துக்காக ஏங்கிய மக்கள் தாமஸ் சங்கராவை பின் தொடர்ந்தனர். தங்களது சமுதாயம் மற்றும் நாட்டின் அங்கமாக இருப்பது குறித்த பெருமிதத்துடன் இளைஞர்கள் தாமஸ் சங்கராவின் வழி நடந்தனர்.

ஆப்ரிக்க மக்கள்
ஆப்ரிக்க மக்கள்Twitter

மனிதராய் பிறந்த ஒவ்வொருவரின் வாழ்வும் எதோ ஒரு விஷயத்துக்காக அர்பணிக்கப்படுகிறது. தனக்கனவே வாழ்பவர்கள் சுயநலவாதிகள். சிலர் குடும்பத்துக்காக, சிலர் நாட்டுக்காக, சிலர் தங்களின் பணிக்காக, தொழிலுக்காக என ஏதேதோ... தாமஸ் சங்கரா முழுவதுமாக தன்னை மக்களுக்காக ஒப்புக்கொடுத்த ஒரு தலைவர்.

அவர் தனக்கென எதையும் வைத்துக்கொள்ளாதவர். பெரும்பாலான ஆப்ரிக்க பணக்காரர்கள், பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களிடம் இல்லாத குணங்கள் சங்கராவிடம் இருந்தது. முதலாவது பணிவு, இரண்டாவது நேர்மை. வாழ்வின் எந்த தருணத்திலும் இந்த குணங்களை விட்டுக்கொடுக்காதவராக இருந்தவர் சங்கரா.

அவரது இரண்டு மகன்களும் அரசு பள்ளியில் படித்தனர். அவரது மனைவி மரியம் சங்கரா தான் புர்கினா ஃபெசோவில் போக்குவரத்து துறையில் பணியாற்றிய முதல் பெண்.

சங்கரா ஆட்சிக்கு வரும் வரை அரசு பணிகளில் பயன்படுத்தப்பட்ட அனைத்து லிமோ சொகுசு கார்களையும் விற்றார். தன்னைப் போலவே அனைத்து அமைச்சர்களும், ஊழியர்களும் ரெனால்ட் 5 என்ற மலிவான காரை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

விமானங்களில் பயணிக்கும் அரசு அதிகாரிகள் முதல் வகுப்பில் செல்லக் கூடாது என்று கூறினார். 'ஆப்ரிக்கா ஆப்ரிக்க மக்களுக்கே' என்பதில் உறுதியாக இருந்த சங்கரா மக்களின் பணத்தை அரசு ஊழியர்கள் கூட சுரண்டுவதை அனுமதிக்கவில்லை.

Thomas Sankara
Thomas SankaraTwitter

"He Who Feeds You, Controls You" என்பது சங்கராவின் வார்த்தைகள். இதனை ஆப்ரிக்க மக்களுக்கு உணர்த்தினார் அவர். மக்கள் தங்களது அடிமைத்தனங்களில் இருந்தும் சுரண்டலில் இருந்தும் விடுதலை பெற தூண்டினார்.

தாமஸ் சங்கரா
துண்டுதுண்டாக வெட்டி கொல்லப்பட்ட பிரதமரும், அவரின் தங்கப் பல்-லும் - ஓர் ஆதிக்கத்தின் கதை

Upper Volta என்ற பெயர் தான் Burkina Faso-வாக மாறியது. பிரஞ்சு காலனியத்தில் இருந்த போது அப்பர் வோல்டா என்ற பெயர் உருவானது. காலனியவாதத்தை முழுவதுமாக நீக்க விரும்பிய சங்கரா பெயரில் இருந்து விரட்டியடித்து "நேர்மையான மக்களின் தேசம்" அதாவது புர்கினா ஃபெசோ என்று பெயரிட்டார்.

தீவிர இடது சாரித் தன்மை மனித உரிமைகளை மீறுவதாக சிலர் சங்கரா குறித்து விமர்சனங்களை முன்வைத்தனர். அவரது அரசில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த பலிமா என்பவர், "சங்கரா பன்முகத் தன்மை கொண்ட மக்களாட்சியை ஏற்றுக் கொள்ள கொஞ்சம் காலமெடுத்தது" என பின்னாளில் கூறினார்.

பிளேஸ் கம்போரே
பிளேஸ் கம்போரேTwitter

சங்கராவின் சோசியலிச சிந்தனை மீது பெரியவர்களுக்கு சந்தேகம் இருந்தது. ஆனால் இளைஞர்கள் அவரை முழுவதுமாக நம்பினர். அவரை பின் தொடர்ந்தனர். தனது மக்களை தலை நிமிர்ந்து நிற்க வைக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் தனது ஆட்சியைத் தொடர்ந்தார். அது பிரஞ்சு மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தியது.

தாமஸ் சங்கரா
மே தினம் : சிகாகோ முதல் சென்னை வரை; உலக தொழிலாளிகளின் வாழ்வை மாற்றிய வரலாறு

1987ம் ஆண்டு அக்டோபர் மாதம் சங்கரா கொல்லப்பட்டார். அதற்கு பிறகு 2014ம் ஆண்டு வரை ஆட்சி செய்த பிளேஸ் கம்போரே 1970களில் சங்கராவுடன் இராணுவத்தில் பணிபுரிந்தவர். அப்போதிலிருந்தே இருவரும் நண்பர்களாக இருந்தனர். ஆனால் ஒரு நாளில் நண்பனும் துரோகியாக மாறிப்போனான்.

அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் ஒரு மேடையில் பேசிய சங்கரா கம்யூனிச புரட்சியாளர் சேகுவேராவின் வார்த்தைகளை மேற்கோள் காட்டிப் பேசினார். "புரட்சியில் தனிமனிதர்கள் கொல்லப்படலாம். கொள்கைகளை உங்களால் கொல்ல முடியாது" என்ற வசனத்தைப் பேசிய ஒரு வாரத்தில் சங்கரா சுட்டுக்கொல்லப்பட்டார்.

2019ம் ஆண்டு சங்கராவுக்கு வைக்கப்பட்ட வெண்கல சிலை
2019ம் ஆண்டு சங்கராவுக்கு வைக்கப்பட்ட வெண்கல சிலைTwitter

அவரது மரணத்தில் என்ன நடந்தது என்பது மர்மமாகவே இருக்கிறது. சங்கரா சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் அவரது நண்பர் கம்போரே உட்பட 14 பேர் முக்கிய குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். ஆனால் கம்போரே அதனை மறுத்து வந்தார். கம்போரே ஆட்சியில் இருந்த வரை சங்கரா மரணம் குறித்து எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை.

புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றார்கள் என்கிற சேகுவேராவின் பொன்மொழி சங்கராவுக்கு முழுவதுமாகப் பொருந்தும். சங்கராவும் விதைக்கப்பட்டார். கடந்த 2014ம் ஆண்டு பிளேஸ் கம்போரே ஆட்சியிலிருந்து விலக வேண்டும் என மக்கள், குறிப்பாக இளைஞர்கள் பெரும் போராட்டத்தில் இறங்கினர். அந்த போராட்டத்தில் மக்கள் "Justice For Thomas Sankara" என்ற பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். ஆட்சியிலிருந்து துரத்தப்பட்ட கம்போரே நாடு கடத்தப்பட்டார்.

தாமஸ் சங்கரா
Mao History : சீன பழமை வாதத்தை எதிர்த்து கம்யூனிச புரட்சி ! மா சே துங் வரலாறு

ஆட்சியிலிருந்த நான்கு ஆண்டுகளில் புர்கினா ஃபெசோ மக்களுக்கு விடுதலையின் வெளிச்சத்தைக் காட்டியவர் சங்கரா. ஆப்ரிக்க மக்கள் தங்கள் வாழ்க்கையை அழகானதாக்கிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை அவர்களுக்குள் விதைத்திருக்கிறார்.

"எந்த ஒரு மனிதன் சுயநலமின்றி மக்களுக்காக போராடுகிறானோ அவனே உண்மையான தலைவன்" என்ற சே வின் வார்த்தைகளை வாழ்ந்து காட்டிய சங்கரா, ஆப்ரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் அறிந்துகொள்ள வேண்டிய தலைவர். ஆப்ரிக்கா முழுவதும் சீனா போன்ற பல அந்நியநாடுகள் உள் நுழையும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இந்த சூழலில் சங்கராக்களும் உருவாக வேண்டும்.

தாமஸ் சங்கரா
Che Life History : சேகுவேரா - வாழ்வை மாற்றிய அந்த ஒரு சந்திப்பு |பகுதி 1

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com