உலக பெரியண்ணன் அமெரிக்காவில் இயங்கி வரும் உலகின் பெரும் பன்னாட்டு நிறுவனமான அமேசானை அடிப்பணிய வைத்திருக்கிறார்கள் அங்கு பணிபுரியும் சாமானிய ஊழியர்கள்.
ஆம். அமேசானின் பணியாளர்கள் சங்கத்தை அங்கீகரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது அந்நிறுவனம் அல்லது அந்த நிலைக்கு தள்ளி இருக்கிறார்கள் அதன் ஊழியர்கள்.
தொழிலாளர்களின் உழைப்பை அமேசான் நிறுவனம் சுரண்டுவதாகக் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து குற்றச்சாட்டு வந்த வண்ணம் உள்ளன.
அண்மையில் இது தொடர்பாக அமேசான் மன்னிப்பும் கேட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை உறுப்பினர் மார்க் போகன் "அமேசான் நிறுவனத்தின் ஓட்டுநர்கள், பிளாஸ்டிக் பாட்டில்களில் சிறுநீர் கழிக்கிறார்கள்" என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
அதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த அமேசான் நிறுவனம் அதன் பின் அந்த குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டு அவரிடம் மன்னிப்பும் கேட்டது.
அந்த சமயத்தில் அவர், "உங்கள் ஊழியர்களை ஒன்று சேரவிடாமல் தடுப்பது மற்றும் ஊழியர்களை பிளாஸ்டிக் பாட்டிலில் சிறுநீர் கழிக்க வைக்கும் நிலையில், ஊழியர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு 15 டாலர் கூலி கொடுப்பதன் மூலம் மட்டும் அமேசான் ஒரு நல்ல பணிச்சூழல் நிலவும் இடமாக மாறிவிடாது" என கடந்த மார்ச் 25-ம் தேதி தன் ட்விட்டர் கணக்கில் பதிவிட்டிருந்தார் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் மார்க் போகன்.
அதுமட்டுமல்லாமல், புவி வெப்பமயமாதலுக்கு அமேசான் நிறுவனமும் காரணம் என கோரி சிலர் போராடியும் வருகின்றனர். அமேசான் நிறுவனம் அதிக அளவில் நுகர்வு கலாசாரத்தை ஊக்குவிக்கிறது என்பது அவர்களின் குற்றச்சாட்டு.
இப்படியான சூழலில் அமேசான் ஊழியர்கள் தங்களது உரிமைக்காகவும், நலனுக்காகவும் தொழிலாளர் சங்கத்தை கட்டி எழுப்பினர்.
2020 ஆம் ஆண்டு கொரோனா சமயத்தில் பாதுகாப்பு விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்பியதற்காக கிறிஸ் ஸ்மால் எனும் ஊழியரை அமேசான் நிறுவனம் பணி நீக்கம் செய்கிறது.
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ என்று வீறுக் கொண்டு எழுந்த கிறிஸ் ஸ்மால், ஊழியர் சங்கத்தை கட்டி எழுப்பினார்.
அவர் ஊழியர்களுக்கு அதிக ஊதியம், பணி இடத்தில் பாதுகாப்பு, பணி பாதுகாப்பு ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து இந்த சங்கத்தை முன்னெடுத்தார்.
ஊழியர் சங்கம் அமைவதை விரும்பாத அமேசான் அதனை கலைக்க அனைத்து வழிகளிலும் காய் நகர்த்தியது.
குறிப்பாக அமேசான் தனக்குள் தொழிற்சங்க என்ற ஒன்று முளைத்து விடக் கூடாதென்று முனைப்பாக இருந்தது. ஊதியத்தை உயர்த்தி தரும் நோக்குடன் அமேசான் முன்வந்தபோது, தொழிற்சங்கம் அமைத்து விட்டால், தங்கள் உரிமைகளும், உழைப்பின் மதிப்பும் காக்கப்படும் என்பதில் தொழிலாளர்கள் தீர்க்கமாக இருந்தனர்.
இப்படியான சூழலில் நியூயார்க் அமேசான் கிடங்கு ஊழியர் சங்கத்தை அங்கீகரிப்பது தொடர்பாக நடந்த வாக்கெடுப்பில் ஊழியர் சங்கத்தை ஆதரித்து 55% ஊழியர்கள் வாக்களித்து உள்ளனர்.
இது அமேசான் நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.