கடந்த 2022ஆம் ஆண்டு உலகப் பொருளாதாரத்திற்கு ஒரு மோசமான ஆண்டாகவே இருந்தது. 2022 ஆம் ஆண்டு நிறைவடையும் தருவாயில் உலகப் பொருளாதாரத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்த பல பொருளாதார பார்வையாளர்களும், உலகில் உள்ள பல முக்கிய பொருளாதாரங்கள் 2023 ஆம் ஆண்டில் ரெசசன் பிரச்னையை எதிர்கொள்ளும் என்று நம்பினர்.
ஆனால் இந்த 2023 ஜனவரி மாத தொடக்கத்தில் டாவோஸ் நகரத்தில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு அரசியல்வாதிகள், வணிகம் & வர்த்தகம் தொடர்பான கொள்கைகளை உருவாக்குபவர்கள், பல முக்கிய நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரிகள், பொருளாதார வல்லுநர்கள் என அனைவரின் மனநிலையும் மாறத் தொடங்கி இருப்பதை உணர முடிந்தது.
இப்போதைக்கு ரெசசன் பிரச்னை ஏற்படாமல் கடந்து போக வாய்ப்பு இருக்கிறது என்கிற உணர்வு பல்வேறு தரப்பினரிடையும் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பிராந்தியத்தில் உள்ள பல்வேறு நாடுகளும் பெரிய பொருளாதார பிரச்னைகள் ஏதுமின்றி கடந்து போகலாம் என்கிற உணர்வும் அதிகரித்து வருகிறது.
2020 மற்றும் 2021ஆம் ஆண்டுக்கு இடையில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார பிரச்னைகளை சமாளிக்க பல்வேறு உலக நாடுகளின் அரசாங்கங்கள் மற்றும் மத்திய வங்கிகள், குறிப்பாக வளர்ந்த பணக்கார நாடுகள் தளர்வான நிதி கொள்கைகள் (Fiscal Policy) மற்றும் தளர்வான பணக் கொள்கைகளைக் (Monetary Policy) கொண்டிருந்தன.
அதாவது அரசாங்கங்கள் அதிகப்படியான பணத்தை செலவழித்தன, மத்திய வங்கிகள் குறைந்த வட்டியில் அதிக கடன்களை கொடுக்க முன்வந்தன. இதனால் உலகின் பல பொருளாதாரங்களிலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பணவீக்கம் அதிகரித்தது.
மறுபக்கம் அரசாங்கங்கள் மற்றும் மத்திய வங்கிகளின் இந்த நடவடிக்கையினால் பொருளாதாரங்களின் விநியோக சங்கிலிகள் எளிதில் பாதிக்கப்படலாம் என்கிற நிலை உருவானது.
2022 ஆம் ஆண்டில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த போது உலகப் பொருளாதார விநியோகச் சங்கிலியில் பெரும்பாதிப்பு ஏற்பட்டது. இந்த போர் நடவடிக்கையினால் உலகப்பொருளாதார விநியோக சங்கிலிகள் பாதிக்கப்பட்டன.
இத்தனைக்கும், கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவுகளுக்கு பிறகு, அப்போது தான் பல நாட்டு பொருளாதாரங்களும் மெல்ல பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்தது என்பது இங்கு நினைவு கூறத்தக்கது.
இந்தப் போர் பிரச்னையால் கச்சா எண்ணெய், உரங்கள், உணவு தானியங்கள போன்ற பல்வேறு அடிப்படை பொருட்களின் விலை கணிசமாக அதிகரித்தது. பல நாடுகளின் பணவீக்க விகிதம் வரலாறு காணாத அளவுக்கு புதிய உச்சங்களைத் தொட்டன.
பண வீக்கங்களை கட்டுப்படுத்த, பல நாட்டு மத்திய வங்கிகள் தடாலடியாக வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டன. மறுபக்கம் பல நாட்டு அரசாங்கங்களும் கூடுதலாக செலவழித்து கொண்டிருந்த செலவீனங்களை பின்வலித்தன.
இந்த நடவடிக்கைகளால், உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி சரியலாம் என்றும், இதனால் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு வளர்ச்சி மதிப்பீடுகள் 2022 ஆம் ஆண்டில் குறைத்துக் கொள்ளப்பட்டன.
சர்வதேச பன்னாட்டு நிதியத்தின் உலகப் பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 3 முறை குறைக்கப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
கடந்த 2022 அக்டோபர் மாதம் சர்வதேச பன்னாட்டு நிதியம் (IMF) வெளியிட்ட உலகப் பொருளாதார கண்ணோட்ட அறிக்கையில் “ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கு நாடுகளின் பொருளாதாரம் இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டு சரிவை சந்திக்கும்.
அமெரிக்கா, ஐரோப்பிய பிராந்தியம், சீனா ஆகிய மூன்று நாடுகளின் பொருளாதாரம் அதே நிலையில் தொடரும். சுருக்கமாக, எதிர்காலத்தில் இன்னும் சூழல் மோசமடையும், 2023 ஆம் ஆண்டு பலதரப்பு மக்களுக்கு ரெசசன் போன்ற உணர்வை ஏற்படுத்தும்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
சமீபத்தில் உலகப் பொருளாதார மன்றத்தில் நடைபெற்ற குழு விவாதத்தில், முதலீட்டாளர்கள் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரிகள் பொருளாதாரம் குறித்த விஷயங்களில் நேர்மறை எண்ணத்தோடு இருக்கிறார்களே ஒழிய நம்பிக்கையோடு இல்லை என ஒரு கருத்து கூறப்பட்டது.
‘நேர்மறையான எண்ணத்தோடு இருக்கிறார்கள் ஆனால் நம்பிக்கையோடு இல்லை’ என்பதற்கான பொருள் என்ன? என்பதை அக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சர்வதேச பன்னாட்டு நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டாலினா ஜோர்ஜிவாவின் (Kristalina Georgieva) பேச்சில் இருந்தது.
“இரண்டு மாதங்களுக்கு முன் நாம் பயந்ததை விட உலக பொருளாதார வளர்ச்சி குறைவாகவே பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது குறைவான தீமை தானே ஒழிய, அது ஒரு நல்ல விஷயம் அல்ல” என ரத்தினச் சுருக்கமாக தற்போதைய நிலையை விளக்கினார்.
உலகப் பொருளாதார வளர்ச்சியில் முன்பு நாம் எதிர்பார்த்த அளவுக்கு மிகப்பெரிய சேதாரங்கள் எதுவும் இல்லை என்கிற மதிப்பீட்டிற்கு இப்போது வர நான்கு காரணங்களை பட்டியலிடுகிறார் கிறிஸ்டாலினா.
உலகின் பல்வேறு நாடுகளிலும் சில மாதங்களுக்கு முன்பு வரை வரலாறு காணாத அளவுக்கு பணவீக்கங்கள் புது உச்சங்களைத் தொட்டன. ஆனால் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பல நாடுகளின் பணவீக்கம் குறைந்து கொண்டே வருகிறது.
உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமான சீனாவில், பொருளாதாரங்கள் மேம்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.
கடந்த 2022 ஆம் ஆண்டில் சீனா தொடர்ந்து ஜீரோ கோவிட் கொள்கையை மிகக் கடுமையாக கடைபிடித்து வந்ததால், கடந்த 40 ஆண்டுகளில் முதன்முறையாக தன்னுடைய சராசரி வளர்ச்சி விகிதத்தை விடவும் குறைந்த அளவுக்கே சீன பொருளாதாரம் வளர்ச்சி கண்டது.
தற்போது அந்த நிலை மாறி இருக்கிறது. சீனா தற்போது பல்வேறு வியாபாரங்கள் மற்றும் வணிகங்களுக்கு தன்னுடைய சந்தையை திறந்து விட்டிருக்கிறது. எனவே எதிர்காலத்தில் சீன பொருளாதாரத்தின் வளர்ச்சி பழைய நிலைக்கு திரும்பும் பாதையில் இருக்கிறது, இது ஒட்டுமொத்த உலக பொருளாதார வளர்ச்சிக்கும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
பல்வேறு உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தடாலடியாக தங்களுடைய வட்டி விகிதங்களை உயர்த்தியதால் பல்வேறு வளர்ந்த நாடுகளில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கலாம் என பல தரப்பினரும் கணித்தனர்.
ஆனால் எதார்த்தத்தில், பல்வேறு வளர்ந்த நாடுகளில் வேலை இல்லா திண்டாட்டத்தின் அளவு அத்தனை அதிகரிக்கவில்லை அல்லது வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான வேலை இல்லா திண்டாட்டம் விகிதங்களே நிலவுகின்றன.
பொதுவாக ஒரு நாட்டின் பொருளாதாரம் சரிகிறது என்றால் அது வாடிக்கையாளர் டிமாண்ட் சரிவதைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஆனால் இந்த முறை அமெரிக்கா போன்ற நாடுகளில் மிகக் குறைந்த அளவிலேயே வேலையில்லா திண்டாட்ட விகிதம் இருப்பதால், நுகர்வோர் டிமாண்டிலும் பெரிய மாற்றமின்றி அதே நிலையில் தொடர்கிறது என சர்வதேச பன்னாட்டு நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிரிஸ்டாலினா தெரிவித்திருக்கிறார்.
வரும் ஜனவரி 31ஆம் தேதி சர்வதேச பன்னாட்டு நிதியம் தன்னுடைய புதிய உலகப் பொருளாதார கண்ணோட்ட அறிக்கையை வெளியிடவிருக்கிறது. அதில் இதற்கான விடைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். இருப்பினும் உலக அளவில் பல்வேறு முக்கிய கொள்கைகளை இயற்றுபவர்கள் எச்சரிக்கையோடு இருக்குமாறு அறிவுறுத்துகிறார்கள்.
ஒருவேளை பல்வேறு உலக நாடுகளின் மத்திய வங்கிகள் பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இருந்து முன்கூட்டியே விலகினால், பணவீக்கப் பிரச்னையோடு நாம் மீண்டும் ஒருமுறை மிகப்பெரிய போரை தொடுக்க வேண்டி இருக்கும் என முன்னாள் அமெரிக்க கருவூல செயலர் லாரி சம்மர்ஸ் கூறியதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வலைதளக் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இப்போது நிலவும் ஒரு சிறு நம்பிக்கை, காற்றில் கரைந்து போக மூன்று காரணங்களைப் பட்டியலிடுகிறார் சர்வதேச பன்னாட்டு நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டாலினா.
கச்சா எண்ணெய், எரிவாயு போன்ற அடிப்படை பொருட்களின் விலை தொடர்ந்து அதிகமாக இருப்பதால், பல உலக நாடுகளில் பணவீக்கமும் அதிகமாகவே இருக்கிறது. பல நாடுகளில் எரிசக்தி & மின்சாரத்தி விலை அதிகமாகவே இருக்கிறது.
இப்போதுவரை பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை அதிகரித்திருப்பது வேலையில்லா திண்டாட்டத்தை அதிகரிக்கவில்லை. ஆனால் இந்த வட்டி விகித உயர்வு மெல்ல வேலையில்லா திண்டாட்ட விகிதத்தை அதிகரிப்பதற்கு வழி வகுக்கலாம். அப்படி வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் அது நுகர்வை அதிவேகமாக பாதித்து பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது.
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான போருக்கு இப்போதுவரை ஒரு தீர்வு காணப்படவில்லை. இது உலகம் முழுக்க உள்ள முதலீட்டாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய அபாயமாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது எனக் குறிப்பிட்டிருக்கிறார் கிறிஸ்டாலினா.
ரெசஷன் இல்லை என்று சொல்லும் போதே மெடா, கூகுள், மைக்ரோசாஃப்ட் போன்ற பல முன்னணி நிறுவனங்களில் பலரின் தலைகள் உருள்கின்றன. ஒருவேளை ரெசஷன் வந்தால் என்ன ஆகும் என்பதை யோசித்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. நாட்டை வழிநடத்தும் தலைவர்கள் இதை கருத்தில் கொண்டு இயங்குவர் என நம்புவோம்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust