லியுபொமைர் டைக்கன் (Lyubomyr Dykun) என்பவர் உக்ரேனில் ஜி - மேக் (G-Mak) என்கிற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனம் ஒரு வீட்டு பாதுகாப்பு அமைப்பை தயாரித்து விற்று வருகிறது. இந்நிறுவனத்திற்கு டைக்கன் தான் முதன்மை செயல் அதிகாரியாக இருந்து வழி நடத்தி வருகிறார்.
அமேசான் ரிங்க்ஸ் ஹோம் செக்யூரிட்டி சிஸ்டத்தை ஒட்டி ஜி-மேக் நிறுவனத்தை உருவாக்கியிருக்கிறார் டைக்கன். ஒரு சிறிய கருப்புநிற பெட்டியில், கேமரா பொருத்தப்பட்டிருப்பது போன்ற ஒரு கருவி.
இதனை வீட்டில் பொருத்தினால், சம்பந்தம் இல்லாதவர்கள் அல்லது திருடர்கள் வீட்டுக்குள் நுழையும்போது அக்கருவி தன்னிச்சையாக கண்ணீர் புகை வெளியிடும்.
"உக்ரைன் நாட்டு மக்களுக்கு தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள தெரியும்" என்பது இந்நிறுவனத்தின் வேடிக்கையான முழக்கங்களில் ஒன்று.
இந்த திட்டத்தையும் பொருளையும் குறித்து படிக்கும் போதும் கேட்கும் போதும் ஒரு நல்ல வணிகமாக தோன்றினாலும், தற்போது தங்கள் வியாபாரத்தை சரிவர மேற்கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது ஜீ - மேக் நிறுவனம்.
காரணம் ஆட்கள் பற்றாக்குறை. ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான போர் காரணமாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்கள் பலரும் ஆயுதமேந்தி ரஷ்யத் துருப்புகளுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படி ஜீ - மேக் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பலரும் தங்களுடைய கார்ப்பரேட் வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு போர்க்களம் புகுந்து இருக்கிறார்கள்.
தங்கள் நாட்டுக்காக ஆயுதம் ஏந்திய ஜி - மேக் நிறுவனத்தின் ஊழியர்களில் ஐந்து பேர் உயிரிழந்துவிட்டதாக தன் அழுகையை அடக்கிக்கொண்டு பிபிசி வலைதள கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டு இருக்கிறார் லியுபொமைர் டைக்கன்.
ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தை எல்லா சூழலும் சரியாக இருக்கும்போதே முறையாக நடத்தி வெற்றி பெறுவது மிகப்பெரிய காரியம்.
போர்க் காலங்களில் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தை உயிர்ப்போடு வைத்திருப்பதே மிகப் பெரிய தண்டனை என்று கூறினால் அது மிகையல்ல.
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையிலான போரின் காரணமாக ரஷ்ய துருப்புகள் உக்ரைனின் அடிப்படை கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவது மிக சாதாரண ஒன்றாகிவிட்டது.
இதன் காரணமாக அவ்வப்போது பல மணி நேரங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படுவது போன்ற செயல்கள் உக்ரைனில் இருக்கும் வணிக அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் அன்றாட சிக்கல்களில் ஒன்று என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இத்தனைக்கு மத்தியிலும், உக்ரைன் நாட்டை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து, பல மணி நேரங்கள் பயணித்து லாஸ் வேகஸ் நகரத்தில் நடந்து கொண்டிருக்கும் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப கூட்டங்களில் ஒன்றான 'தி கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் ஷோ' என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
உக்ரைன் நாட்டில் 60 வயதிற்கு உட்பட்டவர்கள் குறிப்பாக ஆண்கள் யாரும் அந்நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவதில்லை. அதை எல்லாம் தாண்டி உக்ரைன் நாட்டின் அதிகாரிகளிடம் சூழலை எடுத்துக் கூறி சிறப்பு அனுமதி பெற்று உக்ரைன் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை வழி நடத்தும் தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலம் உக்ரைன் நாட்டின் பல்வேறு நிறுவனங்களுக்கும் மேற்கத்திய நாடுகளில் இருந்து புதிய முதலீட்டாளர்கள் கிடைக்கலாம் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார்கள் உக்ரைன் ஸ்டார்ட் அப் நிறுவனங்க்காரர்கள்.
”சில நேரங்களில் என்னுடைய வேலை நேரம் என் கணினியில் இருக்கும் பேட்டரி அளவுக்கு மட்டுமே இருக்கும். மீண்டும் மடிக்கணினியை சார்ஜ் செய்து கொள்வதற்கு கூட மின்சாரம் கிடைக்காது.
சில வாரங்களுக்கு முன்பு தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மின்சாரமே கிடைக்கவில்லை” என்று தன் வருத்தத்தை பதிவு செய்கிறார் கார்னர் என்கிற இணைய சமையலறை அழகுபடுத்தும் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆர்டேம் டிடின்ஸ்கி (Artem Didinskyi).
இந்த மின்சார பிரச்னையை சமாளிக்க ஆர்டேம் உள்ளூர் எரிபொருள் நிரப்பு மையத்தை நம்பியிருக்கிறார். அங்கு ஒரு நம்பத்தகுந்த ஜெனரேட்டர் இருப்பதாகவும் அதை பயன்படுத்தி தன்னுடைய அலுவலகப் பணிகளை செய்து கொள்வதாகவும் கூறியிருக்கிறார் ஆர்டேம்.
உக்ரைனும் ரஷ்யாவை போலவே ஒரு குளிர்பிரதேசம் தான். அந்த நாட்டில் வெப்பமூட்டக் கூடிய கருவிகள் இல்லாமல் வாழ்வது மிகக் கடினமான ஒன்று.
மின்சாரம் இல்லாத காரணத்தால் ஆர்டேம் போன்றவர்கள் வெப்பமூட்டக்கூடிய கருவிகளை பயன்படுத்தாமல் வாழ்ந்து வருகிறார்கள்.
தன் உடலை வெப்பமாக வைத்துக் கொள்ள, தன்னுடைய வளர்ப்பு நாயை கட்டிப்பிடித்து தன் வீட்டில் உறங்கி வருவதாக பிபிசி வலைதள கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டு இருக்கிறார் ஆர்டேம் டிடின்ஸ்கி.
உக்ரைனில் ரெகாவா (Rekava) என்கிற நிறுவனத்தில் மரியானா ரோமானியக் என்கிற பெண்மணி வேலை பார்த்து வருகிறார். பழைய காபி கொட்டைகளைப் பயன்படுத்தி பாத்திர பண்டங்களை செய்வதுதான் ரெகாவா நிறுவனத்தின் தொழில்.
இந்த நிறுவனம் உக்ரைனில் சுமி என்கிற நகரத்தில் அமைந்திருக்கிறது. இன்னும் எளிதில் புரிந்துகொள்ள வேண்டுமானால் ரஷ்ய எல்லையை ஒட்டி இருக்கும், கார்கிவ் பகுதிக்கு அருகில் அமைந்திருக்கிறது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் போர் நடந்து கொண்டிருக்கும் போது, ரஷ்ய எல்லை பகுதிக்கு அருகிலேயே நிறுவனத்தை நடத்துவது அத்தனை எளிதான காரியமல்ல என்பதை ரெகாவா நிறுவனத்தின் நிர்வாகிகள் புரிந்துகொண்டனர்.
எனவே தங்கள் நிறுவனத்தை சுமி நகரத்திலிருந்து சுமார் 800 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் லவிவ் (Lviv) நகரத்திற்கு மாற்றிக்கொண்டார்கள்.
இப்படி ரஷ்யாவின் எல்லைப் பகுதியில் இருந்து ஐரோப்பாவின் எல்லையில் அமைந்திருக்கும் நகரத்திற்கு வியாபாரத்தை மாற்றிக் கொண்டதால் ஓரளவுக்கு வியாபாரத்தை நடத்த முடிவதாக நிறுவன தரப்பிலிருந்து கூறியுள்ளனர். தங்களால் பொருட்களை எளிதில் டெலிவரி செய்ய முடிவதாகவும் கூறியுள்ளனர்.
”நீங்கள் உக்ரைனில் தொழில் செய்கிறீர்கள் என்றால் அது மிகவும் கடினமான விஷயம்” என்கிறார் மரியானா. மேலும் ஒரு தொழிலுக்கு புதிதாக முதலீடு கிடைப்பதும் கிட்டத்தட்ட எதார்த்தத்தில் நடைபெறாத ஒரு விஷயமாகவே இருக்கிறது என்கிறார் மரியானா.
எல்லா பெரு நிறுவனங்களும் உக்ரைன் நாட்டு ராணுவத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் முதலீடு செய்து கொண்டிருக்கிறார்கள்.
எப்போது குண்டு வெடிக்கும்? எப்போது மின்சாரத் தடை ஏற்படும்? என்பது எதுவும் தெரியாமல் ஒருவித அச்சத்திலும் பாதுகாப்பில்லாத உணர்விலும் நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் & தொழில்முனைவோர்கள்.
செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தங்கள் வயல்வெளிகளில் உரங்களை பயன்படுத்துவது தொடர்பான உதவிகளை வழங்க உருவாக்கப்பட்ட நிறுவனம்தான் இ - ஃபார்ம் (E - farm).
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரின் காரணமாக உக்ரைன் நாட்டில் உள்ள சுமார் 30 சதவீத நிலப்பரப்புகள் பாழாகிவிட்டதாகவும் அதை சீர்படுத்த குறைந்தபட்சம் சில ஆண்டுகளாவது ஆகலாம் என்றும் கூறுகிறார்கள்.
இப்படி உக்ரைன் நாட்டில் உள்ள, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்களுடைய அன்றாட பணிகளைக் கூட மேற்கொள்ள முடியாமல் தங்களுடைய அன்பிற்கு உரியவர்கள் மற்றும் தங்களோடு வேலை பார்த்தவர்களை இழந்து தவிர்க்கிறார்கள். மறுபக்கம் உக்ரைன் நாட்டு பொருளாதாரமும் சீர்க்லைந்து கொண்டிருக்கிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust